Dec 28, 2012

தசாவதாரம்





முட்டாள்கள் வெளியிட்ட
கவிதைத் தொகுப்புக்கு
முகவுரை எழுதியவன் நான்.

காணாமற் போனோர் சங்கத்தைக்
கட்டி எழுப்பியவனும் நான்தான்.

காற்றுக்கும் மழைக்கும்
பிறந்தவன் நான் ஆதலால்
அடக்கமாய் இருக்கும்போதுதான்
அழகாய் இருக்கிறேன்.

இறந்தவர் பட்டியலில்
என் பெயரைக் காணலாம்
வாக்காளர் பட்டியலிலும்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

முகாம் மாகாணத்தில்
பாழ்ப்பாணம் என்
பிறந்த இடம்.

பட்டினி இருப்பதுதான்
என் பொழுதுபோக்கு
பாடையில் கிடக்கும்போதும்
பாடிக் கொண்டிருப்பேன்.

பல்கலைக்கழகம் போகாமலே
பட்டங்கள் எடுத்தவன் நான்.
மிருகங்களின் பெயர்களைத்தான்
முதற்பெயராய்க் கொண்டவன் நான் .

அலுகோசுகள்* சங்கத்தின்
ஆயுட்கால உறுப்பினன் நான்
சுருக்குப்போடும் காரியத்தைச்
சனாதிபதி திருடிவிட்டான்.

பத்துத் தடவைகள்
இரத்தம் கொடுத்திருக்கிறேன்
இரண்டு முறைகள் மட்டும்
இருதய தானம் செய்திருக்கிறேன்.

மூன்றாம் மாடியிலிருந்து
முட்டி விழுத்தினார்கள்
மூன்றாம் நாளே
எழுந்து வந்துவிட்டேன்.

வெலிக்கடை வேலியில்
வெட்டிக் காயப் போட்டார்கள்
விடுதலைக்கு முன்
வீட்டுக்கு வந்துவிட்டேன்.

முகாமுக்குள் வைத்து
மூச்சுத் திணற நெரித்து
மாண்ட என் உடலை
மதவுக்குள் எறிந்தார்கள்
விடியற் காலை வேளை
வழக்கம்போல் எழுந்துவிட்டேன்.

தெருவில் நிற்கிற
தேசிய உணர்வைத்
திண்ணைக்கு வரவழைப்பேன்.

ஆயுத்தை எறிந்துவிட்டு
அன்பை எடுத்துக்கொள்வேன்
ஐநாவை அழைப்பதைவிட்டு
அயலவரை அழைத்திடுவேன்.

மக்களாட்சி மலரும்வரை நான்
மரணிக்கப் போவதில்லை!


*அலுகோசு:- சிறையில் மரணதண்டனைக் கைதிகளைத் தூக்குப்போடுபவர்.

No comments:

Post a Comment