Mar 10, 2016

ராஜாஜி ராஜகோபாலன் படைத்த சிறுகதைத் தொகுப்பு ~ ‘குதிரை இல்லாத ராஜகுமாரன்’ [2015]


- மதிப்பீடு: ‪‎புதுச்சேரி கலாவதி பசுபதி‬ (தேவமைந்தன்)

கனடாவில் வாழும் சட்டத் துறையில் பட்டம் பெற்ற ராஜாஜி ராஜகோபாலன் ஓர் ஈழத் தமிழர். முரட்டுத்தனமான ஆணாகத் தோற்றம் கொண்டுள்ள போதும், மிகுந்த மென்மையான பெண்மனத்தைச் சித்திரித்து எழுதுவதில் வல்லுநர் என்பதை இத்தொகுப்பிலுள்ள பதினைந்து சிறுகதைகளும் பறைசாற்றுகின்றன.
தமிழ்ச் சிறுகதைகளில் சமுதாயவியல் நோக்குக் கொண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் டாக்டர் தா.வே. வீராசாமி ஐயா மேற்பார்வையில் 1980-1986 காலக்கட்டத்தில் டாக்டர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களின் ஆசியருளுடனும் டாக்டர் க.த. திருநாவுக்கரசு அவர்களின் அன்புடனும் ஆய்வு மேற்கொண்டு 24-4-1986 அன்று ஆய்வேட்டைச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்த எனக்கு முனைவர் குழு எனச்சொல்லப்படும் doctoral committee -யில் வாய்த்தவர்கள் ஆணிமுத்துகள். ஒருவர் முனைவர் இரா. இளவரசு. இரண்டாமவர் முனைவர் அ.நா. பெருமாள். முதல் ஆய்வுக்குழுக் கூட்டத்திலேயே தனித்தமிழ் இயக்கத்தில் மிக நெருங்கிய நண்பராக விளங்கிய பொழுதும், டாக்டர் ச.செந்தில்நாதன்+ கலாநிதி சிவத்தம்பி தொடங்கி, தமிழ் ஆங்கிலச் சிறுகதை இலக்கண நூல்கள் நாற்பத்தாறனைக் கரைத்துக் குடித்துவிடவேண்டும் என்று நீளமானதொரு பட்டியல் தந்து ‘அன்’பாகக் கட்டளையிட்டார் முனைவர் இரா. இளவரசு. அப்படிப் “பெற்ற” சிறுகதை இலக்கண அறிவை என் சித்தத்துள் ‘அடக்க்க்க்க்க்க்க்க்கி’ வைத்துக் கொண்டு இதை எழுதுகிறேன்.
இத்தொகுப்பில் யாழ்சூழ் தமிழான ஈழத்தமிழ் என் நொய்யல் போல் நண்பர் பேனா மனோகரனின் வையைபோல் வெகு இயல்பாகக் கரைபுரண்டோடுகிறது. உடனமர்ந்து திறனாய்வு செய்த ‘சித்தாந்த ரத்னா’ திகைத்துப் போனார். அத்தகைய சொற்களை நானே புதுச்சேரித் தமிழில் விளக்கிச் சொல்ல வேண்டியிருந்தது. என் பூர்விகமான கடாரத்துடன் தொடர்பு கொண்டதுதானே ஈழமும்?
இந்தச் சட்டத்தரணி எதில் பெரிதாக வெற்றி பெறுகிறார் தெரியுமா? ‘வட்டாரத் தமிழ்’தானே என்று “சுருக்கமாக இருவரிகளில்” குழப்படி செய்யும் வறண்டமன வயிற்றெரிவுமிகு அறிவு சீவிகளை வெட்கமுறச் செய்யும் வண்ணம் தன் ஈழத்தமிழை உலகத் தமிழாக்குகிறாரே.. அதில்தான்.
உயிர்த் துடிப்புள்ள வாசகர் எவராயினும் இப்பூவுலகின் எந்த மூலையில் வாழும் ‘தமிழ் வாசிப்பு’க் கொண்டவர் எவராயினும், குறிப்பாகப் பெண் வாசகர்களும் பெண்மனம் புரிதலைக் கொண்ட ஆண் வாசகர்களும் ராஜாஜி ராஜகோபாலன் அவர்களின் கதைகளை ஒருமுறைக்கிருமுறை வாசித்துப் பாராட்டவே செய்வார்கள்.
காதல் சம்பந்தமான கதைகளும் பெண்களின் உணர்வுகள் தொடர்பான கதைகளும் மட்டுமே பெண்களை மிகவும் கவருகின்றன என்பதை இந்த மதிப்புரையை நான் எழுத ஒத்துழைத்த நண்பியர் எண்பித்தனர். இது எனக்கு வியப்பை மட்டுமின்று, தமிழ்த் திரைப்படக் கதைப்போக்குக் குறித்த விழிப்பையும் ஏற்படுத்தியது. ‘பாசமலர்’ படக் காலக்கட்டத்தில், அரங்கை விட்டு வெளிவரும் பெண்களின் முந்தானை நனைந்து பிழியப்பட்டிருப்பதையும் மழைவிட்ட தூவானம் போல் அவர்களின் விழிகள் வெளிறியிருப்பதையும் கோவை இராயல் தியேட்டருக்கு முன்பு எங்கள் பள்ளி இருந்ததால் கண்டிருக்கிறேன். இப்பொழுது நயன்தாரா, த்ரிஷா போன்றவர்கள் அந்தப் போக்கை மாற்றிவிட்டனர். இப்பொழுதெல்லாம் ஆண்கள் ‘சப்ஜெக்ட்’ படங்கள் அதிகமாதலால் சூது, வாது, பொய், கபடம், மதம், மாச்சரியம் முதலான அறுவகைக் குணங்கள் தமிழ்த் திரையுலகை ஆள்கின்றன. இப்பொழுது நாம் ராஜாஜி ராஜகோபாலனின் மறுபக்கக் கதைகளுக்கு வருவோம்.
ஆயுள்வேத “டாக்டர் மயில்வாகனம் புரண்டு படுத்தார்” என்று ‘பத்தியம்’ கதை விழிக்கிறது. “மயில்வாகனம் காதிலிருந்த குறைச் சுருட்டை எடுத்து வாயில் வைத்துக் கொண்டார்” என்று தூங்கப் போகிறது. இடையில் பத்தியம் பத்தியமாகவே ஜெயிக்கிறது.
ஆயுள்வேதத்தையே சத்துவ-பத்திய வாழ்க்கையாகக் கொண்டொழுகும் அவர், தன் தொழில் தர்மமே குறியென்று வாழ்கிறார். ‘Non compromising medication’ என்று மருத்துவ உலகில் அழைக்கப்படும் ‘திட்டவட்டமான பண்டுவமுறை’யையே தன் இயல்பாகக் கொள்கிறார். செல்வாக்கு மிக்கவர்தான். ஆனால், செல்வம் சேர்க்காதவர். ஏழ்மையே தாழ்வில்லை; எந்தக் காரணத்தை முன்னிட்டும் விலைபோய் விடக்கூடாது என்பதில் ‘வஜ்ரம்’ அவர். ஈழத்தமிழ் கொஞ்சி விளயாடும் இந்தக் கதையைப் படித்துப் பார்ப்பவர்கள் ‘பாக்கியவான்கள்.’ பானைக்கொரு சோறு:
“சேர்டிபிக்கட்டை நம்பி வந்தால் போதுமோ? வைத்தியத்தை நம்பியெல்லோ வரவேணும்.”
“காசு எவ்வளவெண்டாலும்...”
“அது எனக்குத் தேவையில்லை. நான் வைத்தியத்துக்கு மாத்திரம் காசு வாங்குவன். போட்டுவாருங்கோ.”
இப்படிப் பேசுபவர் “வீட்டில் இருந்ததெல்லாம் உழுத்துப்போன உரல் உலக்கைகளும் மருந்துச் சீசாவுகளும்தான்.”(ப. 49)
‘விழிப்புகள்’ -- இந்தக் கதை நனவோடை முறையிலும் கனவுகாண் நிலைமையிலும் [stream of consciousness + dreaming brainy state] சொல்லப்பட்டிருப்பதைச் சொல்லிக்காட்ட வேண்டியது முக்கியம். சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’ நின்ற மரத்தின் கதை. இது விழுந்த மரத்துக்கும் மனிதனுக்கும் நிகழும் ‘நிகழ்மை’ [synchronicity என்பது உளத்தியல் தத்துவத்தில் வருவது; synchronization என்பது திரைப்பட அறிவியலில் வருவது] அவன் புலன்கள் ஒடுங்கவில்லை. ஆனால் சிந்தனை ஒடுங்குகிறது. மனமோ, மோனப் பெருவெளியில் மிதக்கும் பரவசம் எய்துகிறது. பானுமதி என்னும் செவிலி/ உயிர்த்தோழி/ காதலியின் ‘அந்த’ முறுவல் அவனின் ஆன்ம விடுதலைக்கு இட்டுச் செல்கிறது.
‘கறுத்தக்கொழும்பான்’ - அகோ.. வாரும் பிள்ளாய்... இந்தக் கதைதானே ராஜாஜியையும் தேவமைந்தனையும் நட்பால் பிணைத்தது... சரசுவதி என்ற யதார்த்தமான ‘கேரக்டர்’... உலகெங்கும் சாதி மத மொழி நாடு பேதமற்றுப் பார்க்கக் கூடிய பெண்பாத்திரம்... ”வேலிக்கு இந்தப் பக்கத்திலிருந்து ஒப்பாரி வைத்த சரசுவதியின் தொண்டை எந்த அளவுக்குத் திறந்திருக்கிறது என்பதை வைத்துக்கொண்டு எந்த அளவு தூரத்திலுள்ள ஆளுக்கு முறைப்பாடு செய்கிறாள் அல்லது அள்ளி வைக்கிறாள் என்பதை அந்த ஊரில் எவரும் அறிந்து கொள்வர்” (ப. 71) என்று அவள் அறிமுகம் தொடங்குகிறது. எங்களூரில் ஒருவர்.. பக்கத்து ஊரில் உள்ளவர்க்குப் போன் போட்டால் அதற்கேற்ப மென்மையாகவும்; தூரத்திலுள்ள ஊருக்கோ நாட்டுக்கோ போன் அடித்தால் அந்த ஊர்/நாடு எந்த அளவு தொலைவிலுள்ளதோ அந்த அளவுக்குத் தன் ‘வால்யூமை’ ஏற்றிக் கொள்வார். அப்படியிருக்கிறது, சரசுவதி, தன் ஊருக்குள்ளேயே முறைப்பாடு வைக்கிற ‘லெச்சணம்.’ சாவித்தல் அல்லது அறம் பாடுதல் அவளுக்குக் கைவந்த கலை. தருமனைத் தறுமன் என்று பல்லைக் கடித்துக் கொண்டு வைபவள்.
தலைமையாசிரியரைப் பிடிக்காத நண்பர் ஒருவர் “என்ன ஹெட்மாஸ்டன் அவன்?” என்று கேட்பார் இங்கே. சரசுவதியின் மொழிப் புழங்கல், ரகர, றகர, ழகர, ளகர, லகர வேற்றுமைகளைத் தன் வயிற்றெரிச்சலுக்கேற்ப, மாற்றிக் [tune] கொள்ளும். அப்பேர்ப்பட்டவள், எந்தத் தருமனத் ‘தறுமன்’ என்று வைவாளோ, அதே தருமன் வைரவசாமிக்குப் பொங்கலிட விறகு வாங்கி, சுட்டெரிக்கும் வெயிலில் அவள் சுமந்து வரும்போது பார்க்க நேர்ந்து சுமையைத் தன் தோளுக்கு மாற்றிக் கொள்ளும் பொழுதே அவள் வக்கிரம் நாண்டுகொள்ள; பரிவும் பாசமும் அவள் சித்தத்துள் நுழைந்து கோலோச்சத் தொடங்கி விடுகின்றன. மாற்றார் செய்கையால் நம் மனம் ஏற்கும் வேதியல் [ரசவாத] மாற்றமே இந்தக் கதையின் கொடுமுடி. இந்தியத் தமிழ்நாட்டுத் தமிழ் வாசகர்களே! ‘கொழும்பான்’ என்பது, என்ன மரமென்று சொல்லுங்கள் பார்ப்போம் wink emoticon
‘தெற்காலை போற ஒழுங்கை’ கதையப் படிக்கும் முதியோர் இல்லை மாமியார்கள் அழுதே விடுவார்கள். தமக்கிப்படியொரு மருமகளைத் தரவில்லையே ஆண்டவரே என்று கடவுளை நொந்து கொள்வார்கள். ஒனக்கெழுதி வச்சது அப்படித்தான் என்று அடுத்த கட்டில் கெழம் சிடுக்கெடுக்கும். அப்படிப்பட்டவள் இக்கதையில் வரும் பொறுப்பான மருமகள். மகன் தங்கள் குடும்பப் பொறுப்பை ஏற்பான் என்று பெற்றோர் நம்ப, ‘தயக்கம் தங்கரெத்தின’மான மகன் தயங்ங்ங்ங்க, புதிதாக வரும் மருமகளோ, “நான் பார்த்துக் கொள்கிறேன்!” என்று அவன் தங்கைகளைக் கரையேற்றும் பொறுப்பைத் தானே ஏற்பதும்... கற்பனை போலிருந்தாலும் அருமை. நாம் பார்க்காமல் விடுவதால் அத்தி பூக்காமல் காய்க்கிறதா என்ன? ஒவ்வொரு குடும்பத்தில் நடக்கும் ‘ரெகுலர் சமாச்சாரங்களை’ விவரித்தாலும் இந்தக் கதை தெற்காலை போற ஒழுங்கான ஒழுங்கையாக, கோர்வையாக, அழகாக, நுட்பமாக நவிலப்பட்டிருப்பது ராஜாஜியைச் சிறந்த ‘கதைசொல்லி’ ஆக்குகிறது.
‘மெளனத்தின் சப்தங்கள்’ - ‘Euthanasia’ என்று அழைக்கப்படும் ‘கருணைக்கொலை’ என்று பிழையாகச் சொல்லப்படும் அறச்செயல் குறித்து மீயுயர் மாந்தநேயத்துடன் ஆராயும் அரிய கதையாடல். இதற்காகவே ராஜாஜியின் கோட்டில் ‘எம்.வி.பி.’ பதக்கத்தை அணிவிக்கிறேன். Sue Miller எழுதிய ‘While I Was Gone’(1999) என்ற அருமையான புதினத்தில், ‘அறவழி உயிர்நீக்கல்’ என்னும் euthanasia வை ஜோயி என்றழைக்கப்பெறும் டாக்டர் பெக்கர் [Dr. Becker] என்ற கால்நடை மருத்துவர், ஆயிரக்கணக்கை எட்டும் அளவு செல்ல விலங்குகளான நாய்களுக்குச் செய்திருப்பாள்/ர். மனிதக் கொலை செய்தவனான எலெ மஃயூ என்னும் பழைய நண்பன், தன் செல்ல நாய்க்கு அந்தச் செயல் அவளால் செய்யப்படக் கூடாது என்பதிலேயே குறியாய் இருப்பான். அந்தப் புதினத்தைத் தற்கால ஆங்கிலம் அறிந்தவர்கள் வாசியுங்கள். தவற விடாதீர்கள். இங்கே வரும் மனிதர், ‘தானுண்டு தான் வேலையுண்டு’ என்று இருப்பவர். மூலிகை வைத்தியர். சிவனடியான் - சரியான பெயர். சிவனே வைத்திருப்பார் போல. தன் மகனாக இருந்தாலும் தீராத நோயினால் வலியால் துடிக்கும் நிலையில், வைரவசாமியை வேண்டிக்கொண்டு ‘அந்த நாள்’ மாலை முழுவதும் தன் மகன் ஐயங்கனுக்காக இறுதி ஒரே ஒரு மருத்துவமாக மூலிகைகளை அரைத்து, ஐயங்கன் ஆசையாக வளர்த்த ஆட்டின் பாலிலேயே அக்கலவையைக் கரைத்து ஊட்டுவார். “நடப்பது என்னவென்று முன்னமே அறிந்துகொண்டவன் போன்று ஐயங்கன் தன் தகப்பனை நன்றியுடன் பார்த்தான். அவன் கண்கள் ஒரேயடியாக இடுக்குகளில் சொருகிக் கொண்டபோதுதான் தன் மகனின் வேதனைகளுக்கு இறுதியில் முடிவு வந்துவிட்டதெனச் சிவனடியான் அறிந்து கொண்டார். அப்போது அவரெழுப்பிய ஓலம்தான் அந்த ஊரையே உலுக்கியெடுத்தது” என்று படித்துவிட்டு என் நண்பி அழுத அழுகைதான் இந்த மதிப்புரையையே நான் அவர்களுடன் சேர்ந்து எழுதக் காரணமாயிற்று, “என்ரை மோனை..!” என்று இந்த மெளனத்தின் சப்தங்களுக்கு அந்தமும் ஆதியுமாக ஆன சிவனடியானின் ஓங்கார அலறல் உலுக்கியெடுத்துவிடும் இக்கதையை உண்மையாக வாசிப்பவர்களை. முடிவில், “மகன் செத்ததோடை சிவனடியானுக்கு விசர் வந்திட்டுது” (ப. 115) என்று, நடந்ததை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் ஓரிருவர், ஊரெழுமுன்னே உறக்கத்திலிருந்து விழித்து கொண்டவர்கள், தமக்குள் சொல்லிக் கொள்வதாகக் கதை முடிகிறது. “தொகுப்பினுள்ளே உருக்கமான மணியான கதை” என்று என் சகவாசகியரிடம் பதக்கம் பெற்ற கதை.
‘ஆசை வெட்கம் அறியும்’ என்ற ‘கடோசி’ [கரிசல் சொல்]க் கதை ஆண் மனத்தின் அபத்தமொன்றை மென்மையாக நவிலுகிறது. தன்னிலும் முப்பது வயது குறைந்தவளைச் சின்ன வீடாக ‘செட்-அப்’ செய்து சாதிக்க, சிவப்பிரகாசத்தார் தமக்கு நண்பரான ‘லாயர்’ ஒருவரைப் பயன்படுத்துகிறார். ஆனால், அந்த வழக்குரைஞரோ மனச்சாட்சியும் விவேகமும் உள்ளவர். ‘ஃபீஸ்’ஐப் பெரிதாக எண்ணாதவர். அன்னபூரணி அக்காவைத்தான் உயர்வாகக் கருதுபவர். மனவியலடிப்படையிலும் உலகியலடிப்படையிலும் குழந்தையொன்றுக்கு எடுத்துச்சொல்வதுபோல் பக்குவமாக சிவப்பிரகாசரிடம் எடுத்துச்சொல்லி, உண்மையுரைப்போனாகவும் விளங்கி, அவரைவிட்டுப் பிரிந்துபோன இல்லாளை சிவப்பிரகாசர் இல்லத்தில் இருப்பவள் ஆக்குகிறார். இந்த ‘லாயர்’ இன்னொரு கதையில் வரும் ‘ஆயுள்வேத மருத்துவர்’ இருவரும் ‘குறிக்கோள் கதைமாந்தர் ’[Ideal characters] என்ற ‘கதைமாந்தர் வகை’யில் அடக்கப்பெறுவர். யாழ்ப்பாணத்துப் பெண்கள் தங்கள் கணவர்கள் குறித்துப் பேசும் வார்த்தைகள் (ப. 213) எனக்கு, இந்தியத் தமிழ்நாட்டின் முக்குலத்தோர் பேச்சு வழக்கை மிகவும் நினைவுபடுத்தியது. மிகவும் சுவாரசியமானது.. இக்கதையில் வரும் யாழ்ப்பாணத்துப் பெண்களின் பேச்சு வழக்குத்தான்.
‘கடவுளும் கோபாலப் பிள்ளையும்’ என்ற பதின்மூன்றாவது கதை, புதுமைப்பித்தனை, தன் தலைப்பால் நினைவூட்டுகிறது. ஆனால், இதில் கடவுள் வருவதில்லை. அவருடைய முகவர்/பிரதிநிதி/தூதுவர்/தொண்டன்... வருகிறார். அவரிடம் நிறையக் கேள்விகள் கேட்கிறார் கோபாலப் பிள்ளை. நமக்கும், எல்லோருக்கும் இப்படிப்பட்ட கடவுளின் தூதுவரிடம் கேள்விகள் பற்பல கேட்கவேண்டும் என்ற ஆர்வம் வரும்தான். இந்தக் கதையில், மற்ற கதைகளைப் போலல்லாமல், கடவுளின் தூதரிடமிருந்து எந்த மறுமொழியும் கிடைக்கவில்லை. “இந்த யுகத்து இன்னல்களைத் தீர்க்கப் படைத்தவனாகிய தனக்கே வழி தெரியவில்லை என்று சொல்லி நழுவுபவர்தான் இன்றைக் காலக் கடவுள் என்று சொல்கிறீர்களோ?” (ப. 189) என்று கடோசியாகக் கேட்கும்போது, வேறு வழியில்லாமல் மாயமாய் மறைந்து போகிறார். வரமாவது வாங்கியிருக்கலாமே என்று கோபாலப் பிள்ளையின் மனைவி அங்கலாய்க்கும்பொழுது, “வரம் கொடுக்கும் வல்லமை கடவுளிடம் எப்போதோ வற்றிப்போய் விட்டது. அதை மறைக்கவே தலையைக் காட்டிவிட்டுப் பெயரைக் காப்பாற்றிக்கொள்ளும் தந்திரத்தைக் கையாள்கிறார். மனிதர்கள் இனியும் அவரை அழைப்பதை மறந்துவிட்டு தமக்குள் கடவுளைத் தேடிக்கொள்ள வேண்டியதுதான் இன்றுள்ள இன்னல்கள் தீர ஒரேவழி” (ப. 190) என்று கோபாலப்பிள்ளை சொன்னாலும் “அவர்” மறைந்தபின் அவர் விட்டுப்போன வாசனை மட்டுமே வீட்டினுள் எஞ்சியிருந்தது. என் மனதில் மட்டும் ஏதோ ஒருவகையான சூனியம் படர்ந்ததுபோன்ற உணர்வு மேலிட்டது.... என் மனம் ஏனோ கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு இருந்தது” (ப. 190) என்ற கோபாலப்பிள்ளையின் ‘நன்றி நவில்தலில் [Thanksgiving] கதை முடிகிறது.
© மதிப்புரைக் காப்புரிமை: தேவமைந்தன் (Puducherry A. Pasupathy) 10/03/2016

No comments:

Post a Comment