Nov 10, 2012

இதற்குமேல் என்ன வேண்டும்




குடியிருக்கக் குடிசை
குந்தவொரு திண்ணை
படுத்துறங்கப் பாய்
படித்தறிய நூல்கள்

பாசத்துக்கொரு பெற்றார்
ஆசைக்கொரு மனைவி
அன்புக்கொரு பிள்ளை
ஆத்திக்கொரு பெண்

கிடைக்கும் வரை உழைப்பு
கையில் கிடைத்ததே பிழைப்பு
கிடைத்தால் உலையில் அரிசி
கிடைக்காவிடில் கிணற்றுத் தண்ணீர்

கூடிவாழக் கிராமம்
கிராமம் நடுவில் கோயில்
கோயில் வீதியில் அரசு
அரசு நிழலில் அரட்டை.
பழகித் திரிய நண்பர்
பேசி மதிக்க ஆசான்
பாடித் திளைக்கப் பெண்டிர்
பார்த்து ரசிக்கச் சிறுவர்.

நனைந்து மகிழச் சாரல்
நினைந்து மகிழ இளமை
பகிர்ந்து மகிழ முதுமை
பாடி மகிழப் பஜனை.

சிந்தை குளிரப் பாடல்
சேர்ந்து மகிழ ஆடல்
பகிடி சொல்லப் பெண்கள்
பாதை நெடுகத் தென்றல்.

இந்த நாளே நிச்சயம்
எது வரினும் துச்சம்
அறிவு காட்டும் பாதை
ஆற்றலே எனது கீதை.

காதலில் காண்பது சொர்க்கம்
கனிவால் உணர்வது கடவுள்
சாதலே இறுதியில் உண்மை
கனவினில் வாழேன் திண்மை.

பொறுமைதான் எனது கோயில்
பொய்மையே அகலாப் பேய்கள்
சாதியம் அழிந்தது பரணில்
சமத்துவம் அமர்ந்தது அரணில்.

மானிடம் போற்றுதல் மேன்மை
மனிதவுயிரே என்றும் அருமை
வானமே எமது எல்லை
வாராதுகாண் என்றும் தொல்லை.

மரங்களும் உயிர்களும் சேர்
மனிதர்கள் அனைவரும் நேர்
தமிழ்மொழி அறிவே வேர்
பலமொழி அறிவே நீர்!


1985

No comments:

Post a Comment