Sep 18, 2012

ரேக்கூன்

இலங்கை வேந்தன் இராவணன் “பெம்பிளை தூக்கும்” கலையில் நமக்கு முன்னோடியும் வழிகாட்டியுமாவான் என்பது நாமெல்லாரும் அறிந்ததே. அவன் சீதையைக் கிளப்பிக்கொண்டு வந்த நாளுக்கு அடுத்த நாள் என் மனைவி கரைத்துவைத்த தோசை மாவில் இன்று அவள் அவசரம் அவசரமாகத் தோசைகளைச் சுட்டு அடுக்கிவிட்டு “எல்லாத்தையும் சாப்பிட்டிட்டுக் கோப்பையைக் கழுவி வையுங்கோ” என்று கட்டளையும் பிறப்பித்துவிட்டு வெளியே போய்விட்டாள். இதைச் சாப்பிட்டால் என் கதி என்னாகும் என்று என் மனைவியே கவலைப்படாதபோது நீங்களேன் கவலைப்படப்போகிறீர்கள்?

எங்களூர் கந்தையா பரியாரியாரின் சூனாமி பிராண்ட் பேதி மருந்தை நினைவூட்டும் இத் தோசைகளைக் குப்பைப் பெட்டியில் போட்டால் அவள் எப்படியும் கண்டுபிடித்துவிடுவாளே என்ற பயத்தில் அவற்றை வீட்டுக்குப் பின்புறம் எறிந்து சுலமாகத் தப்பித்துக்கொள்ளலாம் என மனப்பால் குடித்தபடி பின் கதவைத் திறந்தபோது எமது கதாநாயகன் திருவாளர் ரேக்கூன் அவர்கள் தன் திருட்டு விழிகளை உருட்டியபடி வேலியினூடாக இந்தப்பக்கம் எட்டிப்பார்ப்பதைக் கண்டேன்.

இதைவிட வேறென்ன சந்தர்ப்பம் வேண்டும் இந்த நாளைக் குதூகலமாகக் கொண்டாடுவதற்கு? ஒரே கல்லில் இரண்டு மாங்காய். தோசைகளை மனைவியின் கண்ணில்படாமல் கரைசேர்த்ததுமாயிற்று கொடுமைக்கார ரேக்கூனை ஒரேயடியாகப் பழிவாங்கியதுமாயிற்று.

ஆனால் இன்று என் நாளும் நட்சத்திரங்களும் எனக்கெதிராக வேலை செய்வதென்று தீர்மானித்துவிட்டன போலும். நான் எறிந்த தோசைகளை ஓடிவந்து மணந்து பார்த்த ரேக்கூன் பேயைக் கண்டதுபோல் எடுத்தானே ஓட்டம். கடைசியில் ஒரு மாங்காய்கூட இல்லை. எறிந்த கல் என் தலையில் விழுந்ததுதான் மிச்சம்.

சரி விஷயத்துக்கு வருவோம். எங்களூர்ச் சனங்களுக்கு வீட்டில் வளர்க்கும் பிராணிகளை மட்டுமல்ல இரண்டு கால், நாலு கால் என்ற பாரபட்சமில்லாமல் மற்ற எல்லா மிருகங்கள் பறவைகளையும்கூட நல்லாய்ப் பிடிக்கும். அவைகள் தங்கள் வளவுக்குள் நுழைந்து அட்டூளியம் செய்யாதவரை. இவற்றுள் எல்லாராலும் விரும்பப்படுகிற பிராணியும் வெறுக்கப்படுகிற பிராணியும் என ஒன்று உண்டென்றால் அது இந்த ரேக்கூன்தான். படத்தைப் பார்த்துக் குணத்தை அறிந்துகொள்ளுங்கள். என் அடுத்த வீட்டுக்காரன் முன்பிறப்பில் ரேக்கூனாக இருந்திருப்பானோ என்பது என் தீராத சந்தேகம்.

ரேக்கூன்கள் (Raccoon/rae’ku:n – Procyon lotor ) ஐரோப்பாவில் தோன்றி வட அமெரிக்காவுக்குக் குடியேறி எண்ணற்ற ஆண்டுகளாகிவிட்டனவாம். அவைகள் கனடாவில் குடியேறிய காலத்துக்கு முன்னரெ தமிழர்கள் இங்கு வந்து குடியேறிவிட்டார்களெனச் சரித்திர பூர்வமாக அறிந்து நான் மிகவும் பெருமிதம் அடைந்தேன்.

இந்த இரண்டு புராதன இனங்களுக்கிடையே இன்றுள்ள முக்கியமான வேறுபாடு ரேக்கூன்கள் மரக்கறி வகைகளையும் சாப்பிடுமாம்.

ரேக்கூன்கள் அந்தக்காலத்திலிருந்தே முகனூல் விரும்பிகள் என அறியப்படுகிறது. ஆண்கள் தங்கள் கூட்டாளிமார்களுடன் பொழுதுபோக்குவதில் மிக ஆர்வமுள்ளவர்கள். காதலிகளுடன் ஊடல், கூடல்  சம்பந்தப்பட்ட நேரம் தவிர மற்றைய நேரங்களில் பெடியள் தரவளிகள் ஒன்றாகச் சேர்ந்து ஊரைச் சுற்றி அட்டூளியம் செய்வதில் ஈடுபடுவார்கள். ஆனால் அதென்னவோ தெரியாது தங்களுடைய குழு நாலுபேருக்குமேல் கூடாமல் பார்த்துக்கொள்வார்கள்.

ரேக்கூன்களுக்கிடையே இனச்சேர்க்கைக்காக ஆள்தேடும் படலம் மிகவும் அற்புதமானது. தை – பங்குனி மாதங்களில் மட்டும் அதுவும் ஆகக்கூடி நாலு நாட்களுக்குள் ஆணும் பெண்ணும் தனக்குரிய காதல் சோடியைத் தேடிக்கொண்டுவிடுவார்கள். அவர்களுக்கிடையேயும் கமலகாசன் போன்றவர்களுக்குக் கூடுதலான பெண் சோடிகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆயினும் ரேக்கூன்கள் நம்மவர்களைப்போல் வருஷம் முன்னூற்றறுபத்தைந்து நாளும் நேரம் காலம் இல்லாமல் காரியத்தில் இறங்குவதில் அக்கறை கொண்டவர்களல்லர். ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் நமக்கும் அவர்களுக்கும் இந்த அத்தியாவசியமான சங்கதியில் ஒற்றுமை இருக்கிறதுபோல் தெரிகிறது. ஆணும் பெண்ணும் இன்னாருடன்தான் கூடவேண்டுமென்று சட்டம் எதுவும் அங்கே கிடையாது. ஒரு பெண் ரேக்கூன் வேறு பல ஆண் ரேக்கூன்களுடனும் கூடலாம். அதுதவிர, தமிழ் சினிமா காதலர்கள் ரேக்கூன் காதலர்களிடம் பிச்சை வாங்கவேண்டும். இவர்கள் காதலியைக் கண்டமாத்திரத்தில் கனவு சீனுக்குக் கப்பலேறுவதில்லை. அந்த இடத்திலேயே அதுவும் பட்டப்பகலில் பெண்ணை வளைத்துக் காரியத்தை முடித்துக்கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்கள்தான்.

பெண் ரேக்கூன்கள் தாய்க்குலத்தின் பெருமைக்கு இன்னும் பெருமை சேர்ப்பவர்கள். தமது குட்டிகள் பெரியவர்களாகிச் சொந்தமாய்ச் சம்பாரித்து தங்களைத் தாங்களே கவனிக்கும் தகுதி பெறும்வரை தங்களுடனேயே வைத்துக்கொள்வார்கள்.

நான் வாழும் சிறிய நகரம் கனடாவிலேயே பெரும் பணக்காரர்கள் வாழும் நகரங்கள் என்ற பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பில் என்னையும் சேர்த்துக்கொண்டார்களா என ஒருமுறை விசாரித்துப் பார்க்கவேண்டும்.  இங்குள்ள வீடுகள், நம்மூரிலே சுளகில் வடகங்களை அடுக்கிக் காயவைக்கப்பட்டதுபோல் ஒழுங்காகவும் அழகாகவும் கட்டப்பட்டிருக்கும். அப்படியான வீட்டு வரிசைகளின் எல்லைகளோடு ஒட்டியபடி சிறு காடுகளும் பற்றைகளும் பரந்திருக்கும். இவைகளே ரேக்கூன்களின் குடியிருப்பு.

ரேக்கூன்களின் வாழ்க்கைமுறை, குணாதியங்களை வைத்து இந்தச் சனங்கள் மிக ருசிகரமான பெயர்களையெல்லாம் அவற்றுக்குச் சூட்டியிருக்கிறார்கள். ராஸ்கல் முதல் வெளியே வாய்விட்டுச் சொல்லமுடியாத வேறு பல பெயர்களிலெல்லாம் இதனை அழைப்பார்கள்.

சமீபத்தில், கோடை வெயிலைத் தாங்கமுடியாமல் ஒரு ரேக்கூன் எங்கேபோய் உடம்பு அவிச்சலைத் தீர்த்துக்கொள்ளலாம் எனத் திரிந்திருக்கிறார். சிறு காட்டுப்பக்கத்துக்கு அடுத்து வரிசையாயிருந்த வீடொன்றின் பின் தோட்டத்தில் நீச்சல் குளத்துக்கு அருகே அந்த வீட்டுச் சிறுமியின் பிறந்த நாள் கொண்டாட்டம் விமரிசையாக நடந்துகொண்டிருந்தது. ஏகப்பட்ட சின்னஞ்சிறுசுகள் எழுப்பிய சத்தத்தையோ அந்தக் கொண்டாட்டத்தைப் பற்றியோ சிறிதும் அக்கறை கொள்ளாமல் நமது ரேக்கூனார் தண்ணீரைக் கண்டதும் ஓடிப்போய்க் குளத்தில் பொதேலென்று குதித்திருக்கிறார். மேலும் சொல்வானேன், அன்றைய இரவு டிவி செய்தியில் இவருக்குப் பிறகுதான் ஒபாமா. கூடவே Party Crasher என்ற பட்டத்தையும் சுவீகரித்துக்கொண்டார்.
இவர் என் பிறந்த ஊரில் இருப்பாரென்றால் என்ன பெயர் எடுத்திருப்பாரோ அந்தப் பெயரையே இவருக்கு நான் வைத்திருக்கிறேன் - வெங்காயம்.

இரவு வந்தாலும் இவருடைய வேட்டைக்கு ஓய்விருக்காது. பெரும்பாலும் நடுச்சாமத்தில் புறப்பட்டுவிடுவார் ரேக்கூனார். அகன்ற ரோட்டுக்கு இந்தக் கரையோரமாகவுள்ள பற்றையைவிட்டு அந்தக் கரையோரமாகவுள்ள பற்றைக்குப் போயாகவேண்டும். அந்தக் கரையில் உறவினர்களும் நண்பர்களும் இவர் வரவைக் காத்துக்கொண்டிருக்கக்கூடும்.

வந்தவர் ரோட்டுக் கரையோரமாக நின்றுகொண்டு வாகனப் போக்குவரத்தைக் கொஞ்ச நேரம் அவதானித்துக்கொண்டிருப்பார். ஒரு வாகனமும் ஓடாமல் ரோட்டு நிசப்தமாக இருக்கின்றபொது நினைத்துக்கொள்ளுவார், ஒருவரும் ரோட்டைக் கடப்பாரில்லையே ஆகவே இந்த நேரம் ரோட்டைக் கடக்க உவப்பான நேரம் இல்லையென்று. பழையபடி வாகனங்கள் ஓடத்துவங்கி ரோட்டு பிஸியானதும் நினைத்துக்கொள்வார், எல்லாரும் ரோட்டைக் கடக்கிற நேரம் இதுதான்போலும் ஆகவே நாமும் கடந்து செல்வோம். விளைவு, ஒன்றுக்கு மேற்பட்ட கார்களில் அடிபட்டு அரைபட்டுச் செத்துச் சப்பளிந்துபோய் உருத்தெரியாமல் நடு ரோட்டில் கிடப்பார் வெங்காயம். காலை வேளையில் கந்தோருக்குப் போகும்போது மரண அறிவித்தல்கள் எதுவும் இல்லாமலே அன்னாரின் அந்திமக் கிரியைகளை நம் கண்முன்னால் நகரசபை ஆட்கள் நடத்திக்கொண்டிருப்பார்கள்.

இவைகள் செய்வதெல்லாம் கொடுமைகளைத்தவிர வேறொன்றுமில்லை என்பதனால்தானோ என்னவோ, ரேக்கூனைத் தங்கள் நாட்டு தேசிய மிருகமாக ஏற்பதற்கு உலகத்தில் எந்த நாடும் இதுவரை முன்வரவில்லை. ஆனால் ஸ்ரீ லங்காவில் ரேக்கூன்கள்தான் இன்று ஆட்சி நடத்துகின்றன எனக் கேள்வி.

Sep 16, 2012

காமெராவும் கவிதை சொல்லும்

இது இந்தக் காமெராவைப் பற்றிய கதையல்ல. இதை என்னிடம் தந்த ஒரு நல்ல மனிதனின் கதை.

அந்த ஆடி மாதத்தின் ஒரு சனிக்கிழமை அழகாகப் புலர்ந்தது. காலை ஆறு மணிக்கே வானத்தைக் கிழித்த புளகாங்கிதத்தால் ஒளிக்கீற்றுகள் குழந்தைகளாகிக் கண்காணும் திசைகளிலெல்லாம் ஓவியம் வரைய ஆரம்பித்தன. சோடிகளைக் கூவியழைக்கும் குயில்களின் கானம் காற்றில் மிதந்து புலன்களைச் சுண்டியிழுத்தன. என்போன்ற பலர் அன்றைக்குத்தான் நடைபயின்றவர்கள்போன்ற உற்சாகம் மிதக்க தம் நிழல்களைத் தாமே துரத்தி அதுவரை தூங்கிவழிந்துகொண்டிருந்த தெருக்களைத் தட்டியெழுப்பத் தொடங்கினர்.

இவ்வாறான வேளைகளில் நான் வாழ்ந்த புறநகரப்பகுதியின் இருபுறமும்  சடாய்த்த மேப்பிள் மரங்கள் வரிசையாய் நின்று காற்றில் கிளைகளை வளைத்து வரவேற்கும் தெருக்களினூடாக வீச்சு நடை போடுவது எனது வழக்கம்.

அன்றைய அதிகாலையும் அதுபோன்றே நான் நடந்து சென்றபோது தெருவோரமிருந்த ஒரு வீட்டின் முன்னால் வயதுமுதிர்ந்த இரு தம்பதிகள் தம் வீட்டோடு ஒட்டியிருந்த கார் கராஜிலிருந்து சோபா, கட்டில், மேசை முதலிய பெரிய அளவிலான வீட்டுத் தளபாடங்களையும் வேறு சிறு அளவிலான பொருட்களையும் வெளியில் எடுத்து வைப்பதில் ஈடுபட்டிருந்ததைக் கண்டேன். தெருவோரம், புல்தரையில் பலநிற பலூன்களுக்கு நடுவே நின்ற விளம்பரப் பலகையொன்று அவர்கள் அன்று காலை எங்களை வரவேற்கிறார்களென்று துலாம்பரமாகச் சொல்லிற்று.

தேவையில்லாத அல்லது தேவைக்கு மிஞ்சிய வீட்டுப் பொருட்களை Salvation Army போன்ற தர்ம ஸ்தாபனங்களுக்குக் கொடுத்துவிடுவதோ அல்லது வீட்டுவாசலில் வைத்து விற்பதோ இந்நாட்டு மக்களின் வழக்கம். இதை Garage Sale என்று சொல்லுவோம். கோடை காலத்தில் இவ்விற்பனை பரவலாக எங்கும் நடக்கும். இப்பொருள்களை வாங்குவதற்குத் தூர இடத்திலிருந்தும் ஆட்கள் வருவார்கள்.  ஆகவே ஒருசில மணி நேரம் மட்டுமே நடக்கும் சிறு வியாபாரமாயிருந்தாலும் அதற்கு விளம்பரம் அவசியமாயிற்று. உள்ளுர்ப் பத்திரிகைகளில் சிறு விளம்பரம் போடுவோர் சிலர்.  தம் வீட்டு வாசலிலும் அதற்கு அணித்தாயுள்ள தெருவோரங்களிலும் கடுதாசி மட்டைகளில் எழுதிய விளம்பரங்களைத் தடிகொண்டு நடுவோர் சிலர். இன்னும் சிலர் இந்த இரண்டு வகையான விளம்பரங்களையும் செய்வதுண்டு.  விளம்பரத்தின் அளவைப்பொறுத்தும் விற்கப்படும் பொருட்களைப் பொறுத்தும் கூட்டம் கூடும்.

அந்த வீட்டை நான் அணுகியபோது அந்த முதியவரின் மனைவிபோல் தோன்றியவர் கொட்டை எழுத்தில் கடதாசி மட்டைகளைகளில் எழுதிய விளம்பரங்களைத் தூக்கிக்கொண்டு விறுவிறுவென்று நடந்து சந்திவரை போவதைக் கண்டேன். அதேவேளை முதியவர் – இனி அவரை ஜான் என அழைப்போம் - பெரும் சிரமத்தோடு அவரது சக்திக்கு மேற்பட்ட பாரமுள்ள தளபாடங்களைக் கராஜிலிருந்து வெளியே எடுக்க முயன்றுகொண்டிருந்தார்.

என்னிடம் இயல்பாகவேயுள்ள குணம் எவருக்கும் ஓடிப்போய் உதவுவது. சில சந்தர்ப்பங்களில் வலிய உதவிக்குப் போனபோது வேறு கிரகத்திலிருந்து வந்தவனோ என்ற சந்தேகமடைந்தவர்கள்போல் என்னைப் பார்த்தவர்களுமுண்டு; மனச் சந்தோசத்தோடு வரவேற்றவர்களுமுண்டு.

அன்றைக்கும் விரைந்து சென்று ஜானுக்கு உதவப்போனேன். “நான் உங்களுக்கு உதவலாமா” என முதலில் அவரிடம் கேட்டபோது “நிச்சயமாக” என்று சொல்லிச் சிரித்தபடி என்னை வரவேற்றார் ஜான். ஒரு அரைமணி நேரம் பொருட்களை வெளியே எடுத்தும் எடுத்தவற்றை மேசைகளின்மேல் அடுக்கியும் அவருக்கு உதவினேன். அதற்கிடையில் கூட்டம் சேர்ந்துவிட்டது. என்னுடைய காரியமும் முடிந்தது. அப்போது அவர் என்னை நோக்கி, “மிகவும் நன்றி, நீங்கள் உதவிக்கு வராமல் விட்டிருந்தால் இந்தப் பழுவான காரியத்தை நான் இவ்வளவு சுலபமாகச் செய்திருக்கமுடியாது” என்று சொல்லி மீண்டும் சிரித்தார். இதைச் சொன்னபோது அவர் முகத்தில் படர்ந்த மகிழ்ச்சி அளப்பரியது.

எனது அதிகாலை வீச்சு நடையை விட்ட இடத்திலிருந்து தொடங்கவெண்ணி நான் திரும்பியபோது ஜான், “உங்களுக்கு இங்குள்ள பொருட்களில் ஏதேனும் வேண்டுமானால் சொல்லுங்கள்” என்றார். அப்பொருட்களை ஏற்கனவே பார்த்து அவற்றில் எதுவும் எனக்குத் தேவைப்படாது எனக் கண்டவன் என்ற வகையில் நான் கொஞ்சம் தயங்கியபடியே பதில் சொன்னேன், “உங்களுக்கு மிகவும் நன்றி. சொல்லப்போனால். நான் தேடிக்கொண்டிருப்பது என்னுடைய வயதுள்ள ஒரு காமெரா”. படம் எடுத்தல் எனது பிடித்தமான காரியம் என்பதும் அதிலும் சரித்திர காலத்துக் காமெராக்களைக்கொண்டு படம் எடுக்கும் பைத்தியங்களில் நானும் ஒருவன் என்பதும் அப்போதே அவருக்கு நன்கு விளங்கியிருக்கவேண்டும்,

அப்போது அவர் குறும்புடன் என்னப் பார்த்ததுபோலுமிருந்தது. அவர் முகத்தையே ஆவலுடன் நோக்கிக்கொண்டிருந்த என்னிடம், இப்போது கூட்டமாக இருக்கிறது, கொஞ்சம் செல்லத் திரும்பி வருவீர்களா?” எனக் கேட்டார்.  கையோடு, “என்னுடைய பழைய காமெராவொன்று வீட்டில் இருக்கிறது. விரும்பினால் நீங்கள் அதை வாங்கலாம்” என்றார். நான் வருடக்கணக்காகக் காத்திருந்த சந்தர்ப்பம் இதுவாக இருக்கலாம். இல்லாமலும் போகலாம். ஒரு பெரிய சிக்கலான சஸ்பென்ஸை இடையில் அவிழ்த்துவிடாமல் வாசகர்களை அவர்களுக்குத் தெரியாமலே பக்கங்களைப் புரட்டச் செய்யும் வித்துவம் தெரிந்த நாவலாசிரியனின் புத்தகத்தை வாசிப்பவன்போல் நான் அவதி அலைமோத அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வீடு நோக்கி நடந்தேன். 

இரண்டுமணி நேரத்துக்குப் பிறகு ஜானின் வீட்டுக்கு நான் திரும்பி வந்தபோது அவரின் வீட்டு வாசலில் பொருள் வாங்க ஆளெவரும் இருக்கவில்லை. ஜானும் அவரது மனைவியும் வாசலில் போட்ட கதிரைகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒருசில பொருட்களே வாங்குவாரில்லாமல் மேசையில் சிதறிப்போய்க் கிடந்தன. என்னைக் கண்டதும் அவர் எழுந்துவந்து வீட்டினுள்ளே கூட்டிச் சென்றார். உள்ளே நுழைந்ததும் என்னுள் இனந்தெரியாததோர் வியப்பு ஒருபுறமும் வயிற்றுக்குள் முடிச்சொன்று உருவாகுவதுபோன்ற உணர்வு மறுபுறமுமாகக் கால்களை மாற்றி மாற்றி நின்று உள்ளே சென்றவரின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தேன்.

ஜான் ஒருவாறு திரும்பி வந்தார்.  மெல்ல நடுங்கும் அவர் கைகளில் தேவலோகத்து ரகசியம் அடங்கிய பெட்டி ஒன்று இருந்தது. அவர் அதைப் பக்கத்திலிருந்த மேசையில் வைத்ததும் பெட்டியின் வெளிப்புறமே அந்த ரகசியத்தைப் பிட்டு வைத்தது. நான் கனவிலும் நனவிலும் காதலித்த அதே Rolleiflex காமெரா. ஜேர்மன்காரனின் மூளை ஒரு மோதகமென்றால் இக் காமரா அதற்குள் இருக்கும் உள்ளுடன்.

ஜனாதிபதி கென்னடியின் சகாப்தத்தில் அமெரிக்க அரசியல் மேடையில் சண்டையும் சமாதானமும் ஒரே சமயத்தில் அரங்கேறி உலகையே உலுக்கவைத்ததும் உருகவைத்ததுமான சம்பவங்கள் எல்லோரும் அறிந்ததே. மிகப் பரபரப்பான அந்நாட்களின் உயிர்ப்புடைய ஒவ்வொரு கணத்தையும் தம் காமெராவுக்குள் சுருட்டிப் புகைப்படத் துறையில் தொல்காப்பியம் எழுதியோர் பலர். இவர்களால் இந்த ராலிப்ளெக்ஸ் காமெராவால் சுட்டு உயிருட்டிய கறுப்பு-வெள்ளைப் படங்கள் பேசும் கவிதைகளைக் கண்டு இன்றைய டிஜிட்டல் உலகமே அதிசயிக்கின்றது.

அப்பெட்டியைக் கண்ட அக்கணமே என் நெஞ்சு படபடத்து வெருண்டது. இதை விலைக்கு வாங்குவதாயின் இங்கு வரமுன் நான் ஒரு வங்கியையல்லவோ கொள்ளையடித்திருக்கவேண்டும்.

ஜான், “பெட்டியைத் திறந்துபாருங்கள்” என்றார். பெட்டியைத் திறந்ததும் என் கனவுகளில் இதுவரை ஆராதித்த காமெராவை நேரில் கண்டேன்.  அதனைப் பச்சிளம் குழந்தையை ஏந்துவதுபோல் கையில் எடுத்து அதன் அழகையும் உறுதியையும் உணர்ந்தேன். ஐம்பதாம் ஆண்டில் இழைத்தெடுத்ததென்றாலும் இன்றும் மிகப் பெறுமதியுள்ள கொலெக்டிவ் ஐயிட்டமாக அது இருப்பதன் காரணம் அதன் உன்னதமான கட்டமைப்பும் வேலைத்திறனும் உயிரோவியங்களை வடித்தெடுக்கும் வல்லமையும் உள்ளதனாலாகும்.

“இது மிகவும் விலையுயர்ந்த பொருள்” என்றார் ஜான். “ஆம், நான் அறிவேன், ஆனால் இதற்கு நீங்கள் என்ன விலை சொல்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் இதை நான் வாங்கும் முடிவை எடுப்பேன்.” என்றேன். அவரிடம் அதே குறும்புச் சிரிப்பு மீண்டும் தவழ்ந்தது. “ஐம்பது டாலர்கள், உங்களுக்குச் சம்மதமா?” என்று கேட்டார். அவர் அப்போது சொன்னது என் காதில் சரியாக விழவில்லையோவென்ற சந்தேகம் தோன்றியதால், “தயவு செய்து இன்னொருமுறை சொல்லுங்கள்” என்று கேட்டேன். அவர் அதையே திருப்பிச் சொன்னார். “நீங்கள் நினக்கக்கூடும் இது பழுதான காமெராவோவென்று. இல்லை, இன்றும் இது புதியதுபோன்றதுதான். என் நடுங்கும் கரங்களால் இக் காமெராவில் படம் எடுக்க முடியாதிருக்கிறது. ஆனால் உங்களுக்குப் பிடித்தமானதும் பொருத்தமானதும் என நினக்கிறேன்” என்றார். “நான் உங்களை முற்றும் நம்புகிறென், ஆனால் இது நகரப்புறக் கடைகளில் எத்தனையோ பங்கு கூடியவிலைக்குப் போகின்றது.” எனச் சொன்னேன். இது நான் பலமுறை விசாரித்தறிந்த செய்திதான், ஆயிரம் டாலர்களுக்குக் குறைய இதை வாங்கமுடியாது, இந்த மனிதர் ஏன் இப்படிச் சொல்கிறார்?

ஜான் இன்னும் என் அருகில் வந்து “உங்களுக்கென நான் சொல்லும் விலை இது. இதை உங்களுக்குத் தருவதில் எனக்கு நட்டம் எதுவுமில்லை, மாறாக மகிழ்ச்சியே கூட.” அவரின் ஒவ்வொரு சொல்லிலும் ஊறியிருந்த உணர்ச்சியில் அவரின் கண்ணியமும் எனக்கு உதவவேண்டுமென்ற எண்ணமும் தெளிவாய் விளங்கியது. நான் செய்த சிறு உதவிக்குத் தன் நன்றியைத் தெரிவிப்பதற்காகவா இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்? 
அந்நேரம் என் மனதில் தோன்றிய உணர்வுகளை விளக்கப் பொருத்தமான சொற்கள் என்னிடம் அன்றும் தோன்றவில்லை, இன்றும் இல்லை.

நான் மடியிலிருந்து ஐம்பது டாலர்களை எடுத்து அவரிடம் கொடுத்து, “மிகவும் நன்றி” எனச் சிறிது நடுங்கியபடியே கூறினேன். வயது முதிர்ந்த ஒருவரை ஏமாற்றிகிறேனோ என்ற பயமும் ஒருபுறம் என்னை வாட்டி எடுத்தது. சில விநாடிகள் மௌனமாக நின்ற என்னிடம் ஜான், எதையோ திடீரென நினைத்துக்கொண்டவர் போல் “தயவுசெய்து ஒருகணம் பொறுங்கள்” எனக் கூறிவிட்டு மீண்டும் வீட்டினுள்ளே சென்றார். சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் திரும்பிவந்தபோது அவர் கையில் அந்தக் காமெராவுடன் அவர் வாங்கிய ப்ளாஷையும் அதற்குரிய பல்புகளையும் என்னிடம் நீட்டி “இவையும் இனி உங்களுக்குரியதுதான் என்று புன்முறுவலுடன் கூறினார். ஒரு அற்புதமன்றோ இங்கு நடக்கிறது என்றுமட்டுமே நான் எண்ணிக்கொண்டேன்.

இந்த நிகழ்ச்சியின் பின்னர் எப்படி என் வீடுவந்து சேர்ந்தேன் என்பது என் நினைவிலில்லை. அந்த உயர்ந்த மனிதரின் நினைவு மட்டும் இன்றும் என் நெஞ்சில் நீங்காமலிருக்கிறது.

Aug 31, 2012

கண்மணி

ஒவ்வொரு நாட்காலையும் அவளை நான் காணும்போது அப்போதுதான் துயிலெழுந்து முகம் திருத்தி வந்தவள்போன்ற பொலிவுடன் தோன்றுவாள். அவளைக் கண்டதும் நான் கேட்கும் முதல் கேள்வி “How are you?” அதற்கு அவளிட மிருந்து உடனே பதில் வரும்: “I am fine” கூடவே அவள் முகத்தில் ஒரு புன்னகையோடு கலந்த மலர்ச்சி.

ரொராண்டோ நகரின் யூனிவர்சிடி அவனியு. இருமருங்கும் அடுக்கடுக்காய் விண்ணைமுட்டும் கட்டிடங்கள். அவற்றினூடாகப் புகுந்து விளையாடும் மென்மையான தென்றல். முகத்திலடிக்காத காலை வெயில். இந்த வேளையில் அலுவலகத்துக்கு நடைபயில்வதே ஒரு அலாதியான அனுபவம்.

யூனிவர்சிடி அவெனியு/கிங் வீதி சந்திப்பின் வடமேற்கு மூலையில் அவளை நான் முதலில் சந்தித்தேன். அதன் பிறகு நான் நேரத்தோடு அலுவலகத்துக்குப்போன ஒவ்வொரு காலையும் அவளை நான் அங்கே சந்திக்கத் தவறியதில்லை. அந்த மூலையில் நெடு நேரம் எனக்காகக் காத்திருந்தவள் போல் அவள் நிற்பாள். கையில் தூக்கமுடியாத் சுமை. ஆயினும் துவண்டு போகாமல் நடைபாதையில் விரைந்து கொண்டிருப்போர் ஒவ்வொருவரையும் ஒரு கணத்துக்குள் சந்தித்து அவர்களிடம் தன்கையிலுள்ள இலவச Metro பத்திரிகையைத் திணித்துவிடும் அழகையும் தொழில் நுட்பத்தையும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

இந்த இரக்கமற்ற நகரச்சூழலில் இவள் ஏன் வந்து மாட்டிக்கொண்டாள் என்றுதான் நான் முதலில் நினைத்தேன். இவ்வளவுக்கும் அவளுக்குப் பத்துவயது இருக்கலாம். முழுக்க முழுக்க யாழ்ப்பாணத்துப் பெண். வட்டவடிவமான கண்கள். நடுவே கரிய விழிகள். எவரையும் கவர்ந்துவிடக்கூடிய காந்த சக்தியைத் தேக்கிவைதிருக்கும் அவள் கண்களை நான் முதலில் சந்தித்தபோது கொஞ்சம் அதிந்துதான்போனேன். அவளுக்கு நான் வைத்த பெயர் கண்மணி

இலவசப்பத்திரிகையை வினியோகிப்பதற்கு அதிகம் திறமை தேவையில்லையென்று நினைப்பீர்கள். இது சோம்பேறிகள் நடமாடும் சந்தியல்ல. எல்லாரும் அவசர உலகத்தின் பிரதிநிதிகள். இன்று வண்டியிலிருந்து இறங்கிய கையிருப்பு முழுவதையும் அவர்கள் கையில் திணித்துவிடவேண்டும். அதுவும் காலை பத்து மணிக்குள். கண்மணியின் அன்றாடச் செயற்பாடு அல்லது தொழில் வாழ்க்கை மிகச்சிறியது. ஆயினும் அதில் அவள் அளப்பற்ற வெற்றியும் மகிழ்ச்சியும் அடைந்தவள் போலவே எனக்குத் தோன்றுவாள். 

கண்மணி சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுமி. அவள் ஒரு சிலர் போலப் பெயர் பெற்றவளில்லை. சிறிய பணியாக இருந்தபோதும் அவள் அதனை ஆற்றிய அழகு என்னை ஆழமாய்ச் சிந்திக்கவைத்தது.

நாம் செய்யும் தொழில் மிகவும் எளிமையானதாக இருக்கலாம், உடல் ரீதியானதாக இருக்கலாம். உதாரணமாக, அன்றாடக் கூலி வேலைக்குப் போகிறவராகவோ குப்பை அள்ளுகிறவராகவோ இருக்கலாம். ஆயினும் நாம் செய்யும் எந்தத் தொழிலையும் நாம் வாழும் உலகை மேம்படச் செய்யும் ஒரு சந்தர்ப்பமாகக் கருதிச் செய்வோமானால் ஒரு இலட்சியத்தை நிறைவேற்றவெண்ணி அதனைச் செய்வதுபோன்ற உணர்வுடையவராகவும் சேவை மனப்பான்மை உடையவராகவும் எங்களை உயர்த்திக் கொள்வோம்.

மகாத்மா காந்தி நன்கு அவதானித்து அறிந்தபின்னர்தான் கூறினார்: நீங்கள் செய்யப்போகும் பணி முக்கியத்துவம் வாய்ந்ததா இல்லையா என்பது அவசியமில்லை, உங்களால் முடிந்த அளவு அதனைச் சிறப்பாகச் செய்யுங்கள் அதை உங்கள் மிக முக்கியமான பணியெனக் கருதி உங்கள் முழு அறிவையும் கவனத்தையும் அதன்மீது செலுத்துங்கள். அது சிறிய பணியாக இருக்கலாம் ஆனால் அதனை எப்படி ஆற்றினீர்கள் என்பதிலிருந்துதான் நீங்கள் மதிப்பிடப்படுவீர்கள்.

சிறுவர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். அன்றாடம் தெருவோரங்களிலும் கடைத் தெருக்களிலும் விளையாட்டு மைதானங்களிலும் நூலகங்களிலும் அவர்களை நன்கு அவதானித்திருக்கிறேன். அவர்களில் பலர் எனது நண்பர்களாக இருக்கிறார்கள். அடுத்தவீட்டு மூன்று வயது லியாம் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவான். நடைபாதையில் கண்டதும் "Give me a hug" என்று நான் சொன்னதும் ஓடிவந்து கட்டி அணைப்பான். அவன் கையில் எப்போதும் இருக்கும் ஒரு விளையாட்டுக் கார். ஒருமுறை அதற்கு ஐந்து மில்லியன் டாலர்கள் தருவதாகச் சொன்னேன் ஆனால் அவன் அதற்குச் சம்மதிக்கவில்லை. அடுத்தமுறை அவனை நான் கண்டபோது ஓடிவந்து தன் விளையாட்டுக் காரை என்முன்னே நீட்டினான். அப்போது அவன் முகத்தில் படர்ந்த பெருமிதம் அளப்பரியது.

சிறுவர்களே எனது ஹீரோக்கள். முன்பின் தெரியாதவர் மீதும் உடனே அன்பைப் பொழியும் பரந்த மனம்;  இன்னொருவர் மீது ஒருகணம் கோபப்பட்டாலும் அடுத்தகணமே அதை மறந்துவிடும் மனப்பக்குவம்; பொறாமை என்பது என்னவென்பதே தெரியாத பேருள்ளம்; மற்றவர்களுக்காக இரங்கும் இதயம்; கூடிப்பழகுவதிலுள்ள பேரார்வம் இவையெல்லாம் அவர்களே எனக்கு ஆசான்கள் என எண்ணவைக்கின்றன.

கண்மணி அண்மையில் கிடைத்த இன்னோரு நண்பி.  கோடை மறைந்து இலையுதிர் காலம் துவங்கியதும் அவளை வழக்கமான சந்தியில் காணமுடியாமற் போய்விட்டது. ஆயினும் இன்றும் அவளை நான் மறவாதிருப்பதற்குக் காரணம் அவளின் காந்தக் கண்களில் நான் கட்டுப்பட்டதனாலல்ல அந்தக் கண்களில் தேங்கி நின்ற மனவுறுதியும் செய்வதைத் திருத்தமாகச் செய்வதில் காட்டிய அக்கறையும் அந்நியர்களையும் அறிந்தவர்கள்போல் நடத்திய நேர்த்தியும் எனக்கு நிறையப் பாடம் புகட்டியதனாலாகும்.

கண்மணி போன்றோரே இன்று நமக்கு உந்துசக்தியாக இருக்கிறார்கள். இவள் போன்றோரே இந்தக் குழப்பம் மிகுந்த உலகத்தில் தலைமைத்துவத்துக்கு எமக்குத் தேவைப்படுகிறார்கள்.

Aug 22, 2012

சட்டம்தன் வழிச்செல்லல் கடன்

எங்கள் புலோலிப் பக்கத்துத் துரைராசாவைப் போயும் போயும் முல்லைத்தீவில் வைத்துச் சந்திப்பேனென்று நான் கனவிலும் கருதவில்லை.  அதுவும் கடைத்தெருவிலோ அல்லது அவர் வழக்கமாக இழுத்தடிக்கப்படும் கோட்டடியிலோ அல்ல.  ஒரு அந்திப்பொழுதில் என் சட்ட அலுவலகத் திண்ணையில் திடீரென வந்து நின்றார்.  கையில் அரிவாளோடு இரத்தம் சொட்டச் சொட்ட ஒருவர் உங்கள் வீட்டு வாசல்படியில் நடுச்சாமத்தில் வந்து நின்றால் எப்படியிருக்கும் உங்களுக்கு?  கிட்டத்தட்ட அதே நிலையில்தான் நான் இருந்தேன்.

பருத்தித்துறை வீதிகளில் தடக்கிவிழுந்தால் ஒரு சட்டத்தரணியின் மேல்தான் விழவேண்டிவரும். அவர்கள் நாவற்பழம்போல் அவ்வளவுக்கு அங்கே மலிவு. தங்கள் கடை வாசலில் நின்றுகொண்டு தெருவில் வருவோர் போவோரையெல்லாம் வாங்கோ, வாங்கோ என்று கூவி அழைக்கும் நகை வியாபாரிகள் எங்களூர்ச் சட்டத்தரணிகளுக்கு முன்னால் பரவாயில்லைபோலிருக்கிறது. மெத்தைக்கடைச் சந்தியிலோ ஸ்ரீஸ் கபே வாசலிலோ தட்டி வானுக்குள் ஏறுகையிலோ முன்பின் தெரியாத ஒருவர் உங்களைப் பார்த்துச் சிரிப்பாரென்றால் நிச்சயம் அவர் ஒரு சட்டத்தரணியாகத்தான் இருக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உள்ளூர் சட்டத்தொழிலில் அன்றாடம் பேசாமல் பறையாமல் வரும் அரசியல் ஆபத்துகள், ஓசி வழக்குகள், புட்டிசங்கள், சுவர் வாசகங்கள் மற்றும் தொழில் ரீதியான கழுத்தறுப்புகளுக்கு அஞ்சியும் ஊரில் மலிந்துபோன பிறந்த நாள், சாமத்தியச் சடங்கு, கோடாலிச் சாமியார் தண்ணீர்ப்பந்தல் உபயம் போன்ற சமூகசேவைக் கைங்கரியங்களிலிருந்து தப்பவும் முல்லைத்தீவுக்குப் புலம் பெயர்ந்துபோன என்னை அங்கும் யமதூதன் துரைராசாவின் உருவத்தில் துரத்திக்கொண்டு வந்தான்.

முல்லைத்தீவு ஒரு பாலைவனக் குஞ்சு.  அக்கே நான் சரணடைந்த இடமோ மாங்குளம் றோட்டில் ஒரு வெட்டை.  அதில் அநாதரவாகக்கிடந்த வீட்டை வாடைக்கு எடுத்து அதன்முன்னால் ஒரு போர்ட்டை மாட்டியதும் வழக்குகளும் கைநிறையக் காசும் வந்து குவியும் எனக் கனவு கண்டேன்.  மாறாக, வந்து சேர்ந்த நாலைந்து வழக்குகளுக்கும் முடித்துக் கொடுத்த காணி உறுதிகளுக்கும் எனக்குக் கட்டணமாகக் கிடைத்தது நெல்லு மூட்டைகளும் மள்ளாக்கொட்டைச் சாக்குகளும்தான். வாசலில் தொங்கும் போர்டில் “சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசும்” என்ற வரியை எடுத்துவிட்டு “நெல்லு கச்சான் மொத்த வியாபாரம்” எனப் போட்டிருந்தால் இன்னும் மிகப் பொருத்தமாக இருக்கும் என்றுகூட ஒருமுறை யோசித்தேன். என் அறைமுழுவதும் சட்டப் புத்தகங்களுக்குப் பதிலாகக் கூரையைத் தொட்டபடி நிறைந்து கிடக்கும் இந்தச் சாக்குகளுக்கும் சாகா வரம்பெற்ற செத்தல் கருவாடு மணத்துக்கும் மத்தியில் எனது சட்டத்தொழில் இதுவரை தடம்புரளாமல் ஓடிக்கொண்டிருந்தது.  துரைராசா வந்து கதவைத் தட்டும்வரை.

பச்சைப் பளீரென்ற வெள்ளை வேட்டியும் நாஷனல் சேர்ட்டும் போதாக்குறைக்கு நல்ல சிவலை நிறமும் ஏறக்குறைய ஆறடி உயரமும் அறுபது வயதுமுள்ள துரைராசாவைக் காண்பவர்கள் அவர் ஒரு சாதாரண கிராமத்துப் பேர்வழி என்று சொன்னால் நம்பமாட்டார்கள்.  ஒரு எம்பியாகவோ ஆகக்குறைந்தது எம்பியின் கையாளாகவோ அல்லது உள்ளூர்ப் பள்ளிக்கூடத்துப் பிறிஞ்சிப்பலாகவோதான் இருப்பாரென நம்புவார்கள்.  அப்படி அவரை நம்ப மறுப்பவர்களுக்கு இலவச மூளைச்சலவை செய்து செத்தாலும் தன் பராக்கிரமத்தை மறுக்காதபடியும் மறக்காதபடியும் செய்துவிடுவார் துரைராசா.

ஊரில் துரைராசாவின் குடும்பம் பரம்பரை பரம்பரையாகப் பச்சைத் தண்ணியில் பலகாரம் சுடும் வல்லமை பெற்றது எனப் பெயரெடுத்தது. அவருடைய பிள்ளைகளும் உரிச்சுப்படைச்சு அவரைப் போலவே எம்டன்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  அவர் ஊர்த் தெருத்திண்ணைகளில் மகாராசா போல வலம் வந்தாலும் நெய்க்குடத்துக்கை கைவைச்சாலும் ஒருவரும் அவரை நம்பத் தயாரில்லை என்பது எனக்கு நல்லாய்த் தெரியும்.  மிச்சம் மலிவான திறீ றோஸெஸ் சிகரெட்டை எக்கச்சக்கமான விலை விற்கும் நெவிகட் பெட்டிக்குள் வைத்து அது சேர்ட் பொக்கற்றுக்குள்ளாக வேளியில் வடிவாகத் தெரியும்படியாகக் கவனித்துக்கொள்வார். நான் சின்னவயதில் இந்தக்கோலத்தில் அவரைக் காணும்போதெல்லாம் அவர் பெரும் பணக்காரரென்றே நினைத்துக் கோள்ளுவேன்.

சமையல்காரர் கட்டியம் கூற என் அறையினுள்ளே நுழைந்த துரைராசா தானாகவே கதிரையை இழுத்துப்போட்டுக்கொண்டு  மேசை முன்னால் இருந்துவிட்டார்.  அவருடைய நாடி நரம்பை நன்கு பிடித்துப்பார்த்தவன் என்ற வகையில் அவரை மிக்க மரியாதையுடன் வரவேற்றேன்.
“என்ன அண்ணை இந்தப் பக்கம்?  எங்கடை ஊர் அலுத்துப்போச்சுது போலை கிடக்கு.” எனக் கேட்டேன்.  அவர் பதிலுக்குத் தன்னுடைய “நாலு வீட்டுக்குக் கேட்கும்” சிரிப்பை உதறியதும் மேசையில் ஒட்டியிருந்த தூசிப்படலம் பறந்துவந்து என் முகத்தில் அடித்தது.

“உங்களை விட்டால் எனக்கு மிச்சம் நம்பிக்கையான பிறக்கறாசி வேறை ஆர் இருக்கினம்” என்ற வசனத்தில் ஒரு பகுதியை வாயாலும் மறு பகுதியைக் கண், கை ஆதியாம் மற்றைய அங்கங்கள் வாயிலாகவும் சொல்லிமுடித்தார் துரைராசா.

கனக்கச் சொல்லுவானேன், துரைராசா என்னைத் தேடிவந்த சங்கதி இதுதான்: வத்தாப்பளைக்குப் போற வழியிலை குட்டை மதவடி தாண்டி வடக்காலை மனிசர் மாஞ்சாதி தலைகாட்டப் பயப்படும் அரசாங்கத்துக்குச் சொந்தமான ஏழேக்கரோ எட்டேக்கரோ அளவான காட்டு நிலத்தை சிமிக்கிடாமல் இவர் பெயருக்கு உறுதிமுடித்துத் தரவேண்டும்.  அதுவும் அங்காலை இஞ்சாலை உள்ளாக்களுக்கு எல்லுப்போலையும் ஐமிச்சம் வரக்கூடாது.  இதை இன்னொருவகையாகக் கூறுவதானால், என்னைச் சட்டத்தொழிலிலிருந்து சீட்டுக் கிழிக்கவேண்டுமென்ற தீர்மானத்தோடு வந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

அவரை எப்படி நடு இரவுக்குமுன்னம் சமாளித்து அனுப்பினேன் என்பதையோ எவ்வளவு கெட்டித்தனமாக அரசாங்கக் காணியை அவர் பிடியிலிருந்து காப்பாற்றினேன் என்பதையோ நான் இங்கே விபரிக்கப்போவதில்லை.  இவையெல்லாம் சட்டக்கல்லூரியில் சொல்லித்தராத சங்கதிகள்.  ஆனால் ஒரு கிழமைக்குப் பிறகு ஊரடிபட்டகட்டையான என் சமையல்காரன் சொன்ன கதையைக் கேட்டதும் எனக்கு உச்சந்தலையில் உலக்கையால் அடித்தமாதிரி இருந்தது.

துரைராசா எந்தப் பிறக்கறாசியாரைப் பிடித்தாரோ எவருக்கெல்லாம் இல்லாத புலுடாவெல்லாம் அடித்தாரோ எத்தனை சாராயப் போத்தல்களைத் தான தருமம் செய்தாரோ தெரியாது. ஆனால் பின்னர் நடந்தேறிய சடங்குகள் நிச்சயம் அதன் பலனாகத்தான் இருக்கவேண்டும்.

இங்கிலீசுக்காரன் காலத்திலிருந்து அரசாங்கத்துக்குச் சொந்தமென எழுதப்பட்டிருந்த அந்த ஆதனம் பின்னர் ஒரு காலகட்டத்தில் இவரின் முப்பாட்டனுக்கு முப்பாட்டனின் ராச விசுவாசத்தின் மேன்மையைக் கருத்தில்கொண்டு சீமையிலிருந்து வந்த ஓலைப்படி அவர் பெயருக்கு நன்கொடையாயிற்றாம். பின்னர் சந்ததி சந்ததியாகக் கைமாறி இறுதியில் எப்போதோ மண்டையைப் போட்ட இவரின் மலட்டுப் பெரியதாய்க் கிழவி இவர் மீது இயல்பாயுள்ள பட்சமே காரணமாக அந்த ஆதனத்தையும் அதில் அவளுக்குரிய நயம் உரித்துச் சோந்தை சகலதையும் துரைராசாவுக்கு அழிக்கப்படாத நன்கொடையாகக் கையளித்தும் ஒப்படைத்தும் விட்டாளம். 

இந்தப் பரம ரகசியத்தைக் போன அமாவாசைக்குக் கொஞ்சம் முன்னம்தான் அறிந்துகொண்ட துரைராசா இப்போதுதான் அந்த ஆதனத்தைத் தன்பெயரில் சட்டப்படியும் நியாயப்படியும் உறுதி முடித்து ஆட்சியெடுத்துக்கொண்டாராம். எப்படி இருக்கிறது கதை?  துரைராசாவைத் தவிர இன்னொருவரால் இந்தக் காரியம் செய்யமுடியாது.  இது பால்குடிக் குழந்தைக்கும் தெரிந்த விஷயம்.

முல்லைத்தீவில் ஒருதரும் மூச்சுக்காட்டவில்லை. அதுதான் எனக்கு இன்னும் பெரிய ஆச்சரியம்.

கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு துரைராசா அண்ணரை எங்களூர்க் கோயில் திருவிழாவில் சந்திக்கவேண்டுமென்ற துரதிஷ்டம் வந்துசேர்ந்தது.

ஒருசாண் அகலக் கரையுள்ள பட்டு வேட்டியைச் சண்டியாக மடித்துக் கட்டிக்கொண்டு வெறும் மார்பில் எட்டுப் பவுணோ பத்துப் பவுணோ சங்கிலி நர்த்தனமாட கோயில் வீதியில் மூத்த உபயகாரர் என்றவகையில் வளையவந்த துரைராசா என்னைக் கண்டதும் வழக்கமான அட்டகாசச் சிரிப்பை அவிழ்த்துவிட்டார்.  என் அருகில் வந்தவர், சுற்றியுள்ள எல்லாரும் அவதானிக்கும்படியாக என் தோளில் உரிமையோடு மெல்லத் தட்டி, “பிறக்கறாசி ஐயா! (ஐயாவாம், கவனம்), நீங்கள் செய்த உதவியை நான் செத்தாலும் மறக்கமாட்டன்” என்றார்.  “உதவியோ? அப்படி என்ன பெரிசாக உதவி செய்துவிட்டன்” என நான் வாயால் சொனேனோ மூக்கால் சொன்னேனோ நினைவில்லை.  அத்துணை நடுக்கம்.

“என்ன சொல்லுறியள்? முல்லைத்தீவிலை நான் காணி வாங்கின சங்கதி ஈரேழு பதினாலு உலகத்துக்கும் இப்ப தெரியும். உங்கடை உதவியில்லாமல் இதை நான் செய்திருக்கேலாது” என்று என்னைப் பார்த்தபடி சொன்னவர் கையோடு மற்றவர்கள் பக்கம் திரும்பி, “இவர் என்னட்டை முத்திரைக் கூலிகூட வாங்கமாட்டன் எண்டு சொல்லிப்போடார்” என்று சொல்லி என்னைப்போல் நூற்றுக்கு நூறுவீதம் திகைத்துப்போய் நின்ற ஊர்க்காரரை வயிரவருக்குப் படைத்துவைத்த தளிசை அளவுக்கு வாய்பிளக்க வைத்தார்.

விளம்பரம் ஓசியில் வந்ததே என்று அறிந்து மகிழ்வதா அல்லது அது தொழிலுக்கே கொள்ளிவைக்குமென்று கண்டு அலறி ஓடுவதா?  ஒரு கணப்பொழுதுக்குள் எல்லாம் விளங்கியது.

முல்லைத்தீவில் கள்ள உறுதி எழுதுவதில் வித்துவான் பட்டம் பெற்றவர்கள் டசின் கணக்கில் இருக்கிறார்கள். லோச் சட்டம் படிக்காமலே நொத்தாரிசுக் காரியங்களைக் கரைத்துக் குடித்தவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். இவர்களால் உயிரோடு இருக்கிற இல்லாத நொத்தாரிசுகளால் அவர்களின் கண் படாமல் கை படாமல் ஒழிச்சு மறைச்சு அத்தாட்சிப்படுத்தப்பட்ட உறுதிகள் அங்கே காணிக் கந்தோரில் இன்றைக்கு இருந்துவிட்டு நாளைக்குக் கண்ணறிமாயமாய்ப் மறைந்துவிடுமாம். எனக்கேன் இது அப்போது மூளையில் உறைக்காமற் போனது?

அட கடவுளே! அந்தக் காணி உறுதியில் என்னுடைய நொத்தாரிசு முத்திரையையும் கையெழுத்தையும் எனக்கே தெரியாமல் உருவியும் செருவியும் காணியை ஆட்சி எடுத்துவிட்டு இங்கே வந்து “ஐயா” போடுகிறாரோ துரைராசா?  எனக்கு வயித்தைக் கலக்கியது.

காணிக்கந்தோரில் உறுதிக் கொப்பியைப் போய்ப் பார்த்து அறிந்து கொள்வதா அல்லது முல்லைத்தீவுத் தொழிலுக்கு ஒரேயடியாக முழுக்குப் போடுவதா?

நான் இன்னமும் முடிவுசெய்யவில்லை.