போதும்!
பேக்டரிப் பிட்டுக் குழல்களே
புகை எழுப்பியது
போதும்!
பாதாள வாய்க்காலிலும்
பின்வாசல் வழியாலும்
நாளெல்லாம் கழிக்கிறீர்கள் தீழ்ப்பு,
நாறிப்போகிறது சூழல்!
ஆதலால்
வாழப்போகும் சந்ததிக்காக உங்களுடன்
வழக்காட வந்திருக்கிறேன்.
மாந்தரின்
உயிருக்கு உலைவைத்தே
உயரப் பார்க்கிறீர்கள்
தேசத்தை வளர்ப்பதென்று
நாசத்துக்கு வழிவகுப்பதா?
இரசாயன வாயுக்களை
இரகசியமாய்ப் புதைப்பதற்கு
வானத்து வெளிகளையா
வாடகைக்கு எடுத்தீர்கள்?
அமில மழை பொழிந்து
பயிரெல்லாம் அழிகிறதே
ஒரு கணமாவது இந்த
உழவர்களின் உழைப்பை
எண்ணிப் பார்த்தீர்களா?
நன்னீர் வாவிகளில்
நஞ்சைக் கலக்கிறீர்கள்
ஏற்கனவே
செத்துப்போன மீன்களை நம்பியா
இந்த
மீனவர்கள் வாழுவது?
மாரிக் காடுகளை
மாளச் செய்கிறீர்களே
அருகிவரும் உயிரினங்கள் உங்கள்
அறிவுக்கு எட்டவில்லையா?
ஆற்றோரங்களிலும்
வாவிக் கரைகளிலும்
வாவென்று அழைக்கிறதே
வானவில்லின் வர்ண ஜாலம்
உங்கள் அழுக்கு நீர்
இவ்வளவுக்கு ஏன் அழகாய் இருக்கிறது?
காற்று ஏன் இன்று
கனத்துப்போனது?
என்
கண்களில் நீர் வடிந்து
செம்மை படர்கிறதே!
துருவத்து உறை நிலம் ஏன்
தூர்ந்து போகிறது?
துரவக் கரடிகள் ஏன்
அழிந்து போகின்றன?
வானத்தின் குரல்வளையை
வலிதாய் நெரிக்கிறீர்கள்
மூச்சுத் திணறுவது
முதலில்
மரங்களும் செடிகளும்
மழலைகளுமே என்பதை
மறந்தா போனீர்கள்?
மரங்களைப் பாருங்கள்
மலர்களைப் பாருங்கள்
தென்றலை எம்மீது பூசும்
தூரிகைகளல்லாவா அவை?
ஆறுகளைப் பாருங்கள்
ஏரிகளைப் பாருங்கள்
மழைத்துளிகளை எம்மீது தடவும்
மயிலிறகுகளல்லவா அவை?
வானம் இருமுகிறதே
ஏனென்று கேட்டீர்களா?
பூமி சுடுகிறதே
போய்த் தொட்டுப் பார்த்தீர்களா?
அங்கே பாருங்கள்
ஆழியின் மட்டம்
ஓங்கி வளர்கிறது.
எந்த நேரமும் அது
கரைகளை விழுங்கலாம்,
தேசங்களின்
வரைபடங்களைத்
தலைகீழாய் மாற்றலாம்.
தொழில் வளர்ச்சி அவசியமே,
யார் இல்லையென்றார்கள்?
வேலை வாய்ப்பும் வேண்டியதே
வேண்டாமென்றா சொல்கிறோம்?
ஆதலால்
பேக்டரிக்கு உள்ளே மட்டுமன்றி
பேக்டரிக்கு வெளியேயும்
புதுமைகளைச் செய்யுங்கள்
உற்பத்திக் கழிவிலிருந்து
அற்புதங்கள் செய்யுங்கள்!
புகைக்குப் பதிலாகப்
புன்னகையைத் தவழவிடுங்கள்!
@@@@
நன்றி: காற்றுவெளி, கார்த்திகை 2013 இதழ்
அருமையான சூழல் பாதுகாப்பு பற்றிய படைப்பு.
ReplyDeleteஅருமை
உங்களின் மேன்மையான கருத்துக்கு மிகவும் நன்றி, டாக்டர். என்னையும் என் எழுத்தையும் ஊக்குவிப்பதில் முன்னிற்கும் நண்பர்களில் நீங்களும் ஒருவர். மறவாதிருப்பேன்.
Delete