Mar 5, 2016

மண்வாசனையை மறவாத ராஜாஜி

புனிதா கங்கைமகன்
November 10, 2015
மதிப்பிற்குரிய முகநூல் நண்பர் திரு ராஜாஜி ராஜகோபாலன் அவர்கள் தன் முகநூல் நண்பர்களைக் கௌரவப் படுத்துவதிலும் நட்பைத் தங்கவைத்துக் கொள்வதிலும் தனக்கென ஒரு சிறப்பு இயல்பை வைத்துக் கொள்பவர். நாசூக்காவும், நளினமாகவும் கதைகள்பேசி நட்பின் ஆழங்களைத் தன் அன்பின் அளவுகோல்களாலே வரையறை செய்தும் வாழ்பவர்.
3 சகாப்தங்களாகத் தமிழ் இலக்கியத்துள் தன்னைப் புடம் போட்டு மீட்டெடுத்திருக்கும் இவர் தன்னை ஒரு கவிஞன் என்றோ, தன்னை ஒரு எழுத்தாளன் என்றோ தனக்குத்தானே பெருமிதம் கொண்டது கிடையாது. கடந்த பல வருடங்களுக்கு மேலாக அவரது இலக்கியப் படைப்புகளைப் பலவடிவங்களில் ஆய்ந்தும், அறிந்தும், விமர்சித்தும், நுகர்ந்தும் சென்றிருக்கின்றேன். கவிதை நயமும், கருப்பொருள் செறிவும், இலக்கிய நயமும், புதிய பாணியில் அவரது படைப்புக்களில் ஆற்றல் மிக்கவைகளாக மேலோங்கி நிற்பதைக் காணலாம்.
புலம்பெயர் வாழ்வின் சலனங்களோடு தன் இருப்பைத் தொலைத்து விடாமல் தான் வாழும் நாட்டிலும் தமிழனின் சுவடுகள் ஆழமாகப் பதியம் வைக்கப்பட வேண்டும் என்பதில் ஆணித்தரமான கருத்தும் ஒருமைப்பாடும் உடையவர் என்பதனை அவரின் செயற்பாடுகள் மூலமாகவே நாம் தெரிந்து கொள்ளலாம்.
அந்தவகையில் அண்மையில் ஈழத்தில் வெளியீடு செய்யப்பட்ட அவரது "குதிரை இல்லாத ராகுமாரன்" என்ற நூல் என்கரம் கிட்டியது. வாழ்வின் அர்த்தங்களைத் தேடி ஓடும் மக்களுக்காக மகத்தானதொரு படைப்பாகவே இந்நூல் தோற்றம் பெறுகின்றது.
மன்னனும் மாசறக் கற்றோனும சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையோன்
மன்னற்குத் தன்தேச மல்லாற் சிறப்பில்லை
கற்றோற்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு
எவ்வளவு பெரிய பாராளும் அரசனாக இருந்தாலும் அவனுக்குத் தன் நாட்டில் மட்டும்தான் சிறப்பு. ஆனால் கற்றவர்களுக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பதனைப் பலவழிகளிலும் வாசகர்களுக்குப் புரிய வைத்திருப்பதுவே இந் நூலின் சிறப்பம்சமாகும்.
தாய்நாட்டு அசல் மண்வாசனைகளைத் தன்கதைகளினூடு மிகவும் துல்லியமான முறையில் உலகத் தமிழர்களின் கரங்களில் ஒப்புவித்திருப்பது சமூக மாற்றத்தில் ஆசிரியர் கொண்டுள்ள அக்கறையின் பிரதிபலிப்பாகவே தென்படுகின்றன.
இவரது சிறுகதைகள் யாவும் தாம் வாழ்ந்த அல்லது வாழும் காலத்தைச் சித்தரித்துக் காட்டும் காலத்தின் சமூகக் கண்ணாடியாகவே இதனை வாசிப்பவர்கள் கருத்தினில் கொள்வர்.
அனைத்துக் கதைகளின் பின்புலங்கள் யாவும் ஆசிரியரைப் பற்றிய ஆழமான ஆய்வை வேண்டி நிற்பதோடு மட்டும் அல்லாமல் மொழி மீதுள்ள அவரின் ஆழுமையும் புலப்படுகின்றது.
தொழில்நுட்ப இவ்வுலகில் பொருள்நுட்பம் தேடும் மக்கள் மத்தியில் மதிநுட்பம் படைத்த இந்த ஆசிரியர் தமிழின் ஆழம்வரை சென்று 100 வருடங்களுக்கு அப்பால் புழக்கத்தில் இருந்த பிரதேச மொழித் தமிழ்ச் சொற்களை வாரி எடுத்து வழியெங்கும் தூவியிருப்பது அவரின் தெளிவில் நாம் காணும் தேடலாகும்.
கதைகளைப் படிக்கின்றபோது இயல்பாகவே எழுகின்ற ஆர்வத்தின் அடிப்படையிலேயே இக் கதைகளுக்கான விமர்சனம் எழுத வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.
இவரது "குதிரை இல்லாத ராஜகுமாரன்" என்ற தொகுப்பின் அனைத்துக் கதைகளையும் நான் வாசித்திருந்தாலும் இவரது எழுத்துக்களுக்கு ஒரு ஆரோக்கியமான சிறந்த ஆய்வையோ, அறிமுகத்தையோ என்னால் கூறிவிட முடியாது. அதனால் நூல் ஆய்வுகளைச் செய்வதில் மிகவும் கைதேர்ந்தவராகிய கங்கைமகனிடமே இந்நூலை ஒப்படைக்கிறேன்.
இதுபோன்ற இன்னும் பல நூல்களை நண்பர் ராஜாஜி ராஜகோபாலன் அவர்கள் வெளியிட வேண்டும் என்பதனை என் விருப்பமாக வைத்து விடைபெறுகின்றேன். வாழ்த்துக்கள்.
அன்புடன்
புனிதா கங்கைமகன்
10.11.2015

No comments:

Post a Comment