Aug 29, 2013

தோசைக் கடை

நோபல் பரிசுப் பட்டியலில்
பத்து வருசமாய் இருக்கிறதாம்
பருத்தித்துறைத் தோசை.

தோசைக் கடைக்கு இங்கே
வழி கேட்கத் தேவையில்லை
வாசமே உங்களை
வழிகாட்டி இழுக்கும்

தெருவோர வேலியில்
திட்டி வாசலொன்று
குனிந்து இருளில் பார்த்தால்
கழுத்துத்தான் தெரியும்
தோசைக்காரியின் கழுத்து!

தோசைக்காரி பெரும்பாலும்
வாய்க்கொழுப்புக்காரி
கொழுவுப்பட்டீர்களோ
கடதாசிக்குப் பதிலாகக்
கந்தபுராணத்துக்
கடைசி ஒற்றையில்தான்
தோசை சுற்றித் தருவாள்.

இதுதான்
பருத்தித்துறைத் தோசை!
தோசையின்
சுவையும் மாறாது
சுட்டவளின்
வசையும் மாறாது!

ஒபாமாவுக்குக் கொடுத்த பரிசை
பருத்தித்துறைத் தோசையோடு
பகிர்ந்திருக்கலாம், பாருங்கோ!

தோசைக் கடை

நோபல் பரிசுப் பட்டியலில்
பத்து வருசமாய் இருக்கிறதாம்
பருத்தித்துறைத் தோசை.

தோசைக் கடைக்கு இங்கே
வழி கேட்கத் தேவையில்லை
வாசமே உங்களை
வழிகாட்டி இழுக்கும்

தெருவோர வேலியில்
திட்டி வாசலொன்று
குனிந்து இருளில் பார்த்தால்
கழுத்துத்தான் தெரியும்
தோசைக்காரியின் கழுத்து!

தோசைக்காரி பெரும்பாலும்
வாய்க்கொழுப்புக்காரி
கொழுவுப்பட்டீர்களோ
கடதாசிக்குப் பதிலாகக்
கந்தபுராணத்துக்
கடைசி ஒற்றையில்தான்
தோசை சுற்றித் தருவாள்.

இதுதான்
பருத்தித்துறைத் தோசை!
தோசையின்
சுவையும் மாறாது
சுட்டவளின்
வசையும் மாறாது!

ஒபாமாவுக்குக் கொடுத்த பரிசை
பருத்தித்துறைத் தோசையோடு
பகிர்ந்திருக்கலாம், பாருங்கோ!

Aug 4, 2013

கறுத்தக் கொழும்பான்

“கிணத்தடிக்குப் பக்கத்திலை நிக்கிற கறுத்தக்கொழும்பானிலை ஒரு பிஞ்சுமில்லாமல் உருத்திக்கொண்டு போட்டான், குறுக்காலைபோன குத்தியன். வரட்டும் செய்யிறன் வேலை” வேலிக்கு இந்தப்பக்கத்திலிருந்து ஒப்பாரிவைத்த சரசுவதியின் தொண்டை எந்த அளவுக்குத் திறந்திருக்கிறது என்பதை வைத்துத்கொண்டு எந்த அளவு தூரத்திலுள்ள ஆளுக்கு முறைப்பாடு செய்கிறாள் அல்லது அள்ளிவைக்கிறாள் என்பதை எவரும் அறிந்துகொள்ளலாம். ஓராங்கட்டை ஒழுங்கைக்குப் பக்கத்திலிருக்கிற சரசுவதியின் குரல் இரண்டாம் கட்டை வரைக்கும் கேட்கும் என்பது ஊரில் வலு பிரசித்தம். இன்று சரசுவதியின் தொண்டை அடுத்த வீடுவரைக்கும் கேட்குமளவிற்குத்தான் திறந்திருந்தது.

“ஆரை இண்டைக்கு அறம்பாடுறை, சரசு மைச்சாள்?” என்று அடுத்தவீட்டுப் புவனி ஒன்றும் தெரியாதவள்போல் கேட்க, “ஆரையோ? வேறை ஆர், உன்ரை கடைசி மோனைத்தான்” என்று பதில் சொல்லும்போதே சண்டைக்குத் தன்னைத் தயார் செய்பவள்போல் முந்தானையை எடுத்து வயிற்றைச் சுற்றி வரிந்து கட்டிக்கொண்டாள் சரசுவதி.

“தறுமனோ?” புவனி பட்டுப்பழுத்த பெம்பிளை, சரசுவதி போன்ற “பிரியனைத் தின்னியளோடு” எப்படி வக்கணையாகக் கதைக்கவேண்டுமென்ற விபரம் தெரிந்தவள். ஆகவே அளவறிந்து மறுமொழி சொல்லுவாள்.

“தறுமனாம் தறுமன்.. கண்டறியாத தறுமன்.. பேர்தான் தறுமன், செய்யிறதெல்லாம் அநியாயம்.” சரசுவதி இன்றைக்கு இன்னும் ஒரு கலாதியிலும் ஈடுபடவில்லை. அன்றாடம் ஊரில் ஏதேனும் ஒரு கலாதியைத் துவங்கவேண்டும் அல்லது ஆக்ககுறைந்தது ஏற்கனவே துவங்கி ஓய்ந்துபோயிருக்கிற ஒன்றைக் கிளறிவிடவேண்டும். இது சரசுவதியின் லட்சியம் மட்டுமல்ல பிழைப்பும் அதுதான்.

“பள்ளிக்கூடப் பெடியள் நிறுதூழி செய்யிறது வழக்கந்தானே, மைச்சாள்.”

“அதுக்கு, இருக்கிற அத்தினை பிஞ்சுகளையும் உருத்திக்கொண்டு போறதே? என்னமாரிக் காய்ச்சுக் கொட்டின மரம், இப்ப ஒரு பூ பிஞ்சுமில்லாமல் செத்த பிரேதம்போலை கிடக்கு” சரசுவதி அடுத்தடுத்துத் தொடுக்கும் ஒவ்வொரு கணையிலும் எப்பன் எப்பனாகப் பாசாணத்தைப் பூசத் தொடங்கினாள்.

“நேற்றுப் பொழுதுபட்டாப்போலை ஊருப்பட்ட பள்ளிக்கூடப் பெடியள் உந்த ஒழுங்கைக்குள்ளாலை போனதுகள் கண்டனான். அதுகள்தான் ஏதேனும் செய்திருக்கவேணும். தறுமனை மட்டுமேன் திட்டுறியள், சரசு மைச்சாள்?”

வேலிக்கு இந்தப் பக்கம் நின்ற புவனி சரசுவதியின் வளவுக்கூடாக அந்தக்கரையை எட்டிப் பார்த்தாள். கிணற்றடிக்குப் பக்கத்தில் நிற்கும் கறுத்தக்கொழும்பான் சடாய்த்துப்போய் பச்சம் பசேலென்று குடைவிரித்துபோல் கண்ணை உறுத்தியது. ஆனால் வேலிக்கு உட்பக்கம் பூவோ பிஞ்சோ மருந்துக்குக்கூடக் கிடையாது. வேலிக்கு அந்தப்பக்கம் தெருவுக்கு மேலாய் பரந்து நின்ற கிளையில் மாங்காய்களெல்லாம் உரிச்ச தேங்காய் அளவுக்குக் கிளைகள் முறிந்துபோகும்படி தொங்கிக்கொண்டிருந்தன. கல்லெறி வாங்கும் மரம்தான் காய்க்குமாம். அதாவது கல்லெறி எந்தப் பக்கம் விழுகிறதோ அந்தப் பக்கம் மட்டும்தான் காய்க்கும். வேலிக்கு உள்ளே நிற்கும் கிளைகள் என்ன பாவம் செய்ததுகள்? எவரும் இப்படித்தான் நினைப்பார்கள். ஆனால் சரசுவதியின் பொலிசிக் கொள்கையை நன்கறிந்தவர்கள் உவளுக்கு நல்லா வேண்டுமென்றுதான் கறுவிக்கொள்வார்கள்.

சரசுவதி தனிவிளாப்பிலை வாழும் பெண். அவளுடைய ‘மனிசன்’ எப்போ காலமானார் என்பது அவளுக்கே நினைவில்லை. “மனிசன் மோசம் போன அண்டைக்கு நான் கிணத்துக்கை விழுந்து சாகப் போனனான். உந்த விறண்டிக்கடைச் செல்லராசா ஓடி வந்து இழுத்துக்கொண்டு போகாமல் விட்டிருந்தால் பட்டைக்கிடங்குக்கை விழுந்து பிரேதமாய் கிடந்திருப்பன். என்ரை மனிசன் இல்லாத உலகத்திலை எனக்கு என்ன கிடக்கு? இந்தக் காணி பூமிகளும் நகை நட்டுகளும் என்ரை அவர் போனபின்னாலை இனி எனக்குத் தூசுதான் எண்டு முடிவு எடுத்துத்தான் சாகப் போனனான். அறுவான் என்ரை இடுப்பை வளைச்சுப் பிடிச்சு ஆட்டுக்குட்டியைத் தூக்கிக்கொண்டு போறமாதிரியெல்லோ கொண்டந்திட்டார்.” இப்படிச் சொல்லும்போது செல்லராசா தனது இடுப்பைச் சுற்றி வளைத்திருந்த கைகளில் தான் ஆடுபோல் அகப்பட்ட இனிமையான அனுபவத்தை என்னமாய் அனுபவித்தாள் என்பதை விஷயமறிந்தவர்கள்தான் அனுமானிக்கமுடியும்.

புவனிக்குப் பக்கத்துவீட்டுச் சரசுவதி “ஒண்டுவிட்ட மைச்சாள்” முறை. இருவருக்கும் வயது ஒரு பத்து வருடம் வித்தியாசம் இருக்கும். ஆனாலும் மைச்சாள் என்ற முறையைப் புவனி இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். அவசரத்துக்கு உப்போ சீனியோ வேண்டுமென்றால் இந்தப் பக்கம் குசினிக்குள்ளேயிருந்து “மைச்சாள், ஒரு சிறங்கை சீனி தருவியளோ, கடையாலை வரக்கை மறக்காதையுங்கோவெண்டு இவருக்குச் சொல்லிக் களைச்சுப்போனன்.” என்று சொன்னாலே போதுமானது. அடுத்த நிமிடம் கேட்டதை வேலிக்கு மேலால் நீட்டுவாள் சரசுவதி. அந்த அளவுக்கு இந்த இருவருக்குமிடையில் வாரப்பாடு வலுத்திருந்தது. ஆனால் இரண்டு வளவுக்கும் இடையே உறுதியான வேலி இருந்ததுபோலவே உறவும் ஒரு எல்லையோடுதான் இருந்தது. இந்த இரண்டுபேருக்கும் இடையிலிருந்த “நான் ஆர், இவள் ஆர்” என்ற வேறுபாட்டுக்குப் பண வசதியும் காணிபூமியும்தான் காரணமாய் இருக்கவேண்டும் என்பது சரசுவதி சாடைமாடையாகத் தன் சொத்துப் பத்துகளைப்பற்றி இடைக்கிடை அவிழ்த்துவிடும்போது புவனி அறிந்துகொள்ளுவாள் புவனி.

சரசுவதி தனியே வாழ்வதன் காரணம் அவளுடைய ஒரே மகன் சுப்பிரமணியம் காட்டுக் கந்தோரில் கிளறிக்கல் வேலைக்கு எடுபட்டுக் கொழும்பில் கனகாலம் வேலை செய்து கடைசியில் ‘திருக்கணாமலைக்கு’ மாற்றம் வாங்கிக்கொண்டு போனதுதான். தன்னோடு வேலை செய்த அந்த ஊர்ப்பெடிச்சியைச் சடங்கு முடித்ததோடு தாயையும் துப்பரவாக மறந்துபோனான். “உவளோடை பெத்த பிள்ளைகூடச் சீவிக்கமாடான்” என்று ஊர்ச்சனங்கள் சரசுவதியின் காதில் படாமல் சொல்வதுண்டு. என்றாலும் தாய்க்கு இருந்திட்டு ஒரு போஸ்காட்டு அனுப்ப மறக்கமாட்டான் சுப்பிரமணியம். எப்போதாவது வரும் போஸ்காட்டை இடுப்பில் சொருவிக்கொண்டு, “என்ரை ராசாத்தி, இதை ஒருக்கால் வாசிச்சுக் காட்டணை” என்று புவனி வீட்டுக்கு வந்து நாடியைத் தடவாத குறையாக்க் கேட்பாள் சரசுவதி. புவனிக்கு அப்போது அவளைப் பார்க்கப் பாவமாக இருக்கும்.

“நல்லா மதியம் திரும்பிப்போச்சு” என்று உணர்ந்துகொண்டபோதுதான் சித்திரைப் பறுவத்தோடை வயிரவ சுவாமியாருக்குப் பொங்கவேண்டுமென்பதும் காலமை மரக்காலைக்குப் போய் விறகு வாங்கிக்கொண்டு வரவேண்டுமென்பதும் சரசுவதியின் நினைவுக்கு வந்தது. கையோடு கறுத்தக்கொழும்பான் பிரச்சனையைத் திடீரென ‘அயத்துப்’ போனவளாய்ப் பரபரவென்று வெளிக்கிட்டுக்கொண்டு படலையைத் திறந்து வெளியே போனாள் சரசுவதி. “அந்தக் கிழட்டுக் கோதாரியிலைபோவான் விறகு நெறுக்கக்கை திராசுப் படியை எடுக்கிற சாட்டிலை என்னையும் கள்ளத்தனமாப் பாப்பானெல்லோ அவன் அப்பிடிப் பாக்கக்கை அவனைத்தான் கொத்தி எரிக்கவேணும்போலை கிடக்கும்.” விறகுகாலைக் கிட்டினனை வைதுகொண்டே தெருவில் இறங்கினாள் சரசுவதி.

நேற்றுப் பகல் தூறின மழையில் வெளியில் கிடந்த விறகெல்லாம் ஈரமாய்ப் போய்விட்டிருக்கும். இது விறகுகாலைக் கிட்டினனுக்கு வாய்ப்பான சங்கதி. கூடிய நிறையில் வழக்கத்திலும் பார்க்கக் குறைந்த அளவான விறகை நிறுத்து அநியாய லாபம் எடுத்துப்போடுவான். கடையிலை அநியாய விலைக்கு விறகை வித்திட்டு அங்கை புட்டளைப் பிள்ளையாருக்கு நேத்திக்கடன் செய்து என்ன பிரயோசனம்? இது ஒவ்வொரு முறையும் அந்தக் கடைக்கு விறகு வாங்கப் போகும் வாடிக்கையாளர்களின் மனதில் எழும் நியாயமான கேள்வி. ஆனால் அக்கம் பக்கத்தில் வேறு விறகுகாலை எதுவும் கிடையாது என்பதால் கிட்டினனின் விறகுகாலையில்தான் திட்டித் திட்டியே விறகு வாங்கவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது.

நாயிறுகோயில் விறகு வண்டில்காரன்களும் இந்தப் பக்கம் வராமல் விட்டிட்டாங்கள். இனி வேளையோடை போனால் காலமை கொத்தின விறகுகளை வைத்திருப்பான். அப்பதான் சுள்ளித் தடியளாய்ப் பொறுக்கி எடுக்கலாம். இல்லையெண்டால் மொக்குத் தடியளைதான் வாங்கவேண்டிவரும்.

அடுத்த அரை மணித்தியாலத்துக்குள் கிட்டினனின் விறகுகாலைக்குப் போய் வாங்கின விறகுகட்டைக் கையோடு கொண்டுபோன இளைக்கயிற்றால் வரிந்து கட்டி இடுப்பில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுவிட்டாள் சரசுவதி. அவள் விறகுகட்டைக் குனிந்து எடுத்தபோது கடைக்காரக் கிட்டினனுக்கு வேறு அலுவல் இருந்ததால் சரசுவதியை இந்த முறை விழுங்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இது ஒருவகையில் சரசுவதிக்கு மனத்தாங்கலாய் உருவெடுத்ததால் விறகுகட்டு இன்று இன்னும் கூடப் பாரம்போலிருந்தது. விறகுகட்டை இடுப்பில் தூக்கி வைத்தாயிற்று. இனிக் கடையிலிருந்து றோட்டுக்கு ஏறுவதுதான் நாரி முறிந்த காரியம்போல் தோன்றியது சரசுவதிக்கு. ஒருவாறு முக்கி முனகிக்கொண்டு றோட்டில் ஏறியபோது பள்ளிக்கூடப் பெடியள் சயிக்கிளில் றோட்டால் அள்ளிக்கொண்டு போனார்கள். அதுகளுக்கென்ன தாய்தேப்பன் குடுக்கிற செல்லத்திலை இம்மை மறுமை தெரியாமல் வளருதுகள். சைக்கிளும் சட்டையும் வாச்சும் மட்டும் வலு கலாதி. ஊர் சுத்துறதும் கள்ளக் கோழி பிடிச்சுக் குடுவை ஊதித் தின்னுறதும், உதுகள் ஒழுங்காப் படிக்குதுகளோ ஆருக்குத் தெரியும். கொஞ்ச நேரத்துக்கு முந்திக் கறுத்தக்கொழும்பானுகளை உருத்திக்கொண்டுபோன பெடியள் மீது அவிழ்த்துவிட்ட ஆத்திரம் சரசுவதியின் மனதுக்குள் இப்போது விறகுகட்டின் பாரத்தால் இன்னும் சுவாலையாய் எரியத் தொடங்கிற்று.

“மாமி!” சரசுவதி ஒருவாறு திரும்பிப் பார்த்தாள். தறுமன்தான் பக்கத்தில் வந்து நின்றான். கூட்டாளிமாருடன் சயிக்கிளில் பள்ளிக்கூடம் போனவன் சரசுவதியை வழியில் கண்டுவிட்டுப் பக்கத்தில் வந்து சயிக்கிலில் இருந்து இறங்காமல் காலை மட்டும் நிலத்தில் ஊன்றிக்கொண்டு நின்றான்.

“என்னடாப்பு?” தெருவில் நின்று அவனை எப்படிப் பேசமுடியும்? போதாக்குறைக்கு ஏற்கனவே கதிரமலைக்கு ஏறியதுபோன்ற களைப்பு சரசுவதியை மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்தது.

 “நான் விறகுகட்டைச் சயிக்கிலிலை ஏத்திக்கொண்டு வாறன், மாமி.” வழக்கமாக தெருவில் இவளைக் கண்டால் சீக்காய் அடித்துக்கொண்டு போறவன் இன்று அவளுக்குப் பக்கத்தில் நின்ற நிலையைப் பார்த்தால் சரசுவதிக்கு முருகன்தான் நேரில் வந்தமாதிரிக் கிடந்தது.

“உனக்குப் பள்ளிக்கூடத்துக்கு நேரம் போட்டுதெல்லோடா மோனை!”

“இல்லை மாமி, இன்னும் கொஞ்சத்தாலை போனால் போதும், நான் விறகுகட்டை உங்கடை திண்ணையிலை போட்டிட்டுப் போறன், நீங்கள் பின்னாலை ஆறுதலா வாங்கோ!” கண்மூடி முழிக்கமுன் தறுமன் கண்ணுக்கெட்டாத் தூரத்துக்குப் போய்விட்டான். இப்படி எந்தப் பிள்ளை செய்வான். நீ நல்லாயிருக்கவேணுமடா, மோனை.

விறகுகட்டைத் தோழில் போட்டபடி தறுமன் வீச்சாய் சயிக்கிளை விட்டுக்கொண்டு போன திக்கைக் கண்கொட்டாமல் பார்த்தபடி வீட்டுக்குப் போவதையும் மறந்துபோய் றோட்டோரம் நின்றுகொண்டிருந்தாள் சரசுவதி. காலமை அவனைத் திட்டியதெல்லாம் மறந்துபோனது. விறகுச் சுமையை இறக்கியதால் இடுப்பும் முதுகும் லேசாகிப்போய் மனதிலும் சந்தோசம் நிரம்பியது. “வீட்டை போன கையோடை தறுமனுக்கு நாலு கறுத்தக்கொழும்பான் எடுத்து வைக்கலுக்கை பழுக்கவைச்சுக் கொடுக்கவேணும்.” தீர்மானித்துக்கொண்ட சரசுவதி இப்போது ஆறுதலாக வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினாள். கிட்டினன் தன்னை நோட்டம் விடவில்லையென்ற கோபமும் அந்தச் சந்தோசத்தில் எங்கேயோ பறந்துவிட்டது.