Oct 31, 2013

ஆயுதம் செய்வாய்!


[போர் ஓய்ந்தது, ஆனால் புயல் ஓயவில்லை. வன்னியின் விளை நிலத்தில் விலைமாதுகளை விதைக்கிறார்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். ஆதரவற்ற பெண்களின் கற்புக்கு விலை பேசும் இக்கயவர்களை இனங்கண்டு இளம் பெண்கள் தம்மைத் தாமே காப்பாற்றவேண்டுமென எண்ணி இக்கவிதையை வரைந்தேன்] 

நீ நினைக்கிறாயா
உனக்கு இனி
எவருமே இல்லையென்று,
தவிக்கிறாயா
தனியனாய்ப் போனாயென்று?

பெண்ணே,
பைத்தியமா உனக்கு?

காணாமற் போனது
உன்
கணவன் மட்டுமே
கரங்களல்ல
கனவுகளுமல்ல.

உன் அகராதியில்
அபலை என்ற சொல்லிருந்தால்
உடனே அதை அழித்துவிடு!
பாவம், பேதை, பெண் ஜன்மம்
என்றிருந்தால் அந்தப்
பக்கத்தையே கிழித்துவிடு!

கழுத்தில் தொங்குவது
மாங்கல்யமா
மறைத்து வை!
பதிலுக்குப்
புன்னகை இருக்கிறதுதானே
போட்டுக்கொள்!

போனவனுக்குப்
பகைவர்கள்
பலரிருக்கலாம்.
போனவன் போனவனே
ஆகையால்
புலம்புவதை நிறுத்து!

இனி
உன்னையே நீ வருத்துவதில்
அர்த்தமே இல்லை.
உன்னையே நீ
அடித்து எழுப்புவதில்தான்
ஆரம்பமே இருக்கிறது.

தெரிந்துகொள்,
தாலி
பெண்ணுக்கு
வேலியாயிருந்த காலம்
காவியக் காலம்,

இது
கலிகாலத்துக்கு அடுத்த
காடையர்கள் காலம்.
காவி உடுப்புக்குள்ளும்
கோவலன்கள் உலாவும்
கொள்ளையர்கள் காலம்!

அன்று
சேல்பட்டு அழிந்தன
வன்னியின் வயற் பொழில்
இன்று கயவரின்
கண்பட்டு அழிந்தன
கன்னியர் கற்பு.

பெண்களைத்
தாயாக மதிக்காது
தாயாக மாற்றும்
வள்ளல்கள்
திசைதோறும் நாறுகிறார்கள்.
மூக்கை மூடிக்கொள்
கண்ணை மட்டும் திறந்துகொள்.

கடவுள்கள் உன்னைக்
காப்பாற்றப்போவதில்லை
அறிந்துகொள்,
ஏழையாய்ப் போனாலும் நீ
கோழையாய்ப் போய்விடவில்லை!

போர் கண்ட மண்ணுக்கு நீ
புதியவளல்ல, பெண்ணே!
பட்டினி கிடந்து
பழகிப்போனவள்தானே,
பசி வந்தபோதும்
பணியாது வாழ்ந்து கொள்!

மௌனம்தான் உன்
முதல் எதிரி
மறந்துவிடாதே!
உடலுக்குத் துணி
உள்ளத்துக்குத் துணிவு!

நாளைக்கென்றிருக்காதே
இன்றே உன் கரங்களை
நீட்டிப்பார்
அவையே உனக்கு இனி
உதவப்போகும் தோழர்கள்!

No comments:

Post a Comment