Jan 25, 2016

நிலபாவாடை

கந்தர் உடையார் தெரு சந்தியில்
பஸ்ஸூக்கு நின்றுகொண்டிருந்தேன்
அப்போது அந்த மரண ஊர்வலம் வந்துகொண்டிருந்தது.
இறந்துபோனவரைக் காவிக்கொண்டுவந்த
அந்த எட்டோ பத்துப் பேருக்கு முன்னால்
எங்களூர்ச் சலவைத் தொழிலாளர்கள்.
நிலபாவாடையை வீசி வீசி விரித்துக்கொண்டிருந்தார்கள்
அவர்களெல்லாரும் வயது வந்தவர்களாக இருந்தார்கள்
ஒருவன் மட்டுமே இளைஞனாயிருந்தான்.
அவனை நன்றாய் அவதானித்தபோதுதான்
என்னோடு கிளறிக்கல் சோதனைக்குப் படித்த நண்பன்
ஈஸ்வரன் என்பது தெரிந்தது.
அவன் சோதனை சித்தியடைந்து எங்கேயோ வேலையாயிருந்தான்
ஊருக்கு வரும்போது தகப்பனுக்கு உதவியாய்த்
தொழிலைச் செய்வான்போலும்.

ஈஸ்வரன் கையில் சுற்றிய சேலைகளோடு ஓடியபோது
ஒரு சுருள் எனக்குக் கிட்டே நிலத்தில் விழுந்தது.
அதையெடுத்து அவனிடம் கொடுத்தபோதுதான்
அவனும் என்னைக் கண்டான்.
ஒரு விநாடி என்னை உற்று நோக்கிவிட்டு
கொடுத்ததை வாங்கியபடி ஓடிப்போனான்.
என்னைத் தெரிந்துகொண்டதாக ஏன் அவன் காட்டிக்கொள்ளவில்லை?
எனக்கு மனதை என்னவோ செய்தது.
இன்னொருமுறை எனக்குக் கிட்டே வரமாட்டானாவென்று காத்திருந்தேன்.
அதற்குள் ஊர்வலம் எட்டச் சென்றுவிட்டது.
ஈஸ்வரனை அதற்குப் பிறகு சந்திக்கவேயில்லை.
நான் கிளறிக்கல் சோதனையில் தோற்றுப்போனதை அறிந்திருப்பான்.
நண்பனே, அதற்காகவா உன் வருத்தத்தை இப்படித் தெரிவித்துக்கொண்டாய்?
----

No comments:

Post a Comment