Aug 19, 2012

ஓ! தமிழகமே

ஓ! தமிழகமே
ஈழத்தின் தாயகமே!
நாற்பதுகளில்
நீ இயற்றிய
சத்திய வேள்வியின்
புதிய பதிப்பு
இங்கே அச்சாகிறது!

நீ மூட்டிய
பெரு நெருப்பு
பொறியாயப் பறந்து
இங்கே -
புகைந்துகொண்டிருக்கிறது!
ஈழத்துத் தமிழர்களின்
இதய கீதம்
உலகெங்கும் எதிரொலிக்க
நீ மட்டும் -
செவிடாய் நடித்து
சனாதிபதிப் பரிசுக்கு
ஆசைப்பட்டாயோ!
***
தியாகப் பயிர்களின்
அறுவடையில்
சாதனை கண்ட
தமிழ் நாட்டில் -
தார்மீக நெஞ்சங்கள்
தூங்கிக்கொண்டா
இருக்கின்றன?
பத்திரிகா தர்மம்
போற்றுவார் இன்றிப்
பாழடைந்தா போயிற்று?
***
இந்த மண்ணின்
பிரகடனப்படுத்தாத
இராணுவ ஆட்சியில் -
இளைஞர்கள் இலகுவாய்
காணாமல் போகிறார்கள்!
துப்பாக்கிச் சனியங்களின்
அத்தாணி மண்டபத்தில்
துரோபதைகள் பலர்
துகிலுரியப்படுகிறார்கள்!
***
எந்த நேரத்திலும் -
எமது இல்லக் கதவுகள்
இடிக்கப்படலாம்!
உடன்பிறப்புகள் -
முற்றத்திலும் தெருவிலுமாய்
இழுத்தெறியப்படலாம்!
இராணுவ மடாலயங்களில்
உயிர் போகாதபடிக்கு
உதைக்கப்படலாம்!
ஆண் உறுப்புகள் -
உருக்குக் கம்பிகளால்
துளைக்கப்படலாம்!
வௌவ்வாலாய்த் தொங்கவிட்டு
மிளகாய்த் தூளால்
முழுக்காட்டப்படலாம்!
வாய்க்கால் ஓரங்களிலும்
வயல் வெளிகளிலும்
தெரு நாய்களாய்ச்
சுடப்படலாம்!
நகரங்கள் -
பொலிஸ் காடையர்களால்
பொசுக்கப்படலாம்!
***
இது -
புதிய பரணிகளுக்கு
பிள்ளையார் சுழி
போடப்படும்
பாரதிகள் சகாப்தம்!
சிறைச்சாலைச் சுவர்கள்
புறநானூறு பாடுகின்ற
புதியவர்கள் சகாப்தம்!
***
இங்கே -
எமது சரித்திரம்
செந்நீரால் எழுதப்படுகின்றது!
தமிழகமே!
இதை நீ
தெரிந்து கொண்டதாய்க்
காட்டிக் கொண்டாலே போதும்!

1975
---

No comments:

Post a Comment