Jan 11, 2013

மரங்களை நேசிப்போம்!



போன தடவை
மரங்களைப் பாடாமல்
மாண்டு போனதால்
தேவர்கள் என்னைத்
திருப்பி அனுப்பிவிட்டார்கள்!

000

றைவன்
தனக்காகக் கட்டிய கோயில்களே
மரங்கள்.

இயற்கை
வரைந்து பழகிய ஓவியங்களையே
இறைவன் தன்
கோயில்களாக்கிக் கொண்டான்.

000

வீதியோரத்து விளம்பரங்களில்
மரங்களே நீங்கள்தான்
மிக அழகானவை.

பழைய பொருட்களை நேசிக்கிறவர்கள்
மரங்களை மட்டும் ஏனோ
மறந்துவிடுகிறார்கள்.

000

ரங்கள் -
காற்றைப் பக்கவாத்தியமாக்கி
இசைப்பதுதான் ஒரு நாட்டின்
முதலாவது தேசிய கீதம்.

புயல் வீசும்போதெல்லாம்
பூக்களையும் இலைகளையும் உதிர்த்து
நிறுத்தென்று வேண்டி
இயற்கைக்கு அர்ச்சனை செய்யும்.

மரங்கள்தான் மனிதனின் சார்பில்
இறைவனிடம் தூது போகின்றன
மரங்களை வெட்டியதற்கு
மன்னிப்புக் கேட்டு.

இயற்கையின் அனர்த்தங்களிலிருந்து
மரங்களைக் காத்த இறைவன்
அவற்றை
மனிதர்களிடமிருந்து காப்பாற்ற
மறந்துபோனான்.

உலகத்தில் எல்லா அதிசயங்களுள்
மரங்களே தம்மைத்தாம்
பராமரித்துக்கொள்ளும்.

000

ரத்தை வெட்டி விழுத்திவிட்டு
மரமிருந்த வீதிக்கு அந்த
மரத்தின் பெயரைச் சூட்டுகிறார்கள்
மடையர்கள்.

மாம்பழத்தைத் தின்ற
மனிதனைப் பார்த்து மரம் சொன்னது
என்னை வெட்ட விரும்பாததுபோல்
ஏனைய மரங்களையும் வெட்டாதே, மனிதா!

மனிதா, எப்போ
கடைசி மரத்தையும் நீ அழிக்கிறாயோ
அன்றே நீயும் அழிந்துபோகிறாய்!

000

ங்கள் மடிதான்
அகதிகள் அரசாங்கத்தின்
அத்தாணி மண்டபங்கள்
அங்கமிழந்த குமரிகளின்
அந்தப் புரங்கள்
அழும் குழந்தைகள் தூங்கும்
அசையாத தூளிகள்.

ஆலமரங்களே,
உங்கள் கிளைகளில் தொங்குவன
விழுதுகள் மட்டுமல்ல
வாழ்விழந்த பெண்களும்தான்.

அன்று சங்கமித்தை
ஒரு கிளைதானே கொண்டுவந்தாள்
இன்று இலங்கை முழுவதும்
போதி மரங்கள்
பூத்துச் சொரிகின்றன.
பௌத்தம்தான் பட்டுப்போய்விட்டது!

000

ன்று நீ நடும்
ஒவ்வொரு மரத்துக்கும்
உன் சந்ததி உனக்கு
நன்றி சொல்லும்!

நீ நடும் ஒவ்வொரு மரத்தின் கீழும்
உட்காருவாய் என்பது நிச்சயமில்லை – ஆனால்
உன் வாழ்க்கையின் அர்த்தமே அதுதான்.

நாளை நீ இறப்பாயானால்
இன்று செய்யவேண்டியது
ஒரு மரத்தை நடுவதே!

எல்லாருக்கும் பயனுள்ளவனாக நீ
இருக்கவேண்டுமென நினைத்தால்
அடுத்த பிறப்பில்
மரமாகப் பிறந்துவிடு.

000

ரங்கள் தம்
மலர்களைக் காட்டுவது தம்
மகிழ்ச்சியைக் காட்டவே!

ஒவ்வொரு முறையும் நான்
மரத்தின் நிழலை நாடும்போது
மரம் சொல்கிறது
என் அழகைப் பார்க்காதே
என் கீழேயுள்ள வேர்களைப் பார்
அழுக்காய் இருப்பவைதான்
அழகை ஏந்துகின்றன.

மரங்களுக்கு
நீண்ட ஆயுள் இருப்பதன் ரகசியம்
அவை எப்போதும்
யோகத்தில் இருப்பதினால்தான்!

நினைவிற் கொள்
மரத்தின் கீழ்
வீணாக்கிய நேரம்
நன்றாகவே வீணாக்கப்பட்டது.

000

No comments:

Post a Comment