Jan 25, 2016

உபயகாரன்


அச்சுவேலி சிவப்பிரகாசத்தாருடைய வீட்டு வேலியைப் பார்த்தே அவருடைய தொழில் எதுவாயிருக்குமென்று எவரும் எளிதாகச் சொல்லிவிடுவர். சொல்லப்போனால், அச்சுவேலியில் மட்டுமல்ல யாழ்ப்பாண மாவட்டம் பரவலாக எங்குமே ஓவசியர்மாருடைய வீட்டு வேலி ஒரே மாதிரித்தான்.

ஓவசியரென்றால் றோட்டு ஓவசியர். றோட்டுப் போடுவதற்கென்று அரசாங்கம் கொடுத்த தார் பீப்பாய்களையெல்லாம் அவற்றிலிருந்து தாரை வழித்து றோட்டில் மெழுகிய கையோடு தமக்கு வேலை செய்யும் தொழிலாளர்களைக்கொண்டே நறுவீசாக வெட்டிவித்துத் தட்டைத் தகரமாக அடுக்கி அரசாங்க லொறியிலேயே தம் வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்துவிடுவார்கள் இந்த ஓவசியர்மார். அவற்றின் இரண்டு பக்கமும் அங்கும் இங்கும் தடிப்பாய்ப் படர்ந்து கிடக்கும் காய்ந்துபோன தார் பிசுக்கு கண்ணை உறுத்தினாலும் உறுதியான வேலிக்கு அது உத்தரவாதம் தந்தது.

ஓவசியர் சிவப்பிரகாசத்தாரின் அறிமுகம் எனக்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஏற்பட்டது. ஒரு வழக்குக் காரியமாக மட்டக்களப்புக்குப் போனபோது அந்த ஊரில் கொஞ்சம் பசையோடு வாழ்ந்த என் நண்பர் தன் வயல்காட்டைக் காட்டவென்று ஒரு நாள் கூட்டிக்கொண்டு போனார். அன்று சிவப்பிரகாசத்தாரோடு ஏற்பட்ட முதல் சந்திப்பு இந்த நாள்வரை மிக நெருக்கமாகவே இருந்து வந்தது.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை றோட்டில் ஏறாவூர் தாண்டி அங்காலே செங்கலடி போய் அங்கிருந்து கண்டி றோட்டில் கிறுகி, மறுகா கரடியனாற்றில் இன்னொருதரம் கிறுகி அரை மணித்தியாலத்தில் தெருவோரப் புழுதிகளையெல்லாம் அள்ளிக்கொண்டு ஓவசியர் சிவப்பிரகாசத்தாரின் ஆட்சியிலிருந்த ஆயித்தியமலைக்கு வந்துவிடலாம்.

ஆயித்தியமலை றோட்டில் அரைக் கட்டைக்கு முன்பாகவே சிவப்பிரகாசத்தாரின் குவாட்டர்ஸ் ஓடுபோட்ட கூரையோடு மற்ற வீடுகளுக்கும் மரங்களுக்கும் மேலாய் செக்கச் செவேலென்று கண்ணை உறுத்தியது. அது குளக்கோட்டு மன்னன் காலத்தில் போட்ட றோட்டாக இருந்திருக்கவேண்டும். அது அந்த ஊரின் நிலைவரத்தை மட்டுமல்ல ஓவசியர் சிவப்பிரகாசத்தாரின் தொழில் திறமையையும் சொல்லாமல் சொல்லியது.

நாங்கள் சிவப்பிரகாசத்தாரின் குவாட்டர்ஸுக்கு முன்னால் நண்பரின் ஜீப்பிலிருந்து இறங்கியபோது வெளிவாசல் கேட் சாத்திக்கிடந்தது. கேட்டைத் தள்ளித் திறந்துகொண்டு பரந்திருந்த முற்றத்தில் இறங்கியவேளை மரத்தடியில் படுத்திருந்தவொரு நாய் அத்துமீறி நுழைந்த எம்மைக் கண்டதும் தமிழ் முறைப்படி தன் எதிர்ப்பைத் தெரிவித்துக்கொண்டது  அதாவது தலையை உயர்த்திப் பார்த்து ஒருமுறை உறுமிவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டது.

எனது கூட்டாளி நான் பின்தொடர மிக்க உரிமையோடு வெளித் திண்ணையில் ஏற முயலவும் உள்ளிருந்து ஒரு பெண் - கொஞ்சம் கண்ணுக்கு லட்சணமான பெண் இடுப்பில் கூடையுடன் வெளியே விரைந்து வந்தாள். அது பனம் கிழங்குக் கூடை. அவளும் தோலுரித்த கிழங்குபோல் வழுக்கும் உடம்பில் வழுக்கிவிழும் சேலையை இழுத்துச் செருகிக்கொண்டு, “ஓவசியர் ஐயாவைக் கூப்பிட்டம் ஆனா காணலிங்க. என்று அவசரம் அவசரமாகச் சொல்லியபடி வெளியேறினாள். அவளை இன்னொருமுறை திரும்பிப் பார்ப்பதற்குள் வெளி கேட்டைத் தாண்டிவிட்டாள். கூடவே, 

“பனம் கெலங்கு இரிக்கி! என்ற அவளின் கூவல் இந்த உலகுக்கு என்னை மீண்டும் இழுத்து வந்தது.

“அவரட்டைப் போனாலெல்லோ தெரியும் வாறாக்களை எப்படிக் கவனிப்பாரெண்டு. என்று என் நண்பர் வழி நெடுக் கூறிய வாக்குறுதியை மனதில் மீட்டிக்கொண்டு அடுத்த கட்டத்துக்காக என்னை ஆயத்தப்படுத்தலானேன்.

சில நிமிடங்களில் அறையைவிட்டு வெளியே வந்தார் சிவப்பிரகாசத்தார். அரைத் தூங்கத்திலிருந்து அடித்து எழுப்பப்பட்டவர்போல் ஒரு கையில் அவிழ்ந்துவிழும் சாரமும் மறுகையில் மூக்குக் கண்ணாடியுமாக எங்களை நோக்கி வந்தவரை நாம் மிக்க அனுதாபத்துடன் நோக்கினோம். கோழிக் கறியோடு புழுங்கல் அரிசிச் சோறும் அசல் சாராயமும் மத்தியான நித்திரைக்காரனிடமிருந்து கிடைக்குமா? எனது நண்பர் தந்த நம்பிக்கை என்னைவிட்டு நழுவிக்கொண்டுபோனதை உணரத்தொடங்கினேன்.

ஆனால் நடந்ததென்னவோ மகா ஆச்சரியம். எங்களை வரவேற்பறையில் இருத்திவிட்டுக் கோடிப்புறம் போய் அப்படியொரு கூப்பாடு போட்டார். அடுத்த ஒரு மணித்தியாலத்தில் சட்டி நிறைய அற்புதமான கோழிக்கறி, நாட்டரிச் சோறு, தடித்து வழுவழுப்பான தயிர் என்று சொல்லப்பட்ட அத்தனையும் மேசைக்கு வந்துவிட்டன. இப்படியான கட்டத்தில் வலு முக்கியமான சரக்கு சுதியான சாராயமல்லவா? சிவப்பிரகாசத்தார் கோழி பிடிக்க ஓடர் கொடுத்த அடுத்த கணமே குசினிக்குள்ளிருந்து மேசைக்கு வந்துவிட்டது அவர் கண் அடித்தபடி சொன்ன “சாமான்.

சிவப்பிரகாசத்தார் சாராயப் போத்தலும் சிகரெட் பெட்டியுமாக ஹோலுக்கு வந்தபோதுதான் அவரின் அங்க லட்சணத்தை எடை போட எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. வீட்டுக்கு வந்தவரை வரவேற்கும் அழகிலிருந்தே தெரிந்துவிட்டது அவர் நட்புக்குக் கொடுக்கும் வரைவிலக்கணம். எந்தளவு உயரம் என்று அளக்கமுடியாமலும் என்ன வயதாயிருக்குமென்று அறுதியிட்டுச் சொல்ல இயலாமலும் அவரது உடலின் அளந்தெடுத்த பருமனும் செல்ல வயிறும் சிவந்த நிறமும் குறுக்கே நின்றன. மொத்தத்தில் மிக நல்ல மனிதர். சிகரெட் பிரியர்கள் சினேகமாவதற்கு அதிக நேரம் பிடிக்காது என்பார்கள். அதுபோல்தான் “பொல் என்னும் சாராயப் போத்தலைப் பகிர்ந்துகொள்பவர்கள்.

அந்தச் சந்திப்புக்குப் பிறகு சிவப்பிரகாசத்தாரும் நானும் கடை கண்ணியிலும் கோட்டு வாசலிலும் பலமுறை சந்தித்துக்கொண்டோம். அத்துடன் அவர் தனது வீட்டுக்கு என்னை அழைத்த சமயங்களில் எமது நட்பு மேலும் இறுகிப்போனது. இதனால் ஒருவரைப்பற்றியொருவர் பெருமையாய்ப் பேசிக்கொள்வதற்கு வரும் சந்தர்ப்பங்களையும் நாம் தவறவிட்டதில்லை. அன்றைக்கு என்னை வரும்படி அவர் அழைத்த சந்தர்ப்பம் வரை.

எனது வீடு இருக்கும் ஒடுங்கல் ஒழுங்கையின் அந்தலையிலுள்ள கொட்டிலுக்குள் தனியனாய்க் குடிகொண்டிருக்கும் வைரவ சுவாமியாரை காரில் வந்து காணும் பக்தர்கள் எவரும் இன்றுவரை அவதரிக்காததால் அந்தப் பக்கம் கார் ஏதேனும் வந்தால் அது என்னிடமே வந்ததென எவரும் அறிந்துகொள்வர். அன்றைக்கும் அப்படியொரு கார் வந்தது.

அன்று ஞாயிற்றுக்கிழமை விரதச் சாப்பாட்டை முடித்ததும் முற்றத்திலிருந்த மல்லிகைப் பந்தலின்கீழ் சாய்மனைக் கதிரையை இழுத்துப் போட்டுக்கொண்டு ஒரு குட்டித் தூக்கம் போடலாமென்றால் புட்டுவத்தையும் எனக்குப் பக்கத்தில் இழுத்து வந்தமர்ந்து வழக்கம்போல் ஊர்க்கதை சொல்ல ஆரம்பித்துவிட்டாள் என் மனைவி. இது நான் ஆயுள் சந்தா செலுத்திப் பெற்ற செய்திச் சேவை என்பதால் காதை அவள் பக்கம் திறந்ததுபோல் காட்டியும் கண்ணைப் பகல் தூக்கத்திலும் உலாவவிட்டேன். என்ன கதை கேட்டேன், எப்போது நித்திரையானேன் என்று அறியும் திறமையை அடியோடு மழுங்கடித்துவிடும் அன்றைய பூசணி-கீரை-பருப்பு-வெந்தயக் குழம்பு கூட்டணி செய்துகொண்ட ஒப்பந்தம். அன்றும் அதுதான் நடந்தது.

ஒரு மூன்று மணியளவில் அழகான கவிதையாய் மலர்ந்துகொண்டிருந்த கனவொன்றைத் தகர்க்கும் அதிரடி நடவடிக்கையாக வாசலில் காரொன்று வந்து சரக்கென்று நின்றது. அது சிவன் கோவிலடியில் நிற்கும் சோமர்செட் காராகத்தான் இருக்கவேண்டுமெனக் கதவுக் கிராதியூடாகக் கண்டதும் ஊகித்துக்கொண்டேன். அதன் சொந்தக்காரர் மணியண்ணன் கதவடியில் வந்தபோதே என் ஊகம் உறுதியாகிவிட்டது. ஓவசியர் சிவப்பிரகாசம் ஐயாதான் போன வெள்ளியே காருக்கு அச்சவாரம் கொடுத்து அனுப்பியிருந்தாராம். எனது அன்றைய நிலைவரம் எப்படியிருக்கும் என்பதை முன்னமே அறிந்துகொள்ளாமல் உரிமையுடன் அழைத்திருந்தார். எப்படித்தான் அதை மறுக்க முடியும்? வந்திருப்பது புதிய வழக்கு மட்டுமல்ல அதற்குப் பின்னால் சுவையான செய்தியும் பிணைந்திருக்கக்கூடும். இன்று என்ன செய்தி எனக்காகக் காத்திருக்கிறதென்பதைப் பற்றி அறிய ஒரு துரும்பளவு வாய்ப்பையும் அவர் சொல்லியனுப்பவில்லை. என்றாலும் உடனே புறப்பட்டுவிட்டேன்.

சிவப்பிரகாசத்தாரின் அச்சுவேலி வீட்டுக்கு இதுவரை நான் குறைந்தது பத்துத் தரமாவது விசிட் அடித்திருப்பேன். ஒவ்வொரு முறையும் அவரும் மனைவி அன்னபூரணம் அக்காவும் என்னைத் தமது அன்பால் திக்குமுக்காடச் செய்திருக்கிறார்கள். அக்கா தன் கையால் ஆற்றித் தரும் வீட்டில் இடித்த கோப்பிக்காகவேனும் அங்கே அடிக்கடி போகவேண்டிய தேவையை நானே உண்டாக்கிக் கொள்ளவேண்டுமென எண்ணிக்கொள்வேன்.  சுண்டக் காய்ச்சிய பாலுடன் கோப்பியும் சேர்ந்து சலசலத்து எழுப்பும் நுரையின் பரவச நிறத்திலும் வெளிவாசலை எட்டும் அதன் மணத்திலும் அக்கா எவர்சில்வர் கப்பில் கோப்பியைக் கொண்டுவந்து நீட்டும்போது அவர் முகத்தில் தோன்றும் அன்பும் மரியாதையும் இந்தப் பெண்ணை மணக்க இந்த மனிதன் எத்துணை வரம் பெற்றிருக்கவேண்டுமென என்னை எண்ணத் தூண்டும்.

அச்சுவேலிச் சந்தையிலிருந்து யாழ்ப்பாணம் போகும் றோட்டில் முதல் முடக்கில் வருமே ஒரு பெண்கள் பள்ளிக்கூடம் அதற்கு முன்னாலுள்ள ஒரு குட்டி வைரவர் கோயில் ஓரமாக ஆரம்பித்து கிழக்கு நோக்கியபடி ஊரும் பாம்பு வளைவு போன்ற ஒழுங்கைக்குள் எத்தனை செல்வந்தர்கள் தலைக்குமேல் உயர்ந்த மதிலுக்கு உட்புறம் சிக்கனமே குறியாக இன்னும் இன்னும் பணம் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை எனக்கு நன்கு அத்துபடியானதொன்று. ஆனால் ஓவசியர் சிவப்பிரகாசத்தார் தனது ட்ரேட் மார்க் தார்க் தகர வேலியை மட்டும் கைவிடவில்லை.

சிவப்பிரகாசத்தாரின் நான்கு பிள்ளைகளில் மூத்த இருவரும் ஆண்கள். ஒருவன் ஆபிரிக்காவின் வாயில் நுழையாதவொரு நாட்டிலும் மற்றவன் அவுஸ்திரேலியாவிலுமாகப் பிரிந்திருக்க அடுத்தவளான மகள் லண்டனில் குடும்பமாய் ஒதுங்கிக்கொண்டாள். இளையவன் அமெரிக்க மேற்குக் கரையிலுள்ள கம்பெனியில் எப்படியோ ஒட்டிக்கொண்டான். பிள்ளைகளை அப்படிப் பணமே குறியாக வளர்த்திருந்தார் சிவப்பிரகாசத்தார். அதனால் காசும் பொருளும் தேடி வந்து தேவைக்கு அதிகமாகக் குவிந்தது. போதாததற்குக் காணி ஈடுவைத்தல், நகை அடைவு பிடித்தல் என்னும் சைட் பிஸ்னஸ்களிலும் செல்வம் வலிய வந்து சேர்ந்தது.  இந்தத் தோஷத்தைத் தீர்க்கலாமென்ற நைப்பாசையில் யாழ்ப்பாணத்துப் பணக்கார்கள் தேடி எடுத்த பழக்கம் இவரிடமும் தொற்றிக்கொண்டது. தொண்டமானாறு செல்வச் சந்நிதியானுக்கும் ஊரிலுள்ள குட்டிக் கோயில் குறுணிக் கோயில் அத்தனைக்கும் தாராளமாக உபயம் செய்துவந்தார் சிவப்பிரகாசம். அத்துடன் கோயில் உபயகாரனுக்குரிய அத்தனை அங்கலட்சணங்களும் வாய்ச் சாதுரியமும் கொண்டிருந்த காரணத்தால் அவர் தலைகாட்டும் கோயில் திருவிழாக்களில் மட்டுமல்ல ஊரில் நல்லது, கெட்டது எங்கு நடந்தாலும் அவரின் வருகைக்குத் தனி வரவேற்பு இருந்தது. அந்த அளவுக்கு அவர் பெயர் எடுத்திருந்ததால்தான் அங்கே எவர் காதுக்கும் எட்டாமல் காரியம் பார்க்கவேண்டுமென்ற நோக்கத்தில் வெளியூர் பிறக்கராசியரை அவசரம் அவசரமாக நாடவேண்டிவந்திருக்குமோவென்று நான் சமுசியப்படத் தொடங்கினேன். அவரின் வீட்டை அடைந்ததும்தான் நான் சமுசியப்பட்டது முற்றிலும் சரியெனத் தெட்டத்தெளிவாய்த் தெரிந்தது.

சிவப்பிரகாசத்தாரின் வளவு முழுவதும் ஈர்க்குக் குத்த இடமில்லாமல் பூமரமும் பழமரமுமாய் சடாய்த்திருக்கும். வெள்ளைக் கொழும்பானும் கறுத்தக் கொழும்பானும் போட்டி போட்டுக்கொண்டு காய்த்துத் தெருவால் போவோர் வருவோரின் கண்ணையும் உறுத்தி வயிற்றெரிச்சலையும் கிளப்பும். அச்சுவேலிக்கேயுரிய செம்பாட்டு நிலத்தில் குமருகளைப்போல் மதர்த்து வளர்ந்த மாமரக் கிளைகளிலிருந்து இரண்டு கைகளாலும் பொத்திப்பிடிக்க முடியாத அளவுக்குப் பருத்த காய்கள் நிலத்தில் கிடந்து படுத்துறங்கும். வீட்டின் பின்புறம் கிணற்றடியைச் சுற்றி மொந்தனும் கப்பலுமாய் குதியனடிக்கும். வேலியோரமெல்லாம் மல்லிகையும் செம்பருத்தியும் அன்றாடம் அவரவர் எட்டி நின்று ஆய்ந்துகொண்டு போனபோதும் அலுக்காமல் சலிக்காமல் பூத்துக்கொட்டும். மொத்தத்தில் வருகிறவர்களை வரவேற்க வாசலில் ஆள் வைக்க வேண்டியிருக்கவில்லை.

அப்போதுதான் துமித்துவிட்டு ஓய்ந்த மழையில் மேல் நனைத்துக்கொண்ட மண்ணின் வாசத்தை நுகர்ந்தபடி சிவப்பிரகாசத்தாரின் வீட்டு வாசற்படியை மிதித்துப் போர்ட்டிக்கோவில் ஏறினேன். 

“வீட்டுக்காரர் என்று நான் அழைத்தபோது வழக்கமாய் என்னை வரவேற்கும் தூசி தட்டித் துடைத்த வீட்டின் தூய்மையும் பின் கதவால் தோட்டத்து நறுமணத்தை இறாஞ்சிக்கொண்டு சிமிக்கிடாமல் நுழையும் சுகந்தமும் அதற்கும் மேலாய் வீட்டுக்காரி அன்னபூரணம் அக்காவின் கபடில்லாத புன்முறுவலும் அன்று ஏனோ காணாமற்போய்விட்டது. அதற்குப் பதிலாக அப்போதுதான் முழுகி முடித்த குமர்ப் பெண்ணின் கூந்தலிலிருந்து எழும் வாசனை வாசலுக்கு வந்து என்னை வரவேற்றது. இது வழக்கத்திலும்பார்க்க விநோதமான நாளாயிருக்கிறதென்று வியந்து நின்றேன்.

சில நிமிடங்களின் பின் “ஆரது? என்று கேட்டபடி ஒரு பெண் வந்து வாசலில் நின்றாள். கடுக்கண்டு எத்தனையோ ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆனால் கனவுகள் மட்டும் கன்னத்திலும் கண்களிலும் வஞ்சகமில்லாமல் குவிந்துபோயிருந்தன. எனது அழைப்பைக் கேட்டவுடன் அந்தர பொந்தரியில் போட்ட முக அலங்காரங்கள் அவளின் முகத்துக்குக் கடுகளவும் பொருத்தமின்றி என்னை முதலில் அவள்மீது அனுதாபப்படவைத்தன. ஒரு ‘இளந்தாரிப் பிறக்கறாசி என்னைப் பார்க்க வாறார் என்று சிவப்பிரகாசத்தார் அவளிடம் என்னைப்பற்றிச் சொல்லியிருக்கக்கூடும். அதற்காகவா இத்தனை அலங்காரம்?

 “ஐயா என்னை வரச்சொல்லியிருந்தார் தெரியுமோ. வீட்டை நிக்கிறார்தானே?

“தெரியும், ஆனால் இப்ப கொஞ்சம் முன்னம்தான் ஆரோ வந்து இவரைக் கொறை இழுவையிலை இழுத்துக்கொண்டு போனவை. என்னவோ காணிப்பிரசனையாம். கெதியிலை வாறன் எண்டு என்னட்டைச் சொல்லிப்போட்டுத்தான் போனார். நீங்கள் வந்தால் இருக்கச் சொல்லச் சொன்னார். இதைச் சொன்னபோது அவளின் முகத்தில் முகிழ்த்த மலர்ச்சி முகத்திலிருந்து வழிந்து உடல் முழுவதும் ஊறிவிட்டதுபோலிருந்தது.

யாழ்ப்பாணத்துப் பெண்கள் தம் கணவர் தமக்குமட்டுமே சொந்தம் என்பதை இறுக்கிச் சொல்லிக் காட்டவெண்ணிப் பக்கத்தில் நிற்பவரைச் சுட்டிக்காட்டுவதுபோல் “இவர் என்று வாஞ்சையோடு அடையாளம் காட்டுவதுண்டு. இவர் என்று சொல்லும்போதே அவர் மீதிருக்கும் உரிமையும், எவருடனும் பகிந்துகொள்ள விரும்பாத உடைமையும் எங்கிருந்தோ வந்து உருகி வழியும். அந்தப் பெண் சொன்ன அழகைப் பார்த்தால் அவர் அவளுக்கு வழக்கத்திலும் பார்க்க இரண்டு பங்கு “இவர் ஆகிவிட்டார் போலிருந்தது. தன் கணவனைத் “தகப்பன் என்றோ “என்ர மனிசன் என்றோ வெளியாட்களிடம் அடையாளம்காட்டும் முறையும் “இஞ்சாருங்கோ அல்லது “மெய்யேப்பா என்று எட்டத்தில் நிற்கும் கணவரை அழைக்கும் வணையமும் இன்று சங்கிலி மன்னன் காலத்து முறைகளாகப் போய்விட்டன. அப்போது என் மனதில் முளைத்த நியாயமான கேள்வி, சிவப்பிரகாசத்தார் எப்படி, எப்போதிருந்து இவளுக்கு “இவர் ஆனார்? இவள் வேலைக்கு வைத்திருக்கிற பெண்ணாக இருந்திருந்தால் “ஐயா என்றல்லவா சொல்லியிருப்பாள். இரண்டு மாதத்துக்கு முன்னர்தான் அவரைக் கோட்டடியில் சந்தித்தது நினைவுக்கு வந்தது. அப்போது இந்தப் புதுச் சினேகிதத்தைப்பற்றி மூச்சுக்காட்டாமல் நழுவிக்கொண்டு போய்விட்டாரே. எனக்குப் பொல்லாத ஆத்திரம் வந்தது. என்றாலும் அதை வெளிக்காட்டாமல், “அன்னபூரணம் அக்கா உள்ளை இருக்கிறாவெண்டால் ஒருக்கா வரச்சொல்லுங்கோ. என்றேன். அக்காவைக் காணவேண்டுமென்ற அவதியும் இருந்தது இவளை இங்கிருந்து அகற்றினால் போதுமென்ற அவசரமும் இருந்தது.

“அவ இப்ப இஞ்சை இல்லை. அவ எப்பவோ லண்டனிலை மகளோடை போயிருக்கிறா. என்று அவள் மிக அலட்சியமாகச் சொன்னபோது தானே இப்போது அக்காவின் இடத்தில் இருப்பது போன்று நடித்தும் காட்டினாள். அது பலகாலமாகப் பெற்ற பயிற்சியில் கிடைத்த கெட்டித்தனம்போலவும் இருந்தது.

“அப்ப நீங்கள் ஐயாவுக்குத் தூரத்துச் சொந்தமோ? உங்களை முந்தி இஞ்சை கண்டதா நினைவில்லை அதுதான் கேக்கிறன், சும்மா சொல்லுங்கோ  நான் உங்கடை அவருக்கு மிச்சம் வேண்டிய ஆள்தான் என்று என் மனதில் தீர்மானித்தது சரிதானா என்பதை அறிய வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினேன்.

“இவர் எங்கடை ஊரிலை ஓவசியாரா இருந்த காலத்திலையிருந்து என்னோடை நல்ல நெருக்கம். அதுதான் நான் இனித் தன்னோடை வந்து இருக்கவேணுமெண்டு கூட்டிக்கொண்டு வந்திட்டார். எனச் சொல்லிவிட்டு முகத்தை நிமிர்த்தாமல் கண்களை மட்டும் உயர்த்தித் தன் கதையை நான் நம்பினேனோ இல்லையோவென அறிய முற்பட்டவள்போல் என்னைப் பார்த்தாள்.

ஆனால் நானோ எனக்குள் எழுந்த கேள்விகளுக்குப் பதிலைத் தேடிக்கொண்டிருந்தேன். சிவப்பிரகாசத்தார் எங்கேயோ ஓடைக்குள்ளிருந்த இந்தப் பெண்ணோடு தொடுப்பு வைத்திருந்ததால்தான் அன்னபூரணம் அக்கா மனம் வெறுத்து மகளோடுபோய் இருக்கவேண்டிவந்திருக்கும். ஆனால் ஏற்கனவே தொட்டுத் தாலி கட்டிய பெண் இருக்க ஓடிவந்த பெண் எப்படி மனைவியாக முடியும்? அதுவும் அன்னபூரணம் அக்கா இருந்து ஆட்சிசெய்த அரண்மனையில்?  ஆனால் அவளோ சிவப்பிரகாசம் தன்னைத்தான் இப்போ வீட்டுக்காரியாக வைத்திருக்கிறார் என்றல்லவா துணிவாகச் சொல்லிக்காட்டுகிறாள். பார்த்தால் சின்னப்பெண்ணாக இருக்கிறாளேயென்றதால் சில்லறையாக நினைத்துவிடாதேயென்று என் உள்ளுணர்வு எச்சரிக்கை செய்தது. பாவி, அநியாயத்துக்கு அழகாகவும் இருக்கிறாள். இவளுக்கு என்னிலும் பார்க்க ஓரிரு வயதுகள் குறையவோ கூடவோவிருக்கலாம். ஆனால் இவள் அக்காவின் கால் தூசுக்குக்கூடச் சமனாகமாட்டாள். செந்தழிச்ச முகத்தோடு நிலம் அதிராமல் நடமாடும் குத்துவிளக்குப்போன்று வாசலில் நின்றபடி வாயும் மனமும் நிறைய “வா தம்பி என்று வரவேற்கும் அன்னபூரணம் அக்கா எங்கே நைட்டியின் பொத்தான்களை வேண்டுமென்றே பூட்ட மறந்த இந்த ஆட்டம் எங்கே?

அம்மனைப் போலிருந்த மனைவியைத் தூரத்தள்ளிவைத்துவிட்டுத் தன்னிலும்பார்க்கக் கிட்டத்தட்ட முப்பது வயது இளமையான பெண்ணைக் கொண்டுவந்து வைத்திருக்கிறாரே கோயில்களில் ஆயிரத்தெட்டுச் சங்கு அபிசேகம் செய்யும் சிவப்பிரகாசத்தார். பாதகா, இதைச் செய்ய உமக்கு எப்படி மனம் வந்தது? சுற்றியுள்ள ஊரிலும் உலகத்திலும் இந்தக் கள்ள உறவை எப்படியெல்லாம் கதைப்பார்கள் என்று ஏன் உமக்கு உறைக்காமல் போனது? இந்த அநியாயத்தைப் பார்த்துக்கொண்டிருக்க எனக்கு மனம் ஒப்பவில்லை. இவள் போட்டிருக்கிற திட்டத்தை முறியடிக்கவேண்டுமென்றால் இருக்கிற அரை மணியோ ஒரு மணியோ கிடைக்கிற நேரத்துக்குள் இவளை வைத்தே இவளை இங்கிருந்து அகற்றிவிடவேண்டும். அன்னபூரணம அக்கா திரும்பி இந்த வீட்டுக்கு வரவேண்டுமென்றால் இதில் நீதி நியாயம் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது.

என்னைப் பார்த்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்பதுபோல் அவள் நின்ற தோற்றம் அவளின் கையைப் பிடிப்பதற்குப் பதிலாகக் கழுத்தைப் பிடிக்கவேண்டும்போல் என்னை உந்தியது. அவள் கதவோடு சாய்ந்து நின்ற கோலத்திலிருந்து இவள் எதற்கும் வளைந்துகொடுப்பாளெனக் கண்டுகொண்டேன்.

சட்டத்தரணியென்ற கோதாவில் வழக்கொன்றில் தலையைக் கொடுத்துவிட்டால் ஒன்றில் சட்டத்தைக் கையிலெடுக்க வேண்டும் அல்லது நியாயத்தைத் தூக்கிப்பிடிக்கவேண்டும். இதில் எதை ஆதரித்து மேசையில் ஓங்கிக் குத்தி விவாதித்தாலும் நான் அங்கே எவ்வளவு புழுதி எழுப்பினேன் என்பதைப் பொறுத்துத்தான் எனது வழக்கு வெல்லும். இங்கே உள்ள வழக்காளிகளில் இருவருமே பெண்களாதலால் இந்த இருவருமே ஒரேயளவுக்கு அனுதாபத்துக்குரியவர்கள். இந்த இளையவள் வறுமையின் காரணத்தால் தன்னையும் விற்றுப் பிழைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளுப்பட்டவள். இவள் சிவப்பிரகாசத்தாரின் ஆதரவுடன் சட்டத்தைத் துணைக்கு எடுத்தால் அதை நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் அக்காவின் பக்கம் வாய் பொத்தி நிற்கும் நியாய தேவதையின் வெற்றிக்காக யார் புழுதி எழுப்புவது? இந்த வழக்குக்கு இன்னும் தவணை கேட்கக்கூடாது. இப்போதிருந்தே அக்காவின் நலன் பாதுகாக்கப்படவேண்டும் என்பதுதான் அந்த வேளை எனக்கு முக்கியமாகப்பட்டது. நான் முடிவுக்கு வந்துவிட்டேன்.

“நான் ஒரு விசயம் கேட்பன் மறுமொழி சொல்லுவியளோ? என்று ஆரம்பித்தேன்.

“அதுக்கென்ன கேளுங்கோ.

“நீங்கள் இவர் சிவப்பிரகாசம் ஐயாவோடை வலு ஐக்கியம்போலை கிடக்குது. இது அவருடைய பெண்சாதி அன்னபூரணத்துக்குத் தெரியுமோ?

“பெண்சாதி இல்லை, முந்தின பெண்சாதி. அவவுக்கு இது தெரிஞ்சுதான் அங்கைபோயிருக்கிறா.
இவள் கெட்டிக்காரிதான். இனி இவளின் வீக் பாயின்டைத் தேடி உடைத்தாலொழிய வேறு வழியில்லை. “அப்ப நீங்கள் தாலி கட்டிக்கொண்டியளோ, இல்லாட்டில் எல்லாம் இனிமேல்தானோ?

“நாள் பாத்துக்கொண்டிருக்கிறார், கிட்டடியிலை செய்யிறனெண்டு சொல்லியிருக்கிறார்.

“அவர் அதிஷ்டக்காரர்தான். நீங்களும்தான்

“அப்படியோ?

“பின்னை, உங்களைப்போலை வடிவும் கெட்டித்தனமும் உள்ள பெம்பிளையை முடிச்சால் ஆருக்குத்தான் அதிர்ஷ்டம் தேடி வராது?

“நான் வடிவெண்டு சொல்லுறியளோ?

“உங்களைப்போலை வடிவான பெம்பிளையை நான் கிட்டடியிலை சந்திக்கயில்லையெண்டு சத்தியம் பண்ணிச் சொல்லுவன்.

“உம்மையாவோ?

“உம்மையாத்தான்.

“நீங்கள் பெம்பிளையளைக் கள்ளமாக் கவனிப்பியள்போலை கிடக்கு.

“உங்களை நான் முழுவதுமா நேரை பாத்துத்தான் சொல்லுறன், எந்த ஆம்பிளையும் உங்களைக் கண்டால் ஒருமுறையெண்டாலும் திரும்பிப்பாக்காமல் போகமாட்டான், தெரியுமோ? இதை நான் வாயால் சொல்லவேண்டுமென்று எதிர்பார்த்தாளோ? அவள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்த விதத்தில் அப்படித்தான் தெரிந்தது. நானும் அவளோடு சேர்ந்து சிரித்தேன். சிரிப்போடு சேர்த்துச் சொல்லும் விஷயங்கள் விரைவாகக் கரையும் மருந்துக் குளிசை போன்றவை. அதனால் அவை விரைவாக வேலையும் செய்யும். இப்படியே அவளை வாலாயப்படுத்துவதிலேயே பல நிமிடங்கள் கழிந்துவிட்டன. சிவப்பிரகாசத்தார் வரமுந்திக் காரியம் ஆகவேண்டும். நேரம் விரைந்து கொண்டிருந்ததால் கடைசிக் கணையையும் ஏவி விட்டேன். “இந்த நைட்டியிலேயே நீங்கள் மிச்சம் கவர்ச்சியாய்த் தெரியிறியள். ஸ்கேர்ட்டும் டீசேர்ட்டும் போட்டிருந்தால் நான் எப்பவோ மயங்கி விழுந்திருப்பன்.

“நான் வீட்டிலை போடுறதில்லை. டவுணுக்குப் போறபோதுதான் போடுறனான்.

“எனக்காக ஒருக்கால் போட்டுக் காட்டுவியளோ? இப்படித் துணிவாக ஒருவன் தனிமையில் கேட்பானென்றால் இவள் போன்றவள் எப்படியும் மசியத்தான் செய்வாள் என்பது நானறிந்த ரகசியம். இந்த நிலைவரத்தில் இது கம்பியில் நடக்கிற சங்கதிதான். இதற்கெல்லாம் அஞ்சினால் இந்தத் தொழிலில் குப்பை கொட்டமுடியாது.

சிறிது நேரம் கால் பெருவிரலால் நிலத்தில் வரைந்துவிட்டுச் சில விநாடிகள் என்னை உற்றுப் பார்த்தவள், “உங்களுக்காகப் போட்டுக் காட்டுவன். என்றாள்.

“எங்கை பாப்பம்?

“மயங்கிவிழ மாட்டியள்தானே?

“விழுந்தால் பிடிக்க நீங்கள் இருக்கிறியள்தானே?

“பொறுங்கோ வாறன். சிரித்துக்கொண்டே திரும்பி உட்புறம் நோக்கி நடந்தாள். அவளின் பின்புறத்தோடு கூந்தல் நுனியும் சேர்ந்து குதித்துக் கும்மாளமிட்டது. ஆற்றில் அரைவாசித் தூரம் கடந்தாயிற்று. மிச்சத் தூரம் இன்னும் சுலபமானது.

ஐந்து நிமிடத்தில் அவள் என் முன்னால் வந்து நின்றபோது நான் எதிர்பார்த்ததிலும் பார்க்க எவ்வளவோ அட்டகாசமாகத் தோன்றினாள். அந்த நேரமாய் என் மனதுக்குள் திடீரெனவொரு பதட்டம் தலை தூக்கியது. ஒரு பெண்ணின் நன்மைக்காக இன்னொரு பெண்ணின் பலவீனத்தை எனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது பெண்கள் எல்லாருக்கும் பொதுவாகச் செய்யும் பாதகம் போலல்லவா? ஆனால் என்னைத் தொடர்ந்து சிந்திக்க அவள் விடவில்லை.

“இப்போ என்ன நினைக்கிறியள் என்று கேட்பதுபோல் என் கண்களை ஊடறுத்துப் பார்த்தாள்.

“நான் நினைச்சதிலும் பாக்க வலு கவர்ச்சியாயிருக்கிறியள்.

“பொய் சொல்லுறியள்!

“இல்லை, உம்மையாத்தான் சொல்லுறன்.

“எல்லா ஆம்பிளையளும் இந்த விஷயத்திலை அவசரப்படுற ஆக்கள்தான்.

“அந்த மாதிரி அவசரப்பட்டால் அழகை ஆறுதலாக ரசிக்கமுடியாது. உங்களைப்போலை ஒரு பெண்ணைச் சந்தோசப்படுத்தவும்முடியாது.

“எந்த மாதிரிச் சந்தோசப்படுத்தலாமென நினைக்கிறியள்?

“எத்தனையோ வழிகள் இருக்கு. நீங்கள் சம்மதித்தால் செய்து காட்டுவேன்.

“ஓ, அப்படியோ? எங்கே வந்தால் செய்துகாட்டுவீங்கள்.

“என்னோடை ஒரு நாள் தனிய டவுனுக்கு வந்து பாருங்கோ. ஆனால் இது சிவப்பிரகாசம் ஐயாவுக்கு தெரியவேகூடாது. சம்மதமெண்டால் சொல்லுங்கோ.

“ம்...ஏன் அப்பிடிக் கேக்கிறியள்?

“இது உங்களுக்கும் எனக்கும் இடையிலை எண்டபடியால்தான்.
அவள் வெளியே தெருவை ஒருமுறை எட்டிப்பார்த்துவிட்டுச் சொன்னாள், “சரி, சம்மதம்.

“அதோடை இதே மாதிரி உடுப்பிலை வரவேணும். இரண்டுபேரும் டவுனில் ஜாலியாய் ஐஸ்கிறீம் குடிக்கலாம், படம் பார்க்கலாம், இன்னும் எவ்வளவோ சங்கதி டவுனிலை இருக்குதெண்டு நீங்கள் அறிஞ்சதுதானே?

“நல்ல துணிவாக் கேக்கிறியள்.

“உங்களைக் கண்டவுடனேயே எனக்குத் துணிவு வந்திட்டுது.

“நீங்களும் இதை ஒருதருக்கும் சொல்லக்கூடாது, சம்மதமென்றால்தான் வருவன்.

“எனக்கு முழுச் சம்மதம். அடுத்த கிழமை வந்து சொல்லுறன். மறந்துபோடவேண்டாம். என்று சொல்லிய கையோடு கதிரையிலிருந்து எழுந்துகொண்டேன்.

அப்போது அவளை ஒரு கணம் மட்டுமே நிமிர்ந்து பார்த்து என மனதை அடுத்த கட்டத்துக்குத் தயாராக்கிக்கொண்டேன். என்னை மன்னித்துக்கொள், பெண்ணே! இந்தக் குறுகிய நேரத்துக்குள் சிவப்பிரகாசத்தாரை நீ விரித்த மாய வலையிலிருந்து மீட்டு அன்னபூரணம் அக்காவை மீண்டும் இந்த இல்லத்தின் அரசியாக்க இதைவிடக் குறுக்குவழி எதுவும் இவனுக்குத் தெரியவில்லை. நீயும் ஆயிரம் கனவுகளுடன் இங்கே வந்திருக்கிறாய். ஆனால் இவரையும் இந்த வீட்டையும் ஆளவேண்டுமென்ற உன் கனவு நியாயமானதல்ல. இதை மட்டும் மனதிலிருத்தி இங்கிருந்து இயன்றவரை வேளையோடு சென்றுவிடு!

இறுதியில் ஆறு கடந்தாயிற்று. “அங்கை அவர் வாறமாதிரிக்கிடக்கு என்று அவளைப் பாராமலே அறிவித்துவிட்டு போர்ட்டிக்கோவை விறுவிறுவென்று கடந்து வாசல் படிகளில் இறங்கினேன். நிமிர்ந்து ஒழுங்கையைப் பார்த்தபோது அங்கே தூரத்தில் உண்மையிலேயே சிவப்பிரகாசத்தார் நாயோட்டமும் சில்லறைப் பாய்ச்சலுமாக வந்துகொண்டிருந்தார்.

அந்த வாசல் படியில் நின்றபோது அன்னபூரணம் அக்காவின் கருணைமிகுந்த கண்கள் ஒருகணம் என்முன்னே தோன்றி மறைந்தன. அன்றைக்கு ஒரு நாள் இதே படியில் நான் நின்றபோது தன் முந்தானைக்குள் கடதாசிச் சரையில் சுற்றி வைத்திருந்த பயித்தம் பணியாரத்தை வீட்டுக்குக் கொண்டுபோய் என் மனைவியிடம் கொடுக்கும்படி சொல்லி என்னிடம் நீட்டிய காட்சியை நினைத்துப் பார்த்தேன். சிவப்பிரகாசத்தாரை இன்றைக்குச் சிப்பிலியாட்டிக் காட்டுகிறேன்.

“அங்கை கார்க்காரனுக்கு மிச்சக் காசைக் கொடுத்திட்டுத்தான் வாறன். என்று சொல்லியபடியே கேட்டைத் தள்ளித் திறந்துகொண்டு முற்றத்துக்கு வந்தார் சிவப்பிரகாசத்தார்.

இவர் கோயில் குளங்களுக்குச் செய்த உபயங்களோடு தான் உத்தியோகம் பார்த்த ஊர்களெல்லாம் மற்ற மாதிரியான உபயங்களும் செய்திருக்கிறாரென முன்பே நான் சாடை மாடையாக அறிந்திருந்தேன். முதல் முறையாக இவரை ஆயித்தியமலையில் காணப்போனபோது அந்தக் குவாட்டர்ஸிலிருந்து உடுத்த சேலையையும் அள்ளிக்கொண்டு அவசரம் அவசரமாக வெளியேறிய ஏழைப் பனம் கிழங்கு வியாபாரியும் அந்த நேரமாய் என் நினைவில் வந்து போனாள்.

“என்ன வந்து கன நேரமோ? இப்போது அவர் பால் போன்ற வெள்ளை வேட்டியும் நேஷனல் சேர்ட்டுமாக வந்து நின்றாலும் அன்று கண்டமாதிரியே அவிழ்ந்துவிழும் சாரத்தை ஒரு கையால் தூக்கிப்பிடித்தபடி நின்றதுபோல்தான் எனக்குத் தோன்றினார்.

“ஓம் பாருங்கோ, ஒரு மணித்தியாலத்துக்கு மேலை இருக்கும்.

“வாங்கோ, உள்ளைபோய்க் கதைப்பம்.

“வேண்டாம், இவ்வளவு நேரமும் அங்கை உள்ளுக்கை உங்கடை புதுப் பெம்பிளையோடை கதைச்சுப்போட்டுத்தான் வாறன்.

“ஆள் ஆரெண்டும் அறிஞ்சு கொண்டியள்தானே?

“அது மட்டுமில்லை, ஆள் என்ன மாதிரியான ஆளெண்டும் அறிஞ்சுபோட்டுத்தான் வந்து இதிலை நிக்கிறன்.

“என்ன, வழக்கத்திலும் பாக்க உறைப்பாய்க் கதைக்கிறியள், பிறக்கறாசியார்?

“உங்களுக்கு இந்த வயசிலையும் இனிப்புக் கூடத் தேவைப்படுது, அதுதான் நான் உறைப்பாய்த் தரவேண்டி வந்திட்டுது.

“என்ன புதிசா சொல்லுறியள். எல்லா இடங்களிலையும் இப்பிடி நடக்கிறதுதானே.

“அது வேறைமாதிரியான இடங்களிலை நடக்கலாம், பாருங்கோ. இப்பிடி நடுச் சந்தியிலை நடக்கிறயில்லை. உங்கடை அந்தஸ்தென்ன, நீங்கள் செய்யிற காரியமென்ன? உங்கடை ஆட்டத்தைப் பாத்து வாயைப் பொத்திக்கொண்டிருக்க அக்கம் பக்கத்திலை உள்ளதுகள் உரிச்சுப்போட்ட வெங்காயமெண்டு நினைச்சுக்கொண்டியளோ? உறவுக்காரச் சனங்கள் உங்களைப்பற்றி என்ன கதைப்பினமெண்டாவது ஒருக்கால் நினைச்சுப் பாத்தியளோ?

“முப்பது, நாப்பது வருசத்துக்கு மேலா உங்களோடை வாழ்ந்த சொந்த மனிசியை வீட்டை விட்டு அனுப்பியிட்டு தோளுக்குமேலை வளர்ந்த பிளையளையும் யோசிக்காமல் எங்கையிருந்தோ ஒரு சரக்கைக் கொண்டுவந்து வைச்சிருக்கிறியள். இது எந்த அளவுக்கு நியாயம், இல்லாட்டில் லட்சணமெண்டு கேக்கிறன். வைச்சிருக்கிறியள் என்ற சொல்லைக் கொஞ்சம் அழுத்தித்தான் சொன்னேன்.

“ஒத்துக்கொள்ளுறன், நிலைவரம் அதுதான். ஆனால் வைச்சிருக்கிறன் எண்டதைச் சொந்தமெண்டு உலகமறிய மாத்தவேண்டுமெண்டுதான் உங்களை இண்டைக்குக் கூப்பிட்டனான். எப்பிடி இதைச் செய்யிறது எண்ட வழி தெரியாத லோயரோ நீங்கள்? சொல்லுங்கோ. என்று இறங்கி வந்தார்.
“சரி, சொல்லுறன். உங்களுக்குமேலை எனக்கிருக்கிற விசுவாசத்தை வைச்சுச் சொல்லுறன், எனக்குத் தெரிஞ்ச பாதுகாப்பான ஒரே வழியும் இதுதான், உங்களுக்கு நிம்மதி கிடைக்கிற வழியும் இதுதான். முதலிலை பேசாமல் பறையாமல் இவளைக் கையோடை ஊருக்கு அனுப்பிப்போட்டு அன்னபூரணம் அக்காவை வரச்சொல்லுங்கோ. நீங்கள் இப்ப இருக்கிறமாதிரிச் சட்டத்துக்கும் பயப்படத் தேவையில்லை, சமூகத்துக்கும் பயப்படத் தேவையில்லை”.

“ஏனிப்படிச் சமாளிக்கப் பாக்கிறியள், பிறக்கறாசியார். வடிவா டிவோர்ஸ் எடுக்கலாம்தானே?

“அது உங்கடை மனிசியிலை கடும் பிழை கண்டுபிடிச்சுச் சந்தேகத்துக்கு இடமில்லாமல் அதைக் கோட்டிலை நிரூபிச்சால் மட்டும் முடியும். இந்தச் சில்லறைச் சட்டமெல்லாம் தெரியாத சாதாரண ஆள்போலை கதைக்கிறியள்.

“அவள் என்னை விட்டுப் பிரிஞ்சு ஆறு மாதமாகுது, தெரியுமோ?

“அவ தானாகப் பிரிஞ்சு போகயில்லை. உங்கடை நடத்தைதான் அவவைப் போகச்செய்தது.

“சுய விருப்பப்படி என்னை விட்டுப் பிரிஞ்சிட்டாளெண்டு சட்டப்படி நிரூபிச்சு டிவோர்ஸ் எடுக்கலாம்தானே?

“அந்தச் சட்டமெல்லாம் ஒருபக்கம் கிடக்க, நீதவான் உங்கடை வாயிலையிருந்து வாற ஒரு சொல்லைத்தன்னும் நம்புவாரெண்டு நினைக்கிறியளோ? எவ்வளவோ உலகம் படிச்ச உங்களுக்கு நானே புத்தி சொல்லுறது? ஒண்டுமட்டும் முதலிலை நல்லா விளங்கிக்கொள்ளுங்கோ. உவள் உங்களுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லை, நீங்களும் அவளுக்கு ஒருவழியாலையும் பொருத்தமில்லை.

“அப்பிடியென்ன கண்டறியாத வித்தியாசத்தைக் கண்டுவிட்டீர்?

“பெண்சாதியெண்டு வருகிறவள் உடம்பு சம்பந்தமான தேவையை மட்டும் தீர்க்கிற ஆள் இல்லை. புருசன் பெண்சாதி எண்ட உறவு பரம்பரை பரம்பரையாய் தொடரும் உறவு, கண்டியளோ!

“நீர் லோ கொலிஜ்ஜிலை தேவாரம், திருவாசகமா படிச்சனீர், இப்பவே பிறக்கறாசி வேலையை விட்டிட்டுக் கோயிலிலை பிரசங்கம் பண்ணப்போகலாம். ஏன் மினைக்கெடுறீர்?
நான் கதையில் இன்னும் கொஞ்சம் உறைப்பைக் கூட்டிவிட்டுச் சொன்னேன், “என்னவெண்டாலும் நினைச்சுக்கொள்ளுங்கோ. நான் கடைசியாக உங்களுக்குச் சொல்லுறது இதுதான். எனக்கு நல்லாத் தெரியும், இவள் நாளைக்கு உங்களிலும் பார்க்க மிச்சம் இளம் வயது ஆளைத் தேடிப் போகக்கூடிய கேஸ். இந்த அடிப்படை விஷயம் விளங்காமல் நீங்கள் இவளோடை குடும்பம் நடத்தி முந்தியைப்போலை மதிப்போடை வாழலாமெண்டு பெரிசாக் கனவு காணுறியள்.

“என்ன சொல்லுறீர்? நான் இப்பவும் இளந்தாரிதான் காணும்.

“நீங்கள் அப்பிடி நினைச்சிருக்கலாம் ஆனால் எவ்வளவு காலத்துக்குத் தன் தேவையளைத் திருப்திப்படுத்துவியள் எண்டதைப் பொறுத்துத்தான் உவள் உங்களை உருப்படியான ஆளோ இல்லையோவெண்டு முடிவு செய்வாள். ஏனெண்டால் நான் விளங்கிக்கொண்டவரை, உவள் ஊரடிபட்ட சரக்கு.

“இன்னுமொருக்கால் இவளைச் சரக்கெண்டு சொல்லாதீர், கடைசித் தடவையாய்ச் சொல்லுறன். இவளுக்கு என்னிலை இருக்கிற அன்பையும் பாசத்தையும் பற்றிக் கொஞ்சம் முந்தித்தான் இஞ்சை வந்த உமக்கெப்படித் தெரியும்? தன்ர குடும்பத்தையும் விட்டிட்டு என்னோடை வர ஒப்புக்கொண்டவளை நான் பராமரிக்கத்தானே வேணும். இவள் தன்ர சீவியத்திலை என்னை விட வேறை ஒருதரையும் திரும்பியும் பார்க்கபமாட்டாள் எண்டு நிச்சயமா அறிஞ்சுகொண்டுதான் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறன். நீங்களும் இப்ப இதைத் தெரிஞ்சுகொள்ளுங்கோ.

“விரும்புறது வேறை விஷயம், ஐயா. அதுக்கு வேறை, வேறை காரணம் இருக்குது. உவள் தொடர்ந்து உங்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டுமே, அது மட்டும் நடவாது எண்டது நிச்சயமா எனக்குத் தெரியும்.

“எதை வைத்துச் சொல்லுறீர்?

“ஆதாரம் இல்லாமல் நான் இப்படிச் சொல்லுவனோ, அதுவும் உங்களுக்கு?

“வந்து ஒரு மணித்தியாலத்துக்கை ஜீ ஜீ பொன்னம்பலம் கணக்கிலை அப்பிடியென்ன பெரிய ஆதாரத்தைக் கண்டு பிடித்துவிட்டீர்? எங்கை ஒருக்கால் சொல்லும் பாப்பம்?

“சரி, கொஞ்சம் பொறுமையாய்க் கேளுங்கோ. இப்ப கொஞ்சம் முன்னம் வரைக்கும் நானும் உள்ளுக்கையிருந்து இவளோடை மிச்சம் நெருக்கமாக் கதைச்சுக்கொண்டுதானே இருந்தனான். 

இப்போ சிவப்பிரகாசத்தார் சிறிது அதிர்ந்தமாதிரி இருந்தது. “நெருக்கம்! அதுதான் அவரை இப்படி அதிரவைத்தது. இந்த நேரம்தான் எனது அடுத்த அம்பை எய்துவிடப் பொறுத்த நேரம். “அப்ப, உங்களுக்குத் தெரியாமல் என்னோடை ஒரு நாளைக்கு ஸ்கேர்ட்டும் டீசேர்ட்டும் போட்டுக்கொண்டு படம் பாக்க டவுணுக்கு வருவியோ எண்டு கேட்டன், ஓமெண்டு சொன்னாளோ இல்லையோ? உள்ளைபோய்க் கண்டுகொள்ளுங்கோ.

சிவப்பிரகாசத்தார் அப்போதுதான் வெட்டி நிமிர்த்திய தார்த் தகரம்போல் விறைத்துப்போய் நின்றார். நான் மிக்க மனத்திருப்தியுடன் வெளியேறினேன்.

அன்னபூரணம் அக்கா விரைவில் வீட்டுக்கு வந்துவிடுவா.

---

No comments:

Post a Comment