Jan 16, 2013

இறைவன் என்பவன்



எங்கிருந்தோ உன்னை நினைக்கின்றேன்
எங்கிருந்தோ உன்னை அழைக்கின்றேன்
எங்கிருந்தோ என்னை உருக்(கு)கின்றாய்!

உன்னை நினைப்பதைத் தவிர வேறொன்றையுமறியேன்
உன்னை நினைப்பதல்லால் என் வேண்டல்கள் வேறில்லை!

கந்தனாய் கண்ணனாய் கணபதியாய் கலைமகளாய்
சக்தியாய் சதாசிவனாய் புத்தனாய் யேசுவாய்
நாயகமாம் நபிகளாய் நின் நாமங்கள் எத்தனை!

தாயாய் தந்தையாய் பிள்ளையாய் உடன்பிறப்பாய்
தாரமாய் துணைவனாய் உன் அவதாரங்கள் எத்தனை!

இசையாய் ஓவியமாய் பண்ணாய் பாவமாய்
நடிப்பாய் நடனமாய் உன் நளினங்கள் எத்தனை!

கருணையாய் காதலாய் பண்பாய் பாசமாய்
நட்பாய் நேசமாய் உன் நயங்கள் எத்தனை!

இதயமாய் எண்ணமாய் உணர்வாய் கனிவாய்
பக்தியாய் பரவசமாய் உன் பண்புகள் எத்தனை!

மேகமாய் முகில்களாய் மின்னலாய் முழக்கமாய்
மாரியாய் வெள்ளமாய் உன் மகிமைகள் எத்தனை!

ஒலியாய் அமைதியாய் ஊமையாய் ஓங்காரமாய்
இருளாய் ஒளியாய் உன் ஒப்பனைகள் எத்தனை!

அன்பாய் அறிவாய் அருளாய் அருஞ்சுவையாய்
அறமாய் ஆதரவாய் உன் ஆற்றல்கள் எத்தனை!

நீராய் நெருப்பாய் பனியாய் பூம்பொழிலாய்
காற்றாய் காலங்களாய் உன் கோலங்கள் எத்தனை!

மண்ணாய் மரங்களாய் செடிகளாய் கொடிகளாய்
மலர்களாய் மணங்களாய் உன் மாண்புகள் எத்தனை!

நீதியாய் நியாயமாய் நாடாய் நன்மக்களாய்
தியாகமாய் தர்மமாய் உன் தற்பரங்கள் எத்தனை!

கனிகளாய் சுவைகளாய் கன்னியாய் கற்பாய்
அழகாய் இளைஞனாய் உன் ஆரங்கள் எத்தனை!

பெண்ணாய் புணர்ச்சியாய் போதையாய் பகுத்தறிவாய்
ஆண்மையாய் ஆற்றலாய் உன் அற்புதங்கள் எத்தனை!

தெம்மாங்காய் தாலாட்டாய் மழலையாய் கொஞ்சலாய்
கும்மியாய் குரவையாய் உன் குரல்கள் எத்தனை!

No comments:

Post a Comment