Jan 25, 2016

எனது ராஜகுமாரன்


இன்றைக்கு வேண்டாம்
என் இனிய கணவனே!

நீ
இழுத்து வளைத்த போதெல்லாம்
உன்னை அணைத்துப் படர்ந்த
பூங்கொடியல்லவா இவள்?

என்றாவது உன் மனதை
நோகடித் திருப்பேனா?
இல்லையென்று சொல்லி உன்னை
ஏமாறச் செய்தேனா?

தலையணையை அரியணையாக்கி
ஆட்சி செய்பவனே,
ஆழ்ந்துறங்கும் நடு நிசியில்
உன் கரங்கள் என் மேனியில்
மீட்டுமே மௌன வீணை
மறுத் தொதுங்கிப் போனேனா?

வில்லாய் வளைந்து
நாண் தொடுக்கும்
உன் ஆண்மை
இன்றா நேற்றா
இவளை உனக்கு
அடிபணிய வைத்தது?

தென்றலாய் என்றும்
எனைத் தழுவும் தோழனே
இன்று மட்டும்
தயவு கொஞ்சம் காட்டு.

திரும்பிப் படுக்காதே தேனே,
என் மன நோவுக்கு
மாத்திரை தருவாயே,
உடல் நோவுக்கும்
உன்னிடமே உண்டு
கைகண்ட மருந்து.

பெண்ணிடம் நீ காணும்
பலவீனமல்ல இது,
பொழுதெல்லாம்
துண்டுகளாய்ச் சிதறிய
தேங்காயாய்ப் போனதைத்
தெரிந்தவன் தானே நீ.

என்னைத்
தனியனாய் ஒருக்கழித்துத்
துயில் கொள்ள அனுமதிப்பாய்.
ஒரு நாள் ஓய்வெடுத்தால்
சொர்க்கத்தின் தாழ்பாள்
துருப்பிடித்தா போய்விடும்?

களைத்த இந்த உடல்
உன்
கருணைக்கு மனுப்போடும்
வேளையிது!

இரவு நேர அரசனாய்
ஆட்சி செய்வதிலும்
பகல் நேரச் சேவகனாய்ப்
பணிவு காட்டுவதிலும்
நீ எனக்களித்த பெருமதிப்பை
நோவுற்றபோதும் நினைத்துப்பார்.

இளவரசே,
உன் விரல்களுக்கு
இன்றைக்கு
வேறு வேலை கொடு.
அவை
நொந்துபோன என் நரம்புகளை
நீவிவிடட்டும்.

வலிய உன் கரங்கள் என்
மேனியை முறுக்கும்
மூட்டுகள் மேலாய்
மயிலிற காகட்டும்!

நெற்றியின்மீது
மோதிடும் மூச்சு
முத்தமாய் மலரட்டும்!

உன் தோள்களில் சாய்ந்தே
என்னைத் தொலைந்து போயிருக்கிறேன்
திரும்பிப் படுக்காதே, தேவனே,
விரும்பி நீ சொல்லும் ஒரு சொல்
என் வேதனைக்கெல்லாம்
மருந்து!
----

No comments:

Post a Comment