Sep 18, 2012

ரேக்கூன்




இலங்கை வேந்தன் இராவணன் “பெம்பிளை தூக்கும்” கலையில் நமக்கு முன்னோடியும் வழிகாட்டியுமாவான் என்பது நாமெல்லாரும் அறிந்ததே. அவன் சீதையைக் கிளப்பிக்கொண்டு வந்த நாளுக்கு அடுத்த நாள் என் மனைவி கரைத்துவைத்த தோசை மாவில் இன்று அவள் அவசரம் அவசரமாகத் தோசைகளைச் சுட்டு அடுக்கிவிட்டு “எல்லாத்தையும் சாப்பிட்டிட்டுக் கோப்பையைக் கழுவி வையுங்கோ” என்று கட்டளையும் பிறப்பித்துவிட்டு வெளியே போய்விட்டாள். இதைச் சாப்பிட்டால் என் கதி என்னாகும் என்று என் மனைவியே கவலைப்படாதபோது நீங்களேன் கவலைப்படப்போகிறீர்கள்?

எங்களூர் கந்தையா பரியாரியாரின் சூனாமி பிராண்ட் பேதி மருந்தை நினைவூட்டும் இத் தோசைகளைக் குப்பைப் பெட்டியில் போட்டால் அவள் எப்படியும் கண்டுபிடித்துவிடுவாளே என்ற பயத்தில் அவற்றை வீட்டுக்குப் பின்புறம் எறிந்து சுலமாகத் தப்பித்துக்கொள்ளலாம் என மனப்பால் குடித்தபடி பின் கதவைத் திறந்தபோது எமது கதாநாயகன் திருவாளர் ரேக்கூன் அவர்கள் தன் திருட்டு விழிகளை உருட்டியபடி வேலியினூடாக இந்தப்பக்கம் எட்டிப்பார்ப்பதைக் கண்டேன்.

இதைவிட வேறென்ன சந்தர்ப்பம் வேண்டும் இந்த நாளைக் குதூகலமாகக் கொண்டாடுவதற்கு? ஒரே கல்லில் இரண்டு மாங்காய். தோசைகளை மனைவியின் கண்ணில்படாமல் கரைசேர்த்ததுமாயிற்று கொடுமைக்கார ரேக்கூனை ஒரேயடியாகப் பழிவாங்கியதுமாயிற்று.

ஆனால் இன்று என் நாளும் நட்சத்திரங்களும் எனக்கெதிராக வேலை செய்வதென்று தீர்மானித்துவிட்டன போலும். நான் எறிந்த தோசைகளை ஓடிவந்து மணந்து பார்த்த ரேக்கூன் பேயைக் கண்டதுபோல் எடுத்தானே ஓட்டம். கடைசியில் ஒரு மாங்காய்கூட இல்லை. எறிந்த கல் என் தலையில் விழுந்ததுதான் மிச்சம்.

சரி விஷயத்துக்கு வருவோம். எங்களூர்ச் சனங்களுக்கு வீட்டில் வளர்க்கும் பிராணிகளை மட்டுமல்ல இரண்டு கால், நாலு கால் என்ற பாரபட்சமில்லாமல் மற்ற எல்லா மிருகங்கள் பறவைகளையும்கூட நல்லாய்ப் பிடிக்கும். அவைகள் தங்கள் வளவுக்குள் நுழைந்து அட்டூளியம் செய்யாதவரை. இவற்றுள் எல்லாராலும் விரும்பப்படுகிற பிராணியும் வெறுக்கப்படுகிற பிராணியும் என ஒன்று உண்டென்றால் அது இந்த ரேக்கூன்தான். படத்தைப் பார்த்துக் குணத்தை அறிந்துகொள்ளுங்கள். என் அடுத்த வீட்டுக்காரன் முன்பிறப்பில் ரேக்கூனாக இருந்திருப்பானோ என்பது என் தீராத சந்தேகம்.

ரேக்கூன்கள் (Raccoon/rae’ku:n – Procyon lotor ) ஐரோப்பாவில் தோன்றி வட அமெரிக்காவுக்குக் குடியேறி எண்ணற்ற ஆண்டுகளாகிவிட்டனவாம். அவைகள் கனடாவில் குடியேறிய காலத்துக்கு முன்னரெ தமிழர்கள் இங்கு வந்து குடியேறிவிட்டார்களெனச் சரித்திர பூர்வமாக அறிந்து நான் மிகவும் பெருமிதம் அடைந்தேன்.

இந்த இரண்டு புராதன இனங்களுக்கிடையே இன்றுள்ள முக்கியமான வேறுபாடு ரேக்கூன்கள் மரக்கறி வகைகளையும் சாப்பிடுமாம்.

ரேக்கூன்கள் அந்தக்காலத்திலிருந்தே முகனூல் விரும்பிகள் என அறியப்படுகிறது. ஆண்கள் தங்கள் கூட்டாளிமார்களுடன் பொழுதுபோக்குவதில் மிக ஆர்வமுள்ளவர்கள். காதலிகளுடன் ஊடல், கூடல்  சம்பந்தப்பட்ட நேரம் தவிர மற்றைய நேரங்களில் பெடியள் தரவளிகள் ஒன்றாகச் சேர்ந்து ஊரைச் சுற்றி அட்டூளியம் செய்வதில் ஈடுபடுவார்கள். ஆனால் அதென்னவோ தெரியாது தங்களுடைய குழு நாலுபேருக்குமேல் கூடாமல் பார்த்துக்கொள்வார்கள்.

ரேக்கூன்களுக்கிடையே இனச்சேர்க்கைக்காக ஆள்தேடும் படலம் மிகவும் அற்புதமானது. தை – பங்குனி மாதங்களில் மட்டும் அதுவும் ஆகக்கூடி நாலு நாட்களுக்குள் ஆணும் பெண்ணும் தனக்குரிய காதல் சோடியைத் தேடிக்கொண்டுவிடுவார்கள். அவர்களுக்கிடையேயும் கமலகாசன் போன்றவர்களுக்குக் கூடுதலான பெண் சோடிகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆயினும் ரேக்கூன்கள் நம்மவர்களைப்போல் வருஷம் முன்னூற்றறுபத்தைந்து நாளும் நேரம் காலம் இல்லாமல் காரியத்தில் இறங்குவதில் அக்கறை கொண்டவர்களல்லர். ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் நமக்கும் அவர்களுக்கும் இந்த அத்தியாவசியமான சங்கதியில் ஒற்றுமை இருக்கிறதுபோல் தெரிகிறது. ஆணும் பெண்ணும் இன்னாருடன்தான் கூடவேண்டுமென்று சட்டம் எதுவும் அங்கே கிடையாது. ஒரு பெண் ரேக்கூன் வேறு பல ஆண் ரேக்கூன்களுடனும் கூடலாம். அதுதவிர, தமிழ் சினிமா காதலர்கள் ரேக்கூன் காதலர்களிடம் பிச்சை வாங்கவேண்டும். இவர்கள் காதலியைக் கண்டமாத்திரத்தில் கனவு சீனுக்குக் கப்பலேறுவதில்லை. அந்த இடத்திலேயே அதுவும் பட்டப்பகலில் பெண்ணை வளைத்துக் காரியத்தை முடித்துக்கொள்வதில் அவர்களுக்கு நிகர் அவர்கள்தான்.

பெண் ரேக்கூன்கள் தாய்க்குலத்தின் பெருமைக்கு இன்னும் பெருமை சேர்ப்பவர்கள். தமது குட்டிகள் பெரியவர்களாகிச் சொந்தமாய்ச் சம்பாரித்து தங்களைத் தாங்களே கவனிக்கும் தகுதி பெறும்வரை தங்களுடனேயே வைத்துக்கொள்வார்கள்.

நான் வாழும் சிறிய நகரம் கனடாவிலேயே பெரும் பணக்காரர்கள் வாழும் நகரங்கள் என்ற பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பில் என்னையும் சேர்த்துக்கொண்டார்களா என ஒருமுறை விசாரித்துப் பார்க்கவேண்டும்.  இங்குள்ள வீடுகள், நம்மூரிலே சுளகில் வடகங்களை அடுக்கிக் காயவைக்கப்பட்டதுபோல் ஒழுங்காகவும் அழகாகவும் கட்டப்பட்டிருக்கும். அப்படியான வீட்டு வரிசைகளின் எல்லைகளோடு ஒட்டியபடி சிறு காடுகளும் பற்றைகளும் பரந்திருக்கும். இவைகளே ரேக்கூன்களின் குடியிருப்பு.

ரேக்கூன்களின் வாழ்க்கைமுறை, குணாதியங்களை வைத்து இந்தச் சனங்கள் மிக ருசிகரமான பெயர்களையெல்லாம் அவற்றுக்குச் சூட்டியிருக்கிறார்கள். ராஸ்கல் முதல் வெளியே வாய்விட்டுச் சொல்லமுடியாத வேறு பல பெயர்களிலெல்லாம் இதனை அழைப்பார்கள்.

சமீபத்தில், கோடை வெயிலைத் தாங்கமுடியாமல் ஒரு ரேக்கூன் எங்கேபோய் உடம்பு அவிச்சலைத் தீர்த்துக்கொள்ளலாம் எனத் திரிந்திருக்கிறார். சிறு காட்டுப்பக்கத்துக்கு அடுத்து வரிசையாயிருந்த வீடொன்றின் பின் தோட்டத்தில் நீச்சல் குளத்துக்கு அருகே அந்த வீட்டுச் சிறுமியின் பிறந்த நாள் கொண்டாட்டம் விமரிசையாக நடந்துகொண்டிருந்தது. ஏகப்பட்ட சின்னஞ்சிறுசுகள் எழுப்பிய சத்தத்தையோ அந்தக் கொண்டாட்டத்தைப் பற்றியோ சிறிதும் அக்கறை கொள்ளாமல் நமது ரேக்கூனார் தண்ணீரைக் கண்டதும் ஓடிப்போய்க் குளத்தில் பொதேலென்று குதித்திருக்கிறார். மேலும் சொல்வானேன், அன்றைய இரவு டிவி செய்தியில் இவருக்குப் பிறகுதான் ஒபாமா. கூடவே Party Crasher என்ற பட்டத்தையும் சுவீகரித்துக்கொண்டார்.
இவர் என் பிறந்த ஊரில் இருப்பாரென்றால் என்ன பெயர் எடுத்திருப்பாரோ அந்தப் பெயரையே இவருக்கு நான் வைத்திருக்கிறேன் - வெங்காயம்.

இரவு வந்தாலும் இவருடைய வேட்டைக்கு ஓய்விருக்காது. பெரும்பாலும் நடுச்சாமத்தில் புறப்பட்டுவிடுவார் ரேக்கூனார். அகன்ற ரோட்டுக்கு இந்தக் கரையோரமாகவுள்ள பற்றையைவிட்டு அந்தக் கரையோரமாகவுள்ள பற்றைக்குப் போயாகவேண்டும். அந்தக் கரையில் உறவினர்களும் நண்பர்களும் இவர் வரவைக் காத்துக்கொண்டிருக்கக்கூடும்.

வந்தவர் ரோட்டுக் கரையோரமாக நின்றுகொண்டு வாகனப் போக்குவரத்தைக் கொஞ்ச நேரம் அவதானித்துக்கொண்டிருப்பார். ஒரு வாகனமும் ஓடாமல் ரோட்டு நிசப்தமாக இருக்கின்றபொது நினைத்துக்கொள்ளுவார், ஒருவரும் ரோட்டைக் கடப்பாரில்லையே ஆகவே இந்த நேரம் ரோட்டைக் கடக்க உவப்பான நேரம் இல்லையென்று. பழையபடி வாகனங்கள் ஓடத்துவங்கி ரோட்டு பிஸியானதும் நினைத்துக்கொள்வார், எல்லாரும் ரோட்டைக் கடக்கிற நேரம் இதுதான்போலும் ஆகவே நாமும் கடந்து செல்வோம். விளைவு, ஒன்றுக்கு மேற்பட்ட கார்களில் அடிபட்டு அரைபட்டுச் செத்துச் சப்பளிந்துபோய் உருத்தெரியாமல் நடு ரோட்டில் கிடப்பார் வெங்காயம். காலை வேளையில் கந்தோருக்குப் போகும்போது மரண அறிவித்தல்கள் எதுவும் இல்லாமலே அன்னாரின் அந்திமக் கிரியைகளை நம் கண்முன்னால் நகரசபை ஆட்கள் நடத்திக்கொண்டிருப்பார்கள்.

இவைகள் செய்வதெல்லாம் கொடுமைகளைத்தவிர வேறொன்றுமில்லை என்பதனால்தானோ என்னவோ, ரேக்கூனைத் தங்கள் நாட்டு தேசிய மிருகமாக ஏற்பதற்கு உலகத்தில் எந்த நாடும் இதுவரை முன்வரவில்லை. ஆனால் ஸ்ரீ லங்காவில் ரேக்கூன்கள்தான் இன்று ஆட்சி நடத்துகின்றன எனக் கேள்வி.

2 comments:

  1. அஹா அஹா சிறிலங்காவில் ரேக்கூன்கள் ஆட்சி நடத்துவதாக கேள்வி ....ம்ம்ம்ம்
    அருமையான எழுத்து நடை ஐயா. ஒரு கதையின் போக்கில் நீங்கள் சொல்லியவிதம் நல்ல இருக்கு.
    நன்றி ஐயா பகிர்வுக்கு

    ReplyDelete
  2. "இந்த இரண்டு புராதன இனங்களுக்கிடையே இன்றுள்ள முக்கியமான வேறுபாடு ரேக்கூன்கள் மரக்கறி வகைகளையும் சாப்பிடுமாம்."

    மேற்கூறிய வசனத்தை நான் ஒத்துக் கொள்ளமாட்டேன்.  ஏனெனில் தமிழர்களும் 
    மரக்கறி சாப்பிடுவார்களரக்கும்.
    நீங்கள் வருநித்த விதம் நளமாகவும் நையமாகவும் இருக்கின்றது.  மேலும் உங்கள் ஆக்கங்கள் அறிய அடியேன் ஆவலாக உள்ளேன், அசத்ததுங்கள்.

    ReplyDelete