Siva Jeya
January 9, 2016
January 9, 2016
கனவுகளைக் கண்களில்
நிறைத்து நனவுகளாகும் காலங்களை எதிர்நோக்கி நாடு கடந்து வந்தவர்கள்
நாங்கள். ஆனாலும் எங்கள் கனவுகளில் இன்னமும் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள்.
எத்தனையோ வருடங்களாக எங்களையும் எங்கள் அடையாளங்களையும் இழந்துகொண்டிருக்கும் நிலையினைத் தடுக்கும் தடைக் கல்லாக எங்கள் படைப்பாளிகள் இருக்கிறார்கள் என்பது எமக்கு எவ்வளவு ஆறுதல்.
தரம் பிரித்துச் சிறப்புபற்றி விவாதிப்பதற்கும் அப்பால் எங்கள் சந்தோஷங்களைத் தொலைத்து, வாழ்கிறோம் என்ற பெயரில் வாழ்ந்துகொண்டிருக்கும்
என்னைப் போன்றவர்களை ஒவ்வொரு படைப்பாளியும் வாழவைக்கும் சுவாசமாகிறான். அந்தவகையில் எழுத்தாளர் ராஜாஜி ராஜகோபாலனின் குதிரைஇல்லாத
ராஜகுமாரனின் சிறுகதைத் தொகுப்பினை
வாசிக்கும் பலன் கிடைத்தது. நன்றிகளுடன் ஒரு வாசகியாக என்னுடைய கருத்துகளை
உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்றிருக்கிறேன்.
தவமிருந்தாலும்
கிடைக்காதது நிம்மதி என்பார்கள்.ஆனால் இங்கு நேரம்
என்பது தான் தேடும்
வரமாகிவிட்டது. நண்பர் ராஜாஜி அவர்களின் சிறுகதைகளை வாசித்து ஓரளவுக்கு எனது அறிவிற்கெட்டிய விதத்தில் உள்வாங்கி, குழம்பித் தெளிந்து விடை தெரிந்தும் தெரியாமலும் வாசித்து முடித்திருக்கிறேன்.
பதினைந்து சிறுகதைகளைக் குதிரை இல்லாத ராஜகுமாரன் என்ற தலைப்பின் கீழ்
தந்திருக்கிறார். ஒருபார்வையாளனாக சம்பவத்திற்கு வெளியே நின்று
சிலகதைகளும் கதையின் நாயகனாக சில கதைகளும் எங்கள் பார்வைக்கு தந்திருக்கிறார்.
நான் உணர்ந்தளவில் ஒவ்வொரு கதைகளிலும் வரும் பெண்களின் இயல்புகளை அவர்களின் வாழ்வுடன் பிணைந்த விதமாக
காட்டியிருக்கின்றார். இன்னும்
சொல்லப்போனால் பிறந்த
காலத்திலிருந்து வளர்ந்து பருவமெய்தி
வாழ்க்கைக்கு தயாராகும் ஆணோ பெண்ணோ தங்கள் துணை எப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனையில்
வாழ்கிறார்கள். அப்படி ஒரு கற்பனையில்
வாழும் போது ஆண்களின் தவறுகளையும் குணங்களைகளையும் அவர்களின் இயல்புகள் என்று இயற்கையுடன்
இணைத்து விடுகிறார்கள். ஆனால் அதே நேரம் பெண்கள் பூரணமானவர்கள் அவர்களிடம் மாறான
இயல்புகள் இருக்க முடியாது. இருந்தால் அவள்
ஒரு கௌரவம் மிக்க
பெண்ணாக மதிக்கப்பட மாட்டாள். இயற்கை
தந்திருக்கும் இயல்புகளைத் தனது ஒவ்வொரு கதையிலும் வரும் பெண்
கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார் ராஜாஜி. இன்றுவரை, இப்படி
இருந்தால்தான் பெண் என்ற வரைவிலக்கணத்தை ஏற்படுத்தியவர்களும் அதைப் பின் தொடர்பவர்களும் இந்த எழுத்தாளர் உருவகித்திருக்கும் கதாநாயகிகளை
வெறுக்க கூடும். ஆனால் பெண்களின்
உணர்வுகளைக் குறைபாடாகவோ கேவலமாகவோ எண்ணாமல் அவர்களின் இயற்கை என்று புரிந்து கொள்ள வேண்டும் என்பது காலத்தின் தேவை மட்டுமல்ல மனிதாபிமானமும் கூட
என்பதை இவர் கதைகளின்
மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஒரு படைப்பின் ஆளுமை அது வாசகனின் மனதில் ஏற்படுத்தும்
மாற்றத்தையோ அல்லது சிந்திக்க வைப்பதிலேயோ அல்லது கவரப்படுவதிலேயோதான்
தங்கியிருக்கின்றது என்பது என் எண்ணம்.
அவ்வகையில் இவரின் சிலகதைகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன.
கறுத்தக்கொழும்பான் என்ற சிறுகதை எங்கள் பேச்சுத் தமிழில் நகைச்சுவையுடன் சிறியதொரு காதல்சுவையுடன் அயலவர்
உறவினை விபரிப்பதன்மூலம் ஆரம்பிக்கிறது.
கதையின் நாயகி சரசுவதியைக் கதையின் நடையில் கண்முன்னே காணமுடிகின்றது.
இளம் பருவத்தினனான தருமனின் குறும்புகளைச் சகிக்க முடியாமல் அன்றைய காலையைப் புலம்பலுடன் ஆரம்பித்த சரசுவதி மாலையில் அதே தருமனுக்காக பழம்
பழுக்கவைத்து கொடுக்கும் மனநிலைக்கு வரும் ஒருநாள் சம்பவத்தைக் கறுத்தக்கொழும்பான் போலச் சுவையாகச் சொல்லியிருக்கிறார் ராஜாஜி.
அவள் விறகுக்கட்டைக் குனிந்து
எடுக்கும்போது வேறு அலுவல்
இருந்ததால் விறகு கடைக்காரக் கிட்டினன் அவள்
இடுப்பினைப் பார்க்காதது அவளுக்கு மனத்தாங்கலை
ஏற்படுத்த விறகுக்கட்டு இன்னும்
பாரம் கூடி விட்டதாக சரசுவதி உணர்ந்ததை நயமாகச் சொல்கிறார்.
விழிப்புகள் என்ற கதையினை வாசிக்கத் தொடக்கி முடிக்கும் வரை விழித்திருக்க
வைத்துவிடுகிறார் ராஜாஜி. அழகியலும்
தத்துவமும் இரண்டறக் கலந்த கருவினைக் கொண்ட இக்கதை நகரும் விதம் முடிவு என்னவென அறியத் தூண்டிய கதை. மனவேதனையைத் தரக்கூடிய அல்லது எங்களை சிந்திக்க வைக்கக்கூடிய கதையாக இருந்தாலும் காட்சிப்படுத்துதலில் வர்ணனையைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.
ஒரு பெண்ணில் அந்த அழகின் பிறப்பிடந்தான் எது என்று
தீர்மானிக்க முடியாத படி அது அவள் மீது ஏங்கும் நிறைந்திருக்க வேண்டும் என்று அழகாகவும் ஆழமாகவும் கூறியிருக்கிறார்.
செம்பருத்தி என்ற கதையில் மரணவீட்டு நிகழ்வினைத் தன்னுடைய வர்ணனைகளின் மூலம் கண் முன்
கொண்டுவந்து என்னுடைய மன உளைச்சளுக்கும் சிந்தனைக்கும் காரணமாகி விடுகின்றார்.
மாங்கல்யம் என்ற ஒன்று எங்கள் சமூகத்தில் எப்படிப்பட்ட
முக்கியத்துவத்தை வகிக்கிறது என்பதையும் ஒரு பெண்ணின் வேதனையினையும் காட்சியாக்கி தன்னுடைய
மனைவியின் உணர்வுகளை மதிக்கும் ஒரு கதாநாயகனை நம்முன்னே அடையாளம் காட்டுகிறார்.
இதைப்போன்று, மனதை வேதனைப்படுத்தும் மௌனத்தின் சப்தங்கள். மகனுக்கு வந்திருக்கும்
நோய் காரணமாக அவன் அனுபவிக்கும் வேதனைக்கு மருந்து எதையும் கண்டுகொள்ள வழிதெரியாத ஒரு கையாலாகாத்தனம் மிக்க தந்தையின் உணர்வுகளை வடித்த கதை. அந்த உணர்வுகளே இக்கதையை இன்னொருமுறை
வாசிக்க இயலாது என்று சொல்லுமளவிற்கு மனதைக் கட்டிப்போட்டுவிடுகின்றன.
மேலும் சில கேள்விகள் என்ற கதையில் மனித உரிமையான காதலைக் கேவலமான ஒரு செயலாகக் கருதி ஊமையாகிவிட்ட ஒரு பெண்ணும் ஆணும் சந்திக்கும் சவால்களையும் அனுபவிக்கும் வேதனைகளையும் அவர்கள் மீண்டுமொருமுறை சந்திக்கும்போது ஏற்படும் சங்கடங்களையும் மறுமணம் பற்றிய
விழிப்புணர்வினையும் கூறியிருக்கின்றார்.
சொல்லவந்த விஷயம் காலமாற்றத்துடன்
அவசியமானது என்றாலும் கூட
கதையின் நாயகிக்கும்
நாயகனுக்கும் இடையில்உள்ள கருத்து வேறுபாடுகளைத் தளர்த்திய கதை நகர்வில் விறுவிறுப்பு மற்றைய கதைகளில்இருந்தளவு வலுவாக இருக்கவில்லை என்பது நான் உணர்ந்தது.
ஆதலினால் காமம் செய்வீர் என்ற
கதையினை யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழக மாண்வனொருவனின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாக வைத்து இளம் சமுதாயத்தினரின் கண்மூடித்தனமான கட்டுப்பாடற்ற
வாழ்க்கை முறையினையும்
சமூகமும் உறவுகளும் ஒரு இளம் சந்ததியினரின் வாழ்வை எவ்வளவு தூரம் பாதிக்கின்றது என்பதையும் வாசகர் மனதில் ஆழமாய்ப் பதித்திருக்கிறார்.
கழுவுகிற மீனில் நழுவும் மீனாகத் தன்னுடைய
ஆணித்தரமான கருத்தினை வாசகர்களுக்கு கூறாமல் முடிவு உங்கள் கையில் என்பது
போல் முடித்திருக்கின்றார்.
இந்தவிடயத்தில் எனக்கு சிறிது முரண்பாடு உண்டு.
முன்னேற வேண்டிய சமுதாயம்
வழி மாறும்போது நண்பனாக மட்டுமல்ல ஆசானாகவும் ஆணித்தரமான முடிவுகளை
விளக்கத்துடன் கூறி அவர்களைச் சரியான பாதையில்
பயணிக்க வைக்க
வேண்டிய தலையாய கடமை எழுத்தாளர்களுக்கு உண்டு என்பது என் எண்ணம் .
ஒரு உண்மையினை நான் இக்கதையில்
ஒப்புக்கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு பெற்றோரும் இந்த
கதையை வாசித்த பிறகு தமது பிள்ளைகளின் தனிப்பட்ட தேவைகளை ஓரளவாவது உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.
ஆசை வெட்கம் அறியும் என்ற கதையும் பௌருஷம் என்ற கதையும்
ஏறத்தாழ ஒரே வாழ்வு நிலையிலுள்ள இரு பெண்களைப்பற்றிப்
பேசுகின்றன. ஒரு பெண்
வேறுவழியின்றித் தன்னை இந்த இரக்கமற்ற சமூகத்திடம் ஒப்படைக்கிறாள். கற்பு என்பது உடலில் அல்ல மனதில் என்று உணர வைத்துவிடுகிறாள் இன்னொருத்தி. பௌருஷத்தை கதையை வாசித்ததும் மனதில் நெகிழ்வு ஏற்பட்டது என்றால் மிகையில்லை.
துடுப்பின்றி, அடிக்கிற அலையின் திசையில் அடித்துச் செல்லப்படும்
படகாய் எமது வாழ்க்கையில்
பழமையைச் சீர்படுத்தவும் புதுமையை முயற்சித்துப் பார்க்கவும் எண்ணமிருப்பினும் தோதாக அமையாத சூழ்நிலைமிக்க எங்கள் சமூகத்தில் ராஜாஜி எழுதிய சிலகதைகள் சற்று நில்லுங்கள் என்று எங்களைத்
தட்டிக்கூப்பிடுவதைப்
போன்றுஅமைந்துள்ளன.
ஒரு மனிதனின் சுயமரியாதையும் அவனது கல்வியும் அறிவும் விலை மதிப்பில்லாதவை
என்பதைப் பத்தியம் என்ற கதையின் மூலம்
வெளிப்படுத்துகிறார்.
ஏழ்மையென்ற அரக்கனுக்கு அடிமையாகாமல் தன்னுடைய தொழிலின் நேர்மையினைக் கதையின்மூலம் உணர்த்தியிருக்கும் பரியாரியாரின் மனத் திண்மையை நமக்குப் “பத்தியம்” சமைத்துத் தருவதுபோல் பேச்சுவழக்கில் சொன்ன முறை பாராட்டிற்குரிய விஷயம்.
இதுபோன்றே கடவுளும்
கோபாலபிள்ளையும் என்ற கதையில் கடவுளையும்
தன்னையும் மோதவிட்டு நகைச்சுவையும் நக்கலுமாய் வேடிக்கை பார்க்கிறார். இன்றைய உலகில் பெண்ணின் உரிமைகள் பறிக்கப்படுவதற்குக் கடவுளே
காரணமென்று சாடிச் சிந்திக்கவைத்திருக்கின்றார்.
சுபத்திராவுக்கு என்ன நடந்துவிட்டது என்ற கதையில் ஒரு பெண் எப்படியெல்லாம் தன் அழகினை
ரசிக்கிறாள் என்பதையும் அதை எவ்விதம் ஆயுதமாக்குகிறாள் என்றும் வெகு அழகாகக் கூறியிருக்கின்றார். உண்மையில் இதில் எனக்குச் சிறிய சந்தேகமும் உண்டு. இதை ராஜாஜிதான் எழுதினாரா? ஒரு பெண்ணின் உணர்வுகளை ஒரு
ஆண் பெண்ணின் பார்வையில் எழுதுவது என்பது இலகுவானதல்ல. ஆனால் அந்த உணர்வுகளை இக்கதையிலும்
குதிரை இல்லாத ராஜகுமாரன் கதையிலும் மிக நுட்பமாக
அணுகி வாசகர் மனதைத்
தொட்டிருக்கிறார்.
குதிரை இல்லாதராஜகுமாரன் கதையில் அதன் நாயகி விஜயா போன்று கண்ணுக்குத் தெரியாத முள் வேலிகளை எல்லைகளாக்கி வாழ்வினை தொலைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் மனநிலையினையும் அவர்களை அவ்வாறு வாழ வற்புறுத்தும் எங்கள் வரட்டுச் சம்பிரதாயங்களையும் எங்கோ தப்பித்தவறி மனிதத்துடன் வாழும் ஆண்களையும் எம்மோடு பேசவைக்கிறார். இக்கதையை வாசித்ததும் இது காலப்போக்கில்
மாறிக்கொண்டிருக்கும் சூழலாக இருந்தாலும் ஆங்காங்கே தங்கள் மணவாழ்வை ஏக்கத்துடன்
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முதுகன்னியர்கள் வடிக்கும்
கண்ணீர் என் கண்ணையும் நனைத்தது. கதையின் முடிவில் ஏற்பட்ட திருப்பத்தை நான் இங்கே சொல்லப்போவதில்லை.
மொத்தத்தில், இரவு ரயிலில் தொடங்கிய பயணத்தின் இறுதியில் கொடிகாமத்தில் இறங்கித் தட்டிவானில் ஏறி வழியில் சுட்டிபுரத்து அம்மனைக் கும்பிட்டு நெல்லியடி, புளியடிச் சந்தியில் இறங்கி
நடந்து வீடு பொய்ச் சேர்ந்த அனுபவத்தினை இந்தகதைகள் ஒவ்வொன்றையும்
வாசித்தபோது அனுபவித்தேன்.
எத்தனையோ பேச்சு வழக்குச் சொற்களும் கதைகளெங்கும் இழையோடிப்போயிருக்கும் பெண்மையின் உணர்வுகளும் என் விமர்சனத்திற்கு
அப்பாற்பட்டு உங்கள் ஒவ்வொருவரின் பார்வைக்காகவும்
காத்திருப்பவை. அவற்றினை முழுமையாக உணரவேண்டுமானால்
எமது மண்ணின் மறைந்துகொண்டிருக்கும் வழக்குத்
தமிழையும் அதன் சுவையினையும் அதன் சுவையையும் உணரவேண்டுமானால்
நீங்களும் இந்நூலினை ஓருமுறை வாசியுங்கள். நிறைவான வாசிப்பு
அனுபவம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
----
No comments:
Post a Comment