Jan 25, 2016

கடவுளும் கோபாலபிள்ளையும்


வாசல் கதவை யாரோ தட்டியமாதிரி இருந்தது, தடவியமாதிரியும் இருந்தது, பின்னர் விரல்களால் மெல்லமாய் விறாண்டியமாதிரியும் இருந்தது. இன்னும் கொஞ்சம்கூட அவதானித்தபோது எதிலும்சேராத கற்பூர வாசனையும் கதவிடுக்குகளுக்கூடாக உள்ளே நுழைந்ததுபோலுமிருந்தது. இது என்ன என்றைக்கும் இல்லாத புதுமையான விருந்தினர்? எவரேனும் வித்தியாசமான ஆள் வந்து வாசலில் நிற்கிறரோ?

அன்று பிற்பகல் அலுவலகத்தில் கடனுக்கு அழுது முடிந்ததும் வேளையோடு வெளிக்கிட்டு, வழியெல்லாம் மனித நெரிசலில் நசுங்கி, ஒழுகும் வியர்வையில் வழுக்கி, மனிதர் எவரும் சுலபமாகவும் சுயமாகவும் தொலைந்து போவதற்கென்றே கட்டிய டவுண் ரவுண் சுரங்கப் பொந்துகளூடாகப் புகுந்து, அவற்றிலே பளிங்குக் கற்கள் பதித்த பாதைகள் இருபுறமும் ஒன்றையொன்று போட்டிபோட்டபடி ஜகஜோதியாய் மின்னும் கடைகளில் மிச்சம் சாதாரண பெண்களுக்கென மிச்சம் அழகான பெண்கள் விற்கும் சொர்க்கலோகத்து இறக்குமதிகளான தலைப்பூச்சு முதல் கால்பூச்சு வரையிலான ஆயிரத்தெட்டுச் சாயங்கள், செண்டுகள், சாதனங்களின் சாம்பார் வாசத்தைச் சட்டைமுழுதும் தொற்றிக்கொண்டு, ஸ்டேஷனுக்கு நாயோட்டமும் சில்லறைப் பாய்ச்சலுமாய் வந்து, ரயிலிலும்பார்க்க வேகமாய் மூடிக்கொள்ளும் அதன் கதவுகளை வென்று மார்தட்டி, தோற்றவர்கள்மீது இரங்கற்பா பாடி, இருக்கையில் அமர்ந்து, அடுத்த ஆளின் ஐபோன் இசையின் அரைமணி நேரத் தாலாட்டின்பின் எங்களூர் ஸ்டேஷனில் துப்பப்பட்டு, கோயில் வாசலில் சிதறு தேங்காய் பொறுக்கப் பாய்ந்தவன்போல் விழுந்தடித்துக்கொண்டு வெளியேறி, இனி இந்த மாலைப்பொழுது என்னுடையதுதான் என்ற சுதந்திரக் களிப்பில் அலைமோதும் கார் சமுத்திரத்துக்குள் வலைவீசி, காலையில் என் காரை எங்கே விட்டேன் எனச் சிறிது நேரம் மயங்கிப் பின் ஒருவாறு அதனைக் கண்டு உருவி எடுத்து, வழியில் குறுக்கே தங்கள் காரைச் செலுத்தியவர்களையெல்லாம் இல்லாத சொற்களால் சபித்துக் கடைசியில் வீடு வந்து சேர்ந்து ‘அப்பாடா’ என்று சோபாவில் சாயும்போது உண்டான சுகத்தைச் சின்னக்கரண்டியால் ஐஸ் கிறீமைக் கிள்ளி எடுத்து சிறிது சிறிதாய் நாக்கில் வழித்து ருசிப்பதுபோல் மெள்ள மெள்ள அனுபவித்தவேளையில் ‘தடால்’ என்ற சத்தத்தோடு தேனீர்க் கோப்பையைப் பக்கத்திலிருந்த டீப்போவில் வைத்தாள் என் இல்லத்தரசி.



இவ்வளவு இடைவெளி ஏன் இங்கே விட்டேனென்றால் நீங்களும் நானும் கொஞ்சம் மூச்சு விடுவதற்காக.

“தேங்க்ஸ், டியர்” என்று சொல்லிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தேன். அவள் முகம் வழக்கம்போலவே சந்தேக ரேகைகள் படரக் கண்களை இன்னும் அழகாக்கின. அவள் தேனீர்க் கோப்பை மூலமோ மற்றப் பாத்திரங்கள் மூலமோ (அவற்றை வேண்டுமென்றே கீழே போட்டு உடைத்து) எழுப்பும் பின்னணி இசையைக்கொண்டே அவளின் அப்போதைய மனோ நிலையை அளந்துவிடும் பக்குவம் நூற்றுக்கு இருபது வீதம் மட்டுமே என்னிடமுண்டு. அதோடு இந்தப் பாடத்தில் நூறு மார்க்ஸ் எடுத்த ஆண்கள் எவருமில்லை என்பது எல்லாரும் அறிந்ததே.

“என்ன சிரிப்பு, வந்ததும் வராததுமாய்?” என்று கேட்டாள் மனைவி. குரலில் மட்டும் துடுக்குத்தனம் எங்கிருந்தோ வந்து தொற்றிக்கொண்டது. சோபாவில் அமர்ந்த சுகத்தில் என்னையும் அறியாமல் சிரித்துவிட்டேன்போலிருக்கிறது. இதற்கு மறுமொழி சொல்லப்போனால் கேள்வி-பதில் என்ற கட்டம் தாண்டி வாக்குவாதம் என்ற தரத்துக்கு அப்கிறேட் பண்ணவேண்டிவரலாம் என்பதனை அறிவேன். ஆகவே மௌனமே சிறந்த ஆயுதம்.

வேளைக்கு வீட்டுக்கு வந்தால், என்ன இன்றைக்கு வேளைக்கு வந்துவிட்டீர்களென்ற கேள்வி. தாமதமாய் வந்தால், ஏன் இன்றைக்கு இவ்வளவு நேரம் சென்றது என்ற கேள்வி. இந்தப் பெண்கள் ஆண்களைக் கேள்விகளால் துளைத்துக் காதலைத் தேடுகிறார்களோ? எல்லாவற்றுக்கும் எனது பதில் புன்சிரிப்பினால் பூசிமெளுகிய மௌனம்தான். அவளுக்கு என்மீது எள்ளளவும் சந்தேகமில்லை என்பதை அறிவேன். அத்துடன், தனது அன்பும் அதிகாரமும் இரண்டறக் கலந்த இரசாயன ஆயுதத்தை என்மீது அடிக்கடி பிரயோகிப்பதில் அவளுக்கு எல்லைகடந்த மகிழ்ச்சி என்பதும் தெரியும். எனக்கு இதனால் எள்ளளவும் பாதிப்பு இல்லை. பதிலுக்கு உள்ளுக்குள் புளுகந்தான். அவளால்தானே இன்றைக்கும் நான் உருப்படியாக இருக்கிறேன். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமாமே. சும்மாவா சொன்னார்கள்.

“சிரிப்புக்கு என்ன காரணம், சொல்லுங்கோ!” இடுப்பில் கைவைத்து அதட்டாத குறையாய் என் மனைவி என்முன்னே நின்று கோரிக்கை விடுத்தாள். கொடுப்புக்குள் கள்ளச் சிரிப்பு மறைந்திருந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை.

“நன்றாய்க் களைத்துப்போய் வந்தேனப்பா; சோபாவில் இருந்ததும் சுகமாய்க் கிடந்தது. அதனால் சிரித்தேனோ தெரியாது. அட கடவுளே! இதற்கெல்லாம் கருத்தெடுக்கலாமா?” என்று அவளைச் சமாதானப்படுத்த முயன்றேன். இவ்வளவும் போதும் அவள் என் பக்கத்தில் வந்து நெருக்கியடித்துக்கொண்டு இருப்பதற்கு. இதைத்தானே நானும் எதிர்பார்த்து வந்தேன். என் சாயரச்சைப் பூசைக்கு மணியடிக்கும் வேளையாகப் பார்த்துக் கரடி நுழைந்ததுபோல் கதவடியில் அந்தப் புதியவர் வந்து நின்றார்.

கதவடியில் யார் வந்து நின்றாலும் அதன் கண்ணாடிக்கூடாகக் கண்டுபிடித்து ஆளைக் கழுத்தில் கைவைத்துத் தள்ளாத குறையாக வழியனுப்பி வைத்துவிடுவாள் என் மனைவி. ஆனால் இன்றைக்கு இந்த வேலை என்னுடையது என்றதுபோல் தயங்கம் காட்டினாள். நானும் எழுந்துபோய்க் கதவைத் திறந்தேன்.

வாசலில் நின்றவர் ஏதோ சரித்திர நாடகத்தில் நடித்துவிட்டு விலாசம் மாறி என் வீட்டுக்கு வந்துவிட்டார்போலிருந்தது. வந்தவர் நல்ல அழகன். ஆனால் இவர் எங்களூர்ப் பெண்கள் எச்சில் ஒழுகப் பார்க்கும் தமிழ் சினிமா அழகன் அல்ல. மலையாளக் கிராமத்து ஆணழகன் என்று சொல்லலாம். ஆளின் உயரமும் அட்டகாசமான ஆளுமையும் என்னை அவருக்கு வணக்கம் போடச் செய்தன.

“எங்கே வந்தீர்கள், ஐயா? என்ன சங்கதி?” என நான் கேட்டபோது அவர் அசல் தமிழில் சொன்னார், “கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார்.”

“கடவுளா? கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் பழக்கமில்லை” என்று சொல்லிக் கையை விரித்தேன்.

“நான் சொல்வது நீங்கள் நம்பும் ஒரே கடவுள், நீங்கள் இந்தப் பூவுலகில் பிறப்பதற்குக் காரணமான கடவுள்”

“ஒத்துக்கொள்கிறேன், கடவுளை நாமெல்லாரும் நம்புகிறோம், கடவுள் இல்லையென்று கூட்டத்தில் பேசுகிறவன்கூடக் கல்லெறி விழும்போது “கடவுளே!” என்றுதான் சொல்கிறான். ஆனால் இவ்வளவு காலமும் இல்லாமல் திடீரென்று என்மீது ஏன் அவருக்கு அக்கறை வந்தது?”

“நீங்கள் கொஞ்சம் முந்திக் ‘கடவுளே’ என்று கூப்பிட்டீர்களே, அதனால்தான் உங்களை விசாரிக்கும்படி என்னை அவர் அனுப்பியிருக்கிறார்.”

இதேவேளை, விடுப்புப் பிடுங்கவென்று எண்ணி எழுந்து வந்து கதவுக்கு அப்பால் எட்டிப்பார்த்த என் மனைவிக்குப் புளுகம் தாங்கவில்லை. கதவடியில் நின்ற என் காதுக்குள் புகுந்து, “ஆளைப் பார்த்தால் ஜெமினி போல இருக்கிறார். உள்ளுக்கை வரச்சொல்லுங்கோ” என்றாள். இன்றைக்கு என்னைப் பிச்சுவாங்கப்போகிறாள் என்பது எனக்கு அப்போதே விளங்கிவிட்டது.

“வெளியே இப்பவே குளிர் அடிக்கத் துவங்கிவிட்டது. உள்ளே வாருங்கள்.” என்று கூறிக் கதவை அகலத் திறந்து ஜெமினி கணேசனுக்கு வழிவிட்டேன்.

தயங்காமல் உள்ளே வந்த ஜெமினி மென்மையான - என் மனைவியைப் பொறுத்தவரை கொல்லும் - சிரிப்பால் எங்களை அரவணைத்தார். கடவுளிடமிருந்தல்லவா வந்திருக்கிறார்?

“கடவுள் அனுப்பினார் என்று சொன்னீர்களே. அப்படியானால் நீங்கள் யார்?’ என்று கேட்டேன்.

“நான் அவருடைய முகவர், பிரதிநிதி, தூதுவர், தொண்டன், இதேபோல் எந்த வகையைச் சேர்ந்தவராகவும் எடுத்துக்கொள்ளுங்கள்.” என்றார்.

கொழும்பில் வாழ்ந்த காலத்தில் சிவாஜி கணேசனைத்தான் நேரே காணமுடியாமல் போய்விட்டது. அவருக்குப் படத்தில் நாதஸ்வரம் வாசித்த சேதுராமனையாவது காணலாம் என்ற எண்ணத்துடன் நண்பர்களும் நானும் அவருடைய வாசிப்பைப் பார்க்க பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயில் திருவிழாவுக்கு போனது நினைவுக்கு வந்தது. கடவுளை ஒரு நாள் மடக்கி அவரிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டுமென்று காத்திருந்த எனக்கு அவருடைய ஏஜென்டாவது வந்து மாட்டுப்பட்டாரேயென்று மனத்திருப்தியாயிருந்தது.

“கடவுள் எந்த இடத்திலும் இருப்பார், எல்லா நேரத்திலும் இருப்பார் என்று ஏதோ நேரில் கண்டதுபோல் சொல்கிறார்கள். ஆனால் அவர் தனக்குப் பதிலாக இன்றைக்கு உங்களை அனுப்பியிருக்கிறாரே.” என்று வினா எழுப்பினேன்.

“உங்களுக்குத் தெரிந்த செய்திதான், அன்பரே. இப்போது இப்பூவுலகின் கண்ணே தற்போதுள்ள மக்கட்பெருக்கம் புராண காலத்தில் இருந்ததிலும் பார்க்க ஆயிரம், இலட்சம் மடங்கு அதிகரித்துவிட்டது. இதனால் அவர்கள் ஒவ்வொருவரையும் காண அவராகவே நேரே போகமுடியாமலிருக்கிறது என்பதனால்தான் எங்களை அவர்களிடம் அனுப்புகிறார். ஆனால் அவர் உங்கள் மீது காட்டும் அன்பும் அக்கறையும் ஒருவித மாற்றமுமில்லாமல் அன்றுபோல் இன்றும் இருக்கிறது.” என்று ஒரு குட்டிப் பிரசங்கத்தை நிகழ்த்திவிட்டு இவர்கள் கைதட்டுவார்களோ என்று எதிர்பார்த்தவர்போல் எங்களைப் பார்த்தார்.

இந்த நேரம் என் மனைவி குறுக்கிட்டு, “இவர் குளிருக்குள்ளாலை வந்திருக்கிறார், என்ன குடிக்கிறியள் என்று முதல் கேளுங்கோ.” என்று எங்கள் யாழ்ப்பாண விருந்தோம்பல் முத்திரையை இறுக்கிக் குத்தினாள்.

“மிகவும் நன்றி, நான் எதுவும் குடிப்பதில்லை. நீங்கள் ஏன் அழைத்தீர்கள் என்பதைச் சொன்னால் போதும் அதைக் கடவுளிடம் சென்று முறைப்பாடு செய்வேன்” என்றார்.

“நான் கூப்பிட்டதை உடனே அறிந்த கடவுள் ஏன் கூப்பிட்டேன் என்பதை மட்டும் அறிய முடியாதவராகவா இருக்கிறார்” என்று என் மனதில் நியாயமாகவே எழுந்த கேள்வியைக் கேட்டேன்.

“ஆசிரியர் மறுமொழியைத் தெரிந்துவைத்துக்கொண்டு மாணவரைக் கேள்வி கேட்பதில்லையா? உங்கள் மனைவி உங்கள்மீது அன்பாய் இருக்கிறாள் எனத் தெரிந்துகொண்டும் அதை அவள் மூலமாக அறிய நீங்கள் அடிக்கடி ஆவல் கொள்வதில்லையா? என்று பாடமாக்கிய வசனத்தை ஒப்புவிப்பதுபோல் அழுத்தமாகச் சொன்னார், ஜெமினி.

நாங்கள் இருவரும் விசுக்கெனச் சிரித்துவிட்டோம். கடவுளிடம் நல்ல பயிற்சி எடுத்துத்தான் வந்திருக்கிறார் நமது விருந்தாளி.

“வீடுதேடி வந்தவருடன் நான் விவாதம் செய்ய விரும்பவில்லை, சுவாமி. என் வாழ்நாளில் கடவுளைக் காண ஒரு வாய்புக் கிடைக்குமானால் அவரிடம் ஒரு கேள்வி மட்டுமே கேட்கவேண்டுமென்று இத்தனை காலமும் நான் காத்திருந்தேன். அந்தக் கேள்விக்கு நீங்கள் முதலில் பதில் சொல்லுவீர்களா” என்று கூறி வந்த சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

“கேளுங்கள், அன்பரே.”

“நீங்கள் கூறும் கடவுள் என்பவர் உண்மையில் யார்? அவர் ஆணா பெண்ணா?” என்று கேட்ட என் மனதில் கடவுள் பெண்ணாயிருந்தால் எப்படி இருப்பாள் என்ற கற்பனையும் ஒரு கணத்தில் ஓடி என் மனதை இதமாக வருடியது.

நிமிர்ந்து என் கண்ணினூடே நோக்கிய தூதுவர் தீர்மானமாகச் சொன்னார், “கடவுள் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை. உங்களின் கற்பனைக்கு எட்டாத மாபெரும் சக்தியையே நீங்கள் கடவுள் என அழைக்கிறீர்கள்”. என்றார்.  கையோடு கனவில் எட்டிப்பார்த்த பெண்ணுருவமும் கரைந்துபோனது.

“கடவுள் சக்தியேயுருவாக இருக்கிறாரென்றால் அவர் எப்படி மனிதர் போல் தோன்றும் உங்களை இங்கே அனுப்பியிருக்கமுடியும்?”

“இதுவும் உங்களைப் போன்ற மனிதப் பிறவியின் அறிவுக்கு எட்டாத இரகசியங்களில் ஒன்று, அன்பனே!”

“உண்மையாயிருக்கலாம், சுவாமி. ஆளப்படுகிறவன் முட்டாளாயிருக்கும்வரை ஆள்கிறவனின் ஆட்டத்தைக் கேட்க ஆட்களிருக்கமாட்டார்கள்.  என்றாலும் என் அறிவுக்குச் சரியெனப் பட்டதைக் கேட்கிறேன், ஆணாகவோ பெண்ணாகவோ இல்லாத கடவுள் ஆணுக்கு மட்டுமேன் பெண்ணிலும் பார்க்கக் கூடிய அதிகாரங்களை வழங்கினார்?”

“ஆணுக்குக்குத்தான் கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட்டன என்று சொல்வதிலும் பார்க்க ஆண் அதிகாரங்களைப் பெண்ணிடமிருந்து பறித்துக்கொண்டான் என்பதுதான் சரியானது.” என்று கூறிய தூதுவர் கையோடு என் மனைவியின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள விரும்பியவர்போல திடீரென நம்மூர் அரசியல்வாதியாக மாறி அவள்மீது அனுதாபப் பார்வையை வீசினார்.

இவர் சொல்வதெல்லாம் நம்பும்படியாகவும் இருந்தது நம்ப முடியாதது போலவும் இருந்தது. ஆனால் என் மனைவி என்ன நினைக்கிறாள் என அறியும் நோக்கில் அவள் பக்கம் திரும்பியபோது ஜெமினி கணேசனை அவள் திருநெல்வேலி அல்வாவாக நினைத்துக்கொண்டிருந்தாள் என்பது அப்படியே விளங்கியது.

“இதை இன்னொருவகையில் சொல்கிறேன். பெண்ணின் அதிகாரம் பறிபோவதைக் கடவுள் தெரிந்துகொண்டே அனுமதித்திருந்ததால் அவர் தன் படைப்புத் தொழிலில் பாரதூரமான பிழை விட்டாரென்பதை ஒப்புக்கொள்கிறீர்களா இல்லையா?”

“யார்தான் பிழை விடாமலிருக்கிறார்கள்?” எனக் கூறிய தூதுவர் கைகளை விரித்தபடி கூரையை நோக்கினார்.

"மனிதர்கள்தான் பொறுப்பிலிருந்து தப்பிக்கொள்கிறார்களென்றால் கடவுளும் மனிதரைப்போல் தப்பிக்கொள்ளப் பார்க்கிறாரே.”

“படைப்பில் பிழை ஏற்படின் அதைத் திருத்துவது மட்டுமல்ல அதிலிருந்து தப்பித்துக்கொள்வதும் படைப்பவனுக்குத் தெரிந்திருக்கவேண்டிய உபாயம்.”

“போகட்டும், கடவுள் விட்ட பிழை எப்போது திருத்தப்படும் என்கிறீர்கள்?”

“அந்தப் பிழை கடந்த பல யுகங்களாகத் திருத்தப்பட்டு வருகிறது. அதுதான் இன்றைய உலகத்தில் பார்க்கிறோமே! பெண்கள் தமக்குரிய அதிகாரங்களைப் படிப்படியாகத் திருப்பிப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் அல்லது ஆண்களிடமிருந்து கெட்டித்தனமாகப் பறித்துக்கொண்டிருக்கிறார்கள்.” இவர் என்ன காதல் மன்னனா அல்லது புன்னகை மன்னனா?  சொல்லையும் கைவிடாமல் சிரிப்பையும் கைவிடாமல் எப்படி இவரால் பேச முடிகிறது? என்றாலும் இவரை வாதத்தில் வெற்றியடைய விடக்கூடாது என்பதில் நான் தீர்க்கமாயிருந்தேன்.

“ஆண்களாகிய நாமே பெண்களின் உரிமைகளைத் திருப்பிக்கொடுக்கிறோம்; அதில் பெருமையும் அடைகிறோம். கடவுள் செய்த பிழையை மனிதன் திருத்துக்கின்ற யுகம் இது. பெண்கள் ஆண்களுடன் சம உரிமையுடன் வாழவேண்டுமென்று கடவுள் அன்றே எண்ணித் தன் படைப்புத் தொழிலைச் செய்திருந்தால் அவர் படைத்த இந்த உலகம் என்றோ உன்னதமான பூமியாக உருவாகியிருக்கும். கடவுளுக்கு இனி இங்கே இடமில்லை என்ற சூழ்நிலையை உண்டாக்கியதே கடவுள்தான், ஐயா. அவரின் படைப்புத் தொழிலை மட்டுமல்ல. அழிப்பைத் தொழிலையும் நாமே வெற்றிகரமாய்ச் இங்கே ஒழுங்காகச் செய்துகொண்டிருக்கிறோமே. இனி ஏன் நாம் அவரை அழைக்கப்போகிறோம்?”

அடுத்த கணம் வந்திருந்த விருந்தாளி வந்ததுபோலவே மாயமாய் மறைந்து போனார். திகைத்துப்போன நாம் சில விநாடிகள் செயவதறியாது நின்றோம்.

“அட கடவுளே, வந்தவரிடம் ஒரு வரம் கேட்டிருக்கலாமே. ஆளைக் கண்டதும் அதை மட்டும் மறந்துபோனோம்.” என்று அங்கலாய்த்தாள் என் மனைவி.

“வேண்டாம், கடவுளை இன்னொருமுறை அழைக்க வேண்டாம். வரம் கொடுக்கும் வல்லமை அவரிடம் எப்போதோ வற்றிப்போய்விட்டது. காரணம் என்னவென்றால் மனிதர்கள் அவரை அழைப்பதில் அர்த்தம் எதுவுமில்லை என்பதை அவரே உணர ஆரம்பித்துவிட்டார்.”

வந்தவரைக் காணவில்லை ஆனால் அவர் விட்டுப்போன வாசனை மட்டுமே வீட்டினுள் எஞ்சியிருந்தது. என் மனதில் மட்டும் ஏதோ ஒருவகையான சூனியம் படர்ந்தது போன்ற உணர்வு மேலிட்டது. பக்கத்தில் நெருங்கிவந்து நின்ற மனைவி என் கண்களில் துளிர்த்த நீரைத் துடைத்துவிட்டு ஆதரவுடன் என்னை அணைத்தாள். அவளின் தோழில் என் தலையைச் சாய்த்தபோது என் மனம் ஏனோ கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தது.
----

No comments:

Post a Comment