Dec 28, 2012

21 – 12 – 2012



ருபத்தியோராம் திகதி!
இரயில் நிலையம்
ஒளியில் திளைக்கிறது.
கூட்டத்தில் ஒருவனாய் நான்...

விறைத்துப்போன மேனி,
உறைந்துபோன குருதி,
பழகிப்போன காலை!
எல்லாமாய் நூறு பேர்,
கூட்டத்தில் ஒருவனாய் நான்...

உத்தியோகத்து எருமை மாடுகள்,
பல்கலைக் கழகப் பைத்தியங்கள்,
பங்குக் கம்பெனி பண முதலைகள்,
பள்ளிக்கூடத்துப் பயம் அறியாததுகள்...
இப்போது
என்னோடு இருநூறு பேர்.
கூட்டத்தில் ஒருவனாய் நான்...

பயணிகள் முகங்களில்
பயம் கலந்த புன்னகை
நன்றாய்த் தெரியும் இவர்கள்
குளிரால் நடுங்கவில்லை!

இரயில் நிலையம்
வழக்கம்போல்
ஒளியில் திளைக்கிறது.
இருபத்தோராம் திகதி பற்றி
எதுவுமே அறியாதமாதிரி!
கூட்டத்தில் ஒருவனாய் நான்...

தூரத்தில் –
ரயிலொன்று வருகிறது
விளக்கில் நம்பிக்கை
வேகத்தில் உறுதி.

வந்த ரயில்
வழுக்கியபடி நிற்கிறது.
வந்திருந்த கூட்டமெல்லாம்
ஒழுங்காய் அமைதியாய்
இடிபடாமல் ஏறுகிறது.
இரண்டு நிமிடங்களில்
இந்த நாளை நோக்கிப்
பயணிக்கிறது!

இப்போது
எல்லாரும் சிரிக்கிறார்கள்!
இந்த நாள்
எவ்வளவு இனிமையானது!

மனிதன்
காலண்டரைக் கண்டுபிடித்தது
காலத்தைக் கணக்கிடத்தான்.
காலண்டர் மனிதரின்
காலனாக வருவதற்கல்ல!

No comments:

Post a Comment