Aug 20, 2012

கவிஞர் காசி ஆனந்தன் Kasi Ananthan


கவிஞர் காசி ஆனந்தன் அன்றொருகால் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் நடந்ததோர் அரசியல் கூட்டத்தில் உரையாற்ற வந்திருந்தார்.  காசி வருகிறாரென்றால் கூட்டம் தேர்த்திருவிழா போல் அலைமோதத் தொடங்கிவிடும்.  மண்டபம் உள்ளும் புறமும் நிறைந்து வழியும்.  கவிஞரின் அபிமானிகள் நேரத்தொடு தேனீக்களாகக் குவிந்துகொள்வார்கள்.


அது சிரிமா பண்டார நாயக்கா அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட கொடுமைமிக்க காலம்; சட்டமேதை கொல்வின் ஆர். டீ சில்வாவின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை* அவசரமவசரமாகத் திணிக்கத்தொடங்கிய அராஜக காலம்; தமிழ் அமைச்சர் ஒருவரும் அதற்குத் துணை நின்ற துயர் மிகுந்த காலம்.

வழக்கத்தில் கூட்டத்தில் பேசவென மேடையேறுகிறவர் “தலைவரவர்களே...” எனத் தொடங்கி அங்கு வருகை தந்தவர்களுக்குத் தன் முதல் வணக்கத்தையும் மரியாதையையும் செலுத்துவது வழக்கமல்லவா? இதோ காசி வந்து மைக் முன்னால் நிற்கிறார்.  மண்டபமும் சுற்ற வீசிய காற்றும் மக்களோடு சேர்ந்து உறைந்து போயினவோ!  அத்துணைப் பேரமைதி.  அவர் கூறப்போவதை அணுபிசகாமல் செவிமடுக்க அத்தனை நெஞ்சங்களும் சுவாசிக்க மறந்து சமைந்துபோய் நின்றன.

“சனியன்கள்”.  காசியின் குரல் பலத்த இடிமுழக்கத்தோடு தெறித்துப் பளீரென வானத்தைக் கிழிக்கும் ஒளிக்கீற்றாகி அங்கிருந்த எல்லாரையும் ஒருமுறை உலுக்கியெடுத்தது.  அடுத்த கணம் அந்த இடிமுழக்கத்தையே விழுங்குவதுபோன்று எழுந்தது மக்களின் பேரிரைச்சல்.  ஒரு பேரதிசயத்தை நேரில் கண்டு பரவசமாயினர் போன்ற உணர்வை அவர்கள் அரங்கம் அதிர வெளிப்படுத்தினர்.

வெறும் ஒரு சொல்லால் ஓராயிரம் பேரையே அப்படி உலுக்கிவைக்க முடியுமென்றால் அச்சொல்லின் பொருள் மட்டுமா, அந்தச் சொல்லின் அப்போதைய உரித்தாளி, அதைச் சொன்ன சூழல், சுட்டிக்காட்டப்பட்ட பொருள் அல்லது மனிதர், அச்சொல்லில் புதைந்து கிடந்து குபுக்கெனப் பளீரிட்டு எழும் உயிரோட்டம் எல்லாமே சொல்லுவது ஒரு சிறு சொல்லாயினும் அதைச் செப்பமாகச் சொல்வதிலல்லவா எல்லாரும் போற்றும் சொல் திறன் இருக்கிறது.

காசி ஆனந்தன் இச் சொற்றிறனின் ஏகபோக உரிமையாளர்.  இதற்கெதிராக இதுவரை எந்தவித அப்பீலோ ஆட்சேபணையோ எழுந்தது கிடையாது.
***
காசியும் நானும் அப்போது கல்வி அமைச்சில் பணியாற்றிக் கொண்டிருந்தோம்.  ஒரே விறாந்தை எங்கள் இருவரையும் இறுக்கமாகச் சேர்த்து வைத்தது.  அந்த விறாந்தையில் நான் நடை பயில்வதெல்லாம் அவரைக் காணவேயன்றி வேறொரு காரணத்தையும் கொண்டிருக்கவில்லை.

கையிலே புத்தகம், கண்களில் கனவு.  இதுதான் கந்தோர் மேசைமுன்னே காணும் காசியின் வழக்கமான தோற்றம்.

காசியை நான் அறிந்து வைத்திருந்ததிலும் பார்க்க அரசாங்கம் அறிந்து வைத்திருந்ததே அதிகம் எனப் பின்னர் தெரிந்துகொண்டேன்.  அவர் எவ்வளவுக்கெவ்வளவு சிங்களம் படிக்க மறுத்தாரோ அவ்வளவுக்கவ்வளவு அவர் அதைப் படிக்கவேண்டும் என்பது அரசாங்கத்தின் பிடிவாதமாயிருந்தது.  அவருக்குத் தெரியாமலேயே அவர் பெயரைச் சிங்களச் சோதனைகளுக்கு அனுப்பி தம் தாய்மொழிப்பற்றைப் பறைசாற்றிக்கொண்டார்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள்.

தாவீதுக்கும் கோலியாத்துக்கும் இடையே நடந்த போரில் யார் வென்றார்கள் என்பது உலகம் அறிந்த கதை.  காசி வென்ற கதையும் உலகம் அறிந்த ஒன்று.

உயிரோடு இருக்கும்போதே ஒருவரைப் புகழ்ந்துவிடவேண்டும்.  அதாகப்பட்டது, நான் உயிரோடு இருக்கும்போதெ புகழ்வேண்டிய ஒருவரைப் புகழ்ந்துவிடவேண்டும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.  அந்தவகையில், காசியைப் புகழவேண்டுமென நினைத்தவர்களெல்லாம் புகழ்ந்து தம்மையும் உயர்த்திக்கோண்டார்கள்.  இகழவந்தவர்களும் இகழ்ந்து தமக்குத்தாமே சேற்றை அழகாகப் பூசிக்கொண்டார்கள்.

காசி இன்னொரு இமயம்.  அவ்வளவுதான் சொல்வேன்.
---------------
*
பிற்குறிப்பு: இதே கூட்டத்தில் சாகா வரம்பெற்ற இன்னொரு கூற்றையும் காசி முன்மொழிந்தமை என் நினைவுக்கு வருகிறது: “சில்வாவின் சாசனம் கிழித்தெறியப்பட்டு செல்வாவின் சாசனம் (சமஷ்டி அரசியலமைப்பு) அரசேறவேண்டும்.”


No comments:

Post a Comment