Oct 3, 2013


தட்டி வான்


இதைத்
தட்டி வான் என்பார்கள்
நானோ
ஏழை உழைப்பாளிகளின்
இடர் துடைக்க வந்த
இந்திர விமானமென்பேன்.

பஹூம்! பஹூம்!
இதோ
தட்டி வான் ஹோர்ன் அடித்துத்
தூள் பறக்க வருகிறது.

வாசல் படியில்
கட்டிய சாரம் அவிழ்ந்துவிழக்
கூவுகிறான் கொண்டக்டர்!

நெல்லியடி-கொடியாமம்!
உடுப்பிட்டி-யாப்பாணம்!
ஐச்சுவேலி-தெல்லிப்பழை!
மானிப்பாய்-சங்கானை!
தட்டி வான்
தடம் பதிக்காத
தெரு இங்கே
எதுவுமில்லை.

வாவென்று கேட்டால்
கிளிநொச்சிக்குக் கூடக்
கதறக் கதற ஒடும்
என்றுமே சாகாத
இயம வாகனம்!

இருபதுபேர் மட்டும்
இருக்கக்கூடிய இருக்கைகளில்
இருநூறு பேரை
ஏற்றிக் காட்டுவான்
கொண்டக்டர்
கோதாரியிலைபோவான்.

நாலு பக்கமும் வாசலுள்ள
வாகனங்களுள் போட்டியென்றால்
தட்டி வான்தான்
முதல் பரிசைத்
தட்டிக்கொண்டு போகும்.

திருமண வீட்டுக்குத்
தாலியை மறந்தாலும்
தட்டி வானை
மறந்திருப்போமா?

மழையையும் வெயிலையும்
உள்ளிருந்தே அனுபவிக்க
எவர் விடுவார்
இப்படியோர்
ஆனந்த வாகனம்?

நாலுபேர் வந்து
தள்ளினால் மட்டுமே
துள்ளிப் புறப்படும்
தேசிய வாகனம் நீ!.

என்றாலும் உனக்கு
என்றென்றும் நன்றி.

நீ
சாமானிய தமிழனின்
சில்லறைகளை நம்பிச்
சவாரி செய்தவனல்லவா?

எங்கள் தெருக்களில் நீ
ஒடித் திரிந்ததால்தான்
யாழ்ப்பாணம் அன்று
வாழ்ப்பாணம் ஆகியது
இல்லையேல்
என்றோ அது
கூழ்ப்பானை யாயிருக்கும்.

ஐம்பது ஆண்டுகள்
அலற அலற
ஓடித் திரிந்தும்
உன் உடம்பு
ஒருபோதும்
ஒரேயடியாய் வீழ்ந்ததில்லை.

உன்னைப் படைத்த
அமெரிக்க கம்பெனியையே
பிரமிக்க வைத்த
புஷ்பக விமானமல்லவா நீ!

வெட்ட வெட்டத் தளைக்கும்
வாழைகூட
ஒரு நாள்
வாடி விழுந்துவிடும் – நீயோ
வருடங்கள் பல கடந்தும்
இளமையாய் இருந்து
கிழடுகளைக் காதலித்தாய்.

பொலிசுக்கு டிமிக்கி கொடுப்பதில்
பட்டம் எடுத்தவனே
பெட்றோல் இல்லாத காலத்திலும்
புதுமைகள் செய்தவன் நீ!

கல்போடா மண்போடாப்
பாதைகளிலும்
புகுந்து புறப்பட்டவனல்லவா?

நீ ஓடாது போயிருந்தால்

சுன்னாகத்து மாம்பழங்களைச்
சுமந்து வருவது யார்?

செம்பியன்பற்றுச் சுறா மீனைச்
சுவைபார்த் திருப்போமா?

கொடிகாமத்துத் தேங்காய் இன்றிக்
கோயில் தேர் நகர்ந்திருக்குமா?

நீர்வேலி வாழைக்குலைக்கு
யார் இங்கே வண்டில் விட்டார்?

கரணவாய்ப் புகையிலை
கனவாய்த்தான் போயிருக்கும்!

தீவகத்துக் தலங்களுக்குத்
தீர்த்த யாத்திரை போயிருப்போமா?

கீரிமலைக் கடற்கரையில்
கள்ளுக்கு முன்னேயும் பின்னேயும்
கிரியைகள் செய்திருப்போமா?

வல்லிபுரக் கோயிலின்
தளிசைக்காரிகளுக்கு
துணைபோவது யாராம்?

செல்வச் சந்நிதிக்குக்
கடலைக்காரி முதல்
கரகம் காவடி வரை
கொண்டுபோய்ச் சேர்த்தவர்
யாரென்று கேட்கிறேன்.

தாராள மனமுள்ள
தட்டி வானே
உன்
துயரையும் நானறிவேன்.

மெட்டி அணிந்த மங்கையர்
உன் பலகைத்
தட்டில் ஏறியதில்லை.
சேலை உடுத்தியவர்கள் உன்னைச்
சேர நினைப்பதில்லை.
டியூட்டரிக் குமரிகள் உன்னைத்
திரும்பியும் பார்ப்பதில்லை

குறுக்குக் கட்டிய பெண்களும்
கடகம் தூக்கிய கிழவிகளுமே
உன் கைபிடித்த
ஐஸ்வர்ய ராய்கள்!

துயரப்படாதே தட்டி வானே,
தமிழனின்
மூச்சிருக்கும் வரை
உன்னைப் பற்றிப்
பேச்சிருக்கும்!
0-0-0-0-0-0

தமிழகத்து நண்பர்களுக்கு: இப்படத்திலுள்ள வேன் இலங்கையில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குமுன் இறக்குமதிசெய்யப்பட்டதாக அறியப்படுகிறது. இன்று இது பெரும்பாலும் அருகிவிட்டபோதிலும் ஓரிரு வேன்களாவது யாழ்ப்பாணத்தில் தற்சமயம் பொதுமக்களின் போக்குவரத்துக்காகப் பயன்படுகின்றனவென நம்புகிறேன். மற்றப் பிரதேசங்களில் இது எப்போதோ மாண்டிருக்கவேண்டும். இது யாழ்ப்பாண மக்களின் அன்புக்கும் அபிமானத்துக்கும் சிலவேளை வெறுப்புக்கும் பாத்திரமானதோர் வாகனம். இத்தனியார் வாகனம் தனது பின்பகுதியிலும் பக்கவாட்டிலும் தட்டி (தடுப்பு) போன்றே தோன்றுவதாலும் அதைக் கட்டுவதற்கு வேண்டிய குறுக்குத் தடிகளுடன் இணைந்திருப்பதாலும் மக்களிடம் தட்டி வான் என்ற செல்லப்பெயரை எடுத்திருக்கவேண்டும்.

---------------

3 comments:

  1. இந்த வான்கள் IIம் உலகப்போர் முடிந்தவுடன் இலங்கை இராணுவத்துக்காக இறக்குமதி செய்யப்பட்டவை. அநேகமான வான்களுக்கு MW என்னும் இலக்கமே முன்னர் (MilitaryWgon) இருந்தன. திருகோணமலைபோன்ற இராணுவத்தளங்களிலிருந்து காலத்துக்கு காலம் ஏலத்தில் விடப்பட்ட வாகனங்களை யாழ்ப்பாணத்தவர் கொள்முதல் செய்தனர். அதன் பின் அவற்றுக்கு CE,CL,CN,CV போன்ற இலக்கவரிசைகளையும் பெறக்கூடியதாக இருந்தன.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. அன்பர்/வாசகர் Garunyan Konfuzius அவர்களுக்கு நன்றி. நீங்கள் இங்கே தந்துள்ள தகவலைப் பலர் அறிந்திருக்கவில்லையெனவே நம்புகிறேன். இந்த வேன்களின் லைசென்ஸ் இலக்கத் தகடுகள் MW என்ற எழுத்துடன் காணப்பட்டதை நானும் நினைவு கூருகிறேன். அக்காலத்தில் கார் வண்டிகளுக்குப் பயன்படுத்திய ஏனைய எழுத்துகளையும் இவை பயன்படுத்த ஆரம்பித்திருக்கலாம்.

      உங்கள் தகவல் மிக நல்ல பயனுள்ளது. மிக்க நன்றி. அடிக்கடி இப்பக்கத்துக்கு வருகைதரவேண்டுமெனவும் அழைக்கிறேன்.

      Delete