Aug 19, 2012

ஒரு கார் வாங்கப் போனேன்


கதவைத் திறந்துவிட்டு
காதுவரை இளித்தான்.

சேல்ஸ்மன் என்றால்
இவனைத்தான் சொல்லவேண்டும்
காரைப் போலவே இவனும்
கடைந்தெடுத்த மாதிரி

வெள்ளைக்காரன் காரில் மட்டும்தான்
நிறம் பார்ப்பதில்லை.

பளிங்கு நிலத்தில்
புதுமணப் பெண்ணாய்
கையில் மாலையுடன்
என்னைக் காத்து நின்றாளோ
இந்த லெக்ஸஸ் தேவதை!

எத்தனை அழகு?
ஒளிவெள்ளத்தில் ஒய்யாரம்
கொடிகட்டிப் பறந்தது.
வாவென்று அழைக்கிறாள்
போகாமலிருக்க
நானென்ன விக்கிரமாதித்தனா?

உள்ளே நுழைந்ததும்தான் தெரிந்தது
இது காரல்ல சொர்க்கம் என்று
மேலும் கீழும் அக்கமும் பக்கமும்
லெதரில் இழைத்திருந்தான்

எத்தனை மாடுகள் தோல்தானம் செய்தனவோ!

தொட்டதும் சிணுங்கியது ரேடியொ
தொடாமலே திறந்தது முகட்டுக் கூரை
ஆகாயத்தை அப்படியே இறக்குமதி செய்யலாம்
இரவையும் பகலையும்
உள்வாங்கிக் கொள்ளலாம்

இது என்ன வாசனை,
எதிலிருந்து வந்தது?
பெண்ணின் வாசனை போலுமிருந்தது,
பனியில் குளித்த
பூவின் வாசனை போலுமிருந்தது.
பேணியில் அடைத்து விற்கும்
பொய்யான வாசனை போலுமிருந்தது.
ஆளை இழுக்கும் வாசனை எதுவென - புதுக்
காரை வாங்கினவனுக்குத்தான் தெரியும்.

பக்கத்துவீட்டுக் காரனெல்லாம்
பீஎம்டபிள்யூவும் பென்சுமாய்
பீற்றித் திரிய
நான்மட்டும் இளிச்சவாயனாய்
கிழடுதட்டிய கொரல்லாவைக்
கட்டி அழுவதா?
இது என்ன நியாயம்?

ஆகவே ஒருமுறை
கொஞ்சம் ஓடிப்பார்க்கலாம்
ஒத்து வந்துதென்றால்
வாங்கிக் காட்டலாம்.
அதோடு -
சும்மாதானே வருகிறது
சுதிபார்த்தால் என்ன?

பாவி மனிதா!
கன்னி மீது கைவைத்தால்
கல்யாணம் செய்தாக வேண்டும்.
ஊர்ச்சட்டம் தெரிந்ததுதானே!

கார் விஷயத்திலும்
அதுதான் போலும்.

கார் என்றால் ஆண்களுக்கேன்
இத்துணைக் காதல் உண்டாகிறது?
அதை அவன் பெண்ணாக உருவகிக்கிறான்.
இல்லையா?
அவள் உடலின் -
வளைவுகள் நெழிவுகள்,
மேடுகள் மிதப்புகள்,
கைக்குட்டையை எடுத்து அவளைத்
துடைப்பதில் வரும் இதம்,
இருக்கையில் இருந்து
அவள்மேல் தலைசாய்க்கும்போது
உடம்பெல்லாம் ஊரும் சுகம்
ஸ்டீரிங்க் வீலைக் கைகளால் தடவி
மெல்லமாய், சிமிக்கிடாமல்
மத்தியில் வந்து
மூச்சுக்காற்றால் மேனியை உலர்த்தி
முகர்ந்து பார்த்து
மெத்தென ஒரு முத்தம் கொடுத்து…
கிட்டத்தட்ட உறைந்தே போனேன்.

முத்தம் கொடுத்தாயிற்று அடுத்த கட்டம்
ஓடிப் பார்க்கவேண்டும்,
எனக்கு இருக்கை கொள்ளவில்லை.

நான் அவளை ஓட்டினேனா,
அவள் என்னை ஓட்டினாளா?
ஆறு சிலிண்டரில்
அட்டகாசமாய் அணைத்தாள்.
இளகி இளகி மெருகேறும்
புது மனைவி - என்
ஆண்மைக்குச் சவால்விடும்
குதிரை வேகம்.
முதலிரவுதான் போங்கள்!

படுபாவி சேல்ஸ்மன்
கண்மூடி விழிப்பதற்குள்
கையெழுத்தை வாங்கிவிட்டான்.

டவுன் பேமெண்ட் வேணுமாமே
இது என்ன அநியாயம்.

இதற்கும் என்னிடம்
பிளாஸ்டிக் அஸ்திரம்
பத்திரமாய் இருக்கிறது
இன்னும் ஒருமணியில்
இந்தத் தேவதை என்னவளே!
எனவே -
எடுத்தேன் தொடுத்தேன் என்பதுபோல்
எடுத்துக் காட்டினேன் வீசா கார்டை.

அட்டமி நவமியோ அமாவாசையோ
அந்த நேரமாய்ப் பார்த்து
என் செல்போன் சிணுங்கியது.

வேறு யார்?
கல்யாணம் கட்டியவனின் கடிவாளம்
எவர் கையில் இருக்கிறது?

"என்ன செய்யிறியள்,
எவ்வளவு நேரமாய்ப் போச்சு,
இஞ்சை நான் காத்துக்கொண்டிருக்கிறன்”

"புதுக் காரொன்று பார்த்தேனப்பா
வலு சுதியான சாமான்,
அதோடை இந்த வருசத்தான்,
அடிச்சுப்போட்ட விலைக்கு
என்ன சோக்கான லெக்ஸஸ்"

"என்ன சொல்லுறியள்?
ஏற்கனவே இரண்டு கார்
ஓடுவாரில்லாமல் இஞ்சை இழுபறிப்படுது.
காரைக் கராச்சுக்குக் கொண்டுபோனால்
திருத்திக்கோண்டு வாறதுதானே
புதுக்கார் வாங்கச்சொல்லியே - உங்களைப்
போகச் சொன்னனான்?”

சரியாகத்தான் சொன்னாள் சீமாட்டி
சுடலை  ஞானம் எனக்குச்
சுணங்கித்தான் வருமாம்.

கராச்சில் என் பழைய கார்
அந்தரத்தில் நிற்கிறது - இங்கே
புதுக்காரைப் பார்த்துப்
போதைகொண்டு நிற்கிறேன்.

சேல்ஸ்மனிடம் சொன்னேன்
"கொஞ்சம் அவகாசம் வேண்டும்".
அதாவது -
அவனைப் பொறுத்தவரை
ஒரு மணியோ ஒரு நாளோ,
என்னைப் பொறுத்தவரை,
இந்தப் பக்கம் என்றுமே
தலைவைத்துப் படுப்பதில்லை.

அவனும் என்னைப்போல்
ஆயிரம்பேரைக் கண்டவன் போலும்.
பாக்கெட்டில் கையைவிட்டு
பிஸ்னஸ் கார்ட்டை நீட்டினான்.
"இந்த விலை இன்றைக்கு மட்டும்தான்,
நாளைக்கு வந்தால் வேறு கதை.
வரமுந்திக் கூப்பிடுங்கள்,”

மனைவி கூப்பிடாமல் விட்டிருந்தால்
லெக்ஸஸ் கன்னி என்
காலடியில் விழுந்திருப்பாள் - ஆனால்
என் வீசா கார்ட் கடன்
விஷம்போல் ஏறியிருக்கும்.
அதிலும் மோசம் என்ன தெரியுமா?
ஆயுட்காலம் சென்றாலும்
லெக்ஸஸ் கன்னியின்
கடன் அழுது முடிக்கேலாது.

பெண்சாதிமாராலும் சிலவேளை
பிரயோசனமுண்டு பாருங்கோ!

**********************************

2 comments:

  1. ///கன்னி மீது கைவைத்தால்
    கல்யாணம் செய்தாக வேண்டும்.
    ஊர்ச்சட்டம் தெரிந்ததுதானே!

    கார் விஷயத்திலும்
    அதுதான் போலும்.////
    அனுபவித்து எழுதிய கவிதை இல்லையா....
    ரசித்தேன்...
    தொடர்ந்து எழுதுக.......

    ReplyDelete
    Replies
    1. கரவைக் குரலோனே,

      நீங்கள் சொல்வதில்
      உண்மை இருக்கிறது.
      அடுத்த ஊர்க்காரனெல்லோ
      அறியாமல் விடுவாரோ!

      நன்றி, ராஜாஜி.

      Delete