Jan 25, 2016

அக்கா

எங்கள் குடும்பத்தில்
அம்மாவுக்கு அடுத்தது அக்காவில்தான் எனக்கு விருப்பம்
பல வேளைகளில் அம்மாவின் இடத்தை
அக்கா பிடித்துவிடுவாள்.
அக்காவென்றால் மூத்தக்கா
அடுத்தவள் சின்னக்கா
அதற்கடுத்தவள் குட்டி அக்கா.

சின்னக்கா கொஞ்சம் நிறம் குறைவு
அதுதான் அவளுக்குள்ள ஒரே கவலை
ஆனால் வடிவுக்குக் குறைச்சலில்லை.
குட்டி அக்காதான் எல்லாரிலும் நிறம்
அதனால்தான் அவளுக்கு நடப்பு.
குட்டி அக்கா அட்டகாசமான வடிவென்றால்
சின்னக்கா அடக்கமான வடிவு.
அக்கா எப்படியிருப்பாள்?
அவள் அம்மாவைப்போல் என்றபடியால்
அவள் எப்படியிருந்தாலும் எனக்கு ஒன்றுதான்.

“உங்கள் எல்லாரிலும் பார்க்க அம்மாதான் வடிவு” என்று
ஒரு நாள் ஏதோவொரு குணத்தில் சொல்லிவிட்டேன்.
சின்னக்காவுக்கு முகம் வாடிவிட்டது
தனது நிறத்தை வைத்துச் சொன்னேனென்று நினைத்துவிட்டாள்.
குட்டி அக்காவுக்குக் கோபம் வந்துவிட்டது
எழும்பிப் போய்விட்டாள்.
ஆனால் அக்கா சொன்னாள்
“பின்னே, அம்மாதான் எல்லாரிலும் வடிவு.”
அதுதான் அக்கா!

நான் படுப்பதற்குத் தலையணையைத் தேடுவதில்லை
அக்காவின் மடி எப்போதும் தயாராயிருக்கும்.
எனக்குச் சோறு குழைத்துத் தரும்போது
நான் அவள் வாயைப் பார்ப்பேன்.
அதுவே என்னைச் சாப்பிடும்படி தூண்டும்.
புத்தகத்தை வாசித்துக் காட்டுவாள்,
அதை எழுதியவர்தான் வாசிப்பதுபோலிருக்கும்.

அக்காவுக்குக் கல்யாணம் நடந்தது.
வெளியூர் மாப்பிள்ளை.
அத்தான் கறுப்பென்றாலும் கம்பீரமாக இருப்பார்.
கல்யாணம் முடிந்ததும் அக்கா எங்களை விட்டுப்போனபோது
அழுதுகொண்டேயிருந்தேன்.
நான் பெரிய பள்ளிக்கூடத்துக்கு மாறியபோது
அத்தான் பார்க்கர் பேனையொன்று வாங்கித் தந்தார்.
அதுவும் அக்காவின் வேலைதானென்று தெரியும்.

அக்கா பிள்ளைப் பேறுக்காக ஆஸ்பத்திரியில் இருந்தாள்.
எல்லாரும்போய்ப் பார்த்தோம்.
உனக்கு மருமகன் வேண்டுமா மருமகள் வேண்டுமாவென்று
எல்லாரும் என்னைக் கேட்டார்கள்.
எனக்கு அழுகை வந்துவிட்டது.
எனக்கு அக்காதான் வேண்டுமென்று
இவர்களுக்கேன் விளங்கவில்லை?
அடுத்த நாள் பிள்ளைப்பேறின்போது
ஏதோ நடந்து அக்கா இறந்துபோனாள்.
நான் பார்க்கப்போன வேளை
அக்காவின் கட்டிலில் அவளுடைய மகள் படுத்திருந்தாள்.
மகளும் அக்காவைப்போலவே இருந்தாள்.
அக்கா என்னைவிட்டுப்போகவில்லை.

மருமகளுக்கு ஏதோ பெயர் வைத்தார்கள்
அவளை அக்கா என்றுதான் கூப்பிடுவேன்
மற்றவர்கள் என்ன சொல்வார்களென்று
கவலைப்படப்போவதில்லை நான்.
-----

No comments:

Post a Comment