இப்போ நீ
சட்டம் படிக்கிறாயாம்
உருண்டையான உலகம் இனி
இதயம்போல் ஆகிவிடும்.
நீதிபதிகள்
சட்டப் புத்தகங்களைச்
சாக்கடையில் வீசிவிட்டு
கவிதைப் புத்தகங்களைக்
கமக்கட்டுக்குள் வைத்திருப்பர்.
சட்டத் தரணிகளுக்கு
வழக்கு வேட்டை இனியில்லை
சட்ட அலுவலகமெல்லாம்
புத்தகக்கடை ஆகிவிடும்.
நீதிமன்றங்களுக்குக்
கட்டிடம் தேவையில்லை
கடற்கரையிலும் கடைவீதியிலும்
தெருக்களிலும் பூங்காக்களிலும்
காதல் நீதி
கொலுவைக்கத் தொடங்கிவிடும்.
உலகப் படத்தில்
கோடுகள் உண்டென்றால்
ஆறுகளும் மலைகளும்தான்
நாடுகள் இருந்தால்தானே
கோடுகள் பற்றிப் பேசுவது.
உலகம் முழுவதும்
ஒரு நாடு ஆகிவிடும்
பேசப்படும் ஒரே மொழி
காதல் மொழியாகிவிடும்.
காமத்துப் பாலைத்தான்
குடும்பச் சட்டம் என்பாய்.
பொருட் பாலைத்தான்
அரசியலமைப் பென்பாய்.
சிலப்பதி காரத்தில்
சிவில் சட்டம் இருக்குதென்பாய்
தொல் காப்பியந்தான்
சர்வதேசச் சட்டமென்பாய்.
ஐ நாவுக்கு உன்னைச்
செயலாளர் ஆக்கினால்
உலக ஐக்கியம்
ஒரு நொடியில் வந்துவிடும்!
_____
No comments:
Post a Comment