Oct 2, 2013

மௌனத்தின் சப்தங்கள்


“என்ரை மோனை…..!” மார்கழிக் குளிரில் விறைத்துப்போன இரவின் அமைதியைச் சலீரெனக் கிழித்துக்கொண்டு எழுந்த அந்த ஓலம் அச்சிற்றூரின் நாடி நரம்புகளை ஒருமுறை உலுக்கி ஓய்ந்தது.

ஒரேயொரு முறைதான். அந்த இரண்டு சொற்களில் வெடித்துச் சிதறி நெஞ்சைப் பிளந்த அவலம் படுக்கைக்குப் போனவர்களையும் இரவு உணவுக்காக அமர்ந்தவர்களையும் ஓய்வாகக் குடும்பத்துடன் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தவர்களையும் பள்ளிக்கூடப் பாடங்களில் மனம் ஊன்றிப் போயிருந்தவர்களையும் தம்மையறியாமல் எழுந்து நிற்க வைத்தது, ஒரு சிலரை நடுங்கவும் வைத்தது.

அந்த ஓலத்தைக் கேட்டதும் தமக்குள் ஒருவரையொருவர் பார்த்து என்னதான் நடந்திருக்குமெனத் திகிலடைந்து வாய் மூடிக்கொண்டவர்களும் நமக்கென்ன நாளைக்கு எப்படியும் தெரியத்தானே போகிறதென்று தமக்குத் தாமே செய்துகொண்ட சமாதானத்துடனும் உள்ளே நடுக்கத்துடனும் படுக்கைக்குப் போனவர்களும் ஓரளவு துணிவை அள்ளிக்கொண்டு வீட்டு வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்துவிட்டு தாம் தைரியசாலிகளெனக் காட்டிக்கொள்ள முனைந்தவர்கள்போல் தெருச் சந்திக்கு வந்தவர்களுமாக ஊரில் சமூக உணர்ச்சி முன்னெப்போதுமில்லாதவாறு திடீரென விழித்துக்கொண்டது.

ஒருவருக்கும் முதலில் எதுவுமே விளங்கவில்லை. ஆனாலும் அந்த ஓலம் வந்த திக்கில் எவருக்கு என்ன நடந்திருகக்கூடும் என்ற விசாரணையில் தாமாகவே கேள்விகளை எழுப்பி அவற்றுக்குத் தாமாகவே விடைகளைத் தேடி அப்படி எதுவும் பெரிதாக நடந்திருக்காதெனத் தம்மைத் தாமே சமாதானம் செய்துகொண்டனர். மொத்தத்தில் ஊர் முழுவதும் அந்த இரவில் கொள்ளும் உறக்கம் தொலந்துபோனாலும் பரவாயில்லை என்னுமாப்போல் அடுத்து இன்னும் ஏதேனும் எதிர்பாராதது நடக்கவேண்டுமே என்ற அங்கலாய்ப்போடு கண்ணோடு கண்மூட எத்தனித்த போதிலும் காதுகளை மட்டும் தீட்டிக்கொள்வதில் வலு கவனமாயிருந்தது.

எந்த ஊரிலும் கோழைகள், பயந்தவர்கள் மத்தியில் கொஞ்சமாவது துணிவுள்ளவர்கள் ஒருசிலராவது இருப்பது இயற்கையல்லவா? அந்த ஓலம் எழுந்த வீட்டுக்கு மிக அண்மையிலுள்ளவர்கள் தங்கள் படலைகளை உள்ளே நின்று பரபரவென்று இழுத்து இறுக்கிக் கட்டுவதில் முனைந்திருக்க இந்தக் கொஞ்ச நஞ்சம் நெஞ்சுத் தைரியமுள்ளவர்கள் விழுந்தடித்துக்கொண்டு ஓலம் எழுந்த வீட்டை அடையாளம் காணுவதில் ஒருவர் கையை மற்றவர் பிடித்தபடி துணிகரமாக இறங்கினர்.

அடுத்த அரை மணி நேரத்தில் ஊரின் ஒட்டுமொத்தத் தேடலின் விழைவாய் கிணறு தோண்டி ஐயங்கன் செத்துப்போனான் என்ற செய்தி ஊரெல்லாம் சூறைக்காற்றாய்ப் பரவிவிட்டது. ஆனால் ஓலமெழுப்பியவன் ஐயங்கனின் தகப்பன் சிவனடியான் என்ற தகவல்தான் ஒருவராலும் சீரணிக்க முடியாததாயிருந்தது. மௌனமே உருவான சிவனடியானிடமிருந்து ஒரு நாளும் இல்லாமல் அப்படியொரு ஓலமா? சிவனடியானின் வீட்டு முற்றத்தில் இறங்கி விபரத்தை அறியத் திராணியில்லாதவர்கள் ஆளுக்கொரு ஊகத்தை அவிழ்த்துவிட்டார்கள்.

ஐயங்கன் பேய் அடித்துத்தான் செத்திருக்கவேண்டும் என்றனர் ஒருசிலர். அப்படி இருக்காது, பேய்கூட அவனுக்குப் பயம். ஐயங்கனின் எதிரிகள் யாரோ செய்வினை சூனியம் செய்திருக்கலாம் என்றனர் இன்னும் ஒருசிலர். ம்ஹூம், அப்படியும் நடக்க வாய்ப்பில்லை. இந்த ஊரிலும் அடுத்த பல ஊர்களிலும் சிவனடியானை விட்டால் வேறு யார் செய்வினை சூனியம் செய்வதில் வல்லவனென்று பேர் எடுத்தவன்? தன் மகனிடம் ஆழமான பற்று வைத்திருந்த சிவனடியான் அவன் மீது எவரேனும் பேயைப் பிசாசை ஏவுவதைப் பார்த்துப் பேசாதிருந்திருப்பானா? போதாததற்கு, பிசாசுகளுக்கும் ஐயங்கனுக்கும் சின்ன வயதிலிருந்தே ஐக்கியம். இந்த உண்மையை அறிந்துகொள்ளாமல் விசர்க் கதை கதைக்கிறார்களேயென அங்கலாய்த்தார் விஷயம் அறிந்த ஒருவர். எதிரிகள் அடித்தோ வெட்டியோ கொலை செய்யப்படக்கூடிய ஆளல்ல ஐயங்கன் என அடித்து முழக்கினார் வேறொருவர்.

ஐயங்கனுக்கு எதிரிகள் யாரும் இருக்கமுடியுமா? இது என்ன பேய்க் கதை. எவரையும் நிமிர்ந்து பார்த்து ஒரு சொல் தன்னும் பேசியிராத இந்தப் பச்சைத் தண்ணி மனிசனுக்கு எப்படித்தான் எதிரிகள் ஏற்படமுடியும். இந்தக் கேள்வியே அவன் எப்படிச் செத்துப்போனான் என்ற கேள்வியிலும் பார்க்கப் பன்மடங்கு விஸ்வரூபம் எடுத்திருந்தது. ஆனால் எந்த முகதாவில்தான் ஐயங்கன் செத்துப்போனான் என எடுத்துக் கொண்டாலும் சிவனடியான் இப்படி ஊர் முழுவதையும் உலுக்கும்படியாக ஓலமெழுப்பக்கூடியவரா? அந்த விஷயத்தில்தான் ஊரிலுள்ள சனங்களேல்லாம் ஒரே மாதிரியான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தார்கள்.

சிவனடியான் தெருவில் வருகிறாரென்றால் அவரின் பரந்த நெற்றியில் துலங்கும் திருநீறும் அதன் மத்தியில் ஜ்வலிக்கும் குங்குமமும் தூரத்தில் வருபவரையும் பய பக்தியுடன் வேலியோரமாக ஒதுங்கிச் செல்லவைக்கும். இடுப்பில் பச்சைப் பால்போன்ற வெள்ளை வேட்டியும் தோழில் அதே நிறத்தில் சால்வையுமாக அமைதியே உருவாக நடந்து வருவார். எவரையும் விழித்துப் பார்க்கும் பழக்கமில்லாதவர். பேச்சும் நிதானமாக அளவுடன் வரும். அதுவும் அவசியமென்றால் மட்டுமே. மற்றும்படி மௌனமே அவரின் பதிலாக இருக்கும். ஊரில் நாய் கடி, தேள் கடி, பாம்பு கடி, நாட்பட்ட விக்கல் போன்ற உபாதைகளுக்கு அவரிடம்தான் மருந்து உண்டு. அவர் எந்தெந்தக் காடுகளுக்குப்போய் மூலிகைகளைக் கொண்டுவருகிறார் என்பதை ராசா-ராணிக் கதைகளாக ஊர்ச்சனங்கள் சொல்லி வியந்து பேசுவது பெரும் பைம்பலாக இருக்கும். சாதகப் பொருத்தம் பார்த்துச் சொல்வாரென்றால் அவர் சொன்ன அத்தனையும் சொல்லுக்குச் சொல் சரியாக இருக்கும். வந்தவர்கள் கொடுத்ததை வாங்கிக்கொண்டு சலனமற்ற முகத்துடன் அவர்களுக்கு விடைகொடுப்பார். செய்வினை, சூனியக் காரியங்களுக்கு வெளியூராட்கள் வந்து அவரை நடுச் சாமத்தில் கூட்டிச் செல்வார்களென்று ஊர்க்காரர்கள் சாடை மாடையாகக் கதைப்பதுண்டு. ஆனால் எவரிடமும் அதற்குச் சாட்சியம் இருப்பதில்லை.

சிவனடியானும் ஐயங்கனும் ஒன்றாகத் தெருவில் நடந்து செல்வது மிக அபூர்வமான காட்சி. ஏதோவொரு ஊரில் ஏதேனும் காரியங்களுக்காக இவர்களைக் கூட்டாக அழைத்தால் மட்டுமே இவர்கள் சேர்ந்து புறப்படுவார்கள். தகப்பனும் மகனுமாக இவர்கள் நடந்து செல்வது இரு கரிய பெரிய உருவங்கள் தெருவையே அடைத்தபடி போவதுபோலிருக்கும். இவர்கள் தமக்குள் பேசிக்கொள்வதில் ஒரு சொல்கூடப் பக்கத்தில் செல்பவர்களின் காதில் விழாது. ஆனால் இந்த இருவரும் காரியங்களை முடித்துக்கொண்டு தமக்குள் பெசியபடி வருவதைக் காண்பவர்கள் ஆத்மார்த்தமான உறவுள்ள அப்பனும் மகனும் சவாரி முடிந்து வீட்டுக்குத் திரும்பும் வண்டில் மாடுகள் காட்டும் உற்சாகத்துடன் வருவது போன்றிருக்குமெனச் சொல்லிக்கொள்வர். மாலை நேரமானால் சிவனடியானை வீட்டில் காணமுடியாது. ஐயங்கன் மட்டுமே வீட்டு முற்றத்தில் போட்டிருக்கும் வாங்கிலில் மடித்த காலுக்குமெல் மடித்த காலைப் போட்டுக்கொண்டு ஆகாயத்தைத் தனது உறவினனாகவோ நண்பனாகவோ கருதி ஏதோ பேசிக்கொண்டிருப்பதைப் பலர் கண்டிருக்கிறார்கள்.

ஐயங்கனிடம் ஒரு விசித்திரமான பழக்கம் இருந்தது. அவன் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் ஊரிலிருந்து காணாமற்போவதும் பின்னர் எல்லாரும் திடுக்கிடும்படியாகத் தலைகாட்டுவதும் உண்டு. அதனால் கடந்த இரண்டு மூன்று மாத காலம் அவன் ஊரில் நடமாடவில்லை என்பதை எவரும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. தகப்பனும் மகனுமே வாழ்ந்துவந்த அந்த வீட்டில் என்ன நடந்தாலும் வெளியே நின்று கண்டுகொள்ளமுடியாத அளவுக்குப் பெரிய வளவின் நடுவில் இருந்தது அந்த வீடு. அவனை வேலைக்கு அழைக்கவெனப் படலை வாசலில் நின்று கூப்பிட்டவர்களுக்கும் வெறும் வீடே இந்த இரண்டு மூன்று மாத காலம் மௌனமாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தது.

ஐயங்கன் எந்தத் தொழில் செய்வானென்று எவரும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது. வேலி அடைக்கவேண்டுமா, கட்டுவேலைக்கு ஆள் வேண்டுமா, செத்த வீடுகள் களியாண வீடுகளுக்கு எடுபிடி ஆள் வேண்டுமா? இவற்றில் தேர்ச்சி பெற்றவனென்றும் சொன்ன பணத்துக்கு கூடவோ குறையவோ ஒரு சதமும் வாங்காதவனென்றும் பெயர் எடுத்திருந்தாலும் ஐயங்கன் கிணறு இறைப்பதில் மட்டும் பெயர் பெற்றவனாயிருந்தான். காரியத்தை அவன் கையில் கொடுத்தால் போதும் துலாக் கிணறாயினும் கப்பிக் கிணறாயினும் நேற்றுத்தான் கிண்டிமுடித்த கிணறுபோல் மிகத் துப்பரவாக இறைத்துக் காட்டுவான். இதனால் கிணறு கிண்டி என்ற பெயரே அவனுக்குப் பின்னால் சேர்ந்துகொண்டது. நேரே நின்று இந்தப் பெயரில் அவனைக் கூப்பிடுவதற்கு எவருக்கும் துணிவு இருந்ததாகச் சரித்திரம் இல்லை. ஒருமுறை “ஆடு வெட்டித் தருவியோ?” என்று ஒரு அடுத்த ஊர்க்காரர் கேட்டதற்கு ஐயங்கன் அவரை ஒருமுறை மட்டும் விழிகளை உருட்டிப் பார்த்தான். அதற்குப் பின்னர் அவர் இந்த ஊர்ப்பக்கம் தலை காட்டவேயில்லை.

ஐயங்கனுக்கு ஐம்பது வயதிருக்கலாமென நாலைந்து வீடுகள் தள்ளி வாழும் அன்னம்மா மனிசி ஊர்ச்சனங்களின் மத்தியில் நின்று சொல்லிக் கொண்டிருந்தாள். அன்னம்மா நீண்டகாலமாகவே மனிசிதான். அவளைக் கிழவியென்று நினைத்தவர்களுக்கும் கதைத்தவர்களுக்கும் அடுத்த நேரச் சாப்பாடு சமிக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. அவளுக்குத் தெரியாத ஊர்ச் சங்கதிகளோ மற்றக் குடும்பங்களின் கட்டுப்பொட்டுகளோ எதுவுமில்லை என்ற செய்தி ஊரில் வெகு பிரசித்தம் என்பதால் சனங்கள் அவள் முன்னால் வாய் திறக்கப் பயப்படுவதில் ஆச்சரியமில்லை. இனிப் பிறக்கப்போகும் குழந்தைகள்கூட அவளின் வாயில் அரைபட வாய்ப்பிருக்கிறது என்பதும் அவர்கள் நன்கறிந்ததே. அவள்தான் சிவனடியான் எழுப்பிய ஓலத்தைக் கேட்டதும் அந்தரப்பட்டுக்கொண்டு ஓடிப்பொனவர்களில் முன்னணியில் நின்றவள். சிவனடியான் வீட்டுக்கு ஓடிப்போய் ஐயங்கன் செத்துப்போனான் என்ற செய்தியை அறிந்ததும் முதல் வேலையாகச் சந்திக்கு வந்து முணுமுணுக்கும் மின்சார விளக்கின்கீழ் நின்றுகொண்டு கையையும் காலையும் இயன்ற அத்தனை திக்குகளிலும் ஆட்டி ஒரு வசனத்தில் சொல்லவேண்டிய செய்தியை இருபது நிமிடமாக அலம்பினவளும் அவள்தான்.

அன்னம்மாவைச் சுற்றி நின்ற அந்த ஊரின் அன்றாடம் காய்ச்சிகளும் அடுத்தவர் பிரச்சனைகளை மட்டும் பேசுவதில் அக்கறை கொண்டவர்களும் தம் வாயை அகலப் பிளந்தபடி அவளின் ராகமாலிகையில் மயங்கி நின்றனர். ஒருவராவது அவளின் பேச்சில் சந்தேகம்கொண்டு கேள்வியெழுப்பத் துணிவில்லாதவர்களாய் அவளிடமிருந்து ஒரு கட்டைக்கு அங்காலை போய்த்தான் வாயைத் திறக்க வாய்ப்பிருக்கிறதென ஏற்கனவே தீர்மானித்துக் கொண்டவர்கள்போல் நட்ட கட்டையாய் நின்றனர். மற்றவர்கள் பிரச்சனையைத் தன் சொந்தப் பிரச்சனையாக உருவகித்து ஆற்றோட்டமாக விமர்சிக்கும் வல்லமையுள்ளவளான அன்னம்மா தான் எப்படிச் சிவனடியான் வீட்டுத் திண்ணையில் ஏறினாள் என்பதை மட்டும் ஐந்து நிமிடப் பிரசங்கத்தில் அவிழ்த்துவிட்டாள்.

“அங்கை, சிவனடியான் வீட்டுத் திண்ணைக்கு முன்னாலை பத்தி இறக்கிக்கிடக்குது கண்டியளோ? வளையிலை தொங்கிற அரிக்கன் லாம்பு வெளிச்சத்திலை சிவனடியான் செத்த பிரேதம் கணக்கிலை திண்ணையிலை படுத்துக்கிடக்கிறான். நான் முத்தத்திலை இறங்கின அசமாட்டம் கேட்டுத் தலையை நிமித்தி அப்பிடி ஒரு பார்வை பாத்தான் பாருங்கோ, நான் சிவனாணை விறைச்சுப்போனன். எனக்குச் சயிரமெல்லாம் நடுங்கத் துவங்கியிட்டுது. பாத்தியடி வைரவர்தான் நேரை வந்திட்டுதோவெண்டு நினைச்சு, ‘வைரவ சுவாமியாரே’ எண்டு சத்தம்போட்டுக் குளறினன். அவ்வளவுதான், சிவனடியான் பனைபோலை எழும்பிவந்து முகத்துக்கு முன்னாலை என்னைப் பாத்தான். “விடுப்புப் புடுங்க வந்தனியோடி” எண்டு குசுகுசுக்கிறமாதிரிக் கேட்டான். “இல்லை, சாமி. உங்கடை சத்தம் கேட்டிட்டு ஓடிவந்தனான். உங்களுக்கு ஏதேனும் வில்லங்கம் வந்திட்டுதோவெண்டு மனந்தாங்கேலாமல் வந்தனான். கோவிக்காதையுங்கோ, சாமி” எண்டன். சிவனடியான் குனிஞ்சு என்னைப் பாத்தான். பாத்திட்டு, என்ரை மோன் என்னை விட்டிட்டுப் போட்டான், நான் ‘அவனட்டைப்’ போறன். அயலட்டையிலை கதைச்சுக் காரியங்களைப் பார்” எண்டு கட்டளை போட்டிட்டு சால்வையையும் உதறித் தோளிலை போட்டுக்கொண்டு வாசல் கட்டையும் கடந்து போனான். சிவனடியான் ‘அவனட்டை’ எண்டு சொன்னால் அது பாத்தியடி வைரவரட்டை எண்டுதான் கருத்து, தெரியுமோ. என்ரை சீவியத்திலை இப்பிடியொரு மனிசனை நான் காணயில்லை. பெத்த பிள்ளை பின்னாலை செத்துக் கிடக்கிறான். இவன் என்னெண்டால் ஒண்டும் நடவாதமாதிரிச் செலவுக் காரியமெல்லாத்தையும் ஊர்ச்சனங்களன்ரை தலையிலை இறக்கிப்போட்டிட்டுக் கையை விசுக்கிக்கொண்டு குசாலாகப் போனான் பாருங்கோ.” இதை மூச்சுவிடாமல் சொன்ன கையோடு சுற்றி நின்ற எல்லாரும் கோயிலில் வாசலில் தேங்காய் உடைக்கவென நட்ட கருங்கல்லாய்த்தான் இருக்கவேண்டுமென்று எண்ணியவள்போல் அலட்சியமாகப் பார்த்தாள். அன்னம்மா கூறிய கதையைத் திறந்த வாய் மூடாமல் ஆதியோடந்தமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஊர்ச்சனங்கள் ஐயங்கன் செத்துப்போனானே என்ற செய்தியிலும்பார்க்க செலவுக் காரியம் தங்கள் தலையில் பொறிந்து போனதேயென்பதைத்தான் பொறுக்கமுடியாமல் அங்கிருந்து கழன்றால்போதும் என எண்ணிக்கொண்டவர்கள்போல் மெல்லம் மெல்லமாய் நழுவத்தொடங்கினார்கள்.

கிழக்குச் சமுத்திரக் கரையோரமாகக் கற்கோவளம் கிராமத்துக்குத் தெற்கே மண் வெளிகளைப் பிட்டுக்கொண்டு கிளம்பி நிற்கும் தென்னைகளும் பனைகளும் அவற்றின் உயரத்துக்குப் போட்டியாகச் சவுக்கு மரங்களும் அவ்வூருக்குச் சோம்பேறித்தனமான அழகைத் தந்துகொண்டிருந்தது. இவற்றை விட்டால் அதனைச் சிற்றூரென்று அழைக்கும் அளவுக்கு அத்தனை லட்சணங்களும் கொண்டதல்ல அது. அதற்கென்றொரு வைரவர் கோயிலும் அதிலிருந்து தொடங்கும் மண் தெருவையும் தவிர. தெருவோரமாக ஒரு காலத்தில் ஊர்ச்சனங்களால் பாவிக்கப்பட்ட பொதுக் கிணறு கவனிப்பாரற்று இடிந்துபோக அதற்குள் அவர்கள் தம் வசதிகருதிக் கொட்டிய குப்பை காலப்போக்கில் கிணற்றையே மூடிவிட்டது. அங்கே கிணறு இருந்ததற்கு அடையாளமாகச் துணி தோய்க்கும் கல்மட்டும் தூக்கிச் செல்வோர் இல்லாமல் இப்போதும் அந்த ஊரின் பெருமையைப் பறை சாற்றிக்கொண்டிருந்தது. வைரவர் கோயிலுக்கு எதிராக ஓடும் ஒற்றைத் தெருவைத் தொட்டுப் பிரிந்து செல்லும் நாலு குறுக்கு ஒழுங்கைகளைப் போன்றே அந்த ஊரின் உறவுகளும் பிரிந்து வாழ்ந்தபோதிலும் அவை தமக்கென்றொரு சமூக உணர்வை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருந்தன. மற்றும்படி எந்நேரமும் தூங்கிக்கொண்டிருக்கும் அந்த ஊரின் கல் வீடுகளும் அவற்றுக்குப் போட்டிபோட்டுக் களைத்த மண் வீடுகளும் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும்.

கைகளை விசுக்கி விசுக்கி நடந்துகொண்டிருந்த சிவனடியானின் கால்கள் அத்தெருவின் அந்தலையில் மங்கிய ஒளியில் ஒற்றையாய்ச் சுடர்விடும் வைரவர் கோயிலின் விளக்கையே இலக்காக வைத்து விடுவிடுவென முன்னேறிக்கொண்டிருந்தன. அவரின் மனதை அப்போது அலைக்கழித்த எண்ணங்களை வைரவரிடம் உடனே கூறினால்தான் உண்டென்பதுபோல் அவரின் நடை பிசிறு எதுவுமின்றி இயங்கிக்கொண்டிருந்தது.

அடர்ந்த இருளுக்குள் உறங்கிக்கொண்டிருந்த பனம் குடலையைப் பின்புலனாகக்கொண்டு பாத்தியடி வெளியின் மூலைப்பக்கமாய் நின்ற தகரக் கொட்டில்தான் வைரவர் கோயில்கொண்ட இடம்.. வைரவருக்கு மூலஸ்தானம் என்று கூற எதுவும் கிடையாது. நான்கு ஆட்கள் சேர்ந்து கைகளைச் கோர்த்து வளைத்தாலும் அளக்கமுடியாத பருமன்கொண்டு நின்ற மருத மரத்தின் மடியையே வைரவர் தனது ஆசனமாக்கிக்கொண்டார் . பனம் குடலைக்கு முன்னால் பரந்துகிடக்கும் பனம்பாத்தி போடும் பொது நிலம் பல களங்களைக் கண்டதுபோல் மேடுகளும் கிடங்குகளுமாய் இருளில் எட்டிப்பார்க்கமுடியாத பயங்கரத் தோற்றத்தைக் காட்டிக்கொண்டிருந்தது. மருத மரத்தின்கீழ் வாசம்கொண்டாலும் வைரவருக்குக் கிடைத்ததென்னவோ பாத்தியடி வைரவர் என்ற பட்டப்பெயர்தான்.

கோயில் முற்றத்துக்கு வந்த சிவனடியானின் கைகள் தாமாகக் கூப்பிக்கொண்டபோதும் கண்களோ வைரவரை வெறித்து நோக்கின.. அவர் கண்களில் வருத்தத்தின் வெளிப்பாடா வெறிச்சோடிப்போன மன நிலையால் ஏற்பட்ட குழப்பமா சாந்தியைத் தேடும் மனத்தின் அலைக்கழிவா என்று அறுதியிட்டுக் கூறமுடியாத அளவுக்கு அவரின் பார்வை வைரவரின்மீது நிலைகுத்தி நின்றிருந்தது. இது அவர் அன்றாடம் கோயிலுக்கு வரும்போதுள்ள தோற்றமல்ல. மாலை மங்கிய வேளைதான் அவர் அங்கே வரும் நேரம். வாசலில் வந்ததும் சால்வையை விரித்து அதன் மேல் சப்பணம்போட்டு இருந்துகொள்வார். நடுநிசியின்போதுதான் அவரின் தியானம் நிறைவுபெறும்.

இனியென்ன எனக்கு இருக்கிறது, இவனிடம் எல்லாவற்றையும் சொல்லி அடைக்கலம் தேடவேண்டியது ஒன்றுதான் இருக்கிறது. சால்வையை உதறி மணல் தரையில் விரித்துவிட்டு அதன்மேல் அமர்ந்து வழக்கம்போல் தியானத்தை அழைத்தார் சிவனடியான். கண்களை மூடிக்கொண்டால்மட்டும் போதுமா, மனம் எப்போது கூப்பிட்டாலும் மடியில் வந்து ஏறும் குழந்தையாயிருந்த தியானம் அன்று மட்டும் அவரிடம் ஏனோ அடங்க மறுத்தது.

பாத்தியடி வைரவரின். கழுத்தில் எவரோ எப்போதோ போட்ட மாலை கருகித் தொய்ந்துபோய்த் தொங்கிக்கொண்டிருந்தது. மருதமரத்தின் அடியில் நின்ற மூன்று சூலங்களில் நடுநாயகமாய் நின்ற ஆளுயரச் சூலத்தில் தடிப்பாய் அப்பிப்போன குங்குமம் விளக்கு வெளிச்சத்தில் இறுகிப்போன அந்த இரவைக் கிழித்துக் குடுதிப்புனல் போன்று தனது நெஞ்சில் பாய்வதைச் சிவனடியான் உணர்ந்தார். கண்களிலிருந்து பாயும் நீரைக் கட்டுப்படுத்தும் வல்லமையின்றித் தரையில் அமர்ந்திருந்த சிவனடியான் மனதைக் கட்டுக்குள் கொண்டுவரப் பலத்த முயற்சிகள் செய்து பார்த்தார். ஆனால் மகன் ஐயங்கனின் அசைவற்ற அசுர உடல் திண்ணையில் மல்லாக்காய்க் கிடந்த காட்சியே அவரின் கண்முன் நிலைக்குத்தி நின்று பெருத்த ஆய்க்கினை செய்தது.

எம்மளவு காலத்துக்குத்தான் என் மகன் இப்படி உத்தரியப்படுவான், எம்மளவு காலத்துக்குத்தான் நானும் அதைப் பாத்துக்கொண்டிருப்பேன்? தன் கண்முன்னால் சாக்குக் கட்டிலில் மல்லாக்காய்ப் படுத்துக்கொண்டு வலியால் வயிற்றைப் பிசைந்தபடி முனகிக்கொண்டிருந்த தன் மகனைக் கண்களில் இயலாமை ததும்பப் பார்த்தார் சிவனடியான். நோய் முற்றிவிட்டது, இனி ஒன்றும் செய்ய இயலாது. கடவுளின் தலையில் பாரத்தைப் போடுவதைத் தவிர வேறு வழியில்லையென்று வெளியூர்ப் பரியாரியார் கையிலடித்துச் சொல்லிவிட்டார். எந்த வியாதிக்கும் தரும ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பழக்கமில்லாத சிவனடியான் மகன் படும் வேதனையை நேரே காணப் பொறுக்கமுடியாமல் காரைப் பிடித்துக்கொண்டுபோய் ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டார். மருத்துவருக்காகக் காத்திருந்த வேளையிலும் பார்க்க அவர் சொன்ன தகவலை விளங்கிக்கொள்ளத்தான் சிவனடியானுக்கு வெகு நேரம் பிடித்தது. ஆயிரத்தெட்டுச் சோதனைகளுக்குப் பிறகு மருத்துவர் வந்து தகப்பனையும் மகனையும் மாறி மாறிப் பார்த்தார். பிறகு மிக்க ஆறுதலாகத்தான் சிவனடியானை நோக்கி நிலைவரத்தைச் சொன்னார். அதற்குப் பிறகு அவர் அங்கே ஒரு கணம்கூட நிற்கவில்லை மகனையும் கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.

வீட்டுக்கு வந்த சிவனடியான் சும்மா இருக்கவில்லை. எங்கேயோவெல்லாம் போய்த் தேடித் தேடி அபூர்வமான மூலிகைகளைக் கொண்டுவந்து சேர்த்தார். மிகக் கவனமாக அவற்றைத் தெரிவு செய்து இடித்துச் சாறாக்கி மகனுக்கு வேளா வேளைக்குக் கொடுத்து வந்தார். ஆனாலும் அவனின் வேதனைமட்டும் குறைந்தபாடில்லை. ஆஸ்பத்திரி மருத்துவர் சொன்னது அவரைப் பொறுத்தவரை உண்மையாய் இருக்கலாம். ஆனால் எந்த வியாதியையும் மூலிகை மருந்து சுகப்படுத்துமென்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார் சிவனடியான். அதை முறைப்படியும் நேரத்தோடும் செய்து கொடுப்பதில்தான் எல்லாம் இருக்கிறது. ஆனால் ஐயங்கனைப் பார்த்த இரண்டு வைத்தியர்களும் காலம் கடந்துவிட்டது, வருத்தம் முற்றிவிட்டது என்று சொன்னதுதான் சிவனடியான் மனதில் தொடர்ந்து உறுத்திக் கொண்டிருந்தது, “நன்றாய்த் தெரிந்துகொள்ளும், உம்முடைய மகனுக்கு வந்திருக்கிறது புற்று நோய். இது மனிதனை அணு அணுவாகக் கொன்று தின்கிற வியாதி. இதில் பலவகை. எல்லாவற்றிலும் கடுமையான வகைதான் உன் மகனுக்கு வந்திருக்கிறது” என்று ஆஸ்பத்திரி மருத்துவர் ஒவ்வொரு சொல்லையும் மிக நிதானமாக உச்சரித்துச் சொன்னது சிவனடியான் மனதில் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து மோதியது.

வைரவா, உன்னிடம் சொல்லித்தானே இதையும் செய்தேன் எல்லாவற்றையும் செய்தேன். ஒரு பாவமும் அறியாத என் மகனுக்கு இந்த வியாதியையும் கொடுத்து அதைத் தீர்க்க இயலாதவனாகவும் என்னை ஆக்கிவிட்டாயே! கணத்துக்கொரு அணுவாகச் செத்துக்கொண்டிருந்த என் மகனின் வேதனையைக் கொஞ்சமாவது போக்க ஏதோவொரு வழி சொல்லுமென்று உன்னிடம்தானே கேட்டேன், நான் செய்த பரிகாரத்துக்கு நீ எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் தாரும். சிவனடியான் வைரவரின் முன்னால் இரவிரவாகத் தியானத்தில் இருந்தபோதுதான் அந்த இறுதி முடிவை எடுத்தார். தன் குரலை உயர்த்திக் பேச இயலாத ஐயங்கன் தன் வயிற்றுக்குள் சுவாலைவிட்டு எரிந்துகொண்டிருந்த நெருப்பைத் தாளமுடியாமல் வாயற்றவன்போல் அரற்றிக் கொண்டிருந்தபோது தான் கையைப் பிசைந்துகொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில் அவனை ஆற்றமுடியாமற் போய்விட்டது என்பதை நினைத்தபோது சிவனடியான் வெம்பி வெம்பி அழுதார். இறுதியில் எடுத்த முடிவுதான் எவ்வளவு பயங்கரமானது. ஐயங்கனின் வேதனைகளை ஒரேயடியாகத் தீர்க்க ஒரேயொரு மருத்துவம்! எந்தத் தந்தையும் கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத தீர்வு. கண்களில் நீர் வழிந்தோடச் சிவனடியான் அந்த மாலை முழுவதும் மூலிகைகளை அரைத்தார். இறுதியில் ஐயங்கன் ஆசையோடு வளர்த்த ஆட்டின் பாலுடன் அரைத்த மருந்தைக் கலந்து மகனுக்கு ஊட்டியபோது நடப்பது என்னவென்று முன்னமே அறிந்துகொண்டவன்போன்று ஐயங்கன் தன் தகப்பனை நன்றியுடன் பார்த்தான். அவன் கண்கள் ஒரேயடியாக இடுக்குகளில் சொருகிக் கொண்டபோதுதான் தன் மகனின் வேதனைகளுக்கு இறுதியில் முடிவு வந்துவிட்டதெனச் சிவனடியான் அறிந்துகோண்டார். அப்போது அவர் எழுப்பிய ஓலம்தான் அந்த ஊரையே உலுக்கியெடுத்தது.

“என்ரை மோனை....!” மீண்டும் அதே ஓலம். இம்முறை அது பாத்தியடி வைரவர் கோயில் வாசலிலிருந்து எழுந்தது. அது முன்னையதிலும் பார்க்க ஓங்காரமாய்ப் பிரவாகித்து விடிந்துகொண்டிருந்த வேளையில் சுருண்டபடி உறங்கிக்கிடக்கும் ஊரை அடித்தெழுப்புவதுபோல் எழுந்தது. ஆனால் இப்போது எவரும் அதைக் கேட்டு அலறி எழும்பவில்லை. தூக்கத்திலிருந்து அப்போதுதான் விழித்துக்கொண்ட ஓரிருவர் மட்டும் தமக்குள் சொல்லிக்கொண்டனர். “மகன் செத்ததோடை சிவனடியானுக்கு விசர் வந்திட்டுது.”
---

No comments:

Post a Comment