எங்களூர்க் கடைத்தெருவுக்கு அப்பாவுடன் சின்ன வயதில் பலமுறை போய்வந்திருக்கிறேன்.
ஒவ்வொருமுறையும் அவரின் கையைப் பிடித்தபடி அவரின் வேகத்துக்கு இணையாக
நடந்திருக்கிறேன். நான் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியிலும் என் மனதின் குதூகலம் சுருதி
பிசகாமல் கூட வந்திருக்கிறது. போகும்போதும் வரும்போதும் அவர் சொல்லும் கதைகளைக்
கேட்டபடி நடப்பது ஒரு இனிமையான அனுபவம். வளர்ந்துவிட்டால் என்னால் தனியே நடந்து கடைக்குப் போகமுடியுமென்றும் வசதி வந்தால் ஒரு சயிக்கிளும் வாங்கித் தருவாரென்றும்
அவர் பலமுறை எனக்கு நம்பிக்கையூட்டியிருக்கிறார். ஆனால் அத்தனை விரைவில் தனியாக இக்கடைத்தெருவுக்குப்
போகவேண்டிவருமென அன்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அதுவும் முன்புபோல்
குதூகலத்துடன் அல்ல பத்து வயதும் நிரம்பாத நான் மிகவும் புண்பட்ட மனதோடு!
எங்கள் வீட்டிலிருந்து கடைத்தெரு வரைக்கும் ஒரு கட்டை தூரமாவது
இருக்குமென்று அம்மா சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறென். வழியில் புலோலிச் சிவன்
கோயிலும் வேலாயுதம் இங்கிலீஷ் பள்ளிக்கூடமும் இருந்தன. நான் எங்கள் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு சித்தியானதும் மேற்படிப்பை
இந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்துதான் படிக்கப்போகிறேன் என்று என் அப்பா ஏற்கனவே
தீர்மானித்திருந்ததால் நான் அத்தெருவால் போகும்போதெல்லாம் இங்கிலீஷ் பள்ளிக்கூடவாசலை
ஒரு கோயிலாக நினைத்து மனதுக்குள் வணங்கிக்கோள்வேன். அதேபோல் சிவன் கோயில் மேற்கு வாசலைக் கடக்கும்போதும் மனதுக்குள் சுவாமியை
வணங்கத் தவறியதில்லை.
சிவன் கோயில் மேற்கு வீதியோடு கடைத்தெருவும் ஆரம்பிக்கிறது. அங்கே ஒன்றிரண்டு
தேனீர்க் கடைகளில் ஈக்கள்தான் நேரத்தோடு வரும் அன்றாட வாடிக்கையாளர்கள்
போலிருக்கும். எப்போதாவது கடையின் உள்ளேயும் வெளியேயும் நின்றபடி தேனீர்
அருந்துவோரும் பீடி, சுருட்டுப் புகைப்போரும் ஈழ நாடு பத்திரிகையைக்
கமக்கட்டுக்குள் செருவிக்கொண்டு ஊர், உலகச் செய்திகளை அலசுவோரும் அக்கடைகளின்
உயிரோட்டத்துக்கு ஆணிவேராக இருந்தார்கள். இக்கடைகளைத் தாண்டினால் எப்போதும்
கலகலப்பாயிருக்கும் மெத்தைக் கடைச் சந்தி. அந்தச் சந்திக்கு எந்தப் பெயர்
வைக்கலாமென்பதை உள்ளுர் வாசிகள் தீர்மானிக்க முன்னரே சந்தியில் நடு நாயகமாக அந்த
ஊரின் ஒரேயொரு மெத்தைக் கடை நின்றதால் சந்தியின் பெயரோடு அக்கடையின் பெயரும் இயல்பாகவே
இணைத்துக்கொண்டது. நல்லதாய்ப்போயிற்று, ஒருவரும் பிரச்சனை எழுப்பவில்லை.
மெத்தைக் கடைச் சந்தியைத் தாண்டினால் கூப்பிடு தூரத்தில் ஒரு புளிய
மரம் சடாய்த்துப்போய் தெரு நீளத்துக்குப் பந்தல் போட்டதுபோல் நின்றது. அதுதான்
கடைத் தெருவைத் தமது ஏகபோக ராச்சியமாகக்கொண்ட காகங்கள், குருவிகள், அணில்கள்
மற்றும் சிறு சீவராசிகளின் கோட்டையாயிருந்தது. புளிய மரத்துக்குப் பக்கத்தில் தெரு
ஓரமாக நிரையில் நின்ற கடைகளில் அப்துல் காதரின் நகைக் கடையுமொன்று. அவர் அக்கடைத்
தெருவில் வியாபாரம் தொடங்கிய காலம் எவ்வளவோ பழையது என்பதைத் துல்லியமாகக்
காட்டுவதுபோல் வாசல் கூரையில் பதித்திருந்த போர்டில் ‘அப்துல் காதர் தங்கம் வெள்ளி
நகைகள் வாங்குமிடம் விற்குமிடம்’ ஆதியாம் எழுத்துகள் அத்தனையும் காலப்போக்கில் சாதாரண
கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்துபோக கறள் பிடித்த வெறும் தகரம் மட்டுமே இளித்துக்கொண்டிருந்தது. கடையின் அகன்ற வாசலின் மடிப்புக் கதவுகளும்
பிணைச்சல் ஈடாடிப்போய் தள்ளாடியபடி நின்றன. அவற்றை ஒன்றாக மடித்து இருபுறச் சுவரிலும்
அறைந்திருந்த ஆணியோடு இழுத்துக் கட்டும் பணியில் எப்போதும் ஒரு இளைக் கயிறு எந்த
நேரமும் அறுந்துவிடலாம் என்பதுபோல் தொங்கிக்கொண்டிருக்கும். இதையெல்லாம்
ஈடுகட்டுவதுபோல் அப்துல் காதரின் புன்முறுவல் பூத்த முகம் வாடிக்கையாளரை வாவென்று
இழுக்கும்.
அப்துல் காதரின் கடையில் தொங்கும் போர்டில் அவர் பெயர் மறைந்ததைப்
போலவே அவரின் சொந்தப் பெயரும் எங்கள் ஊர் மக்களின் நினைவிலிருந்து காலப்போக்கில்
மறைந்துவிட்டது. ஆனால் வெறுமனே ‘காக்கா’ என மட்டுமே அழைக்கப்பட்டுவந்தவர்
புளியமரத்தடிக்குப் பக்கத்தில் கடை வைத்திருந்ததால் ‘புளியமரத்தடிக் காக்கா’ என்று
சொன்னால்தான் தெரிந்துகொள்ளுமளவுக்குப் பிரசித்தமாகிவிட்டார். எவரையும் வாய்ப்
பேச்சால் வாலாயப்படுத்தும் வல்லமை கொண்ட காக்காவின் கடைக்குள் நுழைந்தவர் எதையுமே
வாங்காமல் வெளியேறுவாரென்றால் அவர் தபால், தந்திச் சேவகராக அல்லது எனது
அப்பாவாகத்தான் இருக்கவேண்டும்.
அப்பாவோடு எப்போது கடைத்தெருவுக்குப் போனாலும் புளியமரத்தடிக் காக்கா
கடை வாசலில் ஒருசில நிமிடமாவது செலவழிக்காமல் நாம் வீடு திரும்பியதில்லை. இவர்கள்
இருவருக்கிடையிலும் எப்படிச் சினேகிதம் வலுத்தது என்பது பற்றி அப்பா எதுவும்
சொன்னதாக நினைவில்லை. ஆனால் சினேகிதமென்றால் அப்படியொரு சினேகிதம். ஆளையாள் கண்டதும்
இருவர் முகத்திலும் திடீரெனத் தோன்றும் புளகாங்கிதம் பார்ப்பவர்களுக்குப்
புல்லரிப்பை ஏற்படுத்தும்.
புளியமரத்தடிக் காக்கா தீவிர இஸ்லாம் மார்க்கப் பற்றுள்ளவரென்றால்
அப்பாவோ வல்லிபுர ஆழ்வார் பக்தர். அவர் கிழக்கு மாகாணத்தில் நான் முன்பு அறிந்திராத
சம்மாந்துறைப் பக்கத்திலிருந்து வந்தவர் என்றும் திருமணமாகாமலேயே வாழத்
துணிந்தவெரென்றும் அப்பா சொன்னதாக நினைவு. அவர் எங்களூருக்கு வந்த காலத்திலிருந்தே
நகை வியாபாரத்தில் ஈடுபட்டவரென்றால் இவர் இங்கிலிஷ்காரன் ஆட்சியிலிருந்து சிங்கள
ஆட்சிவரை சிவில் உத்தியோகத்தர் பதவியிலிருந்து 58ஆம் ஆண்டுக் கலவரத்தில் அடிபட்டு
ஊருக்கு வந்ததோடு வேலையற்றுப்போனவர். இந்த இரு துருவங்களையும் இணைத்தது வெறும்
நட்பாக இருக்கமுடியாது. அதற்கும் மேலாய் ஒரு புரிந்துணர்வாய்த்தான் இருந்திருக்கமுடியுமெனப்
பின்னைய காலத்தில்தான் எனக்குத் தெளிவாயிற்று. எத்தனை பேருக்கு இப்படி
ஏற்படமுடியும்?
புளியமரத்தடிக் காக்கா நகை வியாபாரியாயிருந்தபோதிலும் நம்பமுடியாத
அளவுக்கு நாணயமுள்ளவர். தனது உழைப்பில் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதியை தனது ஊரில் வாழும் ஏழைக்
குடும்பங்களின் திருமணங்களுக்கும் அந்த ஊரிலிருந்ததோர் மசூதிக்கும் இடது கைக்குத்
தெரியாமல் அள்ளிக் கொடுப்பவர். அப்பாவும்
நல்ல மனிதரென்று பெயரெடுத்தவர். இரக்கப்படவேண்டிய இடத்தில் மடியில் இருப்பதையும்
கொடுத்துவிட்டு வெறும்கைகளை ஆட்டியபடி குஷாலாக வீட்டுக்கு வருபவர். இந்த இரண்டு
போக்குகளும்தான் இருவரையும் இப்படி இணைத்துவைத்ததோ!
அப்பா உத்தியோகத்திலிருந்து தானாகவே விலகிக்கொண்டாரெனக் கருதப்பட்டதால்
அவருக்குப் பென்சனும் கொடுக்க மறுத்துவிட்டார்கள். அப்பா அரசாங்கத்துக்கு உழைக்கப்போய்
பிறந்த நாட்டிலேயே அகதியாகிக் கப்பல் ஏறி ஊருக்கு வந்ததே வாழ்க்கையில்
மறக்கமுடியாத அனுபவம். இனி ஊரில் ஏதேனும் தொழில்செய்து சம்பாதிக்கலாமென்ற
நம்பிக்கையைச் சுமந்தபடிதான் வீட்டுக்கு வந்தார். ஆனால் அந்நேரம் ஊரெங்கும் வேலை
தொழில் உட்பட எல்லாமே தட்டுப்பாடாக இருந்தது. கொஞ்சக்காலம் கையிலிருந்த
சேமிப்பையெல்லாம் கட்டுமட்டாக எல்லாச் செலவுக்கும் எடுத்துக்கொண்டிருந்தார்.
மலைபோன்ற செல்வமும் இருந்தபடி சாப்பிட்டால் கட்டெறும்பாகிவிடுந்தானே! அப்போதுதான்
புளியமரத்தடிக் காக்காவின் யோசனை அவருக்குத் துணை செய்தது. அந்தக் காலத்தில்
சிங்கப்பூரும் மலாயாவும் ஒரு நாடாய் இருந்தன. ஆயினும் அது சிங்கப்பூரெனவே
நம்மவர்களால் அழைக்கப்பட்டுவந்தது. அங்கே
அப்பாவுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடுமென்ற நம்பிக்கையை அப்பாவிடம்
விதைத்தவர் புளியமரத்தடிக் காக்காதான். அவர் கொடுத்த ஊக்கத்தாலும் பண உதவியாலுமே
அப்பாவால் சிங்கப்பூருக்குக் கப்பலேற முடிந்தது.
அப்பா பயணம்போவதற்கு முதல் நாள் இரவு என்னையும் அழைத்துக்கொண்டு
எங்களூர் முருகன் கோயிலுக்கு வந்தார். கோயில் முன் திண்ணையில் சால்வையை
விரித்துவிட்டு என்னையும் பக்கத்தில் படுக்கவைத்தார். அவர் ஏன் அப்படிச்
செய்கிறார் என்று விளங்கிக்கோள்ளும் பக்குவம் எனக்கு அப்போது இருக்கவில்லை. ஆனால்
அவரின் மென்மையான கைகளின் அணைப்பில் கட்டுண்டு அடுத்த நிமிடமே நித்திரையாகிவிட்டேன். அடுத்த நாள் காலை தன் கடல்
கடந்த பிரயாணத்துக்குப் புறப்பட்டுவிட்டார் அப்பா. நாம் கண்ணீரைத் துடைக்க மறந்து
அவர் விமானம் ஏறுவதையே பார்த்துக்கொண்டிருந்தோம். விமானப் படிகளில் ஏறும்போது
என்னைப்பார்த்து அவர் கையசைப்பதுபோலிருந்தது. நான் உடனே அப்பாவிடம் ஓடிப்போய் அவரின்
மடியிலிருந்து கூடவே பயணம் செய்யவேண்டும்போல் உணர்ந்தேன். அவர் விமானம்
ஏறியபிறகும் யன்னலூடாகக் கையசைத்துக்கொண்டிருந்தார். அது போய்வருகிறேன் என்று
சொல்வதுபோலிருந்தது கவலைப்படாதீர்களென்று சொல்வதுபோலுமிருந்தது. ஆனால் நானோ அன்று
முழுவதும் சாப்பிடாமலே அழுதுகொண்டிருந்தேன். அதன்பின்னர் கிட்டத்தட்ட பதினான்கு
ஆண்டுகள் அந்தக் கடைசி இரவில் கோயில் திண்ணையில் அவர் தந்த மென்மையான அணைப்பை
நினைத்துக்கொண்டே தனியனாய்த் தூங்கப்பழகிக்கொண்டேன்.
அப்பா சிங்கப்பூருக்குப் பயணமாகி மூன்று மாதமாகிவிட்டது. அவர் அங்கே
புதிய நாட்டில் தனியனாய்ச் சிரமப்பட நாங்கள் இங்கே அவரிடமிருந்து எந்த நேரத்திலும்
ஒரு செய்தியாவது வரக்கூடுமென்ற ஆவலில் அன்றாடம் தபால்காரனை வாசலில்
காத்திருந்தோம். ஒவ்வொரு நாள் காலையும் சந்தியில் நின்று தபால்காரனைக் கண்டபின்னரே பள்ளிக்குப் போவது அன்று என் வழக்கமாகிவிட்டது.
அப்பா பயணம்போன தினத்தன்று அம்மாவின் கையில் கொடுத்துவிட்டுச் சென்ற
ஆறுபது ரூபாவில்தான் இவ்வளவு நாட்களாய் வீட்டிலுள்ள நாலு வயிற்றையும் நிரப்பி
என்னையும் என் இரண்டு தங்கைமாரையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினாள். அம்மா எப்படிக்
கெட்டித்தனமாய் அவ்வளவு காலமும் குடும்பத்தை நடத்தினாள் என்பதை நான் முழுவதும்
விளங்கிக் கொள்ளக்கூடியவனாக அன்று இருக்கவில்லை. ஆனால் அம்மா மிகக் கெட்டிக்காரியென்பதும்
தன்மானம் உள்ளவள் என்பதும் எனக்கு நன்றாகத் தெரிந்ததுதான். இல்லாவிடின் இனிக் கையில்
செலவுக்கு ஒரு சதம்கூட இல்லையேயென்று கண்டபோது உறவினரிடமோ கிராமத்துக் கடைக்காரனிடமோ
கடன் கேட்க விரும்பாமல் காதில் கொழுவியிருந்த பவுன் குச்சுகளைக் கழற்றி ஏதேனும்
நகைக் கடையில் கொடுத்து காசை வாங்கி வா, மகனே என்று கடைத்தெருவுக்குத் தனியாய்ப்போய்ப்
பழக்கமில்லாத என்னை அனுப்புவாளா? வறுமை எவ்வளவு கொடியது. அதுவும் இளமையில் வறுமை
இன்னும் கொடியது!
மனம் முழுவதும் தயக்கமும் கையில் பெறுமதியான
பொருளைத் துணையேதுமில்லாமல் கொண்டு செல்கிறேனேயென்ற பயமும் சூழ்ந்திருந்தபோதிலும் கூடவே அப்பா என்னுடன்
வருகிறார் என்ற உணர்வு மேலிட்டதால் வெளியில் கொஞ்சம் உசாராகவே நடந்து
கடைத்தெருவுக்குச் சென்றேன்.
ஒவ்வொரு நகைக்கடையையும் அன்றுதான்
கண்டதுபோன்ற அதிசயத்துடன் பார்த்துக்கொண்டு நடந்து சென்றேனேயன்றி ஒன்றன் வாசலிலும்
ஏற எனக்குத் துணிவு வரவில்லை. கடைக்காரர்களுக்கும் விஷயம் விளங்கியிருக்கவேண்டும்.
என்றாலும் என்னைப்போன்ற சிறுவனுடன் வியாபாரம் செய்ய விரும்பாதவர்கள்போல் எதுவும்
பெசாதிருந்தார்கள். நான் மெத்தைக்கடைச் சந்தியைத் தாண்டி வந்தபோதுதான்
புளியமரத்தடிக் காக்காவின் கடை நினைவுக்கு வந்தது. ஆனால் அவரிடம் மட்டும் போய்
நகையைக் காட்டாதே என்று அம்மா வழிக்குவழி சொன்னது மனதில் உறுத்தியது. ஆனால் விதி
வேறு விதமாக முடிவு எடுத்திருக்கவேண்டும். அவருடைய கடையை நான் தாண்டி நடந்தபோது
என்னை அவர் பெயர் சொல்லிக்கூப்பிட்டது கேட்டது. நான் திரும்பிப் பார்த்தபோது அவர்
எல்லாம் விளங்கிக் கொண்டவர்போல் வாசல் படியில் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தார்.
எனக்குப் பொய்சொல்லிப் பழக்கமில்லை. அதுவும் இவருக்கு முன்னால் அவசரத்துக்குக்கூடச்
சொல்லமுடியாது. அப்பாவுடன் இவரின் கடைக்கு வந்தபோதெல்லாம் அவர்கள் இருவரும்
பேசுவதைக் கவனித்துக்கொண்டு இடைக்கிடை காக்காவும் அப்பாவும் கேட்கிற கேள்விகளுக்கும்
பதில் சொல்லிக் கொண்டிருப்பேனேயன்றி அதற்கு மேலாய் வாய் திறக்க எனக்குச்
சந்தர்ப்பமே கிடைத்ததில்லை. ஆனால் இப்போது அவரின் கடை வாசல் படியில் ஏறி நின்றதும்
பேசுவதற்குப் பதிலாக அழுகையே அடக்கமுயன்றதையும் மீறிக் குமுறிக்கொண்டு எழுந்தது.
அழுகையின் மத்தியில் அன்று நான் கடைக்கு வந்த காரணத்தை அவரிடம் அப்படியே
ஒப்புவித்துவிட்டேன். இவருக்கு நான் எப்படிப் பொய் சொல்லுவேன். அது அப்பாவின்
முன்னால் பொய் பேசுவது போன்றதல்லவா?
நான் கடைத்தெருவுக்கு வந்த காரணத்தைக்
கேட்டறிந்ததும் என்னிடமிருந்த நகையைப் பாராமலேயே கையில் இரண்டு ரூபாவைத் தந்து என்னை
வழியனுப்பிவைத்தார் புளியமரத்தடிக் காக்கா. வீட்டுக்குத் திரும்பிவரும்
வழியெல்லாம் என் மனம் கடைக்கு வந்தபோதிலும் பார்க்க இன்னும் பாரமாக இருந்ததை
உணர்ந்தேன். அம்மா என்ன சொல்வாளோ என்ற பயம் ஒருபுறம் அப்பாவின் கடிதம் வந்ததா என
காக்கா அக்கறையுடன் கேட்டதற்கு நான் அழுகையினூடே “இலை”யென்று சொன்னபதில் இன்னொரு
புறமுமாக கையில் காசையும் நகையையும் கூடவே வேதனையையும் சேர்த்துச் சுமந்தபடி வீடு
சென்றேன். அம்மா என் கண்களைத் துடைத்துச் சமாதானப்படுத்தியபோது அப்பாவை நினைத்தே
நான் அழுதேன் என்பது தெளிவாகி அன்று முழுவதும் வெளியே விளையாடக்கூடப்போகாமல்
வீட்டினுள்ளேயே அடைபட்டுக்கிடந்தேன்.
அடுத்த கிழமையே அப்பாவின் முதல் கடிதம் வந்துசேர்ந்தது.
வீட்டில் ஒரே கொண்டாட்டம். தான் சுகமாய் இருப்பதாகவும் ஒரு கம்பெனியில் வேலையில்
சேர்ந்திருப்பதாகவும் எழுதியிருந்தார். கையோடு, கடைக்குப்போய்க் காக்காவிடம் தன்
சுகம்பற்றிச் சொல்லும்படியும் அப்பா தன் கடிதத்தில் கேட்டிருந்தார்.
அன்று மாலையே காக்காவின் கடைக்குப்போய்
அவரைக்கண்டு அப்பாவிடமிருந்து கடிதம் வந்த செய்தியைச் சொன்னபோது நான் திடீரென
இளைஞனாகிவிட்டேன்போல் உணர்ந்தேன். அன்று நகையை விற்கப்போனபோது அவரோடு தனிப்படப்
பேசியதிலிருந்ததன் பின்னர் வந்த பதினான்கு ஆண்டுகள் எனக்கு அவரே அப்பாவைப்போல்
வழிகாட்டியாயிருந்ததற்கு அந்தச் சந்திப்பே காரணமாயிற்று. அதன்பிறகு அவரைச்
சந்தித்த ஒவ்வொரு முறையும் அப்பாவே அவர் மூலமாக என்னுடன் பேசினார் என்பதை அப்பா
அனுப்பிய கடிதங்களை எனக்குக் காட்டியபோது விளங்கியது.
அப்பா ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்கு
விடுமுறையில் வந்து எம்மோடு ஒரிரு மாதங்கள் மனதில் அன்பையும் வாழ்வில்
நம்பிக்கையையும் விதைத்துவிட்டு மீண்டும் மலாயா சென்றார். அந்த ஓரிரு மாதங்களில்
வீட்டைப் புதிதாகக் கட்டி எனது மேற்படிப்புச் செலவுகளுக்கும் ஆயத்தங்கள்
செய்துவிட்டுச் சென்றார். அந்நாட்களில் வீட்டில் அவரைக் காணாவிட்டால்
புளியமரத்தடிக் காக்காவுடன் போழுது போக்குகிறாரென்றே நாம் தெரிந்துகொண்டோம். இந்த
இரு உள்ளங்களும் உடையும்படியாக ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்பா மீண்டும் மலாயா போய்
இரண்டு ஆண்டுகளில் புளியமரத்தடிக் காக்காவின் கடையைக் கள்வர்கள் உடைத்து
அங்கிருந்த பெறுமதியான அத்தனையையும் துடைத்துச் சென்றுவிட்டார்கள். அன்றிலிருந்து
காக்கா படுக்கையில் விழுந்தவர்போலாகிவிட்டார். அப்பாவும் ஊரில் இல்லாததால் அவரின்
நெஞ்சுரம் குன்றிப்போனது கூடவே உடல் நலமும் குன்றிப்போனது. அதன்பிறகு சிலகாலமே
அவரால் தாக்குப்பிடிக்கமுடிந்தது. காக்கா காலமான செய்தியை அறிந்ததும் உடனே ஊருக்கு
வருவதற்குத்தான் அப்பா முயன்றார். ஆனால் அது இயலாமற்போய்விட்டது. அதன் பின்னர் அப்பா
ஊருக்கு வர ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்தபோது அவரின் பெயரில் புளியமரத்தடிக் காக்காவின்
சட்டத்தரணி எழுதிய கடிதமொன்று எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்த்து. சீல் வைத்த
கடிதத்தைத் திறக்கப் பயந்து அவர் வரும்வரையும் காத்திருந்தோம். அப்பா இறுதியில்
வந்து சேர்ந்தார்.
அப்பா மலாயாவிலிருந்து
நாட்டுக்குத் திரும்பிவந்து இன்றோடு ஒரு கிழமையாகிவிட்டது. அவர் இனித் திரும்பவும்
மலாயா போகமாட்டார் என்ற செய்திதான் அவர் நம்மிடம் வந்த செய்தியிலும்பார்க்க
எவ்வளவோ இனிமையாயிருந்தது. அன்றிலிருந்து இரவு பகலாக எங்கள் வீட்டில் உறவினர்களும்
நண்பர்களுமாக அவரைக் காண்பதற்கு வந்ததால் வீடு எந்நேரமும் களைகட்டியிருந்தது.
கண்டியில் படித்துக்கொண்டிருந்த நானும் ஒரு கிழமையாவது அவருடன் நிற்பதெனத்
தீர்மானித்து வந்திருந்தேன். அப்பா தன்னைப்பற்றியும் மலாயாவில் தன்
வாழ்க்கைபற்றியும் பேசியதிலும் பார்க்க என்னையும் என் படிப்பையும் பற்றியே எல்லாருடனும் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். நான் நினைத்திருந்த அப்பாவிலும் பார்க்க
இன்னும் கூடுதலாக அன்பைப் பொழியும் ஜீவனையே அப்போது அவரிடம் கண்டேன். அவர் காட்டிய
பாசத்தால் எல்லார் கண்ணும் என்மீது படருவதைத் தாங்கமுடியாமல் நான் அங்கிருந்து
நழுவவேண்டியதாயிற்று.
அப்பா ஊருக்கு வந்து சேர்ந்த அன்று பின்னேரம்
எங்கள் எல்லாரையும் வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்குக் கூட்டிக்கொண்டுபோனார். அம்மாவையும்
தங்கைகளையும் கோயிலைச் சுற்றிக் கும்பிட அனுப்பிவிட்டு அன்னை அருகில் இருத்தித்
தன் கைகளோடு என்கையைப் பிணைத்துக்கோண்டார். வயதுவந்த என்னுடன் இவ்வளவு நெருக்கமாய்
அன்பு காட்டுவதைக் கோயிலுக்கு வந்தவர்கள் கவனித்துச் சென்றதை அவர்
பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. இவ்வளவு நெருக்கத்தில் எதையோ முக்கியமாக
என்னிடம் சொல்லப்போகிறாரென்ற ஆவலை என்னுள் மூட்டிவிட்டு கடைசிவரை எதுவும்
சொல்லாமலே என்னை எனக்குள் பேசவைத்துக்கொண்டிருந்தார். அவருடைய மென்மையான கையின்
அணைப்பு “மோனை, உனக்குப்
பக்கத்திலையிருந்து கதைச்சு எத்தினை வருசமாய்ப் போய்ச்சுது” என்று அவர் மனம்
முழுவதும் வெப்பியாரம் பொங்கச் சொல்வதுபோலிருந்தது. நானும் அதை ஆமோதிப்பதுபோல்
தலையைக் குனிந்தபடி மௌனமாயிருந்தேன்.
சிறிது நேரத்தில் அம்மாவும் தங்கைமாரும் திரும்பிவந்து எம்முடன் இணைந்துகொண்டார்கள்.
தாங்கள் வீதியைச் சுற்றிவிட்டு வந்தபோது அப்பாவும் நானும் தியானத்தில்
இருந்தோமென்று தங்கைகள் சொல்லிச் சிரித்தபோது எனக்கு வெட்கப்படுவதற்குப் பதிலாகப்
பெருமையாயிருந்தது. நிச்சயம் தியானம்தான். அப்பாவின் அரவணைப்புக்கு இத்தனை காலமும்
ஏங்கிக்கிடந்தவன் மௌனமாய் அவரின் கருணை மிக்க உள்ளத்தோடு எங்கள் கைகளின்
பிணைப்பினூடே பேசிக் கொண்டிருந்தேனென்றால் அதுவும் ஒருவகைக்குத் தியானம்தான்.
அப்பாவே என்னைச் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்ற உணர்வில் இன்று
காலையும் நீண்ட நேரம் நித்திரையாகிவிட்டேன். நித்திரையில் என் தலையை யாரோ
தடவுவதுபோன்ற அருட்டுணர்வில் கண்களை விழித்துப் பார்த்தேன். அப்பாவேதான். “காலை
ஒரு இடத்துக்குப் போகவேண்டுமென்று நேற்றுச் சொன்னேனே, மோனை, வெளிக்கிடவேண்டாமே?”
என்றார். நேற்றுக் கோயிலடியில், “காலை கடைத் தெருவுக்குப் போய்வருவோம், கையோடு
லோயரையும் கண்டுவரலாம்.” என்று சொன்னது துப்பரவாய் மறந்தே போய்விட்டது. நான்
வெட்கத்தோடு எழும்பி வெளிக்கிட்டதும் இருவருமாய்ப் புறப்பட்டோம்.. நாம் தெருவில்
இறங்கி நடக்க ஆரம்பித்ததுமே சிறுவயதில் அவரின் கையைப் பிடித்தபடி நடந்துபோன
நாட்கள் படமாய் என் கண்முன் விரிந்தன. இப்போது அவருக்கு அறுபது வயதாகிவிட்டது.
ஆனாலும் ஒழுங்கான வாழ்க்கை முறையும் இறை வழிபாடும் அவரை இப்போதும் இளமையாகவே
வைத்திருந்தன. எனது சின்ன வயதில் அவருடன் கூட நடந்துபோன சமயங்களில் கடைக்குப்
போகிறேனேயென்ற மகிழ்ச்சியும் பரபரப்புமே என்னிடம் கரை புரண்டு ஓடியது
நினைவிருக்கிறது. ஆனால் இன்றோ அவருக்குச் சமமாக மட்டுமல்ல அவரின் வழிகாட்டலில்
அவரைப்போன்றே வளர்ந்த பிள்ளையாக அவருடன்கூட நடக்கின்றேனேயென்ற உணர்வே என்னைப்
பெருமிதத்தில் ஆழ்த்தியது.
கடைத்தெருவுக்கு வந்ததும் பூட்டிக்கிடந்த புளியமரத்தடிக் காக்காவுடைய
கடையின் எதிர்க்கரையில் நின்றபடி அதைச் சிறிது நேரம் மௌனமாய் நோக்கியபடி நின்றார்
அப்பா. பின்னர் என்பக்கம் திரும்பி, “நான் ஊரிலை இல்லாத வேளை அவர் உன்னைக் கண்டு
கதைத்ததெல்லாத்தையும் எனக்கு எழுதிக்கொண்டிருந்தார், தெரியுமோ?” எனக் கேட்டார்
அப்பா. “நானும் அவரைக் கண்டு கதைத்ததையெல்லாம் உங்களுக்கு எழுதிக்கொண்டிருந்தேனே,
அப்பா.” என்றேன். “அதுதான் உண்மையான அன்பும் மரியாதையும்.” என்று சொல்லிவிட்டு அப்பா
என்னப் பார்த்துப் புன்முறுவல் செய்தார்.
புளியமரத்தடிக் காக்காவுக்கு அப்பா கொடுக்கவேண்டிய கடனையெல்லாம் அவர்
கேளாமலே காலத்தோடு கொடுத்துத் தீர்த்துவிட்டார் என்பதை அவர் வீட்டுக்கு அனுப்பிய
கடிதங்களின் மூலம் அறிந்திருந்தேன். காக்கா விரும்பிய சுவிஸ் கைக்கடிகாரம்,
பார்க்கர் பேனா போன்ற பொருட்களையும் அவ்வப்போது வருகிறவர்கள்மூலம் கொடுத்தனுப்பி
அவருடனுள்ள தன் நட்பையும் விசுவாசத்தையும் அப்பா காட்டத் தவறவில்லை. என்றாலும்
காக்கா தனது சட்டத்தரணிக்கு எழுதிக்கொடுத்த கடிதத்தில் என்ன செய்தி இருக்குமோவென
நான் மூளையைக் குளப்பிக்கொண்டிருந்தேன். புளியமரத்தடிக் காக்கா காலமாகமுன்
அப்பாவிடமிருந்து நிலுவையாய் எதேனும் காசு பணம் வரவிலிருக்கின்றதென
எழுதிவைத்திருக்கலாம். அப்பா ஊரில் இல்லாதபடியால் இதைப்பற்றி எழுத்தில்
செய்வதுதான் முறையென எண்ணி அப்படிச் செய்திருக்கலாம். என்ன அதிர்ச்சியான செய்தி
நம்மைக் காத்திருக்கிறதோவென்ற யோசனையில் மூழ்கியபடி நான் நடந்துசெல்ல அப்பாவோ மிக
அமைதியாக காலம்சென்ற தன் நண்பனின் விருப்பத்தைக் கரும சிரத்தையுடன் நிறைவேற்றச்
செல்வதுபோன்று வந்துகொண்டிருந்தார்.
எங்களையும் அப்பா நீட்டிய கடிதத்தையும் கண்ட லோயர் அப்பா யாரென அனுமானித்துக்
கொண்டவர்போல் உடனேயே விஷயத்துக்கு இறங்கிவிட்டார். அவர் தயாராக் வைத்திருந்த
உறுதிபோன்ற பத்திரத்தைக் கையிலெடுத்து “இதோ பாருங்கோ, காலமான அப்துல் காதர் தனது கடைசிக்
காலத்தில் எழுதிச் சட்டப்படி உறுதிப்படுத்தின இறுதி விருப்பாவணம். தன் இறப்பின்பின்னர் தன்
பெயரில் வங்கிப் பாதுகாப்பிலிருந்த பணத்தில் உங்கள் பெயருக்கு நன்கொடையாக இருபத்தையாயிரம்
ரூபாவும் மிகுதியை அவரின் ஊரிலுள்ள மசூதிக்கும் சேரவேண்டுமென
எழுதிவைத்திருக்கிறார்.” என்று எங்களைப் பார்த்தபடி கூறிவிட்டுச் சிறிது நேரம்
சிந்திக்க அவகாசம் வேண்டுமென எண்ணியவர்போன்று சில விநாடிகள் அமைதியாயிருந்தார்.
நாமோ புளியமரத்தடிக் காக்கா எழுதிவைத்த செய்தியை துப்பரவாக நம்பமுடியாதவர்கள்போல் பேச்சற்று
நின்றோம். இருபத்தாயிரம் ரூபா எவ்வளவு பெரிய தொகைப் பணம்! நாலு பரப்பு றோட்டுக்
காணியின் பெறுமதியல்லவா? அப்பா தனக்கு ஏற்பட்ட மலைப்பை வெளியே காட்டிக்கொள்ளாது
சிந்தனையில் ஆழ்ந்தார். நான் அவரின் கையைப் பற்றியபடியே லோயர் அடுத்து என்ன
சொல்லப்போகிறார் என்பதைக் கேட்பதற்கு ஆவலாயிருந்தேன்.
லோயர் தொடர்ந்தார், “துரதிஷ்டவசமாக அவரின்
கடை கொள்ளையடிக்கப்பட்டதாலும் கடைசி நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட பணமுடையாலும் வங்கியிருப்பு பெரும்பாலும் குறைந்துவிட்டதென்று வங்கியிலிருந்து
கிடைத்த அறிக்கை சொல்கிறது. அதன்படி இருபதேழாயிரச் சொச்சமுமே அவரின் பெயரில்
நிலுவையிலிருந்தது. இத்தொகை உறுதிச் செலவு, எனது கட்டணம் ஆகிய செலவுகளெல்லாம்
கழிந்தபிறகு வந்த தொகை. நீங்கள் அப்துல் காதருடன் பலகாலம் நட்பாயிருந்தீர்கள்
என்று அவரின் விருப்பாவணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் காரணத்தினாலும்
உங்கள்மீது இயல்பாகவேயுள்ள அன்பினாலும் நன்றியினாலும் விசுவாசத்தினாலுமே உங்கள்
பெயருக்கு இந்த நன்கைடையை எழுதத் துணிந்தாரென்று காலம் சென்ற அப்துல் காதர் மிகத்
தெளிவான வாசகத்தால் இந்த ஆவணத்தில் சொல்லியிருக்கிறார். அவற்றில் மயக்கமோ குழப்பமோ
எதுவுமில்லை. ஆனபடியால் உங்கள் வங்கிக் கணக்குக்கு இத் தொகையை உடனடியாக மாற்றி
எனது நன்னம்பிக்கைப் பொறுப்பைச் சட்டப்படி நிறைவேற்றவேண்டிய கடமை எனக்கிருக்கிறது”
என்று சொல்லி முடித்தார்.
நானென்றால் இத்தனைக்கும் காக்காவின் பெருந்தன்மையை எண்ணி மனம்விட்டு
அழுதிருப்பேன். நான் படிப்பை முடித்து வேலைக்குப் போகும் வரைக்கும் மட்டுமல்லாமல்
தங்கைமாரின் திருணத்துக்கும் இந்தப் பணம் எவ்வளவு பெரும் உதவியாய் இருக்கப்போகிறதென்றே
அவசரமாக எண்ணினேன். ஆனால் அதேவேளை அப்பாவின் மனதில் என்ன சிந்தனை ஓடுகிறதோவென்று
அறிந்துகோள்ளமுடியாமல் அவரின் முகத்தையே பார்த்தபடி நின்றேன். அப்பா தன் மனதில்
பட்டதைச் சொல்ல அதிக நேரம் எடுக்கவில்லை. “காக்கா போனபோது நான் பக்கத்தில்
நிற்கமுடியாமல் போய்விட்டதேயென்ற கவலைதான் என் மனதில் இப்போது பெரிய
பாரமாயிருக்கு. இதைவிட வேறு கவலையோ யோசனையோ எனக்கில்லை. ஐயா, அவர் எனக்கும் என்
குடும்பத்துக்கும் செய்த உதவிகளுக்குப் பெறுமதியே கிடையாது. இப்போது இப்படியொரு
பெரும் பாரத்தை என் தலையில் இறக்கிவிட்டுப் போயிருக்கிறார் பாருங்கள். இதுக்கு
நான் பாத்திரவாளியில்லையென்று என் மனம் சொல்லுது. எனக்குக் கொடுக்கச்சொல்லி அவர்
எழுதியிருக்கிற தொகையை விட்டால் அவர் விரும்பின மசூதிக்குக் கொடுக்க எஞ்சியிருக்கிற
தொகை கொஞ்சம்தான். ஆனபடியால் எனக்கு அவர் கொடுக்கும்படி எழுதிய தொகையையும்
அவருக்கு அந்த மசூதியின் பெயருக்கே அவருடைய பெயரில் நன்கொடையாக எழுதிவிடுங்கள்.
தேவையான பத்திரங்களை முடியுங்கள் உங்கள் நொத்தாரிசுக் கூலிக்கு நான்
ஒழுங்குபண்ணுகிறேன்” என்று கோயில் வாசலில் நின்று பிரார்த்தனை செய்கிறவர்போல்
ஒவ்வொரு சொல்லையும் மனமுருகச் சொன்னார். அப்போது அவரின் முகத்தில் தோன்றி மறைந்த
ஒளியில் நான் கட்டுண்டு நின்றேன்.
அப்பாவும் நானும் வீட்டுக்குத் திரும்பி
நடந்தபோது சின்னவயதில் என்னை வழி நடத்திச்சென்ற அப்பாவின் கையைப்பிடித்தபடி அவரின் வேகத்துக்கு இணையாகச் சுருதி பிசகாத குதூகலத்தோடு நடந்ததுபோல்
மனம் பரவசமாயிருந்தது.
கூட வரும் நிலவு மறவாமல் என்னையும் என் எண்ணங்களையும் கூடவே கட்டி இழுத்துச் சென்றது கடந்த காலத்திற்கு. உண்ணும் போதும் உறங்கும் போதும் நான் அப்பாவுடன் செலவிட்ட காலங்கள் என் கண்முன் தோன்றி மறைந்தன சில நொடியில். ஒவ்வொரு வாசகர்களின் உணர்வுகளை வருடிச் செல்லும் ஓர் ஆழமான, அற்புதமான காலத்திற்கேற்ற பதிவை தந்த அருமை நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்.
ReplyDelete