குடியிருக்கக் குடிசை
குந்தவொரு திண்ணை
படுத்துறங்கப் பாய்
படித்தறிய நூல்கள்
பாசத்துக்கொரு
பெற்றார்
ஆசைக்கொரு மனைவி
அன்புக்கொரு பிள்ளை
ஆத்திக்கொரு பெண்
கிடைக்கும் வரை உழைப்பு
கையில் கிடைத்ததே
பிழைப்பு
கிடைத்தால் உலையில்
அரிசி
கிடைக்காவிடில் கிணற்றுத்
தண்ணீர்
கூடிவாழக் கிராமம்
கிராமம் நடுவில்
கோயில்
கோயில் வீதியில் அரசு
அரசு நிழலில் அரட்டை.
பழகித் திரிய நண்பர்
பேசி மதிக்க ஆசான்
பாடித் திளைக்கப்
பெண்டிர்
பார்த்து ரசிக்கச்
சிறுவர்.
நனைந்து மகிழச் சாரல்
நினைந்து மகிழ இளமை
பகிர்ந்து மகிழ
முதுமை
பாடி மகிழப் பஜனை.
சிந்தை குளிரப் பாடல்
சேர்ந்து மகிழ ஆடல்
பகிடி சொல்லப்
பெண்கள்
பாதை நெடுகத்
தென்றல்.
இந்த நாளே நிச்சயம்
எது வரினும் துச்சம்
அறிவு காட்டும் பாதை
ஆற்றலே எனது கீதை.
காதலில் காண்பது
சொர்க்கம்
கனிவால் உணர்வது
கடவுள்
சாதலே இறுதியில்
உண்மை
கனவினில் வாழேன்
திண்மை.
பொறுமைதான் எனது கோயில்
பொய்மையே அகலாப்
பேய்கள்
சாதியம் அழிந்தது
பரணில்
சமத்துவம் அமர்ந்தது அரணில்.
மானிடம் போற்றுதல்
மேன்மை
மனிதவுயிரே என்றும்
அருமை
வானமே எமது எல்லை
வாராதுகாண் என்றும்
தொல்லை.
மரங்களும் உயிர்களும்
சேர்
மனிதர்கள் அனைவரும்
நேர்
தமிழ்மொழி அறிவே வேர்
பலமொழி அறிவே நீர்!
1985
No comments:
Post a Comment