Mar 5, 2016

சிம்மாசனத்தைப்பிடித்த குதிரையில்லாத ராஜகுமாரன்

Ezha Vaani
November 22, 2015

கடந்த மாதம் கொழும்புத்தமிழ் சங்கத்தில் பிரமிள் சிறப்பிதழாக வெளிவந்த மகுடம் விமர்சனக்கூட்டத்திற்கு அந்தனிஜீவாவின் அழைப்பில் தற்செயலாகச் சென்றேன். அந்த கூட்டத்தில் கனடாவில் இருந்து வந்திருந்த எழுத்தாளர் ராஜாஜி ராஜகோபாலன் எனக்கு அறிமுகமானார். அன்று நான் அந்த இதழைப்பற்றி பேச இருந்ததால் தன்னுடைய மகுடத்தில் வெளியான சிறுகதையான ''குதிரை இல்லா ராஜகுமாரன்'' பற்றியும் சில வார்தைகள் பேசச்சொன்னார். ஆனால் நான் அந்தக் கதையைப் படிக்காததால் அதுபற்றி எதுவும் கூறவில்லை.
அவர்கொணர்ந்திருந்த கமாரா வால் என்னையும் சில புகைப்படங்கள் பிடித்து எனக்கு அனுப்பியும் வைத்தார்.
அதுமட்டுமில்லாமல் தன்னுடைய சிறுகதைத்தொகுப்பை என்னிடம் கொடுத்தார், பின் என்ன நினைத்தாரோ தெரியாது அதை மறுபடி தன் பைக்குள் வாங்கிப்போட்டுக்கொண்டு சென்றுவிட்டார் குதிரையில்லாத ராஜகுமாரனாய்.
பின்னர் சிலவாரங்களுக்கு முன் முதுபொரும் எழுத்தாளர் மு.பொன்னம்பலம் ஐயாவைச் சந்தித்தது பற்றியும் அவருடைய மகுடத்தில் வெளியான சிறுகதை பற்றியும் ஒரு சிறுகுறிப்பு இட்டிருந்தேன். அதைப்படித்த ராஜாஜி நல்லதோ கெட்டதோஎனது சிறுகதை பற்றியும் ஒரு குறிப்பு போடுங்கள்என்றார். இந்த மனிதர் என்னடா நம்மை கட்டாயப்படுத்துகிறாரே என அவர் கதையைப்படிக்க எனக்குப் பிடிக்கவில்லை.
சில நாட்களுக்கு முன் தொடர் மழையினால் குதிரை இல்லாத ராஜகுமாரனைப் படித்தேன்.
நான்கூட சில தடவைகள் யோசித்திருக்கிறேன். சந்திக்கின்ற பார்க்கின்ற முதல் தடைவையிலேயே குறிப்பிட்ட சில ஆண்களைப் பிடித்துப்போகும், நீண்டகாலம் பழகிய உணர்வுதோன்றும் பழகுவதற்கு விருப்பமாக இருக்கும், ஆனால் நாம் முதலில் போய் பேசிப்பழகினால் கேவலமாக புரிந்துகொள்வார்கள் என பின்வாங்கிக்கொள்வது. அந்த பிடித்த ஆணை கண்காணிப்பது தொடர்வது, அவனைப்பற்றிய நினைவுகளில் லயிப்பது எல்லாமே.
பெரும்பாலும் எல்லா தமிழ்பெண்களுக்கும் ஏற்படுகிற இந்த உணர்வை வெளிப்படுத்துவதே இல்லை
இப்படி ஒரு பெண் தான் சந்தித்த ஒரு ஆணை தனக்குப் பிடித்தமாக்கி அவனைத்தொடருவதும் பின் பேசி உடனேயே தன்னை ஒப்புக்கொடுப்பதும் அவனை வீடு வரை அழைப்பதும் அவன் மறுத்ததும் ஏங்கி நிற்பதும் என ஆழமாக இயல்பான ஒருபெண்ணின் மனதை ஊடுருவிப் பயணித்திருக்கிறார். உண்மையிலேயே அற்புதமாக தந்திருக்கிறார்.
இப்படித் தரமான கதைகளைததேர்ந்து பிரசுரிக்கிற மகுடம் இதழுக்கும் ஆசிரியர் மைக்கல் கொலின் ற்கும் நன்றிகள்.

No comments:

Post a Comment