Jun 4, 2013

விழிப்புகள்



நான் சந்தியில் திரும்பியபோது “பொதேலென்று” எதுவோ பாறி விழுந்த பலத்த ஓசையை மட்டும் கேட்டதை அறிவேன். எது அப்படி விழவேண்டிவந்தது என்பதை அறியேன்.

பிறகு தெரிந்தது. விழுந்தது ஒரு மரம். புளியமரம். 57ப் புயலுக்கு அசையாமல் நின்ற மரம் நான் சந்தியில் திரும்பியபோது மாத்திரம் விழுந்தது.

அது ஒரு Blind Corner. அது எனக்கு முன்பே தெரியும். ஆனால் அதை அறிவிக்கும் இரும்புப் பலகை இப்போது எப்படித் தொலைந்துபோனது என்பது பற்றித் தெரியாது.

சந்தியில் இடப்பக்கமாகத் திரும்பிவிட்டால் றோட்டின் ஓரமாக ஒரு பெரிய புளியமரம் நிற்பதைக் காணலாம். வளைவிலே திரும்புவதற்குமுன் அதைக் கண்டுகொள்ளமுடியாத அளவுக்கு ஆகாயத்தை மறைக்கும் இன்னும் வேறு சாலையோர மரங்கள். ஆகவே புளியமரம் விழுந்ததற்கு அந்தத் திருப்பமும் அதில் நான் திரும்பியதும்தான் காரணமாக இருக்கவேண்டும்.

அப்போது நான் நடந்து வந்தேனா ஸ்கூட்டரில் வந்தேனா என்பது எனக்குச் சரியான ஞாபகம் இல்லை. இந்த இரண்டில் ஏதோவொரு முறையில்தான் வந்திருப்பேன். ஆனாலும் நான் சந்தியில் திரும்புவதற்கும் புளியமரம் விழுவதற்கும் அல்லது புளியமரம் விழுவதற்கும் நான் சந்தியில் திரும்புவதற்கும் என்ன தொடர்பு?

அதுதான் எனக்குத் தெரியவில்லை. புளியமரம் விழுந்ததுமட்டும் உண்மை.

அந்தப் புளியமரத்தை நான் பலமுறை கண்டிருக்கிறேன். கடைகள், கிட்டங்கிகள் நடுவே சின்னதொரு வெட்டை. அதன் நடுநாயகமாக அந்த மரம். அதன் நிழலில் நடக்கும் வைக்கல் வியாபாரம். அதையடுத்துத் தொட்டம் தொட்டமாகக் கடைகள், கார் கராஜ்கள்.

அந்தத் தெருவில் இன்னும் நாகரிய வாடை அதிகம் வீசாததற்கு அங்கே அந்தப் புளியமரம் நிற்பதுதான் காரணமாக இருக்கவேண்டும். அது விழுந்துவிட்டபிறகு அங்கு நாகரிகம் வந்துவிடுமோ என்பது பற்றி எனக்கு நினைக்கத் தோன்றவில்லை. நினைப்பதற்கு ஏது அவகாசம்?

புளியமரத்தின் பரிதாபகரமான தோற்றத்தில் நான் கதிகலங்கிப்போய் நின்றேன். பூமியைத் தழுவ முயல்வதுபோல்வது போன்று அது நெடுஞ்சாண்கிடையாக விழுந்துகிடந்தது. நிலத்தில் இருந்து பிட்டுக்கொண்டு கிளம்பிய அதன் வேர்கள் ஆகாயத்தைப் பார்த்து வன்மத்துடன் சூழுரைப்பதுபோல் பயங்கரமாய்ச் சிலிர்த்தபடி நின்றன. மரத்தின் கொப்புகள், கிளைகளெல்லாம் விழுந்த வேகத்தில் அடிபட்டுச் சிதறுண்டு கிடந்தன. அவற்றுள் கூடுகட்டி வாழ்ந்த பட்சிகள் அதிர்ச்சியால் அலறியபடி தப்பிப் பறந்தன. நான் அந்தக் கிளைகளின் அருகில் சென்று அனுதாபத்துடன் நோக்கினேன். ஒடிந்த சிறிய கிளையொன்று என் காலடியில் சிக்குண்டு கிடந்தது. அதனைக் குனிந்து கையால் எடுக்க முயன்றேன். என்னால் அதை அசைக்கவே முடியவில்லை. ஒரு பெரிய கொப்பு எவ்வளவு சுமையாயிருக்குமோ அவ்வளவு சுமை. வியப்பால் என் நாடித்துடிப்புகள் விரைவாய் அதிர்ந்தன. திரும்பவும் முயன்று முயன்று முடியாமல் களைத்துச் சோர்ந்தேன். துடிப்புகள் படிப்படியாய் ஒடுங்குவதை உணர்ந்தேன். உடலெங்கும் வியர்வை வெள்ளமாய்ப் பெருகிற்று. கைக்குட்டையை எடுத்துத் துடைத்துக்கொள்ளக்கூடச் சக்தியற்று என் உடல் செயலற்று ஓய்ந்த்து. இடையில் யாரோ உரிமையோடு வந்து என் முகத்தைத் துடைப்பதுபோலிருந்தது. கரத்தின் தீண்டுதலில் உணர்வுகள் செயலுறக் கனவுநிலை துண்டிக்க விழிப்புக்கொண்டேன்.

என் உடல் கட்டிலில் கிடந்தது; என் பக்கத்தில் அவள் நின்றிருந்தாள்.

என் உடம்பில் ஏதோ சுமைகளெல்லாம் அழுந்திக்கொண்டிருந்தன. கைகளை மெல்ல அசைப்பதில்தான் நான் இதோ இருக்கிறேன் என்பதை நம்பமுடிந்தது. இடிந்த விழுந்த பாலமொன்றின்கீழ் அகப்பட்டுக்கொண்டவன்போல் உடம்பின் தசை நார்கள் அத்தனையும் பிழிபடுவதைச் சகிக்க இயலாது துன்புற்றேன். துன்புறும் ஒவ்வொரு கணமும் அவள் அருகில் இல்லாதிருந்திருந்தால் வேதனையின் விஸ்வரூப தரிசனமாக இருந்திருக்கும். அவளது உடை எனக்குச் சிறிது பரிச்சயமான உடை. அவ்விடத்தின் வாசனை எனது அனுமானத்தை நிரூபித்த்து.

அது ஆஸ்பத்திரி, அவள் பணிப்பெண்.

அவள் இளம் சூடான் நீரினால் என் முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தாள். கழுத்து, தோள்கள், நெஞ்சு, இடுப்பு எங்கும் அவளின் கைகள் சுதந்திரமாக ஊர்ந்தன. பின்னர் அவள் காய்ந்த மென்மையான துணியினால் முன்பு துடைத்த இடங்களின்மீதான நீர்ப்பசையை ஒற்றி எடுத்தாள். எனக்கு எவ்வித இடைஞ்சலும் ஏற்பட்டுவிடக்கூடாதேயென அஞ்சியவள்போல் மிகப் பக்குவமாகப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.

எனது கட்டில் அவளின் இடையளவு உயரத்திலிருந்தது. நான் மிகச் சிரமத்துடன தலையணையில் தலையைச் சாய்த்துப் பார்வையை வீசியபோது இடுப்புக்கு மேற்பகுதிகளை மட்டுமே அசைத்துப் பின்னணி இசையின்றி ஆடும் புதுரகமான நடனத்தின் முத்திரைகளை அவள் அபிநயிப்பது போலிருந்தது.

அவளின் முகம் மிக்க மலர்ச்சியோடு காணப்பட்டது.  காலைப் பொழுதில் இயற்கையாகவே ஒரு பெண்ணின் முகத்தில் தோன்றும் மலர்ச்சியை அவள் முகத்தில் பரிபூரணமாகக் கண்டு அனுபவித்தேன். நடுவே சிறிது திறந்திருந்த இதழ்களுக்கிடையே முற்றாத இளம் மாதுளம் பருப்புகள் போன்ற பற்கள் ஒளிர்ந்தன. அவள் குனிந்தபோது இளம் மார்பகங்கள் என் கண்ணூடாக என்னுள் உருகி வழிந்தன. என் கண்கள் நிலைகொள்ளாமல் அவள்மீது பரவியபோதெல்லாம் அவள் முகத்தில் முறுவலின் ரேகைகள் படரக் கன்னங்கள் செம்மை பூத்தன.  படிய வாரி அள்ளிமுடித்த கூந்தலில் ஒருசிறு கற்றை விலகிக் காற்றடித்த போதெல்லாம் அவளின் இதழ்களைத் தடவி ஏதோ கேட்டது . உடலை ஒட்டிய சீருடை அவளுடைய இளமையை அடக்கமாகத் தெரிவித்துக் கொண்டிருந்தது. அவளது விழிகளைச் சந்தித்த ஒரு விநாடிப் பொழுதில் எனக்குள் ஒரு அற்புத பிரமிப்புச் சுடர்விடுவதை உணர்ந்தேன்.

அதுவரை அவள் எதுவும் பேசாமலே என்னையே எனக்குள் பேசவைத்துக்கொண்டிருந்தாள்.

என் நெற்றியில் அவள் கையை வைத்ததும் நான் கண்களை மூடிக்கொண்டேன். அவளின் மெல்லிய, பசுமையான கைவிரல்களை மிக அருகில் பார்க்கவே எனக்குக் கூச்சமாயிருந்தது. நான் கண்ணை விழித்தபோது அவள் அங்கிருக்கவில்லை. நான் தனியனானபோதுதான் அந்தக் கேள்வி என்னுள் எழுந்தது.

“எந்த நிகழ்ச்சியின் ஏதுவாய் நான் இங்கு வந்தேன்”?

என்னை இப்படிக் கட்டிலோடு இணைத்துவிட்ட சம்பவம் நிச்சயம் விபத்தாகத்தான் இருக்கவேண்டும். விபத்தில்லாமல் வேறென்ன? விபத்துத்தான்! அது எப்படி ஏற்பட்டது? நினைவுக்கு எட்டும் கடைசி நாளின் சம்பவங்களைச் சரங்களாய்க்கோர்த்துத் தொடர்புகளை உருவாக்க முயன்றேன். சொல்லி வைத்ததுபோல் அந்த நிகழ்ச்சி திரை படிப்படியாக விலக யன்னலூடாக வானத்தின் தோற்றம் விரிவடைவதுபோல் நினைவில் படர்ந்தன.

நான் ஸ்கூட்டரில் வந்துகொண்டிருக்கிறேன். சந்தியில் இடப்பக்கமாகத் திரும்பவேண்டும். இப்போதைய வேகத்தைக் குறைத்து 20 பாகை சரிவில் வளைவில் திரும்புகிறேன். திரும்பி ஒருசில அடிகள் தூரத்துக்கு மட்டும் நிதானம் என் கைகளுக்குக் கீழ்ப்படிகிறது. அடுத்த கணத்தில் பாதையை முழுக்க அடைத்தபடி எதிரே சீறிவரும் லொறியைத்தான் காண்கிறேன். அதைக் கண்டு வெருண்டதுபோல் நிதானம் மேலும் அடங்கமறுக்கிறது. எப்படியோ ஒதுங்கித் தப்பும் வழியை அறிவதற்குள் லொறியின் முன்பக்கம் என் ஸ்கூட்டரை மூர்க்கமாக முத்தமிடுகிறது. அந்த நெருக்கலில் பிதுங்கப்பட்டவன்போல் நான் வீசி எறியப்படுகிறேன். சாலையோரமாகக் காய்ந்துபோய்க் கிடந்த மண் தன் அகோர விடாயைத் தீர்க்க என் உதிரத்தை உறுஞ்சுகிறது. யாரோவெல்லாம் ஓடிவருகிறார்கள். எல்லார் முகங்களும் என்னைப் பரிதாபத்துடன் நோக்குகின்றன. சிலரின் கண்களில் நீரே துளிர்த்துவிடுகிறது. சிலர் என் நிலைகண்டு சகிக்க மாட்டாமல் தலையைத் திருப்பிக்கொள்கிறார்கள். இன்னும் சிலர் நான் இறந்துவிட்டதாகவே எண்ணி இனி எனக்கு என்ன செய்தும் பிரயோசனமில்லையென்ற விரக்தியில் ஆழ்ந்துவிடுகிறார்கள். விபத்தின் சாதக பாதகங்களை வைத்துச் சட்டப் பிரச்சனைகளில் இறங்குகிறார்கள் சிலர். அதனால் அவர்களுக்குள் மனஸ்தாபமும் ஏற்பட்டுவிடுகிறது. அகன்ற கழுத்துள்ள ரவிக்கை அணிந்த பெண் தன் நெஞ்சில் சிலுவை அடையாளம் செய்து எனக்காகப் பிரார்த்திக்கிறாள். இந்த அவசங்களுக்குள் அகப்பட்டுக்கொள்ளாத இருவர் எப்படியோ என்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள்.

சம்பவங்களின் சரங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் அலைவரிசைகளாய்த் தோன்றித் திடீரென ‘நறுக்கெனக்’ கத்தரித்துவிட்டனபோன்று நின்றுவிடுகின்றன.

அப்புறம் நான் என்னவானேன்?

பாரிய விபத்தில் சிக்கியவனுக்குரிய விசேட வரவேற்புகள் கிடைத்திருக்கும். எனது அனுமதியின்றியே என்னை எங்கெல்லாம் அறுத்து ஒட்டவைத்திருப்பார்கள். இந்த உடலின் வேதனைகள் அதனைத்தான் சொல்லி அழுகின்றன.

‘இதோ நான் இருக்கிறேன்’ என்ற உண்மையின் சொரூபத்தில் எதையும் நான் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். என்றாலும் இந்த ‘உண்மையை’ நிலை நிறுத்திய செயல்களை நான் அறிந்தாக வேண்டும்.

அவற்றை யாரிடம் கேட்டறிவேன்?
அவளிடம் கேட்கலாமா?
அவளைத்தான் கேட்கவேண்டும்.
அவளுக்குத் தெரியும். நிச்சயமாகத் தெரியும்.
இனி அவள் வருவாள்தானே!
வருவாள், வராமலும் விடுவாள்.
ஏன் அவளைத்தான் கேட்கவேண்டும், இன்னொருத்தி இல்லையா?
டாக்டர் இருப்பாரே, அவருக்குத் தெரியாததுதான் என்ன?
யார் இல்லையென்றார்கள்!
அவளைப்போல் எத்தனையோபேர் இருக்கக்கூடும்.
எல்லாரும் அவளாக முடியுமா?
நான் அவளைத்தான் கேட்பேன். அவளையே நினைப்பேன்.
அவளே வேண்டும்.
அவள், அவள், அவளேதான்!

அந்த முகம், அதன் ஒளியில் அறையில் கவியும் நிழல்களின் சாயல்கள்கூட அமிழ்ந்து விடுகின்றன. ஜ்வலிக்கும் விழிகளின் வீச்சில் என் உடல் வேதனைகள் பொசுங்கிவிட்டாற் போன்று நான் மென்மையடைகிறேன். மெத்தென்ற விரல்களின் ஸ்பரிசத்தில் கொதிக்கும் குருதிக் கலன்கள் தண்மையடைகின்றன. ஏகாந்தத்தில் அனுபவிக்கும் பால் நிலவாய் அவள் குளிர்கிறாள்.

என்னைப் பொறுத்தவரை அவள் பெயர் பானுமதி!

நானே அவளுக்குப் பெயர் சூட்டுவேன். எனக்குள் அவளை அடிக்கடி அழைப்பேன். வெளியிலும் அழைப்பேன்.

“பானூ....!
அவளுக்குக் கேட்குமோ கேட்காதோ?
நான் வாய்திறந்து அழைக்கவில்லையே!
அப்படியிருந்தும் அவளுக்குக் கேட்கும், நிச்சயம் இதுவரை கேட்டிருக்கும்!
அதோ வருகிறாளே, என்னை நோக்கி, உணராமலா வருகிறாள்?
கிட்டே வருகிறாள்!

அது அவளல்ல. இன்னொரு பணிப்பெண். பானுமதியிலும் பார்க்க இருமருங்கு தடித்த உடல். முன்பு இடை இருந்த இட்த்தில் தசைக்கோளங்களின் அக்கிரமிப்பு அவளின் சீருடையை விம்ம வைக்கின்றது. தூக்கணாம் குருவிக்கூடுபோன்று தொங்கிவிழும் மார்பகத்தை உப்பிய வயிறு தாங்கிக்கொண்டிருக்கிறது. கன்னங்களும் உப்பிப்போய்விட்டதனால் கண்கள் இன்னும் சிறியவைபோல் தோன்றுகின்றன. இவ்வளவுக்கும் அவளிடத்தில் ஒரு கவர்ச்சி இருந்தது. அவளின் ஒழுங்காஅன் அசைவுகள் அவளின் தொழில் திறமையை நிரூபிக்கின்றன. இதனால் அக்கவர்ச்சி பன்மடங்கு பெருகிவிட்டதுபோல் தோன்றுகின்றன.

அவள் சில்லுகள் பூட்டிய சிறிய துரளியை என்பக்கமாகத் தள்ளிவந்தாள். அதன் மேல்தட்டில் சின்னதொரு டிஸ்பென்சரியே இருந்தது. நான் தன்னைக் கண்களால் அளவெடுக்கிறேனென்று தெரிந்தும் தன் தொழிலுக்கேயுரிய கடமையுணர்வோடு என்னை நோக்குகினாள். தொடர்ந்து தேர்மோ மீட்டரில் என் உடல் உஷ்ண நிலையைக் கணித்து என் காலடியில் பதிந்தாள். என் தொண்டையில் ஏதோ இராசனக் கலவையை வார்த்தாள். கையோடு என்னைக் குழந்தையாய்க் கருதி வாயைத் துடைத்துவிட்டுத் திருப்தியோடு தன் கடமையை முடித்துக்கொண்டு நகர்ந்தாள்.

தொண்டையில் ஈரம் ஊறிய அந்தக் கணத்தில் அதுவரை மரத்துப்போயிருந்த என் நாக்கு விழித்திருக்கவேண்டும். அது வயிற்றின் செயற்பாடுகளை மேல்வாங்கிப் பிரகடனப் படுத்திகொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்னும் எத்தனையோ புதிய பொறிகளை இயக்கிவிட்டதுபோன்று, பிரதான மண்டபத்தின் விளக்குகள் அனைத்தையும் ஒன்றுசேர ஏற்றிவிட்டதுபோன்று உடம்பின் நரம்புக் கால்வாய்கள் உணர்வால் நிரம்பித் துடித்தன.

முதலில் பானுமதியைக் கண்டபோது எனது உள்மனம் விழித்துக்கொண்டது. இப்போது இந்திரியங்களின் விழிப்பினை உணர்ந்தேன். உணர்ந்தென்ன, எல்லாம் ஒருசில நேர ஆர்ப்பாட்டங்கள். மறுபடியும் தம்முள் ஒடுங்கிப்போவதன் அறிகுறியாய் புதிய அக்கினி நிலை தணிந்து, குளிர்ந்து படிப்படியாய் அடங்கும் இதம்.

நான் சுற்றுப்புறம் பார்வையைச் செலுத்த முயன்றேன். எனினும் விழிகள் அசைய மறுத்தன. தூக்கமே சொர்க்கம் போலவும் அதில் அமிழ்ந்துவிடுவதில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் சங்கடமே வேண்டியதில்லைப் போலவும் தோன்றியது.

இமைகள் பாரத்தால் அழுந்தின. விழிமேடுகள் விழிக்கூரையில் சொருவிக்கொள்ளக் கண்மணிகளை இருள் சூழ்கின்றது. அரைமயக்கத்தில் நரம்புகளே கண்களாய்ச் சோர்கின்றன. உடலை அழுத்தும் சுமை தளர்ந்துகொண்டுபோக நான் பஞ்சாய் மிதப்பது மயக்கத்திலோ ஆகாயத்திலோவென்ரு தெரியவில்லை. இந்த நிலையில்தான் என்னுள் அந்த ‘விழிப்பு’ ஏற்பட்டது. எனினும் எதன்மூலம் அந்த விழிப்புச் செயல்படுகிறதெனத் தெரியவில்லை.

ஆத்மாவின் விழிப்பு!

அந்தரங்கமாய் என்னுள் ஜீவிக்கும் உட்பிரக்ஞைதான் இந்த ஆத்மாவோ? நான் என்ற அகங்காரத்துக்குத் துணை நிற்கும் இந்த உடலின் உணர்ச்சிகள் உள்நுழையமுடியாத கர்ப்பக்கிரகத்தில் கரந்துறையும் நித்தியமான சக்தியாய் இது இருக்கவேண்டும். இல்லையேல் மயங்கவும் முயங்கவும் மட்டுமே ஆசைகொள்ளும் இந்திரியங்களின் செயற்பாடுகளையும் மீறி இவற்றால் நுகரமுடியாத உணர்வுகளுக்கு எப்படித்தான் என்னை அழைத்துச்செல்ல முடிகின்றது? நான் பானுமதியிடம் கேட்டு அறிந்துகொள்ள ஆவல்கொண்டவை இதோ ஆத்மாவின் விழிப்பில் இரைமீட்கப்படுகின்றன. அவை நிகழும் காலத்திலேயே அவற்றைப் பார்ப்பதுபோல் பிரமையை உணர்த்துகின்றன.

வெயிலின் வெப்பத்தில் காலம் கரைந்துகொண்டிருக்கின்றது. பொழுதுகள் பலப்பலவாய் மாறி நாட்களாய் முழுமைபெறுகின்றன. மூன்று முழு நாட்களாக என் உடல் துவண்டு அசைவற்றுக் கிடக்கிறது. மெல்லியதாய் இழையும் மூச்சு எனது வாழ்வின் நிச்சயமற்ற தன்மையைக் கோடிட்டுக் காட்டிக்கொண்டிருக்கிறது. அதன் கால எல்லைகளை வரையறை செய்வதில் தமக்குள்ள அதிகாரத்தைப் பிரயோகிக்கும் டாக்டர்கள். தமது திறமையை மீறிய எந்தச் சக்தியும் எனது மூச்சின் நூலிழையை அறுத்துவிடாதபடி அவர்களின் தீவிர கண்காணிப்பு. இறுமாந்த நிலை. கரைந்துசெல்லும் ஒவ்வொரு விநாடியும் டாக்டர்களின் வெற்றியை ஊர்ஜிதப்படுத்துகின்றன. நான் புனர்ஜென்மம் எடுக்கிறேன்.

உடற்கூறுகள் சாத்திரம் லேசுப்பட்டதல்ல. அதனுடைய தத்துவங்கள் இயற்கையின் நியதிகளோடு பொருதி வெல்வதெல்லாம் டாக்டர்களின் நாவிலும் விரல் நுனிகளின் அசைவுகளிலும் தங்கியிருக்கின்றது என்பதை நம்பவேண்டியிருக்கிறது.

நம்புகிறேன்!
அவற்றுக்கு நான் மனமார நன்றி செலுத்துகிறேன்!      

என்னைப் பார்ப்பதற்கு முதன்முதலாக ஆட்களை அனுமதிக்கிறார்கள். எனது கட்டிலோடு ஒட்டியபடி அம்மா, அப்பா, உறவினர் ஓரிருவர், ஆசிரிய நண்பர்கள்.

உயிர்க்குருத்துகள் முழுமையாகக் கருகிவிடாத நிலையில் என்னைக் காண்பதில் அம்மாவுக்கு அழுகையினூடே மிக்க ஆனந்தம். நீர்த்தேக்கத்தில் அமிழும் விழிகளில் அந்த ஆனந்தமும் ஆழமான பாசமும் தொற்றி நிற்கின்றன. அப்பா துயரம் தாளாது மௌனமாகவே கரைகிறார். இடையிடையே வந்தவர்களின் கேள்விகளுக்குப் பதிலிறுக்கிறார். ஓரிருவர் அப்பாவிடம் ஏதாவது கேட்கவேண்டுமேயென்ற சம்பிரதாயத்துக்காகப் பொருத்தமில்லாத கேள்விகளைக் கேட்டு அவற்றுக்கு அவர் பதில் சொல்லத்தெரியாமல் மௌனமாகும்போது அவற்றுக்கான பதில்கள் தமக்கு ஏற்கனவே தெரியும் என்ற பாவனையில் அவர்கள் அவருடைய மௌனத்தை அங்கீகரிக்க, அப்படியானால் சரிதான் என்றளவில் அவர் மீண்டும் கரைகிறார். நான் அகப்பட்டு மீண்ட விபத்தின் கொடூரத்தை அவரவர் தங்கள் கண்ணோட்டத்தில் எடுத்து அலசுகிறார்கள்.

வந்தவர்கள் போகிறார்கள்; புதியவர்கள் வருகிறார்கள். பொழுதுகள் மாறுகின்றன. புதிது புதிதாய் மருந்துகளைச் சுவைக்கிறேன்.

நிகழ்ச்சிகள் தொடர்ந்து உட்பிரக்ஞையின் பார்வைக்கு எட்டாது மங்கிக்கொண்டு போகத் திரும்பவும் கட்புலனின் விழிப்புக்குக் கூடுபாய முனைகிறேன்.

தூக்கமா விழிப்பா என்று கூறமுடியாத மருண்ட நிலை. உட்பிரக்ஞையின் பார்வையிலிருந்து வழிந்திறங்கி நனவுலகில் அடிவைப்பதில் தெரியும் புதிய சூழல்.

எங்கும் அமைதி!
வெண்சிட்டுகளாய் நடந்து திரியும் பணிப்பெண்களின் பாதக்குறடுகள் மாத்திரம் சப்திக்கின்றன. மற்றும்படி ஆழ்ந்த அமைதி. இடையே,
மாடியில் ஸ்ட்ரெச்சர்  வழுக்கிச் செல்லும் லாவகம்.
அடிக்கிளாஸில் கரண்டியை விட்டு ஹார்லிக்ஸ் கரைக்கும் களகளப்பு.

நனவுலக நிகழ்ச்சிகளை முன்னைப்போல் கிரகிக்கும் திறன் எப்படியோ கூடிவிடுகின்றது. மனம் குதியனடித்துக்கொண்டு ஓட விழையும் குழந்தையாய்த் திமிறும் புளகாங்கித நிலை. அதன் கடிவாளம் என்னிடம் எப்போதுமே இருந்ததில்லை. இப்போதும் இல்லை.

மனதிற்குக் கடிவாளம்தான் ஏது?

ஒரே முனைப்பு. அதன் மையத்தில் ஒடுங்கும் சிந்தனை. ஒடுங்க ஒடுங்க மோனப் பெருவெளியில் மிதக்கும் பரவசம் சூழு. ‘நான்’ என்னும் அகங்கரத் தன்மை அகன்று எல்லாமே சூனியமாக, என்னிலும் கோடிப்பங்கு சக்திமிக்க ஒளியின் துணுக்கை அணுகிப் பொலிவடைவேன். அந்தத் துணுக்கே பிறகு பல்கிப் பெருகி உலகையளந்து மேவி நிற்கும். அதில் சங்கமிக்க விழையும் ஆவேசத் தூண்டுதல்கள்...

அதையடைந்து, அதற்கப்பாலும் போய்..
போகமுடிகிறதா? போகத்தான் விடுகிறதா?
இந்த உலகின் மீதான பிணைப்பு,
பொருட்களின்மீதுள்ள பேராசை,
மாந்தர்களின் பாசம்,
பெண்களின் போதை.....

மனிதர்கள் அனைவரும் துறவிகளாகிவிடாதபடி எத்தனை கண்காணிப்புகள்!

எல்லோருமே துறவிகளாகிவிட்டால் இந்த உலகில் என்னதான் நடந்துவிடும்? படைப்பவன் ஏன் ஒழிந்து நிற்கிறான்? பெண் மட்டும் ஏன் படைப்பின் கருவி ஆகிறாள்? பிரசவ வேதனையில் ஏன் ஆண்களுக்குப் பங்கு இல்லை? இலக்கியப் படைப்பாளிகள் ஏன் தங்களைப் பற்றிப் பெருமையடித்துக்கொள்கிறார்கள்? டாக்டர்கள் ஏன் ‘ஸ்டெத்தை’ வீட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள்? சாராயக் கடைகள் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கின்றன? உத்தியோகத்தர்கள் ஏன் வீட்டுக்குப்போக அவதிப்படுகிறார்கள்? பஸ் கண்டக்டர்களுக்கு ஏன் மிகுதிக் காசைக் கொடுப்பதில் இவ்வளவு ஞாபக மறதி? யாழ் தேவிகள் ஏன் இன்னும் மோதிக்கொள்ளவில்லை? கனவுகள் ஏன் நிறங்களில் தோன்றுவதில்லை? நான் ஏன் பானுமதியை நினைத்துக் கொண்டிருக்கிறேன்?

என்ன இது! இக்கேள்விகளுக்கெல்லாம் எங்கே பதில் இருக்கிறது?

நினைப்பதெல்லாம் முடிவில் வந்து பானுமதியிடம் சரணடைவதன் அர்த்தம் என்ன?

நான் அவளை விரும்புகிறேனா? விரும்புகிறேனென்றால் ஏன் விரும்பவேண்டும்?

பெண்களின்மேல் கொள்ளும் விருப்பங்களுக்கு முடிவு ஏது? பெண்ணால் புறக்கணிக்கப்படும்வரையா? அல்லது பெண்களை வெறுக்கின்றவரையா?

அப்படியானால் பானுமதியை எப்போது விரும்ப ஆரம்பித்தேன்? எப்போது வெறுப்பேன்?

நினைக்க ஆரம்பித்தால் எல்லாவற்றையும்தான் நினைக்கவேண்டியிருக்கிறது.

ஆனால் அவை திரும்பவும் பானுமதியில் வந்து முடியும் மர்மம் என்ன?

அவளிடமிருந்து அப்படி என்ன புது அனுபவம் எனக்குக் கிடைக்கப்போகிறது?

இதுவரை நான் பழகிய பெண்களிடமிருந்து கிடைக்காத அனுபவமா?

வெறும் பேச்சுக்கள், அர்த்தமற்ற சிணுங்கல்கள், தேவையற்ற சிரிப்புகள், இரட்டை அர்த்த வார்த்தைகள்....

இவைகளை எதிர்பார்த்து நான் அவர்களுடன் பழகவில்லையே! அவர்கள் ஏனோ விடாப்பிடியாக அப்படி நடந்துகொண்டார்கள். அவர்களைப் புரிந்துகொள்வதற்கு அவை வழிகாட்டலாம் என்று நினைத்துக்கோண்டார்களோ!

இந்தப் பெண்களே இப்படித்தானா?

இவர்களுக்கு எப்படித் தெரியப்போகிறது? பெண்களைப் பொறுத்தவரை என் முனைப்புகளே பவித்திரமானவை.

அழகில் மயங்குவதில் நான் என்னை மறப்பேன். அதன் உபாசகனாக இருப்பதில் அசாத்திய பெருமிதம் அடைவேன். கடலலைகளின் ஒழுங்கான அசைவிலும், விண்ணில் வெண்மையாய்க் கருமையாய்த் திரளும் மேகங்கள் விநாடிக்கொரு உருவம் எடுத்து அந்த உருவத்துடனேயே தம்முள் கூடிக் கலந்து புதிய மேகச் சிதறல்களைச் சிருஷ்டிப்பதிலும், கண்ணுக்குப் புலப்படாத காற்றின் மென்மையில்கூட அஞ்சத் தகுந்த அழகு தெய்வீகமாய்ச் சுடர்விடுவதை உணர்வேன். செவ்விளநீரின் நிறத்தில், அதன் மேற்பரப்பின் வழுவழுப்பில் ஓர் அற்புத அழகு என்னைக் கவர்ந்திழுக்க அதை முழுமையாகவே விழுங்கிவிட்டால்தான் உண்டு என்ற உந்தல், அழகு என்னுள்ளெ ஏற்படுதிய சாதனையேயன்றி வேறென்ன? இயற்கையின் இந்த அழகுகளையெல்லாம் பெண் என்ற படைப்பில் ஒருங்கே காணுகின்றபோது பிரமிப்பிலிருந்து விடுபடமுடியாமல் மனமே அழகால் நிறைந்து நெகிழ அதற்குரிய பிம்பத்தைக் கையெடுத்து வணங்கவேண்டுமென்ற தூண்டுதலுக்கு ஆளாகிறேன். அழகின் முன்னால் அடிமைப்பட்டு என்னை இழக்கும்போது நான் மனிதத் தன்மையிலிருந்து எவ்வளவோ உயர்ந்து நிற்பதுபோல் உணர்கிறேன்.

ஒரு பெண்ணில் அந்த அழகின் பிறப்பிடந்தான் எது என்று நிரணயிக்க முடியாதபடி அது அவள்மீது எங்கும் நிறைந்திருக்கவேண்டும். முகத்தின் முன்னால் விழும் மயிர்க்கற்றைகளில், அதைக் காதோரம் ஒதுக்கும் விரல்களின் பசுமையில், குறுகி வளைந்த நெற்றியில், புருவங்களின் இசைவில், விழிகளின் வீச்சில், நாசியின் நிமிர்வில், கன்னங்களின் மழமழப்பில், இதழ்களின் துடிப்பில் கழுத்தின் கடைசலில், மார்பின் கூர்மையில், இடையின் ஒடுங்கலில், நடையின் நேர்த்தியில், குரலின் இசையில்... எங்குமே ஒரு தேஜஸ் நின்று அமைதியாய்ப் பிரசங்கிப்பதுபோல் இருக்கவேண்டும்.

மழை பெய்ததும் மண்ணிலிருந்து எழும் மணம்போல அவளுக்கென்றொரு மணமுண்டு. அந்த மணத்தில் அவளின் அழகும் இயல்புகளும் இழைந்து மகரந்தமாக என் சுவாசத்துடன் சங்கமிக்கவேண்டும். இதற்கு அவளை நான் முதலில் அணுகவேண்டும். அணுகியதும் மெள்ள நிதானித்து நான் தேடும் மணத்தை அடையாளம் கண்டு, மாறா வேகத்தில் பக்குவமாய் அவளின் மணத்தை என் மூச்சோடு பிணைத்து இழுத்து அதனையே முற்றுமாய் என் சுவாசப்பைகளில் நிறைத்து, என் உடல் இழையங்கள் எங்குமே அம்மணம் வியாபித்துவிட்டாற் போன்றும் அவளின் மணத்தினூடான அணுகல் மூலம் அவளது பெண்மையின் மெல்லியல்புகளைத் தன்வயமாக்கிக்கொண்டது போன்றும் அனுமானம் ஏற்பட்டு அதன் நிறைவில் என் முனைப்புகள் முழுமைபெறும். அந்தச் சுகானுபவத்தில் ஏற்படும் பெருமிதம்; அந்த விநாடிகளே அற்புதமானவை!

அவை என்றைக்கும் போலியாதல் கூடாது.

அவற்றின் சிரஞ்சீவித் தன்மையை நிறுவவேண்டும். அவற்றுக்குக் கருவியாகித் தன்னை முழுமையாய் அர்ப்பணிக்க ஒருத்தி எனக்கு வேண்டும். அவளின் இசைவுடன் அவளின் மணத்தில், பரிசவுணர்வில், விழிக்கதிர் மோதல்களில் அவளை ஆட்கொண்டு அதன்மூலம் என் முனைப்புகள் சிரஞ்சீவித்தன்மை பெறவேண்டும்.

அந்த ஒருத்தியை நெஞ்சில் இருத்தி எத்தனை காலம் என் தேடல் நடந்துகொண்டிருக்கிறது!

இப்போதுகூட...

பானுமதி ஏன் அந்த ஒருத்தியாக இருக்கக்கூடாது?

இதுதான் என் நினைவுகள் கடைசியில் என்னையறியாது பானுமதியிடம் வந்து சரணடைவதன் விந்தையின் காரணமோ?

பானுமதி!

அந்த ஒரு சொல் என்னுள் எத்தனை ஜாலங்களை ஏற்படுத்துகின்றது!

என் நோவுகளுக்கெல்லாம் மருத்துவம் அந்த ஒரு சொல்தானோ?

பானூ...

என் உதடுகள் ஒருமுறை சந்தித்து ஒலியெழுப்பி மறுபடியும் முன்னே குவிந்து மனத்தின் ஓங்காரமாய் ஊ...ழையிடுகின்றது!

இம்முறை சப்தமே வந்துவிடுகிறது. சில நாட்களாக என்னுள் திரண்ட சக்திகள் அந்த ஒரு அழைப்பில் தம்து முழுப்பலத்தையும் பிரயோகிக்கின்றன. தொடர்ந்து யாரோ விரைந்து வரும் அரவம்.

புறா!

அவள் பானுமதியேதான்!

எனது பானுமதி!

பானூ...

இப்போது சப்தம் வெளிவரவில்லை. சக்திகள் என் முதல் அழைப்பின்போது விரயமாக்கப்பட்டிருக்கவேண்டும்.

இனி அழைக்கவேண்டியதில்லை. அவள்தான் அருகில் வந்துவிட்டாளே!

எனக்கு முதல் விழிப்பை ஏற்படுத்தியவள், பிறகு என் ஆன்ம விழிப்புக்குத் துணை நின்றவள், என் முனைப்பின் காரணி!

“பானு விரைவில் வந்துவிடு!”

“இதோ வந்துகொண்டிருக்கிறேன்!”

“உன்னை அடையாளம் கண்டுகொள்ள எவ்வளவு தாமதித்தேன்!”

“அதில்தான் எவ்வளவோ இனிமை இருக்கிறது.”

“அப்போ என்னை முன்னமே தெரிந்துகொண்டாயா?”

“தெரிந்துதான் உங்களைச் சுற்றிக்கொண்டிருந்தேன்.”

“என்னைத் தவிக்கவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறாய்!”

“இல்லை! அது பெண்களின் இயல்பு.”

“பொறுமையைச் சோதிப்பதா?”

“இல்லை, பொறுமையைப் போதிப்பது!”

“அது மாத்திரம்தானா போதிப்பாய்?”

“வேண்டியதெல்லாம் போதிப்பேன்!”

“உன்னைக் கண்டுகொண்டேனே, அதுவே போதும் இப்போது!”

“என்னைக் காணவைத்தேனே அதுவே போதும் இப்போது!”

ஒன்றன்பின் ஒன்றாய்!
நானே பானுமதி!
பானுமதியே நான்!
நான் – அவள்!
அவள்-நான்!
நானே அவளாகி நிற்கிறேன். அவளே நானாகி நிற்கிறாள்!
இது என்ன விந்தை!
அவள்,
என்னருகே நிற்கிறாள்-
மணம்!
என் கையைப் பற்றுகிறாள்-
ஸ்பரிசம்!
என் விழிகளைச் சந்திக்கிறாள்-
கதிர்களின் மோதல்!
மணம்! ஸ்பரிசம்! விழிக்கதிர்கள்!

என் முனைப்புகள் இதோ நிதர்சனமாகவே முழுமையடைகின்றன. முனைப்பின் பரிபூரணத்துவம்!

அவள் என்னுள் நிறைகிறாள், முதலில் அவளின் மணமாக, பிறகு படிப்படியாகய் அவளின் மெல்லியல்புகளாக, ஸ்தூலசரீரமாக என்னுள் ஐக்கியமாகிறாள்.

என் இதயத் துடிப்புகள் ஏன் இவ்வளவு வேகத்தில் விரைகின்றன? என்ன பிசாசு வேகம்! உத்வேகம்! பரிபூரணத்துவ எல்லையை அணுகிவிடுவதிலுள்ள ஆவேசம்!

இதோ எல்லை!

இது, இது, இதுவேதான்!

இதன் அற்புத தரிசனத்தில் மயங்குகிறேன். உணர்விழக்கிறேன்.

புலன்கள் ஒடுங்குகின்றன.

நனவு நிலை கழன்றுவிழக் கனவின் பிராந்தியத்தில் பிரவேசிக்கிறேன்.

இதோ சந்தியில் திரும்புகிறேன். இப்போது நான் தனியே வரவில்லை. கூடவே பானுமதியும் வருகிறாள். எனக்குப் பக்கத்தில், முன்னால், பின்னால், எனக்குள்ளே... எங்குமே அவளாகி வருகிறாள். முன்னால் Blind Corner என்ற அறிவிப்புப் பலகை துலாம்பரமாகத் தெரிகிறது. சந்தியில் திரும்பியதும் மெல்லிய பூங்காற்று எம்மை வரவேற்கிறது. சாலையின் ஓரமாக அந்தப் புளியமரம். மேகத்தை மறைத்தபடி அதன் கிளைகள். பூத்துச் சொரியும் அதன் யௌவன கோலம். மெய்சிலிர்க்கிறது!

அதைக் கடந்து மேலே செல்கிறேன். கனவு நிலை கழன்று பஸ்பமாகிறது. அதிலிருந்து விலகி மேலே செல்கிறேன்.

துயில், துரியம், துரியாதீதம்.... இதோ யோகம், ஞானம்!

என் உடலில் ஆன்மா தன் விடுதலைப் பயணத்தை நோக்கி விரையும் நிலைகொள்ளாத சஞ்சரிப்பை இதோ உணர்கிறேன். அது தன் சிறகுகளை விரித்து என் உடற் கூட்டிலிருந்து செல்வதிலுள்ள குதூகலம்!

அது கடந்து செல்லும் நிலையங்கள் நினைவிலிருந்து மங்குகின்றன.

அவளின் முறுவல் மாத்திரம் என்னுள் ஆழ்ந்து நிற்கிறது; ஆன்ம விடுதலையில் அதன் பங்கு எவ்வளவு மகத்தானது!
--------

அலை - 1978 வைகாசி

No comments:

Post a Comment