Jan 4, 2013

புதுக் கணக்கு


கொஞ்சம் சிரிப்பு
கொஞ்சம் கனிவு
இவை போதும்!
உங்கள் புதிய ஆண்டு இனிப்
பூத்துக் குலுங்கும்!

இன்றைய தினத்தின் வெற்றி
இருபது நிமிட உடற்பயிற்சியில்
ஆரம்பிக்கிறது!

பெரிதாகக் கனவு காண்
சிறிதாகத் துவங்கு!

எந்த வேலையிலும்
இனிமை இருக்கிறது
கண்டுபிடிக்கும் வரைதான் வேலை
கண்டுபிடித்ததும்
வழியெல்லாம் சோலை.

சில வேளைகளில்
உன் உழைப்புத் திறன்
ஓய்வில்தான் தங்கியுள்ளது.

உன் வேலையை ஒருவர்
பறிக்கப் பார்க்கிறார்.
அவரேன் நீயாக இருக்கக்கூடாது?

O

வ்வொரு நாளும்
ஒரு பத்துப் புதியவர்களைப்
புன்னகையால் மகிழ்விப்பாய்
ஆசீர்வாதம் என்பது
காற்றிலும் கலந்து வரும்.

புன்னகை ஒன்றுதான்
நிச்சயமாய்
வட்டியோடு திரும்பிவரும்
முதலீடு.

புன்னகையே
காதலுக்குப் போடும்
பிள்ளையார் சுழி.

சிரிக்கத் தெரிந்தவனுக்கும்
வைத்தியர் வீட்டுக்கும்
வெகு தூரம்.

நகைச்சுவை மட்டும்தான்
சாப்பாட்டுக்கு முன்பும்
சாப்பாட்டுக்கு பின்பும்
எடுக்கக்கூடிய ஒரே மருந்து.
மூன்று முறை மட்டுமல்ல
முன்னூறு முறையும்!

மழலைகளின் முகத்திலும்
முதியவர்களின் முகத்திலும்
புன்னகையைக் கண்டிருப்பாய்
இவர்கள் -
கடவுளுக்குக் கிட்டே இருப்பதால்
கவலை இல்லாதவர்கள்!

O

டவுளை மறந்தாயோ இல்லையோ
கடன் தந்தவனை மறவாதே.

மன்னித்தவர்களின் பெயரை
மனதில் வைத்திரு
மன்னிக்க வேண்டியவர்களை
மறந்து போய்விடு.

பிறக்கும்போது
பசியால் அழுகிறோம்
இறக்கும்போது
பசி தீர்ந்தும் அழுகிறோம்.

ஆசைகள் அற்றவனுக்கு
இறப்பு ஒரு இனிய விடுதலை!

கறுப்பு நிறமென்று
கலங்குகிறாய்
வெள்ளைச் சிரிப்பை
ஏன் மறந்தாய்?

தேநீர் வேளையில்
தபால்காரன் வந்தால்
ஒரு கோப்பை அவனும்
அருந்தக் கொடுங்கள்.
நாளைக்கு வருபவன்
நண்பன் மட்டுமே!

தயவுசெய்து என்ற சொல்லை
தயங்காமல் பாவியுங்கள்
நன்றி என்ற சொல் எப்போதும்
நாவில் இருக்கட்டும்.

மாதத்தில் ஒரு நாளாவது
மாமிசத்தை ஒதுக்கிவை
மிருகங்கள் உன் பெயரை
மரங்களில் செதுக்கிவைக்கும்.

ஒரு மிருகத்தின் இறைச்சியை
உண்டு மகிழ்ந்த கையால்
இன்னொரு மிருகத்தோடு விளையாட
உனக்கு உரிமை இல்லை!

மனிதர்களைக் கொன்றவனை
மிருகம் என்கிறாய்
மிருகங்களைப் பழிக்காதே!

மனிதன் ஒவ்வொருவனும்
காந்தியாகத்தான் பிறக்கிறான்
குணத்தாலும் கொள்கையாலும்
கோட்சேயாக இறக்கிறான்.

O

ளமைக்கு
வயதெல்லை கிடையாது
எண்பதுக்குப் பிறகு கொஞ்சம்
ஓய்வெடுக்கக் கூடும்.

உனக்கு ஒரு பொருள் வாங்கும்போது
உன் மனைவிக்கு இரண்டு பொருள் வாங்கு
தாம்பத்தியம் நிச்சயம் தப்பிப் பிழைக்கும்!

மனைவியோடு ஒட்டிப் படு
மிச்சமெல்லாவற்றையும்
மனைவியே பார்த்துக்கொள்வாள்.

மனைவியிடம்
மற்றப் பெண்களைப் புகழ்ந்தாயோ
தொலைந்தாய்!
மற்ற ஆண்களைப் புகழ்ந்தாலும்
தொலைந்தாய்!
அவளிடம்
அவளையே புகழ்ந்தாயோ
ஒவ்வொரு இரவும்
முதலிரவு!

No comments:

Post a Comment