Jun 23, 2013

காதலாகிக் கசிந்து...


மேகங்கள் அனைத்தும் மலையினில் மோதி
மெலிதாய்த் தவழ்கிறது என்
மோகங்கள் அவளின் மார்பினில் மோதி
முகையாய் அவிழ்கிறது.

அவிழ்கிற கூந்தலில் ஒழுகிற நீரலை
இடையினை அணைக்கிறது அவள்
இதழ்களில் துடிக்கும் இளமையின் தாபம்
இதயத்தைப் பிணைக்கிறது.

பிணைந்திடும் போழ்தில் பகிர்ந்திடும் போதை
பொங்கிச் சரிக்கிறது - அவள்
பார்வையில் தெறிக்கும் பருவத்தின் செய்தி
பாயை விரிக்கிறது.

விரிகிற முல்லை விழிகளின் வழியாய்
வீசிடும் மின்னலைகள் வாயின்
வார்த்தைகள் இன்றிக் கண்களின் ஊடே
வழங்கிடும் சொல்லலைகள்.

சொல்லிய தெதுவும் புரிவது இன்றிச்
சேர்ந்திடும் காற்றினிலே வானில்
சிறகினை விரித்துப் பறப்பது தானே
சிறந்தது காதலிலே!

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. கண்களில் நுழைந்து மெல்ல
    கருத்தினில் கலந்து நாளும்
    கனவிலும் புகுந்து சிந்தையைக்
    கவர்ந்திடும் ஓவியமே-இவன்
    காதலில் கசிந்த காவியமே!

    ReplyDelete