Dec 13, 2012

யாரடியம்மா ராசாவே?



யாரடியம்மா ராசாவே?

நான்தானம்மா ராசாவே!
உன் வீட்டில் நடந்த சங்கதி என்ன?

என் கணவனை இன்னும் காணவில்லை!

எங்கே சென்றான் உன் கணவன்?

இராத்திரி என்னோடு தானிருந்தான்
காலையில் பார்த்தேன் காணவில்லை.

காலையில் தொலைந்தான் கணவனென்றால்
மாலை வரைக்கும் என் செய்தாய்?

ஆராய்ச்சி மணிதான் வாசலிலே – இழுத்து
அடிக்கக் கயிறு எதுவுமில்லை.
மாலை வரைக்கும் காத்திருந்தென் – உன்
மாளிகைக் கதவு திறக்கும்வரை.

இரவு வந்த உன் காவலர்கள் - அவனை
இட்டுச் சென்றனர் கையுடனே.
எங்கே உள்ளான் என் கணவன்
ஒழிக்காது சொல்வாய் என் அரசே!

காவலர் கூட்டிச் சென்றாரென்றால்
காரணத்துடனே செய்திருப்பர்.

காரணம் என்ன என்றுரைப்பாய் – என்
கணவனைக் காணாது வீடு செல்லேன்!

அடாவடித் தனமாய்ப் பேசாதே – என்
அத்தாணி மண்டபம் உன் திண்ணையல்ல.
உன் கணவன் செய்தது கடுங்குற்றம்
குற்றத்தின் தண்டனை சிரச்சேதம்.
ஆரசுக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தான்
அவனே தனக்குக் கூற்றானான்.

எங்கே உந்தன் நீதிமன்றம்
எங்கே சென்றனர் அறிவுடையோர்
விசாரணை இன்றிக் கொன்றவனே – நீ
கொற்றவன் அல்ல, கொலைகாரன்!

கண்ணகி வம்சம் நீயானால் – உன்
கனக முலையைப் அறுத்தெறிவாய் – என்
நகரமும் நானும் அழிந்தொழிவோம் - என
நன்றாய்க் கனவு காண்பாயே!

முலைகளை என்றோ இழந்தவள் நான்
மூர்க்கரின் கைகளில் மாண்டவள் நான் – என்
கற்பினைக் காக்க முடியாமல் - உன்
காமுகர் கூட்டத்தால் அழிந்தவள் நான்.

நீதி அறியா மன்னவனே – உன்
நாட்டினில் நெறிமுறை அழிந்தது காண்!
வீட்டினை இழந்தவர் எத்தனை பேர்
வீதியில் திரிபவர் எத்தனை பேர்
எத்தனை பெண்கள் கற்பிழந்தார்
எத்தனை கணவர் உயிரிழந்தார்
எத்தனை இளைஞர் தலை மறைந்தார்
எத்துணை வேதனை நீ இழைத்தாய்!
அறிவாய் மன்னா அரசு பிழைத்தாய்
அறமே உனக்குக் கூற்றாகும்!

*****************

யாரடியம்மா ராசாவே?
யாரடியம்மா ராசாவே?

யாரது வாசலில் நிற்பதுவோ?

அரசனைத் தேடி வந்தவன் நான்

அரசன் இரவு இங்கிருந்தான் – இன்று
இரத்தம் கக்கிச் செத்தொழிந்தான்!      

No comments:

Post a Comment