Oct 2, 2013

அரசடி வைரவர்


வைரவரே
தெருவெல்லாம் நீ
குந்தியிராவிட்டால்
பக்தி மார்க்கம் பற்றிப்
பறையடிப்பது யார்?

ஏழையின் வயிறும்
உன் உண்டியலும்
ஒருகாலும் நிறைந்ததில்லை.

நீயொரு
பச்சைத்தண்ணிச் சாமி!
உன் கோயிலுக்குப்
புறச் சுவர் இல்லையென்று
புறுபுறுத்திருப்பாயா,
கோபுரம் கட்டவில்லையெனக்
கோபித்திருப்பாயா?

உனக்குத்
தேங்காய் அடிக்கும் கல்லையும்
யாரோ
திருடிச்சென்று விட்டார்கள்.

மார்கழி மழையை விட்டால்
அபிஷேகம் என்பது உன்
அகராதியில் கிடையாது.

உன் சிந்தனையெல்லாம்
உன் கழுத்தில்
வருடத்துக்கொருமுறை விழும்
வடைமாலையின் மீதுதானா?

உன்
திண்ணையில் ஏறித்
துதித்தவர்களும் உண்டு,
தூங்கியவர்களும் உண்டு.
எல்லாரையும் ஒன்றாய் மதிக்கும்
பொதுவுடமைவாதி நீ!

யார்மீது கொண்ட
ஆத்திரத்தால் எப்போதும்
அம்மணமாய் இருக்கிறாய்?

புத்தருக்கும் உனக்கும்
அரச மரத்தை விட்டால்
ஒதுங்க இடமில்லையோ?

புத்தர்
போதனைகளைப் பரப்பிப்
பிழைப்பு நடத்துகிறார்
நீயோ
போதனைகள் இல்லாததால்
பிச்சைக்காரனாய்ப் போனாய்.

நீ
சூலமாய் இருந்துகொண்டு
சீவகாருண்யம் பேசுகிறாய்.
புத்தரோ
சீவகாருண்யம் பேசிச்
சூலமாய் மாறிக்கொண்டார்.

உன்முன்னால்
பிண ஊர்வலங்கள்
அமைதியாய்ப் போகின்றன
அரசியல் ஊர்வலங்கள்
ஆர்ப்பாட்டம் செய்கின்றன.

தமிழனின் துயரமும்
உன் தரித்திரமும்
ஒருபோதும்
தீரப்போவதில்லை!

உன் திண்ணையில்
பள்ளிக்கூடப் பிள்ளைகள்
பரீட்சை நாட்களில்
கற்பூரம் எரித்த
காலமும் போய்விட்டது.

பணம் வந்து
படலை வாசலில்
பெல் அடிக்கிறது
பக்தி
கண்டாயத்துக்குள்ளால்
காணாமல் போய்விட்டது.

தேசம் முன்னேறுகிறதாம்
தெருக்களைப் பெருப்பிக்கிறார்கள்
புல்டோசர் வருகிறது
பேசாமல் இருக்கிறாயே!
---------

No comments:

Post a Comment