[வீரகேசரி, 1978]
இரு மலர்க்கரங்கள்
என்முன்னால் நீண்டன.
எனக்கு மிகவும்
பழக்கமான கரங்கள்.
பால்போன்ற வெள்ளைக்
காகிதத்திலான ஒரு உறை அந்தக் கரங்களைத் தொட்டிலாக்கி மெத்தெனப் படுத்திருந்தது.
எழுந்து நின்று இரு கைகளாலும் பெற்றுக்கொண்டேன்.
நன்றி, சியாமளா.
இப்படி உட்காருங்கள்.
சியாமளா என்
எதிரேயிருந்த கதிரையில் அமர்ந்தாள்.
நான் இன்னும் அவள்
முகத்தை நிமிர்ந்து நோக்கவில்லை. நோக்கவேண்டிய தேவையோ துணிவோ எனக்கு இருக்கவில்லை.
அந்த முகத்தில் தொன்றும் அழகை ஆறுதலாய் நின்று பருகி அனுபவிக்கும் உரிமை
என்னிடமிருந்து எப்போதோ கை நழுவிப்போனதொன்று. அழகை அதற்கென்ற உரிமையோடு
அனுபவிப்பதில்தான் நியாயம் இருக்கிறது. கள்ளமாக எனக்குள்ளேயே அதை
அசைபோடுவேனென்றால் அந்த அழகின் தூய்மைதான் குறைந்துவிடாதோ?
இது எனது
திணைக்களத்தில் எனக்கென்று ஒதுக்கப்பட்ட தனி அறை. என் முன்னால் ஒரு பெரிய மேசை
இருந்தது. பளிங்குபோல் வர்ணம் அடிக்கப்பட்ட மேசையில் எல்லாமே ஒழுங்காக இருந்தன.
‘பேப்பர் வெயிட்’ முதல் எல்லாமே ஒரு
அமைதியான ஒழுங்கு. என்னையே நான் மாற்றிக்கொண்டபிறகு எனது சுற்றாடலையா
மாற்றிக்கொள்ள முடியாது?
எனது எதிர்பாராத
விருந்தாளியுடன் நான் இன்னும் எதுவுமே பேசவில்லை. சியாமளா என் பின்னால் இருந்த
சுவரில் சாய்ந்து தொங்கிய ஒரு நவீன ஓவியத்தையோ அல்லது பக்கத்து யன்னலூடாகத்
தெரியும் வானத்தில் வழுக்கியோடும் மேகச் சிதறல்களையோதான் அந்த ஓரிரு
விநாடிகளுக்குள் பார்த்து நேரத்தைச் சமாளித்துக் கொண்டிருக்கவேண்டும். அவளுடைய
முகத்தில் தோன்றிய அமைதியும் தூய்மையும் என் மேசையின் மேற்பரப்பில் துல்லியமாய்த்
தெரிந்தன. அந்தப் பிம்பத்தில் நான் ஐக்கியமாகிவிட்டேன். அதன் பிரதிபலிப்புகள் என்
நெஞ்சில் எத்தனை நளினமான மயக்கத்தை உணர்த்தினவோ! இதுவும் ஓரிரு விநாடிகளுக்குள்தான்.
“சத்யம்!” இனிய நாத்த்தில் தோய்த்த ஒளிப்பிசிறுகள்...
அந்த அழைப்பு என்னுள்
நிறைந்ததும் நான் நிமிர்ந்துகொண்டேன். அவள் குரலில் தோய்ந்திருக்கும் பிரேமையை என்னுடைய
பெயரை அழைக்கின்றபோது மட்டுமே கேட்டு அனுபவிக்க முடியும். அத்தனை ஆழமாக, இதயத்தின்
பரிபூரண நிறைவாய்ப் பரிணமிக்கக்கூடிய வேறு ஒரு சொல் எதுவும் அவளிடத்தில் கிடையாது
என்பதை நன்கறிந்திருந்தேன். இந்த ஒன்றே என்னுடைய கர்வத்துக்குப் போதுமானது - ஒரு
அழகிய, அறிவுள்ள பெண்ணின் காதலைப் பெற்றவன் என்ற கர்வம். அப்படி அவள்
அழைக்கின்றபோது எனக்குள் ஏற்படும் ஒவ்வொரு கால அணுக்களையும் அனுபவிப்பதில்தான்
நான் கொள்ளும் கர்வம் என்னிடம் இன்றிருக்கும் எல்லாக் கர்வங்களிலும் பார்க்க
உயர்ந்தது.
அவளின் இதழ்கள் எதையோ
கூறுவதற்குத் துடியாய்த் துடித்துக்கொண்டிருந்தனவென்றே நினைத்தேன்.
எனக்குள்ளேயிருந்த அத்தனை ஆவலையும் திரட்டி அவளை நான் நோக்கினேன். ஒரு
கணத்துக்குள் ஆயிரமாயிரம் அர்த்தங்களைச் சிருஷ்டித்தபடி அவை அப்படித் துடித்தனபோல்
தோன்றின. என் ஆவலின் உத்வேகம் அதிகரித்தது. ஆனால் அவளின் இரக்கமற்ற இதழ்கள்
ஒரேயொரு புன்முறுவலோடு என் தாபத்தைச் சிதறடித்தன. நான் ஆண்மகன்; திரும்பவும்
மௌனியாகிவிடலாமா? ஏதாவது பேசவேண்டும்; பேசி அவளையும் பேசவைக்கவேண்டும்.
“சியாமளா. உங்கள்
முன்னால் இந்த உறையை நான் திறக்கலாமா?” இப்போது அவள் இமைகள்
மூடிக்கொள்ளச் சிரித்தாள். ஒளி சிந்தும் பற்கள் நிரையில் நின்று வெண்கோலமிட்டு
விளையாடுவதுபோலிருந்தது.
அந்தச் சிரிப்புக்கு
என்ன பொருள் இருக்கும்? இப்போதெல்லாம் அவளிடம் அந்தப் ‘பொல்லாத சிரிப்பை’ முழுமையாகக் காணமுடியாவிட்டாலும் என்னுடைய சில
கேள்விகளுக்குப் பதில் கூறும்போது சொற்களுக்குப் பதிலாகச் சிரிப்பினால் அந்த
விடையைப் பூரணப்படுத்தும் வேளையில் அந்தப் பொல்லாத்தனம் சிரிப்பின் ஓரிரு
இடங்களில் எப்படியோ புகுந்துவிடும். ஒரு காலத்தில் அந்தச் சிரிப்பின் முழுமையான
சிருங்காரத்தில் திளைத்து அதிலேயே நான் அமிழ்ந்து போனதற்காகவேனும் என்
பிரியத்துக்குரிய அந்தப் பொல்லாத சிரிப்பின் ஒரு சிறு சிதறல்களையாவது இப்போது
காட்டமாட்டாளா என்று நான் ஏங்கிப்போய்த் தவித்தேன்.
மூடிய விழிகளை
நோக்கினேன், அவை மூடியபடியே இருந்தன.
என் விரல்கள் தாமாகவே
உறையைப் பிரித்தன. பிரிக்கும்போது உறையின் முகப்பைக் கவனித்தேன். எனக்கு மிகவும்
அறிமுகமான கையெழுத்துக்கள் – ஒரு குழந்தையின் பிஞ்சு உள்ளத்தில் எழும் ஞானச் சுடர்
விரல்களின் வழியே ஊர்ந்து கோணலும் கோடுகளுமாக, ஒன்று இன்னொன்றை விழுங்கிவிடும் சிறுத்த,
பருத்த உருவங்களாக உருப்பெறுவதுபோல் இருக்கும் எழுத்துக்கள் – எதுவுமேயில்லை.
முகப்பு வெண்மையாய், வெறுமையாய்த்தான் இருந்தது.
என் விரல்களின்
பிடிகளில் அகப்பட்டு, உறையின் ஓரங்களை உராய்ந்து நெருக்குண்டு, முதல் ஒரு பாதியும்
பிறகு ஒரு பாதியுமாக வெண்ணிறத் தடித்த திருமண அழைப்யொன்று இரண்டாக மடிக்கப்பட்ட
நிலையில் வெளிவந்தது. அதன் முகப்பில் பிணை மானொன்று தனியே நின்றபடி புல்
மேய்ந்துகொண்டிருந்தது. சிறிய படம், மிகவும் வேலைப்பாடான அச்சடிப்பு. நான்
அட்டையைப் பிரிக்காமலே அப்படத்தில் தோன்றிய குறைபாட்டை நினைந்து என்னையே வருத்திக்கொண்டேன்.
ஒரு பெண் மான் தனிமையில் நிற்பதா? இதைக் கண்டு யார் மனம்தான் வாடாது? அதை
உருவாக்கிய கலைஞனின் கற்பனையில் இப்படியானதொரு சிறுமை தோன்றலாமா?
“சியாமளா, இந்தப்
பிணையோடு ஒரு கலையும் சேர்ந்திருந்தால் இன்னும் எவ்வளவோ இயற்கையாக இருக்கும்
இல்லையா?” இந்தக் கேள்வியை
நான் கேட்டிருக்கக்கூடாது. ஆனால் அது அந்தக் கணத்தில்
தவிர்க்கமுடியாமற்போய்விட்டது. சில விஷயங்களில் நான் அவசரப்படுவதிலும் ஒரு
அர்த்தம் இருக்கிறது.
சியாமளா ஏனோ
மறுபடியும் தலை குனிந்துகொண்டாள். “மிருகங்களிடமிருக்கும் அரிய பண்புகளோடு வெறும்
மனிதர்களை நீங்கள் ஒப்பிடப்பார்க்கிறீர்கள், சத்யம்.” வழக்கமான அவளுடைய தர்க்க ரீதியான உரையாடல் இந்த இடத்தில்
அவளையறியாமல்தான் வந்திருக்கவேண்டும். அதைத் தொடர்வதற்கும் அதிலிருந்து அவளின்
புதிய கருத்துக்களுக்கு என்னிடமுள்ள தேவையைப் பூர்த்திசெய்வதற்கும் உண்டான
சந்தர்ப்பத்தை நான் உடனேயே பயன்படுத்திக்கொண்டேன்.
வெறும் மனிதர்கள்!
மனித உள்ளத்தால் என்றுமே அணுகிவிடமுடியாத ஆழ்ந்த பண்பின் செறிவை மிருகங்களிடம்தான்
காணமுடியுமென்று எண்ணுகிறாளோ? எனக்குள்ளேயே நான் அசைபோட்டுக்கொண்டேன்.
“வெறும் மனிதர்கள்
என்று குறிப்பிடுகிறீர்களே, பணமும் கல்வியும் மற்ற வாழ்க்கை வசதிகளும் இருந்தும்
மனதால் வெறுமையாய்ப்போய்ப் பொருளற்ற லட்சியத்தைச் சுமந்துகொண்டு ஓயாது வாழ முனைபவர்களைத்தானே
அப்படிக் கூறுகிறீர்கள், சியாமளா? நாம் இருவரும்கூட...”
அவள் இப்போது என்னை நிமிர்ந்து
நோக்கினாள். ஆழ்ந்த சமுத்திரப் பரப்பொன்று என் முன்னால் விரிந்து அதன் மத்தியில்
சுழன்றோடும் நீரோட்டத்தில் என்னை முழுமையாய் விழுங்கிவிடுவதுபோன்று அந்த விழிகளில்
என்னால் விளங்கிக்கொள்ளமுடியாத பல புதிர்கள் தொற்றி நின்றன. நான் என்றைக்குத்தான்
அவளுடைய கேள்விக்கு முறையாகப் பதில் சொன்னேன்?
அவள் உள்ளத்தை நான்
படிப்பதெல்லாம் அவள் பேசுகின்ற ஓரிரு விநாடிப் பொழுதுகளில்தான். அவள் மௌனமாய்
இருக்கும் வேளைகளில் அது எப்படி முடிகிறது? நான்தான் பேசிக்கொண்டிருப்பேனே! ஆனால்
சியாமளா இதற்கு நேர்மாறானவள். நான் மௌனமாய் இருக்கும் வேளைகளில் என் அந்தரங்கமெல்லாம்
அவளுக்கு மனப்பாடமாகிவிடும். எந்தத் தலைபோகும் தனிப்பட்ட காரியங்களையும் அலுவலகத்
தொந்தரவுகளையும் மறந்து அவள் முகத்தையே என் கண்கள் வட்டமிட, இம்மலர்க் கரங்களை
எடுத்து என் கண்களில் மாறிமாறி ஒற்றி... ஓ, இக்கரங்கள்தானே அவை? அவற்றுக்கு நான்
இன்னும் அந்நியனாகிவிடவில்லையே!
நான் உடனே எழுந்து
நின்றுகொண்டேன். அவ்விழிகளிலும் என்னை நோக்கி உயர்ந்தன. எழுந்தாலும் நடந்தாலும் மறைந்தாலும்
அவ்விழிகளின் வீச்சில் நான் வெந்து மடிந்துவிடவேண்டியதுதானா? கூரிய கத்தியால் என்
இதயச் சதைகளைப் பயங்கரமாகக் கீறிவிடுவதுபோல் இந்தச் சந்திப்பு ஏற்படுத்திய வெம்மையைத்
தகிக்கமுடியாது யன்னலை நோக்கித் திரும்பினேன்.
யன்னல்
திரைச்சேலையின் மேலாக வேளியே நிமிர்ந்து நின்ற நகரத்தின் ஒரு பகுதி அன்றைய அவசர உலககைக்
கண்டு அலுத்து ஓய்ந்த நிலையில் ஓய்வெடுக்க முனைந்துகொண்டிருந்தது. அந்த
நாட்களிலும் இன்று போன்றே யோர்க் வீதியில் ஓய்வில்லாத சன நெருக்கடி. இங்கிருந்து
நினைத்தாலே அந்த வீதியின் விசாலமும் சலசலப்பும் மனதைச் சுகப்படுத்தும். அச்சூழலைச்
சாதகமாக்கிக்கொண்டு எங்கள் உரையாடலும் நெருங்கியபடியே இருவர் கைகளும் அடிக்கடி
ஒன்றையொன்று அடிக்கடி உராய்ந்துகொள்ள, அந்த உராய்வின் ஸ்பரிசத்தில் ஏற்படும் மனக் கிளுகிளுப்போடு
அந்த மனித நெரிசலினூடே ஒரே கதியில் வீதியைக் கடந்து ஓரமாய் நிற்கும் பஸ் தரிப்பிடத்துக்கு
வரும் வரைக்கும் ஒரு தலைமுறைக்கால உறவையும் அதன் இனிமையையும் நாம் அனுபவிக்கத் தவறியதில்லை.
அந்தச் சந்திப்புகளும் மங்கிய ஒளி சிந்தும் தேனீர்க்கடைகளின் மூலையில் மணிக்கணக்காக
அமர்ந்து பேசித் தீர்த்தவையெல்லாம் இன்று வெறும் பேச்சாகிவிட்டனதானே!
யன்னலுக்கு அப்பால்
நினைவுக்கு எட்டாத வெளியில் நினைவுக்கு எட்டும் நிகழ்ச்சிகள் முகிற்
கூட்டங்களாக....
அதோ எவரையும்
நிமிர்ந்து நோக்கவைக்கும் தோற்றத்தோடும் நெகிழ்ந்து பணியவைக்கும் உள்ளத்தோடும் எந்த
உறவையோ உபகாரத்தையோ எதிர்பார்க்காமல் உதவுகின்ற நெஞ்சாக
உட்கார்ந்துகொண்டிருக்கிறாரே, அவர்தான் மிஸ்டர் ரங்கநாதன். அவர் சியாமளாவுக்கு மாத்திரம்
தந்தையல்ல, என்னைப்போல் உழைப்பால் உயரத்துடிக்கும் இளைஞர்களுக்கெல்லாம் தந்தை
போன்றவரென்றுதான் சொல்வேன். நான் அவளைக் காணவேண்டுமென்று சென்று அதுவே அவரைக்
காண்பதில் ஒரு நிறைவைக் காண்பதாக என்னை ஆக்கி அவரின் குடும்பத்தில் என்னை
ஒருவனாக்கியது. என்றைக்கெல்லாம் அவரைச் சந்திக்க நேரிடுகின்றதோ அப்போதெல்லாம்
இனியும் அப்படிச் சந்திக்கவேண்டுமென்று ஏக்கமே கொள்வேன்.
எனக்கும் கண்ணியமான
அவர் குடும்பத்திற்கும் இடையேயுள்ள கடைசிச் சந்திப்பாக இது இருந்துவிடுமென்றோ அவர்
உணர்ந்து நாளெல்லாம் ஊட்டி வளர்த்த எமது நட்பு ‘இதோ இல்லை’ என்று ஆகிவிடுமென்றோ எப்படி நான் அப்போது எதிர்பார்த்திருக்கமுடியும்?
தெருவிலும் திண்ணையிலும் அறிமுகமான நாலு மனிதர்களின் சாதாரணக் கண்கள் சந்தேகக் கண்களாக மாறிய பின்னரும் அதிலிருந்து எழுகின்ற அபிப்பிராயங்களுக்கு மதிப்பளிக்கவேண்டுமென்ற எண்ணம் சியாமளாவுக்கும் எனக்கும் உருவாகுவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்க முன்னரே ரங்கநாதனின் ஆதரவான உள்ளத்தில் எனது அன்பை அடைக்கலமாக வைத்திருந்தேன். கடைசியில் அவருடைய உள்ளமே எவ்வளவு வேதனைக்கிடையில் இந்த முடிவை எடுக்கவேண்டி வந்திருக்குமென நினைத்து நானே அவருக்காக வருந்தினேன்.
அன்றைக்கு என் வரவை
நோக்கித்தான் அவரும் சியாமளாவும் காத்திருந்தனர். ஆனால் அந்தச் சந்திப்பு நம்
எல்லாருக்காகவும் ஏற்பாடு செய்த்துபோலவும் அதன் விளைவுகள் மட்டும் என் ஒருவனின் வாழ்விலேயே
ஊன்றி நிற்பதுபோலவும் என் மனம் அலையுண்டது.
“சத்யம், எனது மகளின்
மனதுக்கு நிறைந்தவராக நீர் கிடைக்கப்போகிறீர் என்பதிலும் பார்க்க உமது அறிவையும்
திற்மையையுமே பெரிதாக நினைத்து எனக்குள்ளேயே மகிழ்ந்து கொண்டிருந்தேனே! இதையே இந்த
உலகத்துக்குக் கூறிப் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாத அளவுக்கு இப்போது நான்
கோழையாகிவிட்டேன்.”
அப்படி அவர்
கோழையாகவேண்டி வந்ததின் காரணம் எனக்கே தெரியுமே. அந்த ஒரு காரணத்தை எவரும் இலகுவாக
மறந்துவிட முடியும் என்று நம்பித்தானே நான் அவர்களோடு உறவாடினேன். நான் ஒரு அநாதை
என்ற உண்மை அப்படி என்ன பெரிய பிரச்சனை. அனால் நான் அநாதையாய்ப் போனதன் காரணமே
அவர் கொழையாய்ப் போனதன் காரணமாகிவிட்டது. அவ்வளவுக்கு நான் ஆழ்ந்து
யோசித்திருந்தால் அன்பு செய்தாலும் நான் ஏமாற்றப்படுவேன் என்று அப்போதே என்னால்
உணர்ந்திருக்கமுடியும். அப்படிப் பலாத்காரமாக என் இளம் வயதில் புகுந்து என்னை
அநாதையாக்கிய சம்பவங்களை அவருக்கு நானே ஒருமுறை கூறியிருந்தேன்.
நான் சிறுவனாகப்
பெற்றோரோடு கிராமத்தில் வாழ்ந்தபோது அது நிகழ்ந்தது. எங்கள் வீட்டுக்கு மிக அருகேயிருந்த
அயலவர்களுக்கிடையே திடீரென்று எழுந்த பூசலையும் அதில் என் தந்தையும்
சம்பந்தப்பட்டு எங்கள் குடும்பமே கலங்கியதையும் என்னால் முற்றிலும் நினைவுக்க்குக்
கொண்டுவர முடியவில்லை. அன்றைய இரவு எனது தந்தை தன் கோபத்தின் தீராப் பசியைத்
தீர்ப்பதற்காக ஒரு உயிரையே பலிகொண்டு உதிரம் வழியும் கத்தியோடு வீட்டுக்கு வந்த
தோற்றம் மட்டும் இன்றைக்கும் என் மனதில் பசுமையாக நிற்கிறது. அவரோடு கூடவந்த
பழியும் பாவமும் எங்களோடு தங்கியிருக்க அவர் மட்டும் இரவோடு இரவாக எம்மைப்
பிரிந்து சென்றதை நினைக்கும்போதும் அவரைப்போலவே நான் ஆகிவிடக்கூடாது என்று அஞ்சி
அல்லும் பகலும் என்னை உருவாக்குவதற்கே தன்னை அர்ப்பணித்து மறைந்த அன்னையை
நினைக்கின்றபோதுபோதும் இன்றும் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் என் தந்தையை
சந்திக்கின்றபோதும்தான் நான் ஒரு அன்புக்கு ஏங்கும் அநாதை என்ற உணர்ச்சி என்னுள்
மேலோங்குகிறது.
பிரத்தியட்ச வாழ்வில்
அந்த நிலையை மறக்கவேண்டிக் கட்டாயப்படுத்தப்பட்டதே இந்தச் சியாமளாவால்தானே! இனியும்
அநாதையென்ற அந்தப் பெயரையே நித்தியமாய் நான் பூண்டிருக்க இந்த உலகம்
வற்புறுத்துகின்றது. ரங்கநாதனின் முடிவு இதன் அடிப்படையிலேயே எழுந்தது என்று அவர்
கூறி எனக்குத் தெரியவேண்டிய தேவைதான் என்ன? என்றாலும் அவரின் ஆதரவான சொற்கள் வெறும்
சொற்களல்ல.
“சத்யம், நீரும்
நானும் சியாமளாவும் நினைப்பதுதான் இந்த உலகத்தின் நினைப்பு என்று நாம் எண்ணி
ஏமாந்துவிடக்கூடாது. நாலு பேரின் கேள்விக்குப் பதில் சொல்லுகின்ற சக்தி நம்மிடம்
இருக்கலாம். அதையே நிரந்தரமாக நாம் சொல்லிக்கொண்டிருக்கமுடியுமென்றால் அதை
ஏற்றுக்கொள்ளுமளவுக்கு இந்தத் தலைமுறைக்கு அவ்வளவு ‘றிசெப்டிவ் மைன்ட்’ கிடையாது. இதை வரவேற்கும் நாலாவது மனிதரே இனிமேல்தான்
பிறக்கவேண்டும்.
“காதல், பாசம்
என்பவைபோன்ற மனம் விளைவிக்கும் உறவுகளுக்கு முன்னால் பலமிழந்து உயிரையே தியாகம்
செய்கின்றவர்களைச் சாதாரண மனிதர் மத்தியில்தான் காணமுடியும். நீங்கள் இருவரும்
படித்தவர்கள், எதையும் புரிந்துகொள்ளக்கூடியவர்கள்.”
இன்று எனக்கு
ரங்கநாதனுடனுள்ள தொடர்பே மனத்தளவில்தான். அந்த உயர்ந்த உள்ளத்தோடு சியாமளாவும் நானும்
நிறையவே போராடியிருக்கலாம். அன்பு என்பது அஹிம்சையின் பாற்பட்டதேயொழியப் புரட்சியின்
வடிவமல்லவே!
நான் யன்னலைவிட்டு
மீண்டேன். அவளின் விழிகள் என்னை எவ்வளவு நேரமாக அளந்துகொண்டிருந்தனவோ! இனி நான்
அந்தப் பார்வைக்குப் பணியவேண்டியதில்லையென்ற முடிவுடன் இருக்கையில் அமர்ந்தேன்.
அவள் எழுந்துகொண்டாள்.
“சத்யம், நான்
போகிறேன்...” இனிய நாதத்தின் ஒலிப்பிசிறுகள் வாசல் கதவுகளையும் தாண்டி மெள்ள மெள்ளக்
கரைந்துகொண்டன.
சியாமளா சென்று மறைந்து எவ்வளவோ நேரம் வரைக்கும் அவளிருந்த இடத்தில் மேசையின்
மேல் சிதறிப்போய்க்கிடந்த நீர் முத்துக்களை என் கண்கள் வேதனையுடன் வெறித்தவண்ணமிருந்தன.
No comments:
Post a Comment