Dec 13, 2012

விடுங்கோ ஆரோ வருகினம்!



விடுங்கோ ஆரோ வருகினம் – அங்கை
வேலிக்குப் பின்னாலை நிக்கினம்.

அருக்குக் காட்டாதை சும்மா – உன்னிலை
ஆசையில்லாமலே வந்தனான்.
வேலிக்கு அங்காலை ஒருதருமில்லை
வீணாய்ப் பயந்து சாகாதை.

உண்மையில் என்னிலை அன்பிருந்தால் – ஏன்
இரவிலை மட்டும் வாறியளாம் – ஒருக்கால்
பகலிலை வந்து பாருங்கோ
பல ஆக்கள் அறியக் கதையுங்கோ!

உனக்கு அம்மா அப்பா அண்ணன்மார்
அடுத்த வீட்டிலை பெரியம்மா
இஞ்சாலை பாத்தால் கிணத்தடிதான்
எங்கை பாத்தாலும் ஆக்களெல்லோ!

ஒருக்கால் வந்தால் ஊரெல்லாம்
எங்களைப் பற்றியே கதை கட்டும்
இதுக்கெல்லாம் பயந்துதான் யோசிக்கிறன்
உன்னை வந்து காணப் பயப்பிடுறன்.

எனக்கும் உங்களிலை ஆசையெண்டு
இனைக்காமல் பேய்க்கதை கதைக்கிறியள்
அண்டைக்கு என்னைத் தொட்டதோடை
இனியொரு மனிசனைப் பாக்கமாட்டன்.

எப்ப பாத்தாலும் இழுக்கிறதும்
இடுப்பிலை கையை வைக்கிறதும்
இதுதான் உங்கடை விருப்பமெண்டால்
இப்பவே சொல்லுங்கோ நான் போறன்.

ஊருக்குப் பயந்தால் உங்களுக்கு
என்னட்டை வரவே உரிமையில்லை
ஆருக்கு விடுறியள் விடுகையெல்லாம்
உங்கடை ஆக்களைப் பற்றி நானறிவன்

ஓமெண்டு இப்பவே சொல்லுங்கோ
உங்களைக் காண இனி வருவன் – என்னைக்
களியாணம் கட்டினால் மட்டும்தான் – என்னிலை
கைவைக்க விடுவன் கண்டியளோ!

கோவிக்காதை என்ரை குஞ்சு
கட்டாயம் வருவன் நாள் பாத்து
வேலையில் உன்ரை நினைவாலை
விசராய்ப் போனன் தெரியுமோடி?

நீ பாக்கிற பார்வை ஒண்டுதான் – என்னைப்
பைத்தியமாக அலைக்குதடி
பாக்கிற படங்கள் சினேகிதங்கள்
பேசுற கதையள் திருவிழாக்கள்
படுக்கிற நேரம் நினைத்தனெண்டால்
பாய்ஞ்சுவர மனம் துடிக்குதடி.

கையைத் தொடவே கோவிக்கிறை - உன்னைக்
கன்னியாகத்தான் கை பிடிப்பன்
கழுத்திலை தாலி கட்டுவன் பார்
கலங்காதையடி காத்திரடி!

No comments:

Post a Comment