Jun 27, 2013

நெஞ்சு பொறுக்குதில்லையே!


நோயினில் நொடியினில் நலிந்தவர் கண்டு
நெஞ்சம் வெடிக்கிறது
நாவினில் நஞ்சினை நனைத்தவர் பேச்சால்
நரம்புகள் துடிக்கிறது.

போரினில் மாண்டவர் புகழினைப் பாடிப்
பொருளினை ஈட்டுகின்றார்
வேருடன் சாய்ந்ததன் காரணம் கேட்டால்
புலிகளைச் சாடுகின்றார்.

சேற்றினில் உழுது சோற்றினை அளித்தவர்
சிறையினில் வாடுகின்றார்
கூற்றினும் மேலாய் கொடுமை புரிந்தவர்
கொழுப்பினில் ஆடுகின்றார்.

போரினால் உழன்று புகலிடம் இழந்தோர்
புழுதியில் மாழுகின்றார்
பாராளு மன்றில் பதவிகள் பெற்றோர்
பொய்யினில் வாழுகின்றார்.

புத்தனைத் தொழுகிற கரங்களில் தமிழன்
குருதி வழிகின்றது
போதியின் மடியில் மானுட நேயம்
புதைந்தே அழிகின்றது.

நீதி பிழைத்தவர் நேர்மை இளைத்தவர்
நாட்டினை ஆளுவதோ
நாயினும் கேடாய் நம்மின மக்கள்
நாளும் மாளுவதோ?

1 comment:

  1. இன்றைய நிலையை அருமையான வரிகளில் தந்திருக்கிறீர்கள்.
    இன்றுதான் இந்தப் பக்கம் வந்தேன்.
    மகிழ்ச்சி. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete