Jul 10, 2014

ஒரு உலகம் இரு துருவம்


வாடைக் காற்றின் மெல்லிய வீச்சால் தெருவோரத்து வேலியின் மேலாய் தென்னங்கீற்றுகள் அசைந்தாடுகின்றன. அண்மையிலொரு வேப்பங்கிளையில் ஆங்காங்கே விளையாடும் சிட்டுக்களின் குரலிசையில் மனம் லயிக்கின்றது. மாலை வேளையின் பொன் வெய்யில் கண்ணுக்கு இதமூட்டுகின்றது. நான் நடந்துகொண்டிருக்கிறேன்.

அதோ தூரத்தில் விண்ணை முட்டியபடி நிமிர்ந்து நிற்கும் நல்லூர் முருகன் ஆலயக் கோபுரம் தெரிகிறது. அதன் உச்சியில் அருள் சுரக்கும் “ஓம்” என்ற எழுதுக்கள் எவ்வளவு துல்லியமாய்த் தெரிகின்றன. நீண்ட சாலையின் ஓரம் வரிசையாய் அமைந்த வீடுகளில் மாலை வேளையின் ஒருவகைத் தனிமை குடிகொண்டிருக்கிறது. அதற்கும் நான் இன்றுவரை அனுபவிக்கும் தனிமைக்கும் ஏதாவது உறவு இருக்குமா? ஓ! அதுதான் எவ்வளவு கொடியது! நாளும் பொழுதும் அவளின் நினைவை ஊட்டி வளர்த்து இன்று இதயத்துக்குள் செழித்த மரமாய் வளர்ந்து நிற்கிறதே அது! எத்தனை காலமாய் அந்தத் தனிமையுணர்வை எனக்குள்ளே சிறைவைத்து என்னையே கொன்றுகொண்டிருக்க முடியும்? இன்று நிகழவிருக்கும் சந்திப்போடு இந்த வேதனையிலிருந்து விடிவு ஏற்படாது போய்விடுமா? நான் நடந்துகொண்டிருக்கிறேன்.

என்னுடைய திருமணம் நடந்தேறி இத்தனை நாட்கள் கடந்த போதிலும் அவளைக் காணவேண்டுமென்று செல்வது இதுதான் முதல் தடவை. அதிலிருந்து கனவுபோல் கழிந்த ஒரு கால இடைவெளிக்குள் தூரத்தில் இருந்தபடியே மௌனமாக அவளை ஓரிரு தடவை நினைக்கத் தோன்றியதேயொழிய ஒருமுறையாவது அவளை நேரில் காணவேண்டுமென்ற ஆவல் எனக்குத் தோன்றியதில்லை. ஆனால் இப்போது, வாழ்க்கையில் முன்பு விளங்கியிராத எத்தனையோ அர்த்தங்களை அனுபவத்தில் விளங்கிக்கொள்வதற்காகப் பெற்ற துணையையே இழந்து தனிமரமான பிறகு, வாழ்க்கையை அவ்வளவு மோசமாக, நினைவுகளின் சிறைவாசமாக் ஆக்கி என்னையே வருத்திக்கொண்டபோது அவளைக் காணவேண்டுமென்ற ஆவல் தோன்றியது எனக்கே ஆச்சரியந்தான்.

இதுவரை மூடிக்கிடந்த உணர்வுகள் அவள் நினைவு தோன்றியதும் மெல்லென விழித்தெழுந்ததிற்கு என்ன காரணமோ என என்னால் பகுத்துணர முடியவில்லை. “உன்னை நினைக்க நினைக்க நினைவு நீழுகிறது” என்று அவளுக்கு ஒருமுறை கடிதம் எழுதினேனே, பின்னர் அவளுடைய நினைவென்பதின்றியே கனவுபோல் கழிந்த அந்தக் கால இடைவெளிக்குள் எப்படி வாழமுடிந்தது என்பதையும் என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. இவையெல்லாம் இடையில் வந்து என்னை ஆட்கொண்டு, பின்னர் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் பறந்துபோன அந்த உறவு ஊட்டிய இனிய மயக்கத்தினாலே என்பதையும் என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

மெல்லிய வாடையும் சிட்டுக் குருவிகளின் இசையும் அந்திப் பொழுதின் இனிய சூழலும் மனதை மயக்குகையில் அந்த மயக்கத்தின் சிகரமாக அவளின் அழகிய நினைவுகள் மேலும் என் மனதில் கிளர்ந்தெழுகின்றன. அவை என்றும் மறக்கமுடியாத பசிய நினைவுகள். அவள் –

மங்கை!

நினைக்கின்றபோது நயம்மிக்க கவிதைபோலவும் பழகுகின்றபோது குழந்தையின் களங்கமற்ற உள்ளம்போலவும் எவ்வளவு கண்மூடித்தனமாக அவளின் அன்புப் பிணைப்பில் நான் கட்டுண்டு கிடந்தேன். அப்போதெல்லாம் என்னை அருகில் இருத்தி எத்தனைமுறை அன்பொழுக அழைத்து எண்ணற்ற இரவுகளில் எவ்வளவு இனிய கதைகளையெல்லாம் பேசியிருக்கிறாள். எதிர்காலத்தில் நாம் நுகரவிருந்த நளினமான மயக்கத்தை எத்துணை அழகாகக் கண்முன் ஓவியமாக விபரிப்பாள். அன்பென்ற தெய்வீக உணர்வை ஒரு தேவதைபோல் வந்து எல்லையற்று வழங்கிய மங்கையை எப்படி நான் மறக்கமுடியும்?

இவையெல்லாம் ஊரோடு வாழ்ந்து கல்லூரியில் ஒன்றாய்ப் படிக்கும் காலத்தில்தான். அப்புறம் அவள் பட்டப் படிப்புக்காக கொழும்புக்குச் சென்றுவிட்டாள். எனக்கோ அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவ்வளவு காலமாக என்னோடு போக்கிய பொழுதை விட்டு, என்னோடு அந்த நினைவுகளை மட்டும் விட்டு அவள் போய்விட்டாள். இடையில் ஓரிரு தடவைகள் ஊருக்கு வந்திருக்கிறாள். அப்போதெல்லாம் பேசச் சொற்களற்று மௌனமாகவே அந்தப் பிரிவின் தாபத்தைத் தீர்த்துக்கொள்வோம். அவ்வேளையில் விழிகளால் என்னை அவள் நோக்குகின்றபோது அதன் தண்மையில் அந்தப் பிரிவால் ஏற்பட்ட தனிமை நலிந்து அந்தப் புதிய சந்திப்பிலிருந்து மலரப்போகும் இனிய சுகந்தத்தை நான் நெஞ்சார உணர்வேன். அந்த இனிய அமைதியைக் குலைத்தவாறு திடீரென்று கலகலவெனச் சிரிப்பாள். எனக்கு மிகவும் பிடித்தமான சிரிப்பு அது. அதன் அலைகள் அவள் ஊரைவிட்டுப் பயணமாகிய ஒரு மாதம் வரைக்கும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கும். ஆனால் அந்த உறவுக்குப் பின்னால் இரக்கமற்ற ஒரு இருள் நீண்டு விரிந்திருக்கிறதை நாம் அப்போது உணர்ந்தோமா? காலத்தின் கொடிய கரங்கள் இவ்வளவு பயங்கரமானவையா?

என் திருமணம் நடந்தது.

அந்தப் பிரிவுக் காலத்தில் கிழமைக்கு இரண்டு கடிதங்களாவது அவளிடமிருந்து வந்துவிடும். என் திருமணம் நடந்ததே அந்தக் கிழமையோடு எல்லாமே நின்றுவிட்டன. அவள் வழக்கம்போல் அழகாகச் சண்டித்தனம் பிடிக்கிறாளோ என்றுகூட முதலில் எண்ணினேன். ஆனால் அது பொய்த்துவிட்டது. நான் அனுப்பிய திருமண அழைப்பிதழுக்கே பதில் கிடைக்காதபோது இனி ஒரு சொல்லைக்கூட அவளிடமிருந்து எதிர்பார்க்கமுடியாதென்று நிச்சயமாக உணர்ந்துகொண்டேன்.

வாழ்வில் பற்றுக்கோட்டை வேண்டி நிற்கும் பருவத்தில் என் உயிருக்குயிரான ஒருத்தி எங்கேயோ இருக்க என் பெற்றோரின் ஆவலுக்கும் அன்பு வேண்டுகோளுக்கும் முன்னால் என் திருமணத்துக்கு உடன்பட்டு எல்லாச் சடங்குகளும் நிறைவேறி ஒன்பது மாதங்களுக்குள் யாவற்றையும் பொய்யாய்ப் பழங்கனவாய் மெல்லப் போக்கிவிட்டு இத்தனை நாளின் பின் முன்னைய துணையை நாடி இம்மாலைப் பொழுதில் நீண்ட இவ்வீதியில் நான் நடந்து கொண்டிருப்பது இதுகாலவரையும் ஆற்றமுடியாது அரற்றிக்கொண்டிருக்கும் என் இதயத்துக்கு ஆறுதல் ஊட்ட முயலும் அற்ப முயற்சியாகத்தான் இருக்கிறது. நான் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறேன்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் அவளைப்பற்றிய விபரங்களை என்னால் அறியமுடிந்தது. அவைதான் அவளுடைய நினைவை என்னிடம் புதுப்பித்துவிட்டு வாழ்வின் புதிய அத்தியாயமொன்றை ஏற்படுத்துவனபோல் அமைந்தன. அந்த நெடிய கதையின் ஒரு காலத்தில் மாத்திரம் தோன்றி மறைகிற மலராக அவள் இருக்கவில்லை. என்றும் தோன்றி மறைந்து மறையாமலும் காட்சி தருகின்ற விண்மீன் போன்றிருக்கிறாள் என்பதை அந்த விபரங்கள் எனக்கு உணர்த்திவிட்டன. அந்த உணர்வு ஏற்படுத்திய விழிப்பினால்தான் எத்தனையோ மாதங்களுக்குப் பின்னர் இந்த ஆவல் எனக்கு ஏற்பட்டது. தவிர்க்கமுடியாமல் அடக்கமுடியாமல் என்னுள் கனன்று கொண்டிருக்கிற அதன் அலைகளின் உந்துதலினாலேயே அவளைக் காணப் போய்க்கொண்டிருக்கிறேன்.

அவளைப் பற்றி நான் கேள்விப்பட்ட விபரங்கள் முதலில் என்னைத் துன்புறுத்தத்தான் செய்தன. அந்தத் துன்பத்தினூடு ஒருவகைத் தாபமும் அவள்மீது எழுந்தது.  இப்போது அவளுடைய சக ஆசிரியராகக் கடமையாற்றுகிற என்னுடைய நண்பர் ஒருவரிடமிருந்துதான் அவற்றை அறியமுடிந்தது. எம்முடைய பழைய நட்பையும் உறவையும் அவர் முன்னரே அறிந்தவர். அதனாலேதான் என்னைக் கண்டபோது அவளைப் பற்றிக் கூறிவிட்டார். “பட்டப் படிப்புக்குப் பிறகு இப்போதுதான் ஆசிரியர் வேலையில் சேர்ந்திருக்கிறாள். அவள் கொழும்பிலிருந்து இங்கு வந்ததே இதற்காகத்தான். இல்லையென்றால் இங்கு வருவதை அவள் கொஞ்சமும் விரும்பவில்லைபோல் தெரிகிறது.” என்று அவர் முதலில் அவளைப் பற்றிக் கூறியபோது என்னுள் எழுந்த பரிதாப உணர்ச்சியை அடக்கமுடியவில்லை.

“வேலையில் சேர்ந்த நாள் முதல் வாழ்வில் எதையே பறிகொடுத்தவள் போல் இருக்கிறாளேயென்று பலருக்கு அவள்மீது அனுதாபமும்கூட. என்றாலும் அவளுக்கு இந்த வயதில் இப்படியெல்லாம் நேர்ந்திருக்கக்கூடாது.” என்று அவர் மேலும் கூறிவிட்டு என் மன நிலையை அளக்க முயல்வதுபோல் என்னைப் பார்த்தார். நானோ அவர் முகத்தை நிமிந்து பார்க்கவே திராணியற்று குற்றவுணர்வு நெஞ்சைக் கவ்வ விம்முகின்ற இதயத்தை அடக்கமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தேன்.

இதோ மங்கிய வர்ணப் பூச்சுடன் நிற்கும் மங்கையுடைய வீட்டின் முன்னால் வந்துவிட்டேன். வெளிக் ‘கேட்டைத்’ திறந்தபடி உள்ளே நுழையும் என்னைக் கண்டு நாயொன்று மெல்லக் குரைக்கிறது. மனதுக்குள் ஒரு தயக்கம் குறுகுறுத்துக்கொண்டிருந்ததையும் பொருட்படுத்தாது அடக்கமுடியாதவொரு ஆவல் என்னை உந்தித் தள்ளுகிறது. நான் முன்னேறுகிறேன். வீட்டின் வாசல் கதைவைத் திறந்துகொண்டு யாரோ வருவது கூரைத் தாள்வாரத்திலிருந்து தொங்கும் கொடிகளினூடே தெரிகிறது. நான் ஆவல் மேலிட வராந்தாவின் படிகளின் மேல் அடி வைக்கிறேன்.

நான் எதிர்பார்த்தது வீண்போகவில்லை. உள்ளிருந்து வந்தவள் மங்கையேதான். தீபம் ஏற்றப்படாத அழகிய குத்துவிளக்கைப்போல் எவ்வளவு அடக்கமாக, அமைதியின் உருவாக... திடீரென்று அவள்முன் தோன்றி ஆச்சரியப்படுத்தவேண்டுமென்று ஆவலுடன் வந்தேனே. ஆனால் என்னைக் கண்டதும் அவள் முகத்தில் எவ்வித சலனத்தையும் காணவில்லையே. உணர்ச்சியற்ற பொம்மைபோலல்லவா நிற்கிறாள். வியப்புப் பன்மடங்கு பெருக அவளை நோக்குகிறேன்.

“உள்ளே வரலாமே.” அவள்தான் அழைக்கிறாள். முதன்முறை பழகும் ஒருவரை அழைப்பதுபோல் அழைக்கிறாள். அவள் அழைப்பின்மேல் படியேறி உள்ளே போகிறேன். எனக்கென்று எந்த எதிர்பார்ப்பையும் வைத்துக்கொள்ளாது அந்த ஓசையில் மயங்கி அவளின் நிழலாகிறேன். உள்ளே, அறையெங்கும் ஒரே சிற்பமும் சித்திரமும்தான். எல்லாம் மயங்கி உறங்குகின்றனவென்ற உணர்வை வெளிப்படுத்தின. இந்தப் பெரிய ஹோலில் நிலவி வழிகிற அமைதியூனூடே அவளை நின்றபடியே நான் நோக்குகிறேன். அவளிடமிருந்து குளிர்மையான இனிய வரவேற்பை எதிர்பார்த்துக்கொண்டு வந்த எனக்குப் பெரிய ஏமாற்றம். ஏதோ யந்திரமாகச் செயல்படுபவள்போன்று என்னை அழைத்துவிட்டு முகத்தில் எவ்வித உணர்வையும் வெளிப்படுத்த விரும்பாதவள்போல், சிந்தனையின் கீறல்கள் சிறிதும் படியாத முகத்தோடு விழிகளை மட்டும் என்மேல் பதித்து நிற்கின்ற அவளின் தோற்றத்தைக் கண்டு நான் மலைத்து நிற்கிறேன்.

இதுவரை வேறு எவரையும் இங்கு காணவில்லை. தனிமையான இந்த இடத்தில் தனிமையாக இந்த ஒருத்திதானா வாழ்கிறாள். என் சிந்தனை நீள நீள அவளுடைய உணர்ச்சியற்ற விழிகளும் என்னை நோக்கிக்கொண்டிருந்தன.

“மங்கை! என்னை நீ இன்னும் அடையாளம் கண்டுகொள்ளவில்லையா? இத்தனை நாட்களுக்குள் என் உருவம், அன்பு, நம்மைச் சுற்றி நிகழ்ந்த இனிய நிகழ்ச்சிகள் எல்லாம் உன் நினைவிலிருந்து அகன்றுவிட்டனவா? என்ன, எதுவுமே பேசாதிருந்துகொண்டு என்னைக் கலக்குகிறாயே, மங்கை.” அவளைத் தொட்டு உலுப்பாத குறையாகக் கூறுகிறேன்., என் குரலில் வேகமும் உறுதியும் படிப்படியாக அதிகரிக்கின்றன. கூடவே எதுவோ தொண்டையில் கரகரப்பதுபோன்ற உணர்ச்சியும் தோன்றுகிறது. என்னை அறியாது ஏற்பட்ட துயரத்தின் சாயலா இது?

மெள்ள உரிமையோடு அவளின் கையைப் பற்றுகிறேன். என் கையின் ஸ்பரிசத்தினால்தானோ என்னவோ அவள் விழிகளில் எங்கிருந்தோவொரு மாற்றம், விழியோரங்கள் நீரால் நிறைகின்றன. ஒரு சில வெம்மையான நீர்முத்துக்கள் என் கைமேல் விழுந்து தெறிக்கின்றன. நான் என்னை மறந்து அவளின் தோள்களைக் கையால் வளைத்துக்கொள்கிறேன். அவளுடைய பலமின்மையின் முன் மடிந்துபோன என் பழைய நினைவுகள் தலைதூக்குகின்றன. என் அணைப்பினிடையே நனைந்த விழிகளோடு என்னை நோக்குகிறாள். அவள் இதயமும் நனைந்திருக்கவேண்டும். இத்தனை நேரத்தின்பின் என்னை அறிந்துகொண்டவளாக இப்போதுதான் தென்படுகிறாள். அவள் இதழ்க்கடையில் அழுகை கலந்த புன்முறுவல் தவழுகிறது. “ஈஸ்வரி! என்று உணர்ச்சி ததும்ப அழைத்தபடி என்னை அணைத்துக்கொள்கிறாள். இந்த அணைப்பிலிருந்து விடுபட மனமோ முயற்சியோ இன்றி அதன் இனிமையை நுகர்ந்தபடி நான் அசைவற்று நிற்கிறேன். இத்தனை நாளும் நெஞ்சில் குமைந்துகிடந்த சுமையைக் கரைப்பதுபோல் அவள் விழிகளிலிருந்து நீர் பெருகுகிறது. அதன் ஈரம் என் உடையினூடே கசிந்து நெஞ்சின் சருமத்தில் ஊறுகிறது. அதன் வெம்மையைப் பொறுக்கமுடியாது புதைந்திருக்கும் அவள் முகத்தை உயர்த்துகிறேன். இதுவரை எவரிடமும் கூறாது பதுக்கி வைத்திருந்த தாப உணர்வெல்லாம் பொங்கி வழிகின்றன.

“மங்கை, இதோ பார், நீ இப்போதும் பழைய நினைவுகளை மீட்டு மீட்டுப் புலம்பிக்கொண்டிருப்பதை இனியும் என் மனம் பொறுக்காது. அவற்றையெல்லாம் உன் நெஞ்சிலிருந்து அகற்ற வேண்டுமென்ற ஆவலோடுதான் நான் உன்னிடம் வந்திருக்கிறேன். அவற்றை நினைத்து நாளும் பொழுதும் உருகிக்கொண்டிருக்கிறாயே இத்தனை பெரிய தியாக உள்ளம் உன்னிடம் இருக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவேயில்லை. இத்தனைக்கும் காரணமான நான் செய்த பிழையை மன்னிக்கமாட்டாயா? என் குரல் இறைவன் முன் குறையிரந்து வேண்டும் அடியவன்போல் கூனிக்குறுகி ஒலிக்கிறது.

“ஈஸ்வரி, ஏமாற்றத்தின் பிரதிபலிப்பாக என் வாழ்க்கை அமைந்துவிட்டது என்பது உண்மைதான். ஆனால் இது நீயோ நானோ செய்துவிட்ட குற்றமல்ல. எங்களுக்கும் அப்பாற்பட்ட சக்தியின் வேலை இது. அது ஒரு வேளை விதியாகவும் இருக்கலாம்.” என்று அவள் கூறியபடியே என் அணைப்பிலிருந்து விடுபட்டு யன்னலின் அருகே வந்து வெளியே மூடிக்கிடக்கும் இருளை நோக்கியவாறு நிற்கிறாள்.

“நாம் ஏமாறுகின்றபோதெல்லாம் விதியையே காரணம் காட்டித் தப்பித்துக்கொள்ளுதல் எவ்வளவுக்கு நியாயம்? உண்மையில் நடந்ததென்ன? அந்த நாட்களில் எவ்வளவு உயிருக்குயிராய்ப் பழகினோம். எவ்வளவு கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம். எங்கள் நட்பின் தூய்மையையும் பண்பையும் எவ்வளவு உயர்வாக நான் கற்பனை பண்ணிக்கொண்டேன். அது கடைசியில் எமக்கிடையில் எந்தவித ஒழிவு மறைவும் இல்லையென்று எண்ணி என்னையே நான் ஏமாற்றிக்கொண்டதாகத்தான் முடிந்தது. இதனால் உனக்கும் என் கணவருக்கும் இடையில் என் திருமணத்துக்கு முன் ஏற்பட்ட காதலை அறியமுடியாதிருந்தது. அத்தனை ரகசியமாக உயிர்ச் சினேகிதியாகிய எனக்கே சொல்லாமல் உனக்குள்ளேயே அந்தக் காதலை நினைத்து மகிழ்ந்துகொண்டிருந்தாயோ?

“எங்கள் நெஞ்சத்தில் இளமை நினைவுகள் முகிழ்த்த காலம் அது. அதையெல்லாம் எவ்வளவு அழகாக எழுதுவாய். அவற்றை அனுபவத்தில் காண்பதுபோல் நானும் கனவில் லயித்தபோது எங்கள் திருமணப் பேச்சு நடந்தது. திருமணத்தின்போது என் கணவரை நான் வணங்கி எழுந்தபோது தன் கையிலே என்னை ஏந்தி உற்று நோக்கினார். அப்போதும் அவரிடம் களங்கமற்ற குழந்தையின் முகத்தையே கண்டேன். இடையில் அவர் மிக மோசமான விபத்தில் அகப்பட்டு உயிர் பிரிகின்ற வேளையில் கண்ணீருக்கிடையில் உன் கதையை மிகுந்த உடல் வேதனைக்கிடையே கூறினார். ஆனால் உன்னை மறந்து என்னை மணக்கவேண்டி வந்ததற்கு என்ன காரணமோ அதை எனக்குக் கூறமுன் அவரின் உயிர் பிரிந்தது.

“ஆண்களின் மனம் சந்தர்ப்பத்துக்கேற்றவாறு மாறும். அதற்கேற்றவாறு பெண்களின் உள்ளங்களை விலை பேசுவார்கள். அப்போது இதையெல்லாம் நினைத்து நான் அழுதேன். உனக்காகவும் எனக்காகவும் அழுதேன். உனக்கு அவர் மீதிருந்த காதலை நான் முன்னரே அறிந்திருந்தால் அவரை மணக்க முன்வந்திருப்பேனா, மங்கை? இனிமையான உன் உள்ளத்தில் கசப்பான எந்த வித வித்தையும் ஊன்றிவிட முயற்சித்திருப்பேனா? பெண் வர்க்கமே சுயநலத்துக்காகப் போராடும் வர்க்கம் என்று சொல்வார்கள். இது நம்மளவில் எவ்வளவு உண்மையாகிவிட்டது. அந்தச் சுயநலத்துக்காகவே நாம் போராடினோம். கடைசியில் கண்டதென்ன? நீ அவரோடு கொண்ட காதலை உனக்குள்ளேயே நினைத்து மறுகுகிறாய். நானோ அந்த வாழ்வை எப்படியாவது மறக்கவேண்டுமென்று துடியாய்த் துடித்துக்கொண்டிருக்கிறேன்.

நீர் மல்கும் கண்களுடன் மங்கை திரும்புகிறாள். அவள் கண்கள் வெறுமையாய்ப் போய்விட்ட என் கழுத்தை நோக்குகின்றன. “ஈஸ்வரி, அந்த வாழ்வை நீ ஏன் மறக்கவேண்டும்? இருவருக்கும் இரிய வாழ்க்கை ஒன்று இருக்கிறது. கடந்துபோன வாழ்க்கை வெவ்வேறாக இருக்கலாம். அப்போதெல்லாம் நெஞ்சில் குதிரும் அழகிய சலனங்களிடையே மகிழ்ந்திருந்தோம். இனி அவற்றை நினைத்தபடியே உள்ளத்தால் வாழ்ந்துகொண்டிருக்கலாம். உடலால் வாழ்வதிலும் பார்க்க உள்ளத்தால் வாழ்வது எவ்வளவோ உயர்ந்தது அல்லவா?”

“இல்லை மங்கை. நீ சொல்வதெல்லாம் எனக்குப் பொருத்தமாக இருக்கலாம். உனக்கல்ல. ஏதோ வாழ்கையே வெறுத்துப்போனது போன்ற விரக்தியில் பேசுகிறாயே. எப்போதோ மங்கி மறைந்துபோன நாட்களிலே மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறவில்லையே என்ற ஏக்கத்தால் உன் இனிமையான எதிர்காலத்தையே வெறுக்கலாமா? நான் அவருடன் வாழ்ந்த இல்லற வாழ்வு ஒன்பதே மாதங்கள். அப்போது அது இனிய புதிய கதை. இப்போது புளித்துப்போன பழங்கதை. ஆனால் நீ நினைத்தால் உனக்கென்று ஒரு புதிய கதை காத்திருக்கும். ஆனால் அது என்னுடையதைப் போல் ஒரு சில மாதங்களுக்குள்ளே முடிந்துவிடக்கூடிய சிறிய கதையாக இருக்காது. நிச்சயம் அது மிக நீண்ட இனிய காவியமாக இருக்கும்.”

“ஈஸ்வரி, இது மாத்திரம் ஒருகாலும் என் வாழ்வில் ஏற்படமுடியாது. கடந்த இரு ஆண்டுகளும் எப்படிக் கழிந்ததென்றே எனக்கு நினைவில்லை. அவர் என் உள்ளத்தில் உருவாக்கிய காதல் உணர்வுகள் எவ்வளவு தூய்மையானவை. அதற்காக, அந்த ஒருவருக்காகவே என் இதய மலரை அர்ப்பணித்தேன். அந்த நினைவுகளுடனேயே இதுவரை வாழ்ந்தேனே, இனியா வாழமுடியாது? அந்த நினைவாகிய நீண்ட உறக்கத்திலிருந்து என்றுமே நான் விழிதெழ முடியாது, ஈவ்வரி.”

அவளிடமிருந்து வெளிவரும் தீர்க்கமான சொற்களினால் விடுபடமுடியாது நான் கட்டுண்டு நிற்கிறேன். அவளே வந்து என்னை ஆதரவுடன் அணைக்கிறாள். நிமிர்ந்து நோக்கும் எனக்கு கண்ணீரில் மிதக்கும் அவள் விழிகள் தென்படுகின்றன. வெளியிலே அழத்தெரியாத நான் நெஞ்சத்துக்குள்ளேயே ரகசியமாக அழுகிறேன். உள்ளத்தால் வாழ்கின்ற வாழ்க்கையின் ஆரம்பத்துக்கு இந்தக் கண்ணீர்தானா அடையாளம்?


தினகரன் வாரமஞ்சரி

1970

No comments:

Post a Comment