Jul 30, 2013

பயிலாத பாடங்கள்


குழந்தைகளே கூறுங்கள்
குதூகலமாயிருப்பதை எங்கே கற்றீர்களென்று
கவலையால் என் வாழ்வு
கருகிப்போகிறது – உங்கள்
கலையில் ஒரு சிறிதாவது
கற்க விரும்புகிறேன்.

மலர்களே  மலருங்கள்
சிரிப்பை எப்படிப் பழகினீர்களென்று
பிள்ளைப் பருவத்தின்போது மட்டுமே
பொழுதெல்லாம் சிரித்திருந்தேன் – உங்கள்
செக்கச் சிவந்த இதழ்களால் சிறிதாவது
சொல்லிக் காட்டுங்கள்!

ஆறுகளே இயற்றுங்கள்
ஆற்றலும் அழகும்
எப்படி இணைய முடியுமென்று
இளவயதுக் காலத்தில்
கனவுகளையே கண்டு
காலத்தைக் கரைத்ததால்
ஆற்றலை வளர்க்க
அறிவிழந்து போனேன்.
அவசரப் படாதீர்கள்
ஆறுதலாய்ச் சொல்லுங்கள்!

எறும்புகளே அறிவியுங்கள்
ஓய்வில்லா துழைப்பது எங்ஙனமென்று
ஓரிரு நிமிடத்துக்குள்
ஓய்ந்துபோய்விடுவேன்
இளைஞனைப் போலெப்போதும்
உற்சாகமாய் இருப்பதை
ஒழிக்காமல் ஓதுங்கள்.

காகங்களே கரையுங்கள்
உடன்பிறப்புகள் இறக்கும்போது
உருகி அழுவது எப்படியென்று.
ஆயிரமாம் உயிர்கள் - போரில்
அழிக்கப்பட்ட போதும்
எனக்கென்ன வென்றிருந்தேன்.
கருணையற்ற இவனைக்
கொத்திக் கொத்திக் கூறுங்கள்.

மேகங்களே மொழியுங்கள்
விடுதலையை எப்படி
வெற்றி கொள்ளலாமென்று!
விலங்கொடிக்கத் தெரியாத
வீணர்களானோம்!
இணைந்து வாழத் தெரியாத
அற்பர்களானோம்!
எமக்குள்ளே ஒற்றுமைக்கு
நாமே எதிரியானோம்!
ஒன்றாய் வாழ்தல் எப்படியென்று
ஒழிக்காமல் சொல்லுங்கள்.

மழையே மனம் திறவாய்
மண்ணை நீ இவ்வளவு
மூர்க்கமாய் முத்தமிட
எப்படித்தான் முடிகிறது – என்
மனம் கவர்ந்த மங்கையை
முத்தமிடும் வழியை
மறக்காமல் சொல்வாயே.

பறவைகளே பாடம் நடத்துங்கள்,
பசித்தவர்களுடன் பகிர்ந்துண்ணும்
பண்பாட்டைப் படித்தறிய!
பகல்நேர வகுப்பென்றாலும் பரவாயில்லை.
உண்ணும் முன்
உறவுகளை அழைக்க
இந்த நெஞ்சிலேன் இடமில்லை?
தாராளமாக வாருங்கள் – என்
திண்ணை இங்கே தயாராக இருக்கிறது!

பெண்களே பகருங்கள் – உங்கள்
புன்னகையில் புதைந்திருக்கும் புதிர்களைப்
பகுத்தறிவது எப்படியென்று!
மௌனத்தில் மறைந்திருக்கும் மர்மத்தை
மொழிபெயர்ப்பது எவ்வாறென்று!

No comments:

Post a Comment