Nov 23, 2012

என் தங்கை



ங்கையென்றால் எனக்குத்
தாளாத அன்பு கேளீர்!
தம்பிமார் தோள்களென்றால்
தங்கைமார் துணிவு அன்றோ!

என்தங்கை என்னைப் போல்
இருப்பாளென் றெண்ணாதீர்
அம்மாவைப் போல் மிகவும்
அழகாகத் தானிருப்பாள்.

அம்மா தன் அழகையெல்லாம்
அவளுக்கே எழுதிவைத்து
நாளெல்லாம் மிளகாய் சுற்றி
நாவூறு தீர்த்து வைப்பாள்.

கண்ணுக்கு மை வேண்டாம்
கழுத்துக்கு நகையும் வேண்டாம்.
காதிலுள்ள குச்சுவொன்றே
காணும் இவள் அழகுக்கு.

கோயில் மதிலிடுக்கில்
குடியிருக்கும் வெள்ளைப் புறா.
குத்து விளக்கின் மேல்
குவிந்திருக்கும் செம்பருத்தி.

தையல் பெட்டிக்குள்
தினமிருக்கும் நெல்லிக் காய்
பாடப் புத்தகத்துள்
புன்னகைக்கும் மயில் இறகு.

தேனில் குழைத் தெடுத்தும்
திகட்டாத தெம்மாங்கு
வானை விட்டிறங்கி
வளைய வரும் வெண்ணிலவு.

அள்ளி முடித்த கூந்தலில்
அரங்கேறும் கனகாம்பரம்
கதிரவனை வரவேற்கக்
காத்திருக்கும் மாக் கோலம்.

வளையல்கள் ஒதுங்கி நின்று
வாய்விட்டு நகையெழுப்பும்
விரல் யாவும் மருதாணி
விருந்தாடித் திளைத்திருக்கும்.

பாவாடை தாவணியில்
பவனி வரும் மகாராணி
செல்லும் இடமெல்லாம்
சிம்மாசனம் சேர்ந்து வரும்.

அப்பாவின் அதி காரமெல்லாம்
அலுவலகத்தோடு மட்டும்
அம்மாவின் அரசாட்சி
அடுக்களையோடு நின்று விடும்.

என்தங்கை ராச்சியமோ
ஊரெல்லாம் தூள் பறக்கும்
கோயிலுக்குப் போக வர
கொடிபிடித்து முன் செல்வேன்.

நண்பர்கள் வந்து கேட்டால்
நம்பும்படி பொய்கள் சொல்வாள்.
கவலைக்கு மருந்து கேட்டால்
காதலிக்குத் தூதுபோவாள்

தலையிடி வந்தால் போதும்
தலைமாட்டில் இருப்பாள் தானாய்
காய்ச்சலில் விழுந்தாலோ என்
காலடியில் கண் துயில்வாள்.

ஆசிரியனாய் நின்றென்னை
அதட்டவும் செய்வாள் நாளும்
அன்புடைத் தோழியுமாய்
ஆறுதலும் தருவாளன்றோ!

பாட்டொன்று பாடு என்றால்
பாரதியை முதலழைப்பாள்
கண்ணன்மேல் உள்ளகாதல்
கண்களில் கனவாய் மிதக்கும்.

கொஞ்சும் குரலினிமை
கொள்ளைகொள்ளும் சொல்லினிமை.
பண்ணின் பொருளினிமை
பாவையிவள் பண் இனிமை.

காற்றினிலே வரும் கீதம்
கனிந்துருகப் பாடுகையில்
கண்களில் நீர் வடியக்
காலடியில் நானிருப்பேன்.

காலையில் போனால் நேரம்
கடந்துதான் வருவேன் வாசல்
கதவடி தேய்ந்து போகும்
கால்களும் சோர்ந்து நோகும்

கண்களில் நீரைத் தேக்கிக்
காத்திருப்பாளென் செல்லம்.

ஆயிரம் பெயர்கள் சொல்லி
அழைத்திடு வேனெனினும் அவளின்
“அண்ணா!” எனும்சொல்லில் மட்டும்
அகிலமே அடங்குமம்மா!

அன்றோருநாள் என்னை
அநாதையாய் விட்டு ஏகித்
தனக்கொரு துணையைத் தேடி
தனியளாய்ப் போனாள், அம்மா!

என்முன் துயிலெழுந்து
எனை எழுப்புவாளே அன்று
மறந்துதான் போனாளோ
மல்லிகையால் எனை வருட.

காலையில் அவளைத் தேடிக்
கண்டது கடிதமொன்றே
“காதலனுடன் கூடிச்செல்கிறேன்
கவலை கொள்ளாதே, அண்ணா”.

எனக்கென்றே அன்புகாட்டும்
உறவென்று நம்பி வந்தேன்
தங்கையின் காதல் உள்ளம்
தெரியாத குருடனானேன்.

தங்கையே உனைப் பிரிந்து
தனியனாய்ப் போகேன் தாயே
என்தலை எழுத் திதென்றால்
எழுதியவனையே கொல்வேன்.

கால்விரலில் கல்லிடித்து
குருதி சொட்டுக் கசிந்ததற்கு
அம்மாவிடம் ஓடிப் போய்
அழுதழுது சொன்னாயே!

பற்களொன்றும் முளைக்காத
பருவத்தில் நானுனக்கு
சப்பிக் தந்த கச்சானை
எச்சிலென்றும் பாராமல்
எத்தனைமுறை தின்றிருப்பாய்!

பெரியபிள்ளை யானபோது
பெற்றோரை வணங்கும் முன்னால்
வந்தென் பாதம்தொட்டு
வணங்கியதை ஏன் மறந்தாய்?

கண்ணுக் கினியவனைக்
கண்டறிந்தேன் என்ற சொல்லைப்
பாட்டாலும் பொருளாலும்
பலமுறை நீ சொன்னதெல்லாம்
பயனறியத் தெரியாத
பேயனாய்ப் போனேன் அம்மா!

ஆழ்கடலில் முத்து
உறங்குவதா லென்ன பயன்
அணங்குகளின் கழுத்தை
அலங்கரித்தா லன்றோ புகழ்.

கானகத்தில் சந்தனம்
கரந்துறைந்தா லென்ன பயன்
செங்கமல மேனியாளைச்
சேர்வதன்றோ சிறந்த புகழ்.

கன்னியரை வீட்டில்
காத்து வைத்தல் அழகாமோ
காதலனின் கைபிடிக்கக்
கடை திறத்தல்தான் அழகு!

தங்கையே உயிரே உன்னைத்
தாயாகக் கொண்டேனம்மா
அன்பையே தந்து என்னை
ஆட்கொண்டு விட்டாயம்மா!

இயமன் என் உயிரைத்தேடி
ஏமாந்து போவான் காண்பீர்!
என்னுயிர் என் தங்கையிடம்
இருப்பதை அறிந்திடாமல்.


No comments:

Post a Comment