Nov 10, 2012

எனைப் பிரிந்து சென்றவளே




கனவினில் கரைந்தது இளமை
வாழ்வின்
கடைசியில் தெரிவதே உண்மை
இதழ்களால் செய்ததோர் யுத்தம்
இதுதான்
என்றுமே மாறாத பந்தம்.

இன்றும் எனை நீ விரும்புகின்றாயா - உன்
இதயத்தில் எனக்கொரு இடம் தருவாயா - உன்
கண்களால் என்னைச் சிறை பிடிப்பாயா - என்
கன்னத்தில் முத்தங்கள் கடன் தருவாயா?

மணமாலை சூடியபின்தான்
தொடவிடுவேன் என்றாய்
மனங்களால் புணர்ந்ததை
எதிலே சேர்த்தாய்?

தூர இருப்பதால்
துயரம் கொண்டாயோ
தென்றலைத் தூதிடத்
தெரிந்து கொள்ளாயோ!

ஏழை மனமென எண்ணிச் சென்றாயோ
இதய மலரை வாடச் சொன்னாயோ
எத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன்-உன்
இனிய முத்தத்துக்காய் ஏங்கி நின்றேன்

எங்கு இருக்கிறாயென
ஒருசொல் எழுதும் - என்
இறுதி மூச்சாவது
உனை வந்து தழுவும்.


கட்டிலாயிற்று கடற்கரையாயிற்று
பொட்டலாயிற்று புல்வெளியாயிற்று
எங்குமே உனது முந்தானைதான்
எனது மரகதக் கம்பளம்.
கைக்குட்டையையும் கடதாசியையும் தேடுவானேன் - உன்
முந்தானை நுனியில் எல்லாமேயுண்டு.


கரைந்தாலும் பனியாகக் கரைவேன்
விழுந்தாலும் மழையாக விழுவேன்
உதிர்ந்தாலும் பூக்களாய் உதிர்வேன்
எரிந்தாலும் விளக்காக எரிவேன்
தேய்ந்தாலும் பிறையாகத் தேய்வேன்
நிறைந்தாலும் எல்லையொடு நிறைவேன்
மறைந்தாலும் முகிலாக மறைவேன்
மறந்தாலும் பொய்மையையே மறப்பேன்
குறைந்தாலும் மணல்நீராய்க் குறைவேன்
இரந்தாலும் அன்பையே இரப்பேன்
இறந்தாலுமுன் நினைவோடு இறப்பேன்!





1 comment:

  1. வணக்கம் !!! என்னை எங்கோ கொண்டு சென்றுவிட்டீர்கள் கவிஞரே!!

    (கலைசெல்வன்)

    ReplyDelete