Jul 29, 2013

கார்த்திகா மகேந்திரன்


ஜூலை 30, 2013

இலண்டனில் வாழும் செல்வி கார்த்திகா மகேந்திரன் எழுதிய  Subramanya Bharathi and other Legends of Carnatic Music என்னும் ஆங்கில நூலை வாசித்து மகிழும் வாய்ப்பு அண்மையில் எனக்குக் கிடைத்தது.

 தனது முதலாவது அகவையில் பெற்றாருடன் இலண்டனுக்குப் புலம்பெயர்ந்து சென்ற கார்த்திகா மூன்று வயதிலிருந்தே கர்நாடக இசைமீது ஆர்வமும் இடையறாத பயிற்சியும் பெற ஆரம்பித்தார். இதுவே இன்று இவரை இத்தகைய நூலொன்றை எழுதும் அளவுக்கு ஆற்றலைக் கொடுத்திருக்கிறதென்பதை அறிந்து அதிசயித்தேன்.
  
இந்நூல் கார்த்திகா தனது பதின்நான்காவது வயதில் இலண்டன் கீழைத்தேயக் கல்விச் சபை நடத்திய கர்நாடக இசைக்கான உயர் டிப்ளோமா இறுதித் தேர்வுக்குச் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையாகும். இவர் இத்தேர்வில் சித்தியெய்தியமையால் வித்யா பூஷண் என்ற பட்டம் இவருக்கு அளிக்கப்பட்டதென இலண்டனில் இயங்கும் இச்சபையின் பணிப்பாளர் திருமதி அம்பிகா தாமோதரம் இந்நூலின் முன்னுரையில் கூறிப் பெருமைப்பட்டுள்ளார்.
  
கார்த்திகாவின் இசைக் குருவான திருமதி செய்மணி சிறீதரன் அவர்கள் கர்நாடக இசையில் கார்த்திகாவின் அளப்பரிய திறமையைப் போற்றும் வகையில் அவருக்குச் சங்கீத கலாநிதி என்ற பட்டம் 2009 இல் வழங்கப்பட்டதெனப் பெருமையுடன் நினைவூட்டுகிறார்.
  
இச்சிறிய நூலில் கர்நாடக இசைக்குப் பாரிய பங்களிப்புச் செய்தவர்களான தியாகராஜ சுவாமிகள், முத்துஸ்வாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் பற்றிச் சுருக்கமான ஆனால் ஆழ்ந்த வரலாற்று ஆய்வையும் அவர்கள் அன்று இயற்றி இன்றும் வாழும் கீர்த்தனைகளையும் நாம் தமிழில் எழுதுவதுபோன்றே இவர் ஆங்கிலத்தில் சுருதி பிசகாமல் எழுதி கர்நாடக இசைமீதுள்ள தனது காதலை நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளார்.
  
தெலுங்கில் எழுதப்பட்ட பாரம்பரிய கீர்த்தனைகளில் மட்டுமன்றிப் பாரதியார், பாபநாசம் சிவன், சுவாதித் திருநாள், புரந்தரதாசர், கோபாலகிருஷ்ண பாரதியார், விபுலானந்த அடிகள் ஆகியோரின் தமிழ் இசைப் பாடல்களிலும் இவர் தனது ஆழ்ந்த அறிவால் பெற்ற பயிற்சியும் பற்றும் இந்நூலெங்கும் விரவிக்கிடக்கின்றன. மேலும், பாரதியின் பாடல்களுக்கும் அவரின் சாதனைகளுக்கும் இவர் செய்யும் ஆராதனையை நோக்கும்போது வேற்று நாட்டில் வாழும் இச்சிறு பெண்ணால் எவ்வாறு இத்துணை இசை ஞானத்தையும் பயிற்சியையும் விருத்திசெய்ய முடிந்திருக்கின்றதென எனக்கு வியப்பும் இவரின் இசை வாழ்வின்மீது ஆழ்ந்த அக்கறையுமே மேலிடுகின்றன.
  
கார்த்திகா பற்றி இன்னொரு வியத்தகு செய்தி என்னவெனில் இவர் ஜெருசலெம் புனித நகருக்குப் பன்னிரண்டு வயதில் செய்த யாத்திரை அனுபவத்தை A Pilgrimage to the Holy Land என்ற ஆங்கில நூலில் பயணக் கட்டுரையாக எழுதியிருக்கிறார். இந்நூலையும் வாசித்து மகிழும் வாய்ப்பு நண்பர்களுக்கும் எனக்கும் விரைவில் கிடைக்குமென நம்புகிறேன்.
  
இசையே வாழ்வாகக்கொண்ட ஒருவருக்கு உலகளாவிய இசைச் செல்வங்கள் எல்லாமே இன்பம் பயக்குவன. அவை எந்த இனத்தை அல்லது நாட்டைச் சேர்ந்ததென்பது இவர்களுக்கு முக்கியமாய்த் தெரிவதில்லை. இதனாலேயே மேலைத்தேய இசையிலும் இன்று இவர் தனது முத்திரையை பதித்திருக்கிறாரென்பது யூ டியூப் போன்ற காணொலிகளில் நாம் கண்டு இரசிக்கவும் வியக்கவும்கூடியதாயுள்ளது. இவர் இலத்தின் அமெரிக்க, ஐரோப்பிய இசைகளிலும், இன்னும் மிக முக்கியமாக, ஈழத்து-தமிழகத்துக் கிராமியப் பாடல்களிலும் விரைவில் காலடி பதிப்பாரென நாம் நிச்சயம் நம்பலாம்.
  
செல்வி கார்த்திகா பற்றிய இன்னொரு செய்தி என்னவெனில் இவர் நமது எழுத்துலக நண்பரும் காற்றுவெளி மின் இதழின் ஆசிரியருமான முல்லை அமுதனின் மகளாவார்.
  
ஜூலை 30ஆம் திகதியான இன்று செல்வி கார்த்திகா மகேந்திரன் தனது பதினேழாவது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார். இத் தினத்தில் கார்த்திகாவின் இசைப் பயணம் இனிதாயும் ஆக்கபூர்வமானதாயும் சிறக்கவேண்டுமென வாழ்த்துவோம்!
  

வெளியீடு:
காந்தளகம்
68 அண்ணா சாலை, சென்னை 600002, தமிழ் நாடு
விலை: £ 5.00
Contact: tamilnool@tamilnool.com
tamilnool.com
thevaaram.org

No comments:

Post a Comment