Jan 29, 2013

யுத்த காண்டம்



அவன் எப்போதுமே

நெருப்பாய் இருப்பான்
நான் நீராய் இருப்பதால்
அவனை அணைக்க முடிகிறது.

என்னிடம் நீரின் இருப்பு
ஆவியாகும்போது மட்டும்
அவனுடன் சேர்ந்து
எரிந்துபோகிறேன்.

எரிந்து போவதற்கு
எவ்வளவு
அழகான வழி!

இளமை
இளமையிடம் தோற்றுப்போவதிலும் ஒரு
இனிமை இருக்கிறது!

பெண்
தான் விரும்பியவினிடம்
தோற்றுப்போவதில் திருப்தியடைகிறாள்;
துயிலுரியப்படுவதில்
தென்றலை அனுபவிக்கிறாள்!

அதனாலே இது
முடிவடையாத யுத்தம்.
தோற்றவர்களிடம்தான்
வெற்றிக்கொடி தரப்படும்
விநோதமான யுத்தம்!

அவன் அரசனாகத்தான்
ஆட்சி செய்கிறான்
ஆனால்
அதிகாரம் என்னவோ
இவளிடம்தான் இருக்கிறது.

மன்னவனே!
உன்னிடம் மண்டியிடுபவர்களை
மறந்துவிடு
மண்டியிடு என் முன்னே!

இதோ
செங்களுநீர்ப் பூக்கள் மிதக்கும் வாவி
கரை புரண்டு வழிகிறது.
மூழ்கு
மூழ்கி எழுந்தபின்
என் மார்பில்
முகம் துடை
சோர்ந்த உன் கைகளால்
என் உடல் தழுவு
உன் மூச்சுக் காற்றால்
என் மேனியை உலர்த்து.

உறங்கு
என் பிள்ளைபோல்
மடியில் உறங்கு
விடியும்வரை உறங்கு!

நாளை மறுபடியும்
போருக்குத் தயாராவாய்.
எனினும்
இவளைப் புரிந்துகொண்டால் மட்டும்
இந்தப் போர்க்களத்தில்
உனக்கு இடமுண்டு.

இவள் நெஞ்சு
அடைக்கலம் கேட்டவனுக்கு
அரண்மனை!
அனுபவிக்க வந்தவனுக்கு
ஆயுள் தண்டனை!

சட்டங்களையும் சம்பிரதாயங்களையும்
சாட்சிக்கழைக்காதே
பெண்ணைப்
போதைப் பொட்டலாமாய்ப் பார்க்காதே
இவள் புணர்ச்சி யந்திரமல்ல,
பாரிஜாத மலர்!

தெரிந்துகொள்!
மாசற்றவள்
மனதாலும் பொசுக்குவாள்!

No comments:

Post a Comment