Aug 22, 2012

சட்டம்தன் வழிச்செல்லல் கடன்


எங்கள் புலோலிப் பக்கத்துத் துரைராசாவைப் போயும் போயும் முல்லைத்தீவில் வைத்துச் சந்திப்பேனென்று நான் கனவிலும் கருதவில்லை.  அதுவும் கடைத்தெருவிலோ அல்லது அவர் வழக்கமாக இழுத்தடிக்கப்படும் கோட்டடியிலோ அல்ல.  ஒரு அந்திப்பொழுதில் என் சட்ட அலுவலகத் திண்ணையில் திடீரென வந்து நின்றார்.  கையில் அரிவாளோடு இரத்தம் சொட்டச் சொட்ட ஒருவர் உங்கள் வீட்டு வாசல்படியில் நடுச்சாமத்தில் வந்து நின்றால் எப்படியிருக்கும் உங்களுக்கு?  கிட்டத்தட்ட அதே நிலையில்தான் நான் இருந்தேன்.

பருத்தித்துறை வீதிகளில் தடக்கிவிழுந்தால் ஒரு சட்டத்தரணியின் மேல்தான் விழவேண்டிவரும். அவர்கள் நாவற்பழம்போல் அவ்வளவுக்கு அங்கே மலிவு. தங்கள் கடை வாசலில் நின்றுகொண்டு தெருவில் வருவோர் போவோரையெல்லாம் வாங்கோ, வாங்கோ என்று கூவி அழைக்கும் நகை வியாபாரிகள் எங்களூர்ச் சட்டத்தரணிகளுக்கு முன்னால் பரவாயில்லைபோலிருக்கிறது. மெத்தைக்கடைச் சந்தியிலோ ஸ்ரீஸ் கபே வாசலிலோ தட்டி வானுக்குள் ஏறுகையிலோ முன்பின் தெரியாத ஒருவர் உங்களைப் பார்த்துச் சிரிப்பாரென்றால் நிச்சயம் அவர் ஒரு சட்டத்தரணியாகத்தான் இருக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உள்ளூர் சட்டத்தொழிலில் அன்றாடம் பேசாமல் பறையாமல் வரும் அரசியல் ஆபத்துகள், ஓசி வழக்குகள், புட்டிசங்கள், சுவர் வாசகங்கள் மற்றும் தொழில் ரீதியான கழுத்தறுப்புகளுக்கு அஞ்சியும் ஊரில் மலிந்துபோன பிறந்த நாள், சாமத்தியச் சடங்கு, கோடாலிச் சாமியார் தண்ணீர்ப்பந்தல் உபயம் போன்ற சமூகசேவைக் கைங்கரியங்களிலிருந்து தப்பவும் முல்லைத்தீவுக்குப் புலம் பெயர்ந்துபோன என்னை அங்கும் யமதூதன் துரைராசாவின் உருவத்தில் துரத்திக்கொண்டு வந்தான்.

முல்லைத்தீவு ஒரு பாலைவனக் குஞ்சு.  அக்கே நான் சரணடைந்த இடமோ மாங்குளம் றோட்டில் ஒரு வெட்டை.  அதில் அநாதரவாகக்கிடந்த வீட்டை வாடைக்கு எடுத்து அதன்முன்னால் ஒரு போர்ட்டை மாட்டியதும் வழக்குகளும் கைநிறையக் காசும் வந்து குவியும் எனக் கனவு கண்டேன்.  மாறாக, வந்து சேர்ந்த நாலைந்து வழக்குகளுக்கும் முடித்துக் கொடுத்த காணி உறுதிகளுக்கும் எனக்குக் கட்டணமாகக் கிடைத்தது நெல்லு மூட்டைகளும் மள்ளாக்கொட்டைச் சாக்குகளும்தான். வாசலில் தொங்கும் போர்டில் “சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசும்” என்ற வரியை எடுத்துவிட்டு “நெல்லு கச்சான் மொத்த வியாபாரம்” எனப் போட்டிருந்தால் இன்னும் மிகப் பொருத்தமாக இருக்கும் என்றுகூட ஒருமுறை யோசித்தேன். என் அறைமுழுவதும் சட்டப் புத்தகங்களுக்குப் பதிலாகக் கூரையைத் தொட்டபடி நிறைந்து கிடக்கும் இந்தச் சாக்குகளுக்கும் சாகா வரம்பெற்ற செத்தல் கருவாடு மணத்துக்கும் மத்தியில் எனது சட்டத்தொழில் இதுவரை தடம்புரளாமல் ஓடிக்கொண்டிருந்தது.  துரைராசா வந்து கதவைத் தட்டும்வரை.

பச்சைப் பளீரென்ற வெள்ளை வேட்டியும் நாஷனல் சேர்ட்டும் போதாக்குறைக்கு நல்ல சிவலை நிறமும் ஏறக்குறைய ஆறடி உயரமும் அறுபது வயதுமுள்ள துரைராசாவைக் காண்பவர்கள் அவர் ஒரு சாதாரண கிராமத்துப் பேர்வழி என்று சொன்னால் நம்பமாட்டார்கள்.  ஒரு எம்பியாகவோ ஆகக்குறைந்தது எம்பியின் கையாளாகவோ அல்லது உள்ளூர்ப் பள்ளிக்கூடத்துப் பிறிஞ்சிப்பலாகவோதான் இருப்பாரென நம்புவார்கள்.  அப்படி அவரை நம்ப மறுப்பவர்களுக்கு இலவச மூளைச்சலவை செய்து செத்தாலும் தன் பராக்கிரமத்தை மறுக்காதபடியும் மறக்காதபடியும் செய்துவிடுவார் துரைராசா.

ஊரில் துரைராசாவின் குடும்பம் பரம்பரை பரம்பரையாகப் பச்சைத் தண்ணியில் பலகாரம் சுடும் வல்லமை பெற்றது எனப் பெயரெடுத்தது. அவருடைய பிள்ளைகளும் உரிச்சுப்படைச்சு அவரைப் போலவே எம்டன்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  அவர் ஊர்த் தெருத்திண்ணைகளில் மகாராசா போல வலம் வந்தாலும் நெய்க்குடத்துக்கை கைவைச்சாலும் ஒருவரும் அவரை நம்பத் தயாரில்லை என்பது எனக்கு நல்லாய்த் தெரியும்.  மிச்சம் மலிவான திறீ றோஸெஸ் சிகரெட்டை எக்கச்சக்கமான விலை விற்கும் நெவிகட் பெட்டிக்குள் வைத்து அது சேர்ட் பொக்கற்றுக்குள்ளாக வேளியில் வடிவாகத் தெரியும்படியாகக் கவனித்துக்கொள்வார். நான் சின்னவயதில் இந்தக்கோலத்தில் அவரைக் காணும்போதெல்லாம் அவர் பெரும் பணக்காரரென்றே நினைத்துக் கோள்ளுவேன்.

சமையல்காரர் கட்டியம் கூற என் அறையினுள்ளே நுழைந்த துரைராசா தானாகவே கதிரையை இழுத்துப்போட்டுக்கொண்டு  மேசை முன்னால் இருந்துவிட்டார்.  அவருடைய நாடி நரம்பை நன்கு பிடித்துப்பார்த்தவன் என்ற வகையில் அவரை மிக்க மரியாதையுடன் வரவேற்றேன்.
“என்ன அண்ணை இந்தப் பக்கம்?  எங்கடை ஊர் அலுத்துப்போச்சுது போலை கிடக்கு.” எனக் கேட்டேன்.  அவர் பதிலுக்குத் தன்னுடைய “நாலு வீட்டுக்குக் கேட்கும்” சிரிப்பை உதறியதும் மேசையில் ஒட்டியிருந்த தூசிப்படலம் பறந்துவந்து என் முகத்தில் அடித்தது.

“உங்களை விட்டால் எனக்கு மிச்சம் நம்பிக்கையான பிறக்கறாசி வேறை ஆர் இருக்கினம்” என்ற வசனத்தில் ஒரு பகுதியை வாயாலும் மறு பகுதியைக் கண், கை ஆதியாம் மற்றைய அங்கங்கள் வாயிலாகவும் சொல்லிமுடித்தார் துரைராசா.

கனக்கச் சொல்லுவானேன், துரைராசா என்னைத் தேடிவந்த சங்கதி இதுதான்: வத்தாப்பளைக்குப் போற வழியிலை குட்டை மதவடி தாண்டி வடக்காலை மனிசர் மாஞ்சாதி தலைகாட்டப் பயப்படும் அரசாங்கத்துக்குச் சொந்தமான ஏழேக்கரோ எட்டேக்கரோ அளவான காட்டு நிலத்தை சிமிக்கிடாமல் இவர் பெயருக்கு உறுதிமுடித்துத் தரவேண்டும்.  அதுவும் அங்காலை இஞ்சாலை உள்ளாக்களுக்கு எல்லுப்போலையும் ஐமிச்சம் வரக்கூடாது.  இதை இன்னொருவகையாகக் கூறுவதானால், என்னைச் சட்டத்தொழிலிலிருந்து சீட்டுக் கிழிக்கவேண்டுமென்ற தீர்மானத்தோடு வந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

அவரை எப்படி நடு இரவுக்குமுன்னம் சமாளித்து அனுப்பினேன் என்பதையோ எவ்வளவு கெட்டித்தனமாக அரசாங்கக் காணியை அவர் பிடியிலிருந்து காப்பாற்றினேன் என்பதையோ நான் இங்கே விபரிக்கப்போவதில்லை.  இவையெல்லாம் சட்டக்கல்லூரியில் சொல்லித்தராத சங்கதிகள்.  ஆனால் ஒரு கிழமைக்குப் பிறகு ஊரடிபட்டகட்டையான என் சமையல்காரன் சொன்ன கதையைக் கேட்டதும் எனக்கு உச்சந்தலையில் உலக்கையால் அடித்தமாதிரி இருந்தது.

துரைராசா எந்தப் பிறக்கறாசியாரைப் பிடித்தாரோ எவருக்கெல்லாம் இல்லாத புலுடாவெல்லாம் அடித்தாரோ எத்தனை சாராயப் போத்தல்களைத் தான தருமம் செய்தாரோ தெரியாது. ஆனால் பின்னர் நடந்தேறிய சடங்குகள் நிச்சயம் அதன் பலனாகத்தான் இருக்கவேண்டும்.

இங்கிலீசுக்காரன் காலத்திலிருந்து அரசாங்கத்துக்குச் சொந்தமென எழுதப்பட்டிருந்த அந்த ஆதனம் பின்னர் ஒரு காலகட்டத்தில் இவரின் முப்பாட்டனுக்கு முப்பாட்டனின் ராச விசுவாசத்தின் மேன்மையைக் கருத்தில்கொண்டு சீமையிலிருந்து வந்த ஓலைப்படி அவர் பெயருக்கு நன்கொடையாயிற்றாம். பின்னர் சந்ததி சந்ததியாகக் கைமாறி இறுதியில் எப்போதோ மண்டையைப் போட்ட இவரின் மலட்டுப் பெரியதாய்க் கிழவி இவர் மீது இயல்பாயுள்ள பட்சமே காரணமாக அந்த ஆதனத்தையும் அதில் அவளுக்குரிய நயம் உரித்துச் சோந்தை சகலதையும் துரைராசாவுக்கு அழிக்கப்படாத நன்கொடையாகக் கையளித்தும் ஒப்படைத்தும் விட்டாளம். 

இந்தப் பரம ரகசியத்தைக் போன அமாவாசைக்குக் கொஞ்சம் முன்னம்தான் அறிந்துகொண்ட துரைராசா இப்போதுதான் அந்த ஆதனத்தைத் தன்பெயரில் சட்டப்படியும் நியாயப்படியும் உறுதி முடித்து ஆட்சியெடுத்துக்கொண்டாராம். எப்படி இருக்கிறது கதை?  துரைராசாவைத் தவிர இன்னொருவரால் இந்தக் காரியம் செய்யமுடியாது.  இது பால்குடிக் குழந்தைக்கும் தெரிந்த விஷயம்.

முல்லைத்தீவில் ஒருதரும் மூச்சுக்காட்டவில்லை. அதுதான் எனக்கு இன்னும் பெரிய ஆச்சரியம்.

கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு துரைராசா அண்ணரை எங்களூர்க் கோயில் திருவிழாவில் சந்திக்கவேண்டுமென்ற துரதிஷ்டம் வந்துசேர்ந்தது.

ஒருசாண் அகலக் கரையுள்ள பட்டு வேட்டியைச் சண்டியாக மடித்துக் கட்டிக்கொண்டு வெறும் மார்பில் எட்டுப் பவுணோ பத்துப் பவுணோ சங்கிலி நர்த்தனமாட கோயில் வீதியில் மூத்த உபயகாரர் என்றவகையில் வளையவந்த துரைராசா என்னைக் கண்டதும் வழக்கமான அட்டகாசச் சிரிப்பை அவிழ்த்துவிட்டார்.  என் அருகில் வந்தவர், சுற்றியுள்ள எல்லாரும் அவதானிக்கும்படியாக என் தோளில் உரிமையோடு மெல்லத் தட்டி, “பிறக்கறாசி ஐயா! (ஐயாவாம், கவனம்), நீங்கள் செய்த உதவியை நான் செத்தாலும் மறக்கமாட்டன்” என்றார்.  “உதவியோ? அப்படி என்ன பெரிசாக உதவி செய்துவிட்டன்” என நான் வாயால் சொனேனோ மூக்கால் சொன்னேனோ நினைவில்லை.  அத்துணை நடுக்கம்.

“என்ன சொல்லுறியள்? முல்லைத்தீவிலை நான் காணி வாங்கின சங்கதி ஈரேழு பதினாலு உலகத்துக்கும் இப்ப தெரியும். உங்கடை உதவியில்லாமல் இதை நான் செய்திருக்கேலாது” என்று என்னைப் பார்த்தபடி சொன்னவர் கையோடு மற்றவர்கள் பக்கம் திரும்பி, “இவர் என்னட்டை முத்திரைக் கூலிகூட வாங்கமாட்டன் எண்டு சொல்லிப்போடார்” என்று சொல்லி என்னைப்போல் நூற்றுக்கு நூறுவீதம் திகைத்துப்போய் நின்ற ஊர்க்காரரை வயிரவருக்குப் படைத்துவைத்த தளிசை அளவுக்கு வாய்பிளக்க வைத்தார்.

விளம்பரம் ஓசியில் வந்ததே என்று அறிந்து மகிழ்வதா அல்லது அது தொழிலுக்கே கொள்ளிவைக்குமென்று கண்டு அலறி ஓடுவதா?  ஒரு கணப்பொழுதுக்குள் எல்லாம் விளங்கியது.

முல்லைத்தீவில் கள்ள உறுதி எழுதுவதில் வித்துவான் பட்டம் பெற்றவர்கள் டசின் கணக்கில் இருக்கிறார்கள். லோச் சட்டம் படிக்காமலே நொத்தாரிசுக் காரியங்களைக் கரைத்துக் குடித்தவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். இவர்களால் உயிரோடு இருக்கிற இல்லாத நொத்தாரிசுகளால் அவர்களின் கண் படாமல் கை படாமல் ஒழிச்சு மறைச்சு அத்தாட்சிப்படுத்தப்பட்ட உறுதிகள் அங்கே காணிக் கந்தோரில் இன்றைக்கு இருந்துவிட்டு நாளைக்குக் கண்ணறிமாயமாய்ப் மறைந்துவிடுமாம். எனக்கேன் இது அப்போது மூளையில் உறைக்காமற் போனது?

அட கடவுளே! அந்தக் காணி உறுதியில் என்னுடைய நொத்தாரிசு முத்திரையையும் கையெழுத்தையும் எனக்கே தெரியாமல் உருவியும் செருவியும் காணியை ஆட்சி எடுத்துவிட்டு இங்கே வந்து “ஐயா” போடுகிறாரோ துரைராசா?  எனக்கு வயித்தைக் கலக்கியது.

காணிக்கந்தோரில் உறுதிக் கொப்பியைப் போய்ப் பார்த்து அறிந்து கொள்வதா அல்லது முல்லைத்தீவுத் தொழிலுக்கு ஒரேயடியாக முழுக்குப் போடுவதா?

நான் இன்னமும் முடிவுசெய்யவில்லை.

No comments:

Post a Comment