Jul 15, 2013

கன்னிகாதானம்


“தாரிணீ...! பின்னேரம் வழியிலை மினைக்கெடாமல் நேரத்தோடை வீட்டுக்கு வந்திடவேணும்! தாரிணியின் அம்மா பத்மா குசினிக்குள்ளிருந்து மாடியை நோக்கிக் குரல் கொடுத்தாள்.

“ஏனம்மா, இண்டைக்கு என்ன விஷேசம்?” தாரிணி கீழே இறங்கிவரவில்லை. மாடிதான் பதில் சொல்லியது.

“அவையள் வருகினம்!”

“ஆராம்?” கேட்டுக்கொண்டே தாரிணி மாடியிலிருந்து இறங்கி வந்தாள். திரும்பிப்பார்த்த பத்மா மகளின் அழகிலும் நடையிலும் மனதைப் பறிகொடுத்தவள்போல் சிறிது நேரம் மௌனமாய் நின்றாள். கூடவே நீண்டதோர் பெருமூச்சும் அவளிடமிருந்து எழுந்தது. இந்த அற்புதமான அழகுப் பொம்மைக்கு, படித்துப் பட்டம் பெற்றுத் திறம் உத்தியோகத்திலை இருக்கிற பெண்ணுக்கு மாப்பிளையள் ஓடிவரவேண்டாமோ? தன் மனதுக்குள் இக்கேள்வியை அன்றைக்கு மட்டும் ஆயிரத்தோராம் முறையாகக் கேட்டுக்கொண்டாள்.

“போன கிழமையிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறன், மறந்துபோனியோ?”

“ஓ, ஆரோ பிரிட்டிஷ் காலம்பியா ஆட்கள் வருகினம் எண்டு சொன்னனிங்கள், அம்மா.”

“ஓமோம், அவையள்தான்.”

“விளங்குது, பாப்பம்!”

“என்ன பாப்பம்?

“பாப்பம் எண்டால் பாப்பம்தான். என்னம்மா, இது இண்டைக்கு நேற்று நடக்கிற காரியமோ? பத்து வருசமா சாதகம் கேக்கிற ஆட்களும் பெம்பிளை பாக்கவாற ஆக்களும் வாசல் கதவடியிலை லயினில் நிக்கினம். வேறையென்ன நாங்கள் கண்டனாங்கள்?” வாறவையளுக்குப் பழங்களும் பலகாரமும் வாங்க அப்பாவைக் கடையளுக்கு அனுப்பிக்கொண்டு இருப்பியள். குடுத்ததைச் சாப்பிட்டுக் கோப்பியையும் குடிச்ச கையோடை அவையள் என்னை மேலையும் கீழையும் பாப்பினம். இங்கிலீசும் தமிழும் கலந்து என்னை இண்டர்வியூ பண்ணுவினம். பிறகு. போய்க் கூப்பிடுறம் எண்டு சொல்லிப்போட்டுக் காரைக் கிளப்புவினம். ஒரு மாதத்துக்குப் பிறகு ஒரு நிமிசம் ரெலிபோன் பண்ணுவினம். பெம்பிளைக்குப் படிப்புக் கூடிப்போச்சு எண்டுவினம், பெடியனுக்கு இன்னும் நிரந்தரமான வேலை கிடைக்கயில்லை எண்டுவினம். ஓலை அவ்வளவு பொருந்தமா வரயில்லை எண்டு கதை விடுவினம். இதெல்லாம் நெடுக நடக்கிற நாடகம்தானே. நானும்தான் பார்த்துக் களைச்சுப்போனன். உங்களுக்குத்தான் இன்னும் அலுப்புத் தட்டயில்லை.”.தாரிணி அன்று அணிந்த உடுப்புக்குப் பொருத்தமான ஷூவைக் க்ளோசெட்டிலிருந்து தெரிந்தெடுத்தபடி தாய்க்கு மூச்சுவிடாமல் பதில் சொன்னாள்.

“அப்பா இவ்வளவு நேரமும் சொல்லிக்கொண்டிருந்தார். இவையள் எங்கடை ஊர் ஆக்களாம். முப்பது நாப்பது வருசத்துக்கு முந்தியே கனடாவுக்கு வந்திட்டினமாம். வந்த காலத்திலையிருந்தே வேன்கூவரில்தான் இருக்கினமாம். டொராண்டொ சனங்களைப்போலை ஒண்டுமத்ததுகள் இல்லையெண்டு அறிஞ்சவராம். அப்பா சொல்லுறதைப் பாத்தால் அவருக்கு நல்ல விருப்பம்போலை கிடக்கு”

“அப்பா விரும்பினால் போதுமோ?”

“அப்பா பிழை விடமாட்டார், தாரிணி.”

“நீங்கள் இரண்டுபேரும் விட்ட பிழையாலைதான் நான் இன்னும் களியாணம் கட்டாமல் இருக்கிறன்.”

“ஏன், நாங்கள் என்ன பிழை விட்டனாங்கள்?”

“ஆரோ ஒரு விசரன் எப்பவோ எழுதின சாதகக் குறிப்பைக் கையிலை தூக்கிக்கொண்டு ஊரெல்லாம் அலையிறியள்.”

“சாதகம் இல்லாமல் என்னெண்டு பொருத்தம் பாக்கிறது? இதென்ன இண்டைக்குப் புதுக்கதை கதைக்கிறை!”

“சரி, பாப்பமெண்டு சொல்லிப்போட்டனெல்லோ, என்னை விடம்மா. நான் போறன்.” செருப்புக் குவியலிலிருந்து தெரிந்தெடுத்த செருப்புகளைக் காலில் மாட்டுவதற்கு வசதியாக வாசலின் உட்புறமாகவிருந்த கதிரையில் உட்கார்ந்துகொண்டாள் தாரிணி.

கீழே தன் மனைவிக்கும் மகளுக்குமிடையே நடந்த உரையாடலை மாடியில் தன் அறையில் நின்றபடி கேட்டுக்கொண்டிருந்த நாதன் அவர்கள் பேசும் தொனியிலிருந்தே அவர்களின் அப்போதைய மனநிலையை அளக்க முயன்றுகொண்டிருந்தார். அவர் வேலைக்கு வெளிக்கிட்டுக்கொண்டு கிளம்ப இன்னும் அரை மணி நேரத்துக்குமேல் இருந்தது. இப்போது கீழே இறங்கிப்போனால் இந்த இருவரில் குறைந்தது ஒருவரின் வாயிலாவது அகப்பட்டு அரைபடவேண்டிவரும் என்ற அனுபவ ஞானம் அவரைப் பையப் பைய வெளிக்கிட வைத்தது.

நாதன்-பத்மாவுக்குப் பிறந்த மூன்று பிள்ளைகளில் மூத்தவன் சீலன் மேற்படிப்பு முடிந்து தன்னோடு படித்தவளைக் கண்ட கணத்திலேயே விரும்ப ஆரம்பித்து அவளையே திருமணம் செய்து வாட்டர்லூவில் சாப்வேர் கம்பெனியில் சுளையாகச் சம்பளம் வாங்கிக்கொண்டு சுகமாக இருக்கிறான். அதோடு தன் குடும்பத்திலிருந்தும் கழன்றுகொண்டான். இந்த விஷயத்திலாவது தனது மகன் வட அமெரிக்க வெள்ளைக் கலாச்சாரத்தை அனுசரித்து நடக்கிறானேயென நாதன் பெருமைப்பட்டுக்கொள்வார். அடுத்தவள்தான் தாரிணி என்னும் பவதாரிணி. அம்மா அடிக்கடி புகழ்வதுபோல் ஐந்தேமுக்கால் அடி உயரத்தில் தேவதைபோல் அலுங்காமல் நலுங்காமல் நடமாடும் அழகுப்பொம்மை. குழந்தையாயிருக்கும்போது கனடாவுக்கு வந்ததிலிருந்து ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் பள்ளிக்கூடத்திலும் வெளியிலும் எல்லாரையும் மூக்கில் விரலை வைக்கச் செய்பவள். பெரும்பாலான தமிழ்ப் பிள்ளைகளைப்போல் தமிழை மறந்தவளில்லை. பாப் இசையிலுள்ள ஈடுபாடுபோலவே தமிழிசையிலும் பற்றுக்கொண்டவள். பிஸ்னெஸ் மானேஜ்மெண்ட் படிப்பில் மாஸ்டர் செய்து இப்போது எம்.பீ.ஏ செய்ய ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறாள்.

“இதென்ன, வெள்ளைக்காரனின் வாயில் வராத பெயரை எனக்கு வைத்திருக்கிறியள்” என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தாரிணி பெற்றாரைக் குறைசொல்ல மறப்பதில்லை. அப்படியான வேளைகளில் இதற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமில்லையென்பதுபோல் நாதன் வேறு அலுவல்களில் மூழ்கியிருப்பார். “இவர் எப்பவுமே தப்பல் சாமிதான்” என்று பத்மா தன் கணவனைப் பெருமையுடன் சிறிது ஆற்றாமையையும் கோபத்தையும் கலந்து சொல்லுவாள். தாரிணிக்கு அடுத்துப் பிறந்த வால்தான் படிப்பில் அக்கறையில்லாமல் மியூசிக், ட்ரம் என்று நேரம் காலமில்லாமல் வீட்டைத் தலைகீழாய்ப் புரட்டிக்கொண்டிருக்கும் ச்சில் எனத் தன்னை அழைக்கும் செந்தில்.

இதேவேளை மாடி அதிரும்படியாக இறங்கி வந்துகொண்டிருந்த செந்தில் வந்த வேகத்தில் குசினிக்குள் நுழைந்து, “யாரோ விசிட்டர்ஸ் வர்றாங்களெண்டு சொன்னமாதிரிக்கிடந்தது, அம்மா, என்ன ஸ்பெஷல் அய்ட்டம் செய்யப்போறீங்கள்?” என்று கேட்டான்.

“உனக்கு எப்பவும் சாப்பாட்டு யோசினைதான்.” செருப்புகளைப் போட்டுக்கொண்டிருந்த தாரிணி செந்திலை வம்புக்கு இழுத்தாள். ஆனால் அவனுக்கு இப்போது தாரணிக்குப் பதில் சொல்வதிலும் பார்க்க அன்றைய ஸ்பெஷல் என்னவென்று அறிவதில்தான் கூடிய ஆர்வமிருந்தது. தாயின் முகத்தைத் தன் கையால் திருப்பி, “ஏனம்மா, இன்னும் டிசைட் பண்ணல்லையோ?” என்று கேட்டான். தாய்க்குத் தெரியும் இவன் இப்போதைக்கு இடத்தைவிட்டு அகலமாட்டான் ஏதேனும் சொல்லித் தப்பிக்கவேண்டுமென்று. “அப்பா வேலையாலை வரக்கை தமிழ்க் கடையிலை இருக்கிறதை வாங்கிக்கொண்டு வருவார். நானும் ஏதேனும் செய்யலாமெண்டிருக்கிறன்.” என்றாள்.

“ஏனம்மா, யார் வருகினமெண்டு சொல்லமாட்டியோ?”

“அது.... மாப்பிளை வீட்டுக்காரர் தாரிணியைப் பெம்பிளை பாக்க வருகினம்.”

“ஓ! அறேன்ஜ் மாரிஜ்ஜா?” கேலியும் கிண்டலும் அவன் சொற்களில் தொற்றி நின்றன.

அறேன்ஜ் மாரிஜ் எண்டு நாங்கள் சொல்லுறதில்லை. எங்கடை யாப்பாணத்து முறைப்படி செய்யிறது இப்பிடித்தான்.”

“நீங்களும் அப்பாவும் தேர்டி இயேர்ஸுக்கு முந்தி உங்கட வில்லேஜில அறேன்ஞ் மாரிஜ் செய்தமாதிரி இப்ப கனடாவிலையும் செய்யப்பாக்கிறியள். அதுதான் சிறீ லான்கா டமில்ஸ் பத்தி வெள்ளைக்காரங்களும் கறுப்பங்களும் ஜோக் அடிக்கிறாங்கள்.”

“அவங்கள் செய்யிறது மட்டும் களியாணமோ? இண்டைக்குச் செய்துபோட்டு நாளைக்கு டிவோர்ஸ் பண்ணுறது!”

“டிவோர்ஸுக்கு அடுத்த நாள் அவங்கள் எப்படியும் இன்னொரு ஆளைக் கட்டிப்போடுவாங்கள். எங்கட டமில்ஸ் ஆக்களுக்கு இதெல்லாம் செய்யத் தெரியாது. சும்மா வயிறு முட்ட மட்டனையும் இடியப்பத்தையும் சாப்பிட்டுக்கொண்டு தமிழ் மூவி பாத்துக்கொண்டிருப்பாங்கள்.”

இவனோடு இனிக் கதைக்க முடியாது என்று விளங்கிக்கொண்ட தாய், “போடா, போ. உனக்குக் கிளாஸூக்கு நேரமாயிட்டுது.” என்று சொல்லித் தப்ப முயன்றாள்.

“நேத்து வந்த பேண்ட்ஸ் போட்டு பொட்டு வைச்ச ஆளும் நீங்களும் ஸீரியஸாக் கதைச்சது தாரிணியைப் பாக்கவாற மாப்பிளையைப் பத்தியா, அம்மா?” இதை மாடியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த நாதன் சிரிப்பை அடக்கமுடியாமல் பாத்ரூமுக்குள் ஓடி ஒழித்துக்கொண்டார்.

“ஓமோம், அவர்தான் இந்தக் களியாணத்தைப் புறப்போஸ் பண்ணுறவர்.”

“ப்றோக்கர் எண்டு சொல்றது இவரையா, அம்மா?” இவன் கடைசிப் பிள்ளையென்று செல்லம் கொடுத்து வளர்த்தது எவ்வளவு பிழையென்று இப்படியான சந்தர்ப்பங்களில்தான் பத்மா அறிந்து வருந்துவாள். என்றாலும் செந்தில் தன்மீது காட்டும் அன்புக்கும் கரிசனைக்கும் அளவில்லையென்று அவள் நன்றாய் அறிந்திருந்ததால் அவனின் மனம் நோக எதுவும் பேசுவதில்லை. இன்றைக்கும் தப்ப வழியில்லையென்று தெரிந்துகொண்டாள்.

“ஓமோம், தமிழாக்கள் புறோக்கர் எண்டுதான் சொல்லுறவையள்.”

“ப்றோக்கர் எண்டால் பீஸ் கேட்பானே!”

“பின்னை, காசு வேண்டாமலே புறோக்கர் வேலை செய்யிறாங்கள்? சும்மா எங்களைக் காலமை எழும்பிப் பிரட்டி அடியாதை, போ அங்காலை!”

அவனும் விடுகிற வழியாய்க் காணோம், “பீஸெண்டால் எவ்வளவு குடுக்கவேண்டுமம்மா?”

“ஆருக்குத் தெரியும்? களியாணத்தை ஒப்பேற்றி வைச்சால் ஆயிரமெண்டுதான் ஆக்கள் சொல்லிகினம்.”

“யூ மீன், ஒன் தௌஸண்ட் டாலர்ஸ்?” செந்தில் வாயைப் பிளந்தபடி கேட்டான். காலையில் சாப்பிடவென்று கையில் எடுத்த சாண்ட்விச்சில் பாதி இப்போதும் அவனின் வாய்க்குள் இருந்தது.

“அப்பிடித்தான் ஆக்கள் சொல்லுதுகள். ஆனால் களியாணம் நிச்சயமானால்தான் கையிலை காசைக் கொடுப்பம்.”

“தாட் இஸ் ரியலி பிக் மணி, அம்மா.” கூடவே அவன் கை தன் மடியிலிருந்த சில்லறைகளைக் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தது.

தாரிணி செருப்புகளை அணிந்துவிட்டுச் சுவரில் பொருத்தியிருந்த முழுக் கண்ணாடியில் தனது ஒப்பனையை மிகக் கவனமாகச் சரிபார்த்துக்கொண்டிருந்தாள். திடீரென்று வந்த செந்திலின் அழைப்பு அவளைத் திடுக்கிடவைத்தது.

“ஹே தாரிணி, உனக்கு லவ் பண்ணத் தெரிஞ்சிருந்தால் அப்பா அம்மாவுக்கு இவ்வளவு கரைச்சல் வந்திருக்காது தெரியுமோ? இங்கே உன்னைப் பாக்க வாற எத்தினை பேருக்கு அம்மா கேக்கையும் கோப்பியையும் கொடுத்திட்டுப் பல்லை இளிச்சுக்கொண்டு நிக்கிறவ!”

“ஷட்டப்! நீ உன்ரை வேலையை பாத்துக் கொள்ளும். நானே இவங்களைக் கேட்டனான் மாப்பிளை பாக்கச் சொல்லி?”

“அப்ப மாப்பிளையை நீ கண்டுபிடிச்சுக்கொண்டு வாறதுதானே!”

“செந்தில், உனக்குப் பள்ளிக்கூடத்துக்கு நேரம் வந்திட்டுதெல்லோ. இந்தா லஞ்ச். ஓடு நேரத்தோடை போய்ச் சேர்!” காலமையே பிள்ளைகளுக்குள் சச்சரவு வரக்கூடாதென்று பயந்த பத்மா செந்திலின் கையில் மதியச் சாப்பாட்டைக் கொடுத்துத் அவனைத் துரத்த முயன்றாள். இவன் தானாகப் போனாலேயொழியத் துரத்தி அனுப்பமுடியாதென்பதையும் அவள் அறிந்திருந்ததால் அரை மனதோடுதான் இதையும் சொன்னாள்.

“அம்மா, நான் சின்னப் பிள்ளை இல்லை. தாரிணி எம்.பீ.ஏ செய்யிறதுக்கு ஆப்ளிக்கேஷன் போடுறதிலும் பார்க்க லவ் பண்ணுறது எப்பிடியெண்டு ஒரு கிளாஸ் எடுக்கச் சொல்லு.”

“ஓமடா சொல்லுறன் நீ இப்ப இந்த இடத்தைவிட்டுப் போறியோ இல்லையோ?”

மாடியில் நின்ற நாதனுக்குச் சிரிப்புப் பிய்த்துக்கொண்டு வந்தது. பெரிதாய்ச் சிரித்துத் தொலைத்தால் தனக்கு என்ன சம்பவிக்கும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஆதலால் தனது சிரிப்புச் சத்தம் கீழே கேட்பதை ஓரளவுக்காவது தடுக்கலாமென எண்ணி தண்ணீர்க் குழாய்களை முழுக்கத் திறந்துவிட்டார். என்றாலும் அவரின் ராஜதந்திரம் எதிர்பார்த்த அளவுக்குப் பலிக்கவில்லை.

“என்ன கண்டறியாத சிரிப்புச் சிரிக்கிறியள் அங்கை மேலையிருந்து. பிள்ளையள் கதைக்கிறது உங்களுக்குச் சிரிப்பாக் கிடக்குதோ?” பத்மாவின் ஏவுகணை மாடியின் வளைந்து செல்லும் படிக்கட்டுகளையெல்லாம் பாய்ந்தேறி அவர்களின் படுக்கையறை பாத் ரூமுக்குள் நுழைந்து குறி தவறாமல் அச்சொட்டாக அவரின் நெற்றிப் பொட்டில் தாக்கியது. இனி மேலே நின்று தப்பிக்க வழியில்லையெனக் கண்டதும் நாதன் அலுவலக ஸூட்கேஸைக் கையில் ஏந்திக்கொண்டு கீழே இறங்கி வந்தார்.

“அப்பா எல்லாத்தையும் சிரிச்சுச் சமாளிக்கப் பார்க்கிறார்.” கண்களுக்கு இட்ட மையை இன்னொருமுறை சரிபார்த்துக்கொண்டு நின்ற தாரணி முகத்தைத் திருப்பாமலே கண்ணாடிக்குச் சொன்னாள்.

“எனக்கு நாலு நாளா இருமல். நான் இருமினால் உங்களுக்குச் சிரிக்கிறமாதிரிக் கிடக்கு.”

“ஏனப்பா, அம்மாவுக்குத் தெரியாமல் ஸ்மோக் பண்ணுறீங்களோ?” புத்தக பேக்கைத் தோளில் போட்டுகொண்டு செந்தில் கேட்டான்.

“சும்மா இரடா, அப்பா ஒரு நாளும் ஸ்மோக் பண்ணுறதில்லை.”

‘நானும்தான் ஒரு நாளும் ஸ்மோக் பண்றதில்லை. அப்பாவைப்போல் இருமிக்கொண்டா இருக்கிறன்.” என்று சொல்லிவிட்டுக் கதவுக்கு அப்பால் பாய்ந்து வெளியேறினான் செந்தில்.

“அம்மா, நான் போய்ட்டு வாறன்.” என்று சொல்லிக்கொண்டே தாரிணியும் வெளியேறினாள். “நான் சொன்னதை மறந்திடாதை, தாரிணி!” தாய் சொல்லி வாய் மூடமுன்னர் தாரிணி தெருவுக்கு வந்துவிட்டாள்.

“நீங்கள் சிரிக்கப்போய் பிள்ளையளட்டை நல்லா வாங்கிக் கட்டினீங்கள்.”

“ஒவ்வொரு நாளும் காலமை இங்கை இந்தமாதிரி முசுப்பாத்திதானே நடந்துகொண்டிருக்குது.” என்று சொன்ன நாதன், “இண்டைக்கு வாற பெடியன்ரை சாதகக் குறிப்பைத்தானே போன கிழமை பிள்ளையார் கோயிலிலை கண்ட சாத்திரியட்டைக் காட்டினனாங்கள்?” தனது டைரிக்குள்ளிருந்து எடுத்த ஒரு அரைப்பக்கக் கடதாசியை நோட்டம் விட்டபடியே கேட்டார், நாதன்.

“ஓமோம், எழுவத்தைஞ்சு வீதம் பொருத்தமெண்டு சொன்னவர்.”

எழுபத்தைஞ்சு வீதத்துக்குக் குறைவாக பாயிண்ட்ஸ் கொடுக்கச் சாத்திரியின் கம்பெனிப் பாலிஸி இடம் கொடுக்காது என்று தனக்குள் சொல்லிக்கொண்ட நாதனுக்குச் சாத்திரியை நினைத்தபோது சிரிப்பு முன்னையிலும் பார்க்கப் பன்மடங்கு கூடவந்தது. பத்மாவும் நாதனும் பிள்ளையார் கோயிலடியில் பிஸ்னஸ் கார்டுடன் வலிய வந்து அறிமுகமான சாத்திரியை ஒரு காலை நேர அப்பாயின்மெண்ட் எடுத்துக்கொண்டு காணப் போனார்கள். அந்த வேளை தன்னை மறந்து சினிமாப் புத்தகத்தில் ஆழ்ந்திருந்த சாத்திரியார் இவர்களைக் கண்டதும் பரபரவென்று ஒரு பழைய பஞ்சாங்கத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஏதோ ஒபாமாவுடைய மகளின் திருமணத்துக்கு ஓலை பார்ப்பவர்போல் ஆரவாரம் செய்யத் துவங்கிவிட்டார். அவர் தனது கந்தோர் எனக் கூறிய அறை அவரின் வீட்டுக்கு முன்னாலுள்ள கார் கராச்சுக்குள் இருந்தது. உள்ளே டொராண்டோவிலிருந்து வெளிவரும் அத்தனை தமிழ்ப் பத்திரிகைகளும் சுவர் ஓரமாகக் குவிந்திருந்தன. அவற்றில் செய்திகளை ஒரு மூலைக்கு ஒதுக்கிவிட்டு விளம்பரங்களே பல நிறங்களில் வாயைப் பிளந்தபடி தெரிந்தன. டொராண்டொ தமிழர்களுக்குப் பொழுது போகவில்லையென்றால் ஒன்றில் புதிதாக ஒரு வீடு வாங்குவார்கள் அல்லது ஏதோ ஒரு கோயிலில் ஆயிரத்தெட்டுச் சங்கு அபிஷேகம் செய்வார்கள் என்றுதான் அந்தப் பத்திரிகைகளெல்லாம் அலறிக்கொண்டிருந்தன. உலகத்திலுள்ள அத்தனை சாமிப்படங்களும் ஒருவித ஒழுங்கிலுமில்லாமல் சுவர்களில் தொங்கிக்கொண்டிருந்தன. சீனாக்காரன் மெஷினில் செய்ததுபோன்ற முருகன் சிலையொன்று எண்ணெய்க் கழிம்பு பட்டு அவர் தற்சமயம் புதிய அவதாரம் எடுத்திருப்பதுபோல் காட்சியளித்தது. வாசல் ஓரமாக இருந்ததொரு சின்னப் பக்கீசுப் பெட்டியின்மேல் சாத்திரியின் பிஸ்னஸ் கார்ட்குகள் மட்டும் அழகாக அடுக்கப்பட்டிருந்தன எவரும் வந்து எத்தனையையும் எடுத்துக்கொண்டு போகலாம் என்பதுபோல்.

பத்து நிமிஷம் பழைய பஞ்சாங்கத்தைப் புரட்டிக்கொண்டு ஒரு ஊத்தைக் கடதாசியில் பென்சிலால் குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகளும் சதுரங்களும் போட்டுவிட்டு இலக்கங்களையும் தாறுமாறாக எழுதி இல்லாத கணக்குகளுக்கு விடை கண்டுவிட்டு சாதகப் பொருத்தம் பார்க்கவந்த இவர்களை மூக்குக் கண்ணாடிக்கு மெலாகப் நோட்டம் விட்டார் சாத்திரி. அவர் பார்த்த பார்வையில் தன்னைத் தேடி வந்தவர்கள் வீட்டுப் பெண் எத்தனை ஆண்டுகளாகச் சடங்கு முடியாமல் இருக்கிறாள் என்பதைத் தான் ஓலையைப் பாராமலே அறிந்துகொண்டார் என்று சொல்ல முயல்வது தெட்டத் தெளிவாய்த் தெரிந்தது.

“கொக்குவில்லிலையும் கொழும்பிலையும் இருவது வருசமும் கனடாவிலை இருவது வருசமுமாக மொத்தம் நாப்பது வருசம் ஓலையும் களியாணப் பொருத்தமும் பாக்கிறன் நான், எந்தக் கோயிலிலையும் கற்பூரம் கொழுத்திச் சத்தியம் பண்ணுவன் இப்பிடியான சாதககாரியைக் கண்டதாக எனக்கு நினைவேயில்லை. அப்பிடியொரு உத்தமமான சிங்க ராசியோடை பிறந்திருக்கிறாள் பாருங்கோ, உங்கடை மகள். மாப்பிளைப் பெடியன் மட்டுமென்ன சில்லறையான ஆளெண்டு நினைக்கிறியளோ? எந்த வஞ்சூரனுக்குப் போனாலும் பிழைச்சுக்கொள்ளக்கூடிய வில்லாதி வில்லன், தெரியுமோ?” என்று சொல்லி வெற்றிலைக் காவியால் பட்டை அடித்த பற்களைக் காட்டி அட்டகாசமாகச் சிரித்தார் டொராண்டோவின் இணையற்ற சாத்திரி. இந்தச் சிரிப்பு மட்டுமே வந்தவர்களிடமிருந்து எந்தக் குறுக்குக் கேள்வியும் எழும்பவிடாமல் செய்யும் வல்லமையுள்ளது என்பது அவர் தனது தொழில் ரீதியாக அறிந்த உண்மை.

ஆனால் பத்மாவிடம் இந்தப் பருப்பு லேசில் அவியவில்லை, “அப்ப செய்யலாமெண்டு சொல்லுறியளோ?” என்று கேட்டாள்.

“என்ன கதை கதைக்கிறியள்? சும்மா எப்பன் சிப்பனே, எழுவத்தைஞ்சுக்கு வீதத்துக்கு மேலாலை சிவபெருமானும் பாறுவதியம்மனும் போலையெல்லோ பொருத்தம் வந்திருக்குது. தாராளமாகச் செய்யலாம், பாடிப்பாடிச் செய்யலாம்.” அவ்வளவே போதும் என்று எண்ணிய பத்மா கணவனின் முகத்தைப் பார்த்தாள். அவரும் வழக்கம்போல் தலையை மேலும் கீழும் ஆட்டி ஆமோதித்தார். “அப்ப பொருத்தம் பாத்த குறிப்பைத் தாருங்கோ, மாப்பிளை வீட்டுக்காரருக்குக் காட்டவேண்டிவரும்.” என்று சொல்லியபடி கையை நீட்டினாள் பத்மா.

“இந்தாருங்கோ, கோயிலிலை சாமிக்கு முன்னாலை பூசைக்கு வைச்சு எடுத்த பூவெண்டு நினைச்சுக்கொள்ளுங்கோ” என்று சொல்லிய சாத்திரியார் பள்ளிக்கூடப் பிள்ளையின் கொப்பியிலிருந்து கிழித்த கடதாசியில் எழுதிய துண்டை அவளிடம் நீட்டினார். பத்மாவும் ஏதோ ஸ்பெஷ்லிஸ்ட் எழுதித் தந்த பிரிஸ்கிரிப்ஷனை வாங்குவதுபோல் வலு கவனமாக வாங்கி அதனைக் கைப்பைக்குள் பத்திரப்படுத்திக்கொண்டாள்.

நாதன் தனது மனைவியின் ஆய்க்கினை தாங்காமல் அங்கே வந்தாரேயொழியத் தனக்கும் இந்தக் கைங்கரியத்துக்கும் எந்தவித சம்மதமுமில்லையென்னுமாப்போல் பிடிச்சு வைச்ச பிள்ளையார்மாதிரி கடைசிவரை ஒடிசல் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். இனிச் சாத்திரிக்குக் காசு கொடுக்கும் காரியத்தில்தான் தலையிடவேண்டிவருமெனத் தெரிந்ததால் எழுந்து நின்று மடியிலிருந்த இருபது டாலர் நோட்டைச் சாத்திரியிடம் நீட்டினார். நோட்டின் நிறத்தைக் கண்டதுமே சாத்திரி புதிய வேடத்துக்கு மாறிக்கொண்டார். “நான் நூறு றூவாவுக்கு ஒரு சதம் குறையத்தன்னும் வாங்கிறயில்லை.” என்று அடித்துக் கூறினார்.

நாதனுக்கு நன்றாகவே தெரியும். டொராண்டோவில் வாழும் யாழ்ப்பாணத்துத் தமிழர்களில் பெரும் படிப்புப் படித்தவர்கள் உட்பட வர்த்தகர்கள், சாமானியர்களில் பெரும்பாலானோர் கனேடிய டாலரை ரூபாவென்றே அழைத்து சிறீ லங்கா அரசாங்கத்திடம் தமக்குள்ள மாறாத விசுவாசத்தைக் காட்டிக்கொள்வார்கள். சாத்திரி நூறு டாலர்களைத்தான் தனது தாய் நாட்டுப்பற்றைக் காட்டிக்கொள்ளும் வகையில் நூறு றூவாவெனக் கேட்கிறார் என உணர்ந்ததும் தனது திகைப்பையும் அதிருப்தியையும் வெளியே காட்டிக்கொள்ளாமல், “இங்கையெல்லாம் இருபது டாலர்தானே எல்லாரும் எடுக்கிறார்களென்று கேள்விப்பட்டன். அதுதான் நானும் அப்படித் தந்தனான். தயவுசெய்து குறை நினையாதையுங்கோ.” என்றார்.

“மற்றவையளன்ரை கதையளை அவையளோடை வைச்சுக்கொள்ளுங்கோ. என்ரை கணக்கு இவ்வளவுதான். நாப்பது வருசம் நாய்போலை உழைக்கிறன், ஒரு நாளும் ஒருதரும் நான் கேட்டதுக்கு ஒரு அரைச் சல்லி குறையக் குடுத்தது கிடையாது.” அவர் நாய்போலை உழைத்தது எவ்வளவுக்கு உண்மை என்பதை அவர் கிட்டத்தட்ட நாய்போலவே குரைத்ததின் மூலம் நாதனால் அறியமுடிந்தது.

தனது பர்ஸுக்குள் துளாவிய நாதன், “இதுக்கு மேலாலை என்னட்டை இதுதான் கிடக்கு.” என்று சொல்லி ஒரு பத்து டாலர் நோட்டை எடுத்து நீட்டினார். அதை ஒற்றைக் கண்ணால் மட்டும் பார்த்த சாத்திரியார் தலையை மறுபக்கம் திருப்பி, “உங்கடை காசை நீங்களே வைச்சுக்கொள்ளுங்கோ. தறுமத்துக்குப் பொருத்தம் பாத்தனானெண்டு நினைச்சுக்கொள்ளுறன்.” என்று சிறிது றாங்கியாகப் பதிலிறுத்தார். “நீங்கள் கோவிக்கிறியள்போலை கிடக்கு. விசா அல்லாட்டி மாஸ்டர் கார்ட் எடுப்பியளெண்டால் நீங்கள் கேட்ட நூறு டாலர்களை எடுத்துக்கொள்ளுங்கோ.” என்று கூறி அவர் பதிலை எதிர்பார்த்தவர்போல் விரல்களை பர்ஸூக்குள் அலையவிட்டார். இனி என்னமாதிரிக் குரைத்தும் இதற்குமேல் கிடைக்காதென அறிந்துகொண்டதும், “பரவாயில்லை, காலமை வந்த சீதேவியை நான் எட்டி உதைக்கக் கூடாது எண்டபடியால் நீங்கள் தாறதை வாங்கிக்கொள்ளுறன்” என்று சொல்லிவிட்டு அரை மணித்தியால வேலைக்கு மொத்தமாய் முப்பது றூவா வந்ததேயென்ற சந்தோசத்தில் மிதந்தார் சாத்திரி.

தாரிணி வாசல் படியை விட்டிறங்கி முற்றத்தைக் கடந்து தெருவில் நடக்கத் துவங்கினாள். அவளுடைய தெருவால் காலையும் மாலையும் மட்டுமே அரை மணிக்கொருமுறை ஓடும் லோகல் பஸ்ஸூக்குத் தரிப்பிடம் வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருந்தது. நடந்துசென்றபோது தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டாள் தாரிணி. “அம்மாவை எவ்வளவு ஈஸியாக ஏமாற்றி அந்த வேன்கூவர் ஆளின் விபரங்களை அவள் சந்தேகப்படுவதற்கு இடம் வைக்காமல் போன கிழமையே கேட்டறிந்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று. ஆள் என்ன ஆள்? இனி நித்தியென்று பெயரைச் சொல்லி அவனைக் கூப்பிடவேண்டியதுதான். ஆறடி உயரமாமே, இவன் கையில் அகப்பட்டால்... ஐயோ, நினைக்கவே என்னவோ செய்கிறது!”

ஐபோனை வெளியில் எடுத்து நித்தியின் போடோக்களை ஒவ்வொன்றாக விரலால் மீட்டத்துவங்கினாள். “பாவி, என்ன ஸ்மார்ட்டா இருக்கிறான். இன்றைக்கு நேரே வரட்டும். யார் கூடச் ஸ்மார்ட் என்று பார்க்கலாம். இவனைக் கண்ணால் காணாமலே லவ் பண்ணத் துவங்கிவிட்டேனோ? ஏன் ஸ்கைப்பில் இரவிரவாக இவனோடு குழைந்து குழைந்து கதைத்ததெல்லாம் என்னவாம்? இவர் மட்டும் திறமான ஆளோ ‘உன்னோடு விடியும்வரை கதைக்கலாம், ஆனால் காலமை வேலைக்குப் போகவேண்டுமேயென்று விருப்பமில்லாமல்தானே கடைசியில் இரவு இரண்டுமணிபோல் ‘குட் நைட்’ சொன்னவர்.” இதென்ன, இவன் என்றவன் இப்படித் திடீரென்று இவராக மாறினான்? இந்த நாலு நாளாய்த் தனக்கு நித்தி விசர் பிடித்ததை ஒருவருக்கும் காட்டிக்கொடுக்காமல் தப்பியாச்சு. செந்தில் சொன்னமாதிரி லவ் பண்ணுறது எப்படியெண்ட கிளாஸுக்குப் போகாமலே ஆன்லைனில் படிக்கிறேன்.” என்று தனக்குத் தானே சொன்னபோது சிரிப்பு கன்னங்களைச் சிவக்கவைத்தது. யாராவது பார்த்திருப்பார்க்ளோவென்ற ஐயத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தாள் தாரிணி. பஸ்ஸுக்குக் காத்திருக்கும் அந்த மூன்றுபேரும் தன்னையே வெறிப்பதுபோலிருந்தது. அங்கே பேண்ட்ஸும் அதற்குப் பொருத்தமில்லாத சேர்ட்டுமாக நிற்கிற ஆளைப்போல்தானே ரமேஷும் இருந்தான்.

இந்த நேரமேன் அவனின் நினைவு வந்தது? ரமேஷூம் வலு கெட்டிக்காரன்தான். ஆனால் ஸ்மார்ட் என்று சொல்ல அவனின் கசங்கிய உடையும் பாலிஷ் பண்ணாத பேச்சும் இடம்கொடுக்கவில்லை. ஆனால் ஆள் காரியத்தில் மட்டும் கண்ணாயிருந்தான். எப்போ சந்தித்தாலும் ‘இரவைக்கு அபார்ட்மெண்டுக்கு வருவாய்தானே?’ என்ற கேள்விதான் அவனின் கடைசிக் கேள்வியாக இருக்கும். அவனுடைய அபார்ட்மென்டில் கட்டில் மட்டும்தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டாள். இவன் எதிர்பார்த்ததைக் கொடுப்பதற்குத் தான் உரிய ஆளில்லையென முடிவு செய்துகொண்டதும் அவனிடமிருந்து கழன்றுகொண்டாள் தாரிணி. பிறகு பழகவந்த அந்த பஞ்சாபியும் இந்த லயினைச் சேர்ந்தவனாய்த்தான் இருந்தான். வாயைத் திறந்தால் அடல்ட்ஸ் ஆன்லி ஜோக்குகளை அவிழ்த்துவிட்டு இடுப்பில் கையை வைத்துக் கிளுகிளுப்பு மூட்டப் பார்ப்பான். இவன் விரல்கள் எப்போ இன்னும் பக்கவாட்டிலேயோ மேலேயோ படருமெனச் சொல்லமுடியாதெனத் தாரணி விரைவில் கண்டுகொண்டாள். இவனைப்போல் இன்னும் எத்தனையோ ரோமியோக்களை வீட்டுக்குத் தெரியாமல் எட்ட நின்றே கதைத்துக் கைகழுவியாயிற்று. இவர்கள் எல்லாரும் எப்போ இவளுடன் மூவிக்குப் போகலாம் அல்லது அறைக்குப் போகலாம் என்பதிலேயே ஆர்வமாயிருந்தார்கள். எப்படியோ இதுவரை ஒருவர் நகமும் தன் உடம்பில் படாமல் தப்பிக்கொண்டாயிற்று. கடைசியில் நியூ யார்க்குக்கு ஓடிப்போன அந்தக் கார்திக் மட்டும் வித்தியாசமானவனா?

கார்த்திக் ஆரம்பத்திலிருதே மிக நல்ல நண்பனாகத்தான் நடந்துகொண்டான். தாரணிமீது உத்தமமானதொரு நண்பன் பொழியும் அன்பை எல்லையற்றுப் பொழிந்தான். ஒரு நாளும் அவளின் கையைத் தொட்டுக்கூடக் கதைத்ததில்லை. இதனால் அவளும் அவன்மீது நல்ல அபிப்பிராயம் கொண்டிருந்தாள். ஆனால் அவன் லா பைனல் எக்ஸாமில் மூன்றுமுறை தொடர்ந்து குத்துக்கரணம் அடித்தபோதுதான் அவனின் திறமையில் அவளுக்கு ஏமாற்றமாய்ப் போய்விட்டது. தனக்கு ஏன் தாரணியைப்போல் படிப்பு வரவில்லையென அவளையே வஞ்சகமில்லாமல் ஒருமுறை கேட்டான் கார்த்திக். லா பாஸ் பண்ணாவிட்டால் நீ என்னை ஒரேயடியாக மறந்துபோய்விடுவாயோ என்றுகூடக் கேட்டான். பொல்லாத அப்பாவி, இவனுக்கு இரங்காவிட்டால் உலகில் எவனுக்கு இரங்கியும் என்ன பயன் என்று கடைசியில் இவனோரு தொடர்ந்து நட்பாய் இருப்பதெனத் தீர்மானித்துக்கொண்டாள் தாரணி.

ஒரு நாள் தன் தாய் தகப்பனை அவள் வீட்டுக்கு முறைப்படி அவளைப் பெண்பார்க்கக் கூட்டிவருகிறேனென்று எதிர்பாராத விதமாகக் கார்த்திக் சொன்னபோதுதான் அவன் என்ன எண்ணத்தோடு தன்னோடு அதுவரை நட்பாயிருந்தான் என எண்ணித் தாரணி திகைத்துப்போனாள். இவன் நல்ல ஆத்மார்த்தமான நண்பனென்று நினைத்துக்கொண்டிருக்க இப்படியொரு குண்டை எடுத்து வீசுவானென அவள் துப்பரவாக எதிர்பார்க்கவேயில்லை. சும்மா கதை விடுறான் போலிருக்கிறதென எண்ணிச் சில நாள் பேசாதிருந்துவிட்டாள். ஆனால் திடீரென்று ஒரு நாள் அவனின் தகப்பனிடமிருந்து நாதனுக்குப் போன் வந்தது. வெள்ளியன்று நல்ல நாளாம், ஐயரிடம் கேட்டு உறுதிசெய்தாயிற்றாம். நேரத்தோடு பெண் பார்க்க வருகிறார்களென்று அறிவித்துவிட்டார். தாரணியின் பெற்றாரும் அவருடன் நீண்ட நேரம் உள்ளதையெல்லாம் பேசித்தீர்த்தார்கள். அவளின் நண்பனாக அதுவரை இருந்தவன் எதிர்காலக் கணவனாகக்கூடாதா என எண்ணினார்கள்போலும். அவளின் விருப்பம் என்னவென்று முழுமையாக அறியாமலே மாப்பிளை வீட்டாரை வரவேற்க அன்று காலையிலிருந்தே தாரணி வீட்டில் ஏகப்பட்ட தடபுடல். வீடெல்லாம் ஒரு நாளும் இல்லாமல் பளிசென்று வந்துவிட்டது. செந்தில்கூட அன்று அழகாக உடுத்திக்கொண்டு நின்றான். ஆனால் தாரணி மட்டும் பெற்றாரின் மனதை நோகடிக்கக் கூடாதென்ற எண்ணத்துடன் எதுவும் பேசாதிருந்தாள். இவனும் நான் பழகிய எல்லாரையும்போல் என்னோடு பேசும்போதெல்லாம் மனதுக்குள் என்னைத் துயிலுரிந்து பார்த்திருக்கிறான் போலிருக்கிறது. வரட்டும் கவனித்துக்கொள்கிறேன்!

தாரணியின் வீட்டுக்கு வந்த கார்த்திக்கின் தகப்பனார் முதல் காரியமாக வீட்டை நோட்டம்விட ஆரம்பித்துவிட்டார். களியாண விஷயங்களைப் பற்றிக் கதைப்பதை விடுத்து இந்த வீடு எத்தனை அடி பரப்பளவு, வரி எவ்வளவு கட்டுகிறீர்கள், தாரணியின் பெயரில் கார் இருக்கிறதா, எத்தனையாம் ஆண்டுக் கார்.. இப்படியாக அவரின் கேள்விகள் தன் மகனைத் தாரணி திருமணம் செய்யும்போது எவ்வளவு சொத்துக் கைமாறும் என்பதைக் கணக்கிடுவதிலேயே அக்கறையாயிருந்தார் என்பதையே காட்டியது. நாதன் கதையை மாற்ற எவ்வளவோ சிரமப்பட வேண்டியதாயிற்று. இறுதியில் வந்தவர்கள் புறப்பட்டபோது கார்த்திக்கின் தகப்பனார் வெளிப்படையாகவே கேட்டுவிட்டார். இப்ப இருக்கிற வீட்டோடு காசாக நாற்பதினாயிரமும் தாலி கட்ட முந்தியே சீதனமாகக் கொடுத்தால் இருபக்கத்துக்கும் மேற்கொண்டு பிரச்சனைகள் வராதென்று தனது ஜெண்டில்மேன் அக்றீமெண்டை ஒற்றை வரியில் அவிழ்த்துவிட்டார். அதற்கென்ன விரைவில் இதைப்பற்றிப் பேசுவோமென்று உறுதியளித்து அவர்களை அனுப்பிவைத்தார் நாதன். தகப்பனாரின் பேச்சைக் கார்த்திக் பெருமையோடு கேட்டுக்கொண்டிருந்ததுதான் தாரணிக்குப் பெரும் ஆச்சரியமாக இருந்தது. அடுத்த நாள் நாதன் மேலும் அவர்களைப்பற்றி வேறொரு இடத்தில் விசாரித்தபோது இயக்க ஊர்வலங்களில் முன்வரிசையில் நின்று கொடிபிடிப்பவர்தான் இப்படிச் சீதன பாதனங்களைக்கு முன்னுரிமை கொடுத்துக் களியாணப் பேச்சுப் பேசியவரென்ற செய்தி உறுதியாயிற்று. தாரணிக்கு வந்த ஆத்திரத்தில் கார்த்திக்கை ஒரு கேள்வி மட்டுமே கேட்டாள். அந்தக் கிழமையே அவன் ஊரைவிட்டு ஓடிவிட்டான்.

‘நான் பட்ட அனுபவங்களுக்கும் செந்தில் சொன்ன லவ்வுக்கும் இடையில் எவ்வளவு இடைவெளி? தோழில் வைத்த விரல்களுக்கும் ப்ரா முடிச்சுக்கும் இடையிலுள்ள இடைவெளிதான். உடலுக்குப் பதிலாக மனதைத் தொட்டு வளர்வதுதான் உண்மையான காதல். என்னை மணப்பவன் என்மீது எவ்வளவு அன்புள்ளவனாக இருக்கவேண்டுமென்று தீர்மானிக்க என்னால் முடியாது. ஆனால் எவ்வளவுக்கு நான் அவனின் உத்தமமான மனைவியாய் இருக்கவேண்டுமென்று தீர்மானிக்க என்னால் முடியும்!”

தாரிணி அன்று காலை தாய் கேட்டுக்கொண்டதுபோல் வழியில் மினைக்கெடாமல் வேளைக்கு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தாள். அவளின் தரிப்பிடத்தில் பஸ் நின்றபோது கைப்பைக்குள் செல் ஜிலுஜிலுத்தது. அந்தக் காவாலி செந்தில்தான் டெக்ஸ்ட் அனுப்புகிறானென்று அறிந்ததும் திறந்து பார்த்தாள். “உன்னைப் பார்க்க வரும் அந்த வேன்கூவர் ஆளை நானும் உன்னைப்போல் கூகிள் செய்து பார்த்தேன். அவன் உனக்கு முன்பே எம்.பீ.ஏ செய்து முடிச்சிட்டான். இந்தப் பேர்வழி உன்னைப்போல் புத்தகங்களைத்தான் முதல் களியாணம் செய்திருக்கிறானென்று வடிவான தெளிவாய் அறிந்துகொண்டேன். அப்போ இவனும் லவ் பண்ணத்தெரியாத கேஸாகத்தான் இவ்வளவு நாளும் காலம் தள்ளியிருப்பான். ஆனபடியால் உனக்கு மிகப் பொருத்தமான ஆள்தான் இவன். இந்த ஒரு கிழமையாய் நீ இந்த வெருளியுடன் போனிலும் ஸ்கைப்பிலும் எச்சில் வழிய அலட்டிக் கொண்டிருந்தாய் என்பது எனக்கு நன்றாய்த் தெரியும். முதலில் மறக்காமல் ஆளை நன்றாய் இண்டர்வியூ பண்ணு. உனக்காக ஒருவன் எங்கேயோ பிறந்திருக்கிறான் என்று அம்மா அடிக்கடி சொல்லுவாள். இந்த நட்ஸ்தான் வேன்கூவரில் போய் அப்படிப் பிறந்திருக்கிற அந்த ஆளோவென்று முதலில் நிச்சயப்படுத்திக் கொள்ளு. அதற்குப் பிறகுதான் தனியாகக் கதைக்கவேண்டுமென்று ஆளை மேலே அறைக்குக் கூட்டிக்கொண்டு போ. உன்னுடைய முதல் கிஸ் டேஸ்டா இருந்ததா என்று எனக்குச் சொல்ல மறக்காதே. ஸாரி, நான் பின்னேரம் வீட்டில் நிற்கமாட்டேன். உங்கள் இரண்டுபேரையும் மியூசியத்தில் கொண்டுபோய் வைக்க! ஐ லவ் யூ, ஸிஸ்.”

இதை வாசித்துமுடிக்கமுன் செந்திலிடமிருந்து இரண்டாவது டெக்ஸ்ட் வந்து குதித்தது. “மாப்பிளை எனக்குத் தரப்போகும் தோழன் மோதிரம் குறைந்தது ஒரு சவரினில் இருக்கவேண்டுமென்று மறக்காமல் சொல்லிவை. அவசரத்துக்குத் தேவைப்படலாம்.”

“றாஸ்கல், இப்பவே மோதிரத்தை வாங்கிறதுக்கு மட்டுமில்லை விக்கிறதுக்கும் பிளான் பண்ணிப்போட்டான்.” என்று தனக்குள் சொல்லிக்கொண்டே தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினாள். உள்ளம் களிப்பில் ஆயிரத்தெட்டு செல் அழைப்புகளால் அதிர்ந்தது.

கூப்பிடு தூரத்திலிருந்த வீட்டிலிருந்து தாயார் சுட்ட வடையின் வாசம் காற்றில் மிதந்து வந்துகொண்டிருந்தது. நிமிர்ந்து பார்த்தபோது அண்ணாவும் மைத்துனியும் வீட்டு வாசலில் நின்று அவளை நோக்கிக் கையசைத்துக்கொண்டிருந்தார்கள். “ஓ மை காட், வாட் ஏ சர்ப்ரைஸ்!”

-----

1 comment:

  1. Novelist and literary critic E.M. Forster defines story as a chronological sequence of events. He defines plot in literary work as the causal and logical structure which connects events. The distinction between story and plot is somewhat fuzzy. However, the distinction is used by literary critics to explain events in a story, their interrelationship, and the climax or conclusion. Rajaji is capable of both aspects of writing. Unlike his தெற்காலை போற ஒழுங்கை, கன்னிகாதானம் is loosely plotted or episodic for good reason.
    கன்னிகாதானம் depicts the life challenges of hyphenated Canadians. The story revolves around the main character Dharini and her family members' approach to marriage. Parents' traditional approach take them to a $1,000 fee marriage broker for match making and $100 fee horoscope reader to foretell personal suitability of the couple. Iphone, Google search, and Skype connection get Dharini all these information on her finger tips.
    Rajaji did not tie up all the loose ends of the plot and give a short glimpse of the characters' future, in the way it was in தெற்காலை போற ஒழுங்கை. So, the readers would feel like they are in the midst of all the events. That is the advantage of a loosely plotted or episodic writing. He has achieved all the three objectives of any great literary work: to criticize, to educate, and to entertain. Great work.
    .

    ReplyDelete