Jan 25, 2016

பத்தியம்


டாக்டர் மயில்வாகனம் புரண்டு படுத்தார். பாயோரத்தில் நீட்டிக்கொண்டிருந்த ஈர்க்குக் காம்பு கன்னத்தில் பலமாகக் கூர்பார்த்தது. தலையைத் தலையணையில் அப்படியே பக்கவாட்டில் இழுத்து முதல் சிகிச்சையை மேற்கொண்டார்.

இதோ விடிந்துவிடும் போலிருந்தது. சந்தியில் மெயில் பஸ் நின்று புறப்பட்டுச் சென்ற ஓசை துல்லியமாய்க் கேட்டது. அந்த ஓசையைக் கொண்டு நேரம் கிட்டத்தட்ட என்னவாய் இருக்குமென்று கணக்கிட்டுக்கொள்ளும் அனுபவம் ஊரிலே எல்லாருக்கும் கிட்டிய சித்தி. இப்பொழுது ஊர் முழுவதும் விழித்துவிட்டிருக்கும். மயில்வாகனம் மாத்திரம் எழுந்துகொள்ளப் பிரியப்படாதவர்போல் அப்படியே கிடந்தார். மனதுக்குள் யோசனைகள் பல ஓடின.

“என்ன தரித்திரியம் பிடிச்ச சீவியம், வேளைக்கு ஒரு சிரட்டைக் கஞ்சிக்கு வழியில்லாமல்.” நெஞ்சு வேதனையால் வழிந்தது.

அந்த இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை. அதாவது தூக்கம் வரவில்லை. முதல் நாள் இரவு படுக்கப் போகும்போது அன்று நடந்த காரியங்களைக் கால ஒழுங்கின்படி வரிசைப்படுத்தி மனத்திரையில் ஓடவிட்டு வழக்கம்போல் சுயவிமர்சனத்தில் இறங்கியபோது சனியன்போல அந்தச் சிரட்டைக் கஞ்சி சங்கதி மாத்திரம் திரும்பத் தோன்றி அவரை ஆய்க்கினைப் படுத்திக்கொண்டிருந்தது.

மத்தியானம், போன இடத்தில் குறை வைக்கக்கூடாது என்பதற்காகக் கையலம்பிக்கொண்டதால் ஏற்பட்ட உசாரில் அவருக்கு அன்றைய பொழுது போனது தெரியவில்லை. இரவுக்கு இரண்டு மிடறு தெளிவைக் குடித்துவிட்டுப் படுத்தாலே போதும், வயிறும் கொஞ்சம் லேசாக இருக்கும் என நினைத்து அரிசிப்பானையைத் திறந்து பார்த்தார். முதுகுத் தண்டு வலித்ததேயொழியப் பானைக்குள் எதையும் கண்டுகொள்ள முடியவில்லை. அன்று இரவு வெறும் வயிற்றோடு படுக்கவேண்டிவருமே என்ற கவலையும் தன் சம்பாத்தியத்தின் விறுத்தத்தை நினைத்ததால் ஏற்பட்ட எரிச்சலுமாக வீடெல்லாம் புகுந்து இல்லாத ஒன்றுக்குத் தேடுதல் நடத்தினார்.

வீட்டில் இருந்ததெல்லாம் உழுத்துப்போன உரல் உலக்கைகளும் மருந்துச் சீசாவுகளும்தான். இவைகளை வைத்துக்கொண்டே அன்றாடப் பாடுகளைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற விதியை ஆயுள்வேத வைத்தியர் என்ற பட்டத்தில் சட்டம் போட்டுச் சுவரில் வைத்திருக்கிறார். இப்போது அவர் சட்டபூர்வமாக டாக்டரும்கூட.

அதை நினைத்தாலே அவருக்குச் சிரிப்பு வந்தது. ஆனால் அதற்கும் அவர் விரும்பாதவர்போல் திரும்பவும் புரண்டு படுத்தார். இரவெல்லாம் நித்திரை கொள்ளாததால் உடம்பின் தசை நார்களெல்லாம் பச்சைப் புண்ணாய் நொந்தன. கடைக்கண்ணின் ஓரம் நீர் கசிந்தது. மயில்வாகனம் பொறுக்கமுடியாமல் எழுந்துகொண்டார். மெல்லிய இருளின் சாயல் திண்ணையில் பரவியிருந்தது. பாயைச் சுருட்டிக்கொண்டு உள்ளே போய்ப் பரணில் வைத்துவிட்டு அரையில் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு திரும்பவும் வெளியே வந்து திண்ணையில் காலைத் தொங்கப் போட்டபடி அமர்ந்து வானத்தை அண்ணாந்து பார்த்தார். முற்றத்தில் வீசிய காலைக் காற்று பழுத்துச் சிவந்த கண்களுக்கு ஒத்தடம் கொடுப்பதுபோலிருந்தது. முதல் நாள் குடித்துவிட்டு இறப்பிலே சொருவிய சுருட்டை எடுத்து விரல்களால் சிறிது ‘பிடித்துவிட்டு’ வாயில் வைத்துப் பற்களால் இறுக்கிக்கொண்டார். இனிமேல்தான் நெருப்புப் பெட்டியைத் தேடவேண்டும். அதுவே இப்போதைக்குப் பெரிய தொந்தரவுபோல் அவருக்குத் தோன்றியது. சுருட்டை வாயிலிருந்து எடுத்துக் காதிலே சொருவிவிட்டு எச்சிலைக் கூட்டி உமிழ்ந்து துப்பினார். பயணத்தால் வந்த ஒரு காற்சட்டைக்காரன் சப்பாத்துகள் சரசரக்கத் தெருவால் நடந்து சென்றான். நாய்கள் எதையோ நினைத்துக் குரைத்தன. அவையும் தம்முடைய வயிற்றுப்பாட்டை நினைத்துக் குரைப்பதுபோல்தான் மயில்வாகனத்துக்குத் தோன்றியது. அவருக்கு அப்படிக் குரல் எழுப்பத் தெரியாது.

மயில்வாகனத்தை ஊரிலே எல்லாரும் மயிலர் என்றுதான் அடையாளம் காட்டுவது வழக்கம். நேரிலே அவரைக் கண்டு கதைக்கும்போது மட்டும் பரியாரியார் என்றோ வைத்தியர் என்றோ மரியாதையோடு அழைப்பார்கள். மற்றும்படி வெறும் மயிலர்தான்.

மயில்வாகனம் மற்றவர்களைப்போல் அரசியல்வாதியாகவோ இலக்கியவாதியாகவோ அல்லது வேறேதும் அதுபோன்ற ஊர்த் துளவாடங்களுக்கு உரியவராகவோ ஆகாமல் தப்பிக்கொண்டார். அவருக்குத் தெரிந்த்து வைத்தியத் தொழில் ஒன்றுதான். அப்போது மனிசிக்காறி இருந்த காலத்தில் மட்டும் கோயில் வீதியில் ஊர்ப் பொதுக்கூட்டங்கள் நடக்கும்போது தலையைக் காட்டிவிட்டு வந்துவிடுவார். ஒருமுறை, உள்ளூர்க் கிராமச் சங்க லெச்சன் கேட்கவேண்டுமென்று கொஞ்சப்பேர் அவரைப் பெரும் வில்லண்டப்படுத்திகொண்டிருந்தார்கள். அப்போது அவர் நாலுபேரறிய வசதியாக இருந்த காலம். வந்து நின்றவர்களைப் பார்த்து மயில்வாகனம் மனதுக்குள்ளேயே சிரித்துக்கொண்டார். இண்டைக்குக் கிராமச் சங்க லெச்சன் கேள் என்பவர்கள் அதிலை வெண்டிட்டால் நாளைக்கு பாளிமென்ட் லெச்சன் கேள் என்பாங்கள். “உந்த அலுவலுக்கெல்லாம் வேறை ஆக்கள் இருக்கினம், பாருங்கோ” என்று கூறி மறுத்துவிட்டார். அப்போது ‘ஓம்’ போட்டிருந்தால் இன்றைக்குக் கொஞ்சமாவது வசதியாய் வந்திருக்கலாம் என்று இப்போதும் சில வேளைகளில் நினைத்துக்கொள்வார். அந்த ஊர் ஆயுள்வேதம் படித்த ஒரு அரசியல்வாதியை இழந்துவிட்டது.

பொழுது முழுவதுமாய்ப் புலர்ந்துவிட்டது. மயில்வாகனம் திண்ணையைவிட்டு இறங்கி வாசல் படலையைத் திறந்து தெருவிலே வந்து நின்றார். அத்தெருவால் கிழக்காக ஒரு கூப்பிடு தூரம்போய் தெற்கே அம்மன் கோயில் பக்கம் திரும்பினால் ஒரு வெட்டை வரும். அதையும் தாண்டிப் பனம் பாதியடிப் பக்கம் வந்துவிட்டால் காலையில் வெளிக்கிருக்கும் கடமையைத் தீர்த்துக்கொள்ளலாம். அங்கே போய் ஆமணக்கு மரங்களுக்குப் பின்னால் சிறிது நேரம் குந்தி எழுந்தால் உடல் பாரம் மட்டுமன்றி மனப்பாரமும் கொஞ்சம் குறையும். மயில்வாகனம் எட்டி நடந்தார்.

அவருக்கு முன்னால் செல்லத்துரையின் மகன் வந்துகொண்டிருந்தான். அவன் கொழும்பில் டாக்குத்தருக்குப் படிக்கிறானாம். கொழும்பில் படித்தாலென்ன ஊருக்கு வந்துவிட்டால் அம்மன் கோயில் பாத்தியடிப் பக்கந்தான் வரவேண்டும். மயில்வாகனம் அவனைக் கூர்ந்து கவனித்தார். அவன் படிப்பையும் முடித்துவிட்டால் அவனை நம்பி யாராவது கையை நீட்டுவார்களா என்பது சந்தேகமாயிருந்தது. “நாமெல்லாம் வைத்தியம் படிச்ச காலத்திலை இப்படியா கறாளை பத்தி இருந்தோம்? அப்போதெல்லாம் ஆளைப்பாத்தே கல்வியின் லட்சணத்தைச் சொல்லிப்போடலாம். எங்களன்ரை கல்விக்கு வேதம் என்றேன் பெயர் வைத்தார்கள்? அவ்வளவுக்கு அது அநாதி. இயற்கை எவ்வளவு அநாதியோ வேதமும் அப்பிடித்தான். அதைப் படித்தறியிறதெண்டால் எவ்வளவு வித்துவம் வேணும். உந்த ஐஞ்சு வருசப் படிப்பு எங்களுடைய ஒரு சூத்திரத்துக்கு உறைபோடக் காணாது. இதையெல்லாம் இப்ப ஆர் நினைச்சுப் பாக்கிறாங்கள். எடுத்ததுக்கெல்லாம் ஆசுப்பத்திரிக்கு ஓடுற காலம். இங்கிலீசு வைத்தியந்தான் இவங்களுக்கு வேதமாகிவிட்டது.”

வைத்தியக் கலை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதைப்பற்றி அவர் மறுக்கத்தயாரில்லை. ஆனால் பாரம்பரியமான இயற்கை வைத்தியத்தில் ஊறிப்போனவர்களின் தொழில்கள் படுத்துவிட்டதில் அவருக்குப் பெரிய ஆதங்கம். கல்வி ஒன்றைக் கற்றுக்கொண்டுவிட்டால் அதில் அவனவனுக்குப் பக்தி ஏற்படுவது இயற்கைதானே. மயில்வாகனத்தைப் பொறுத்தவரையில் ஆயுள்வேதம் என்பது கல்வி மாத்திரமல்ல, அது அன்றாட வாழ்க்கையின் மூச்சு. அவருக்குப் பின்னால் அந்தத் தொழிலில் இறங்குகிறவர்களுக்கும் தன்னைப்போல் சிரட்டைக் கஞ்சிக்கு வழியில்லாமல் போய்விடுமோ என்ற பயம் அவருக்குள் எழுந்தது.

“பின்னடிக்கு யார் எப்படிப் போனாலென்ன? இண்டைக்கு நமக்குக் கஞ்சிக்கு வழியில்லை.” மயில்வாகனத்துக்கு வேதனையோடு சிரிப்பும் கலந்துகொண்டது.

ஆமணக்கம் பற்றைகளின் பின்னால் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் ஒரு சில தலைகள் மட்டும் தென்பட்டன. மயில்வாகனம் எட்டச் சென்று தனிமையாய் நின்ற பற்றையின் பின்னால் குந்திக்கொண்டார்.

என்னதான் காண்டிய காலமானாலும் ஆமணக்கு மரங்கள் லேசில் பட்டுவிடாது. எந்தச் சீதோஷ்ணத்தையும் பொறுத்துக்கொண்டு பால் நிரம்பி விறைத்த தண்டுகளை வெய்யிலை நோக்கி நீட்டிப் பசிய இலைகளைப் பரப்பிச் சடாய்த்து நிற்கும். அந்தக் காய்ந்து வெடித்த நிலத்திலிருந்து கிடைக்கக்கூடிய மிகக் குறைந்த நீரைக்கொண்டே காலத்தைக் கடத்திவிட அவைக்கு வல்லமை கிடைத்திருக்கிறது.

மயில்வாகனம் இருப்புக்கொள்ளமுடியாமல் மரத்தில் ஒரு இலையை ஒடித்தார். தண்டில் காம்பு விலகிப்போன இடத்தில் பால் ‘விசுக்’கெனக் கொட்டியது. ஒவ்வொரு காம்புப் பொட்டிலும் இப்படியே பால் கொட்டுமானால் மொத்தத்தில் அது எவ்வளவு பாலைச் சேகரியம் பண்ணி வைத்திருக்கும்! அதற்குக் கிடைக்கும் உணவு பாலாகவா கிடைக்கின்றது? இல்லையே! மயில்வாகனத்துக்கு மூலிகைகளின் வீரியத்தைப் பற்றித்தான் தெரியும். அவற்றைத் தாவர சாத்திரத்தின் அடிப்படையில் வைத்து ஆராயத் தெரியாது.

ஆமணக்கு மரம் கண்ணீர் விடுவதாக நினைத்துக்கொண்டார்.

கண்ணீர்!

உடலில் ஏற்பட்ட வேதனையினாலா? உழைக்கும் கரமொன்று ஒடிந்துவிட்டதே என்ற விசாரத்தினாலா?

கண்ணீரல்ல அது. கரிசல் மண்ணுக்குள் நீரைத் தேடி ஓடி ஓயாது உழைத்ததின் பயன். அநியாயமாக அவ்வுழைப்புச் சுரண்டப்படுவதைக் கண்டு மௌனமாய்த் தெரிவிக்கும் அதன் எதிர்ப்பு!

மயில்வாகனத்துக்குப் பொறிதட்டியதுபோல அப்போதுதான் மனதில் ஏதோ துலங்கியது.

அன்றைக்கு அவர் வேளைக்கே அங்கிருந்து கிளம்பிவிட்டார். மடத்துக் கிணற்று நீரில் கால் கழுவிக்கொண்டு ஊர்வலம் வந்ததுபோல மேற்கேயுள்ள ஒழுங்கையில் இறங்கி நடந்து முடக்கிலே திரும்பி மெயின் றோட்டிலே ஏறினார்.

முடக்கிலே கம்பி வேலியின் உட்புறமாகப் பெரிய இரும்புக் கிறாதிகள் போட்ட ஒரு கட்டிடம் அன்று மாத்திரம் ஏனோ அதிசயமாய் அவர் கவனத்தைக் கவர்ந்தது. இதுகாலவரைக்கும் அது நெசவு சாலை என்றுதான் அழைக்கப்பட்டுவந்தது. சனி, ஞாயிறு என்றில்லாமல் எந்த நாளும் கலகலத்துக்கொண்டிருக்கும் கைத்தறி நெசவு முன்னெல்லாம் அங்கே நடந்துகொண்டிருந்தது. நாற்பது, ஐம்பது என்று பெண்பிள்ளைகள் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வந்து அங்கே வேலைக்குச் சேர்ந்திருந்தார்கள். இப்போது கட்டிடம் பூட்டப்பட்டுக் கிடந்தது. நெசவு சாலையின் ‘புறப்பறீட்டர்’ தனக்கு அந்தத் தொழில் எக்கச்சக்கமான நட்டத்தைக் கொடுக்கிறதென்று கொஞ்சக் காலமாகக் கண்டவர், நிண்டவர்களிடமெல்லாம் எதற்கோ முன் எச்சரிக்கையாகச் சொல்லிப் புலம்பிக்கொண்டு திரிந்தார். கடைசியில் கதைவுகளை இழுத்து மூடியும்விட்டார். இப்போ என்னவென்றால் இந்தக் கிழமையோ வருகிற கிழமையோ அந்தக் கைத்தறி நெசவுசாலை ‘பவர் லூம்ஸ்’ ஆக மாறப்போகிறதென்றும் முந்தி அவரிடம் வேலை செய்த பெண்களில் தனக்கு ‘வசதியான’ நான்கு பேரைத்தான் இனிமேல் வேலைக்கு எடுப்பார் என்றும் எல்லாரும் பேசிக்கொண்டார்கள்.

மயில்வாகனம் றோட்டால் வரும்போது ஏதோ தூண்டுதலுக்கு ஆளானவர்போல் நெசவு சாலையின் உட்புறம் நோட்டம் விட்டார். தறிகள் ஓய்ந்துபோய் நிற்கும் இடங்களில் வேலையை இழந்த பெண்பிள்ளைகள் வாடித் தொங்கும் முகங்களுடன் பரிதாபகரமாக நிற்பதுபோல் பிரமை தட்டியது. மயில்வாகனம் மனம் பொறுக்கமுடியாதவராய்ச் சடாரெனத் தலையைத் திருப்பிக்கொண்டார். அப்படியே பராக்குப் பார்த்தபடி கொஞ்சத்தூரம் நடந்து வந்து விதானையார் வீட்டு வெளிச் சுவரோடு கட்டப்பட்ட தண்ணீர்த் தொட்டியின் ஒட்டோடு வள்ளீசாக அமர்ந்துகொண்டார்.

வண்டில் மாடுகளின் விடாயைத் தீர்ப்பதற்கென்று அந்தக்காலத்தில் கட்டப்பட்ட தொட்டி அது. ‘கான்’ ஓரமாக நான்கு ஐந்து மாடுகளாயினும் அக்கம் பக்கமாக நின்றுகொண்டு தண்ணீர் குடிக்கக்கூடிய அளவுக்கு அகன்ற தொட்டி. முந்தியெல்லாம் இங்கே இப்படி வந்து உட்கார்ந்துகொள்ள முடியுமா?

இப்போது தெருவிலே வண்டிலும் கிடையாது தொட்டியில் தண்ணீரும் கிடையாது.

காலம் எவ்வளவுக்கு மாறிவிட்டது! எப்போதாவது ஒரு நாள் தட்டி வான் ‘லைன்’ ஓடாத நாளில் கொடிகாமத்திலிருந்து மாட்டு வண்டியில்தான் தேங்காய் வரும். பள்ளிக்கூடப் பெண்பிள்ளைகள் கடுக்கண்டுவிட்டால் மாட்டு வண்டியில்தான் பள்ளிக்கூடம் போவார்கள். அவர்களுக்குக்கூட அது அநாகரிகமாய்ப்போய் இப்போ காரிலும் பஸ்ஸிலுமாகத் திரிகிறார்கள். ‘தேவைகள் அதிகரித்துவிட்டன. அதனால்தான் இவ்வளவு வேகமும் மாற்றமும்’ என்று தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். முந்தி வண்டில் விட்டவன் இன்றைக்குக் கார் ஓட்டுகிறானா? இல்லையென்றால் இன்றைக்கு அவனுடைய பிழைப்பு என்னவானது?

நம்முடைய வைத்தியத் தொழில் மாத்திரம்தானா படுத்தது. இன்னும் எத்தனையோ தொழில்கள் படுத்துவிட்டன.

மயில்வாகனம் வீட்டுக்குப்போக எழுந்தபோது மதியம் திரும்பிவிட்டது.

வாசலில் படலை திறந்துகொண்டதுபோன்ற சரசரப்பு. திண்ணையில் சாய்ந்திருந்த மயில்வாகனம் திரும்பிப்பார்த்தார். இரண்டுபேர் திறந்த படலையை அப்படியே ‘ஆ’வென்றபடி விட்டுவிட்டு முற்றத்தில் வந்து நின்றார்கள். மயில்வாகனம் நிமிர்ந்து உட்கார்ந்து வலக்கையை நெற்றிக்குமேல் குடைபோல் பிடித்துக் கூர்ந்து நோக்கினார். அயலூர்ப் பெடியள்தான். இருவரையும் அவருக்கு நன்றாகத் தெரியும். ‘ஒருவன் எங்கேயோ கவுண்மேந்து உத்தியோகத்தில் இருக்கிறான். மற்றவன் இங்கினைக்கைதான். ஏதேனும் நிதி சேகரிக்க வந்திருப்பாங்களோ?’ என்று மயில்வாகனம் அனுமானித்துக்கொண்டார்.

“என்ன தம்பிமாரே, எங்கை வந்தியள்?”

“ஓம் பரியாரியார், உங்களட்டைத்தான் வந்தனாங்கள். எங்களை முந்தித் தெரியும்தானே?”

“என்ன கதை கதைக்கிறை? நீ வேம்படியாற்றை ரண்டாவது பெடியனெல்லே? அப்ப ஊரிலை நிறுதூளி பண்ணிக்கொண்டிருந்தனி, அதையெல்லாம் இப்ப நிப்பாட்டிப்போட்டைபோலை கிடக்கு. மற்றத் தம்பி ஊரோடைதானே, இப்ப எப்பிடி உங்கடை கடை வியாபாரமெல்லாம்?”

“ஏதோ கொண்டு தள்ளுறம். அப்பு போனாப்போலை கொஞ்சம் கயிட்டம்தான்.”

“ஓமோம், அப்ப வந்த அலுவல் என்னெண்டு சொல்லுங்கோ, பிள்ளையள்.”

“இஞ்சை பாருங்கோ, நான் இப்ப கொழும்பிலை வேலையெண்டு உங்களுக்குத் தெரியும்தானே. இந்தமுறை வீட்டுக்கு வந்தாப்போலை லீவுக்கு மேலாலை கொஞ்ச நாள் நிண்டிட்டன். அதுதான் போகக்கை ஒரு மெடிக்கல் சேர்டிபிக்கட் கையோடை கொண்டுபோனால் அங்கை கந்தோரிலை சரிப்படுத்தலாம். நீங்கள் ஒண்டு எழுதித் தந்தால் உதவியாயிருக்கும். சிலவைப்பற்றி யோசியாதையுங்கோ.”

“என்ன தம்பி, மெடிக்கல் சேர்டிபிக்கட்டோ, உங்களுக்கு என்ன சுகயீனம்?”

“கொழும்புக்குப் போன பிறகு அடிக்கடி நெஞ்சு நோ வந்து பெரிய அரியண்டப்படுத்திப் போட்டுது. இங்கையும் அங்கையுமா மருந்து சாப்பிட்டு இப்ப சுகம்.”

“ஆரட்டைக் கொண்டுபோய்க் காட்டினனீ? தமிழோ இங்கிலீசோ வைத்தியம்?”

“இங்கிலீசுதான். இங்கை பத்மநாதன் டொக்ரட்டைக் காட்டித்தான் மருந்து எடுத்தனான். இது நடந்தது போன வருசம், பாருங்கோ.”

“என்னட்டை இப்ப மருந்துக்கு வந்தாலெல்லோ நான் சேர்டிபிக்கட் தரலாம். மருந்து செய்யாமல் சேர்டிபிக்கட் கொடுத்து எனக்குப் பழக்கமில்லை.”

“உங்களை நம்பித்தான் வந்தனாங்கள்.”

“என்னை நம்பி வந்தால் போதுமோ? என்ரை வைத்தியத்தை நம்பியெல்லோ வரவேணும்.”

“காசு எவ்வளவெண்டாலும்....”

“அது எனக்குத் தேவையில்லை. நான் வைத்தியத்துக்கு மாத்திரம் காசு வாங்குவன். போட்டுவாருங்கோ.”

மயில்வாகனம் காதிலிருந்த குறைச் சுருட்டை எடுத்து வாயில் வைத்துக்கொண்டார்.
----

நன்றி: காற்றுவெளி, ஆவணி 2014

No comments:

Post a Comment