Dec 28, 2012

சிறைச்சாலைச் செம்பருத்திகள்



அறிவும் இளமையும்
இனிமையும் இலட்சியமும்
இணைந்ததோரு
உலகம் உண்டென்றால்
மாணவர்களே!
உங்கள் இதயம்தான்
அது உலவும் அண்டவெளி!

நீங்கள் -
புத்தகங்களைச் சுமக்கும்
பார வண்டிகள் அல்லர்
பகுத்தறிவுப் பூங்காவில் மலர்ந்த
பாரிஜாதப் பூக்கள்.

நான் துள்ளித் திரிந்த காலத்தைத்
திரும்பிப் பார்க்க வைப்பவர்களே
பல்கலைக் கழகப்
படிக்கட்டுகளைப் பாய்ந்தேறுங்கள்
சட்டக் கல்லூரிச்
சறுக்கு மரங்களில்
சந்தனம் பூசுங்கள்!

அவசர உலகத்தின் பிரதிநிதிகளே,
ஆயுள் முழுவதும் கற்றாலும்
இளமைக்காலக் கல்விக்கு
இணையேதுமில்லை!

நீங்களோர் அதிசயம் மட்டுமல்ல
அரச இயந்திரத்தின்
அச்சாணிகளை உடைக்கும்
உந்து சக்திகள்!

சுதந்திரமடைந்த நாடுகள்
உங்கள் பங்கைச்
சொல்ல மறந்திருக்கலாம்
ஆனால்
அவற்றின் எழுச்சியின்
அத்திவாரமே நீங்கள்தான்,

நீங்கள் இணைந்திருக்கும்வரை
அரசியலார் ஆயுதங்கள்
இன, மொழி, மதம் எதுவும்
உங்களை
இடற வைக்கப்போவதில்லை!

அறிவுதான் உங்கள் இனம்
ஆற்றல்தான் உங்கள் மொழி
எழிச்சிதான் உங்கள் மதம்!

--- 0 ---

அன்று மொழி அழிப்பு
நேற்று இன அழிப்பு
இன்று அறிவழிப்பு!

அடக்குமுறையிலும் அராஜகத்திலும்
ஊறிப்போன அரசியலார்
தங்கள் சவப்பெட்டிக்குத்
தாங்களே ஆணி அடிக்கின்றார்!

மானிடத்தை மதிக்காத
மடையர்கள்
இராணுவ அரணிருந்தும்
உறங்க மறந்தார்கள்.

இனத்துவேஷ நெருப்பில்
குளிர் காயும் அரசியலார்
பிரித்தாளும் பனிமழையில்
புழுக்கம் போக்கப் பார்க்கின்றார்.

வெள்ளத்தின் மத்தியில்
நாவற்றி நிற்கிறார் நாடாள்வோர்
சொல்லுங்கள் மந்திரத்தை,
சிறைச்சாலைக் கதவுகள்
சுக்குநூறாகட்டும்!

மாணவர் உலகம்
எல்லையற்றது
மதக் கோட்பாடுகளால்
மாசுபடாதது
மொழி வேறுபாடுகளால்
வழி தடுமாறாதது
இனப் பாகுபாடுகளால்
இடர்ப் படாதது!

சிறைச்சாலைச் சுவர்களில்
புறநானூறு பாடுங்கள்!
கொழும்பில் ஆள்பவர்களின்
கொழுப்பை அடக்குங்கள்!

நீங்கள் -
காலியிலிருந்து
காங்கேசன்துறை வரை
புத்தளத்திலிருந்து
பொத்துவில் வரை
அறிவுப் பட்டறைகளில்
அடிவாங்கும் உலோகங்கள்!

ஆகவே -
தெரிந்து கொள்ளுங்கள்,
தென் திசைத் தோழர்கள்
தோள் கொடுப்பர் நிச்சயமாய்!
வெல்லுங்கள் அவர் நெஞ்சங்களை,
சொல்லுங்கள் நாமிதோ
சேர்ந்துவிட்டோமென்று!


No comments:

Post a Comment