Jan 25, 2016

முத்தம்


அம்மா இசைத்தது ஆசை முத்தம்
அப்பா அருளியது அன்பு முத்தம்

ஆச்சியின் பொக்குவாய் எச்சில் முத்தம்
அழுகுணித் தங்கையின் அழகு முத்தம்
அண்ணன் அடித்தபின் அளித்த முத்தம்
அக்கா அடுத்தடுத்துப் பொழிந்த முத்தம்.

காதலி தந்தது முத்து முத்தம்
களவாய் தந்ததால் சத்து முத்தம்
கடற்கரை மண்ணில் கனிந்த முத்தம்
கட்டி யணைத்ததும் கசிந்த முத்தம்.

மேடையில் ஏறித் தெளித்த முத்தம்
மாலைகள் போட்டு மொழிந்த முத்தம்
பாதையில் காற்றுடன் தவழ்ந்த முத்தம்
பேச்சினில் வாழ்த்தி வழிந்த முத்தம்.

மனைவியின் மடியில் மலர்ந்த முத்தம்
மழலைகள் நெஞ்சில் விளைத்த முத்தம்
பிள்ளைகள் அஞ்சலில் வரைந்த முத்தம்
பேரன்கள் முகத்தினை நனைத்த முத்தம்.

முத்தங்கள் பெற்றே வளர்ந்து விட்டேன்
முத்தங்கள் அற்றதால் தளர்ந்து விட்டேன்
முதுமையில் முத்தம் யார் தருவார்?
மரணத்தின் முத்தமே இறுதி முத்தம்!

No comments:

Post a Comment