கிட்டத்தட்ட ஆயிரம் பேரைக்கொண்ட ஊர்வலம்
பலத்த ஆரவாரத்தோடு தெருவில் சென்றதுபோன்று சூசையின் டிராக்டர் மாலிசந்திப் புளியமரத்தடி
மதவின் மேலாய் எகிறிக் குதித்து தெருவோரம் படிந்திருந்த செம்மண் புழுதியையெல்லாம்
கிளப்பியபடி விரைந்துகொண்டிருந்தது. சூசை டிராக்டர் ஓட்டுவதைப் பார்த்தவர்கள்
அவரும் அதன் ஒரு பாகமாக மாறியிருப்பதைக் கண்டுகொள்வார்கள். அவ்வளவுக்கு அந்தக்
குட்டி ராட்சத யந்திரத்தை லாவகமாகக் கையாளுவதில் பல ஆண்டுக்கால அனுபவம்
பெற்றிருந்தார் சூசை.
சூசையைச் சவரம் செய்த முகத்தோடு கண்டவர்கள்
ஊரில் ஒரு சிலர்தான் இருப்பார்கள். அவருக்கு அதற்கெல்லாம் நேரம் கிடைப்பதில்லை
என்பது ஒரு காரணமென்றால் அவர் சவரம் செய்துகொண்டபின்தான் வேலைக்கு
வெளிக்கிடவேண்டுமென்ற அவசியமும் இருப்பதில்லை. விடியப்புறம் வேளையோடு எழுந்து
வெளிக்கிட்டால்தான் வாடிக்கையாளர்கள் ஓடர் பண்ணிய சாமான்களை அந்தந்த இடங்களுக்குப்
போய் டிராக்டரில் ஏற்றி உரிய இடத்தில் உரியவேளையில் ஒப்படைக்கமுடியும். மணல்காட்டு
வெளியில் வெள்ளை மணல் அள்ளிக்கொண்டுவருவது இப்போதெல்லாம் முன்னையைப்போல் லேசாகச்
செய்யக்கூடிய காரியமல்ல. போதாததற்குப் பத்து வருடங்களுக்கு முன்பு மணல்காட்டு
வெளியெல்லாம் மலைபோல் குவிந்திருந்த வெள்ளை மணலைக் களவாக அள்ளிச் சென்றவர்களால் மணல்
வெளியெல்லாம் காலப்போக்கில் தரைமட்டமாய்ப் போய்விட்டது. அன்றைய நாட்களில் வல்லிபுரக்
கோயில் வாசலிலிருந்து பார்த்தால் அந்தக்கோணத்திலிருந்து இந்தக் கோணம்வரை பரந்திருக்கும்
இந்து சமுத்திரக்கரையை மறைக்கும் அளவுக்கு மண் மலைகள் குவிந்திருந்தன. இன்று சமுத்திரமே
கோயில் வாசலை அண்மித்துவிட்டதுபோல மணல்காடு என அறியப்பட்ட மண்வெளி மழைத் தண்ணீர்
தேங்கிப் பாசி படர்ந்து சொறி மணல் காடாகிவிட்டது.
சூசை அதிகாலையில் அந்தோனியாரைத் தொழுதுதான்
டிராக்டரை வெளியில் எடுப்பார். ஆனால் மணல்காட்டுப்பக்கம் போய் வெட்டவெளியில்
வெள்ளை மணலைத் துருவித் துருவி அள்ளவேண்டுமானால் வழியில் எதிர்ப்படும் வல்லிபுர
ஆழ்வாருக்கும் ஒரு கும்பிடு போடுவார். வெள்ளை மணலுக்கு வடமராட்சி கிழக்குக்
கரையென்றால் வீட்டு அத்திவாரத்துக்கும் வேறு பல கட்டு வேலைகளுக்கும் போடவேண்டிய
கல்லுக்கும் சல்லிக்கும் எதிர்த்திசையில் தொண்டமானாறு தாண்டிப் போகவேண்டும். அங்கே
போகும்போதும் வழியில் சந்நிதி முருகனுக்கும் ஒரு கும்பிடு போட மறப்பதில்லை. சீமெந்து, இரும்புக் கம்பிகள் தூக்க
இந்த இரண்டு திக்குக்கும் நடுவில் நெல்லியடிக் கிட்டங்கிகளுக்குப் போகவேண்டும்.
எங்கே போனாலென்ன வாடிக்கையாளர் ஓடர் பண்ணிய சாமானை நேரத்தோடு கொண்டுபோய்ச்
சேர்த்துவிடுவார் சூசை. போகிற இடத்தில் அன்னம் தண்ணி வாயில் வைக்கமாட்டார். விடாய்
எழுந்தால் எங்கே பொதுக் கிணறு இருக்கிறதோ அங்கே தாகசாந்தி செய்வதுதான்
வழக்கமாகிப்போய்விட்டது. சாப்பாடு சங்கதியெல்லாம் மாலையானதும் வீட்டுக்கு
வந்தபிறகுதான்.
டிராக்டரின் அசுரக் குலுக்கல்களுக்கு
இசைவாக இருக்கையில் தன்னை அட்ஜஸ்ட் செய்துகொள்வதில் எல்லா டிராக்டர் ஓட்டிகளையும்
போலவே சூசையும் வலு கெட்டிக்காரர்.
என்றாலும் அன்றைய அந்தப் பயணத்தில் டிராக்டர் எழுப்பிய குலுக்கலையோ
இரைச்சலையோ பொருட்படுத்தும் அளவுக்கு அவரின் மனோநிலை இருக்கவில்லை. அவர் மனம் முழுதும் வீட்டையும் மக்களையுமே
சுற்றிக்கொண்டிருந்தது.
புலோலி கிழக்கு எல்லையில் வல்லிபுரக்
கோயிலுக்குப் போகும் கிராமக் கோட்டு றோட்டின் ஓரமாய் வடலிகளும் நெடிய பனை மரங்களும்
சூழ்ந்த காணிகளுக்குள் ஓலைக் கொட்டில்களோடும் மண் குடிசைகளோடும் ஒருகாலத்தில் பதுங்கிக்கொண்டிருந்த சந்தாதோட்டம் இன்று விசாலமான
வளவுகளுக்குள் கல் வீடுகளும் தோட்டங்களுமாய் காலத்தோடு போட்டிபோடுவதில்
வெற்றியடைந்து வெளியுலகம் அறியும்படியாகத் தம்மை ஆக்கிக்கொண்டன. கல்வியும்
தொழிலும் ஆமை வேகத்தில்தான் அங்கே நுழைந்ததென்றாலும் அவற்றைக் கெட்டியாய்ப்
பிடித்துக்கொள்வதில் சந்தாதோட்டத்து மக்கள் அசுர வேகத்தைக் காட்டினர் என்பது அயல்
கிராமத்து வெள்ளை வேட்டிக் காரர்களுக்கு எரிச்சலைத்தான் தந்தது. ஆனால் அதையெல்லாம்
கணக்கில் எடுப்பதற்கு சூசை போன்றவர்களின் வாழ்க்கையில் நேரம் கிடைத்தால்தானே!
கிராமக் கோட்டு
றோட்டில் அந்தோனியார் கோயிலிலிருந்து ஒரு அரைக்கட்டை தூரம் தள்ளி ஆலமரத்தடி
ஓரமாய்த் தெற்கே போகும் ஒழுங்கையில் முதல் முடக்கைத் தாண்டினால் சூசையின் இரட்டை
கேட் போட்ட வீட்டுக்கு வந்துவிடலாம். டிராக்டர் தெருமூடி மடத்தை அண்மித்ததும் வீடு
இன்னும் ‘ஒண்டரைக் கட்டை தூரம்தான் எனச் சூசை அனுமானித்துக்கொண்டார். மனம்
தொடர்ந்து கோடைக் காற்றில் அகப்பட்ட மணல்காட்டு சவுக்கு மரம்போல்
அலைக்கழிந்துகொண்டிருந்தது.
“தம்பி இக்கணம்
வீட்டுக்கு வந்திருப்பான். கனடாவிலையிருந்து வாறதெண்டால் சும்மாவே! பிளேனிலை மட்டும் எல்லாமா இருவத்தைஞ்சு
மணித்தியாலம் பயணமாம். கொழும்புக்கு வாறது ஒரு பயணமெண்டால் பிறகு அங்கையிருந்து
இஞ்சை ஊருக்கு வாறது இன்னுமொரு பயணம். அந்தப் பெடிச்சியும் கூட வாறாள் எண்டெல்லோ
தம்பி எழுதினவன். அங்கை கனடாவிலையே தான் விரும்பின பிள்ளையைச் சடங்கு முடிச்ச
கையோடை எங்களைப் பாக்க வாறானெல்லோ! என்ரை
மகனைக் கண்டு எவ்வளவு காலமாப் போச்சு. ஒண்டுரண்டு வருசமே பதினைஞ்சு வருசம்.
எண்டாலும் தம்பி பயணம் போனது நேற்றுப்போலை கிடக்கு. அந்தோனியாரே, இனி அவன்ரை கையிலை
பொறுப்பையெல்லாம் குடுக்கவேண்டியதுதான். இருக்கிற
ரண்டு குமருகளையும் கட்டிக் குடுத்திட்டால் இனி மிச்சக் காலத்துக்கு ஓய்ஞ்சுபோய்
இருக்கலாம்.”
கிராமக் கோட்டு சந்தி வந்ததே தெரியவில்லை
சூசைக்கு. சந்தியில் டிராக்டரை வளைத்துத் திரும்பியபோது
யாரோ கடை விறாந்தையிலிருந்து கையசைப்பதுபோல் அருட்டியது. வீதி ஓரமாக டிராக்டரை மெல்லமாய்
நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தார் சூசை. அது அவரின் மைத்துனர் அருட்பிரகாசம்.
வேட்டி அவிழ்ந்ததையும் பொருட்படுத்தாமல் ஓடிவந்தவர் “அத்தான், தயாளன் வந்திட்டான்
தெரியுமோ?” என்று தெருவுக்கு எதிர்பக்கத்துக் கடையிலுள்ளவர்களும் கேட்கும்படியாக
உரக்கச் சத்தமெழுப்பினார். “தம்பி
வந்திருப்பான் எண்டுதான் இருந்த வேலையெல்லாத்தையும் ஆவறி போவறியெண்டு
செய்து குடுத்திட்டு
ஓடிவாறன்” என்று பெருமிதமாகச் சொன்னார் சூசை. “நானும் தம்பியை இன்னும் காணயில்லை
அத்தான். நீங்கள் முன்னாலை போங்கோ, கையிலை இருக்கிற அலுவலை முடிச்சுக்கொண்டு பின்னாலை வாறன்.”
அருட்பிரகாசம் சூசையின் மறுமொழியைக் காத்திராமல் மறுபடியும் கடைப்பக்கம் ஓட சூசை
ட்ராக்டருக்கு மீண்டும் உசுப்பேத்தினார்.
அகலத் திறந்துகிடந்த வெளிவாசல் கேட்டினூடாக
டிராக்டரை வாகாகத் திருப்பி முற்றத்தில் வேலிக்கரையோரமாக நின்ற தகரக்
கொட்டிலுக்கும் விட்டதும் அது நிம்மதிப் பெருமூச்சை அவிழ்த்துத் தனது கடைசி
உலுக்கலுடன் ஓய்ந்து நின்றது. கீழே இறங்கிய சூசை மனத்தில் பாசம் மேலிடத் தன்
டிராக்டர் மீது கண்களை ஓடவிட்டார். காலப்போக்கில் நிறம் மங்கிய எஞ்சின் மூடிமேல்
‘லூர்து மாதா’ என்ற பெயர் இன்னமும் துலக்கமாய்த் தெரிந்தது. மணல் மேடுகளிலும்
கல்லுக் கிடங்குகளிலும் ஒடுங்கல் ஒழுங்கைகளிலும் ஓடிக்களைத்ததினால் கொஞ்சம் ஈடாடிப்போயிருந்தாலும்
உறுதி குலையாமல் நின்றது எஞ்சின். மட்கார்டுகளின்மேல் சுவர்களும் வேலிகளும்
உராய்ந்ததால் சிராய்ப்புகளும் கீறல்களும் விழுந்தும் பாறாங்கற்கள் பட்டு மழுங்கியும்
துருப்பிடித்துப்போயிருந்தன. மூப்பிலும் முழுவதும் உருக் குலையாமல் நிமிர்ந்து
நின்ற டிராக்டரைக் கைகளால் தடவி அதன்மீது பரவியிருந்த வெப்பத்தையும் புழுதியையும்
ஒருங்காக உணர்ந்தார் சூசை. “என்னட்டை நீ வந்து முப்பது வருசமாகுது. உன்னாலைதான் என்ரை குடும்பம் இண்டைக்கு இப்பிடி
இருக்குது. மாதாவே, இதை வாங்க அண்டைக்கு நான் பட்ட பாடு உனக்குத்தான் தெரியும்.
உவங்கடை சாதி உருப்படாது எண்டு சொன்னவங்களுக்கு முன்னாலை நான் ஓடிக்காட்டினனானெல்லோ.
இப்ப அவங்கள் என்னட்டை ஓடிவாறதுக்கு, மாதாவே, நீதான் முக்கியமான காரணம்.”
ஆவணி மாதத்துப் பிற்பகல் வெயில் சூசையின் உடம்பெல்லாம்
உறைத்தது. தோளில் தொங்கிய துவாயால் முகத்து வியர்வையை அழுத்தித் துடைத்த அதே
கையால் ட்ராக்டர்மேலிருந்த தூசையும் தட்டிவிடார்.
“இந்தக் கிழமை உன்னைப் பாக்கிறதுக்கு ஆக்கள் வருகினம். தம்பியோடை ஒரு கதை கதைச்சுப்போட்டு உன்னைப்
பற்றி யோசிப்பம் கண்டியோ! சொந்தப் பெண்சாதியோடு உருக்கமாய்க் கதைப்பதுபோல் கைகளை
அசைத்து டிராக்டருடன் உணர்ச்சி பொங்க அளவளாவினார் சூசை.
இங்கும் அங்குமாக அழுக்குப் படர்ந்த
சாரத்தை அவிழ்த்து இடுப்பில் மீண்டும் கட்டிக்கொண்டார் சூசை. நரைத்துப்பொன
மயிர்க்கற்றைகள் படர்ந்த நெஞ்சைக் கையில்லாத பெனியன் மறைத்துக்கொண்டிருந்தது.
துடைத்ததால் முகத்திலிருந்த எண்ணெய்ப்பசை ஓரளவுக்குப் போயிருந்த போதிலும் சூரிய
ஒளியில் அவர் முகம் இப்போதும் மினுங்கியது. சூசை திறந்து கிடந்த வாசலுக்கூடாக
வீட்டினுள் நுழைந்ததும் “அப்பா” என்று அழைத்தபடி ஓடிவந்து அவரைக் கட்டி அணைத்தான்
மகன் தயாளன். சூசை இதைக் கொஞ்சமும்
எதிர்பார்க்கவில்லை. ‘சின்ன வயதிலும் எட்ட நின்று மரியாதையோடு கதைப்பவன் இப்போது
ஓடிவந்து அணைக்கிறான்; ‘அப்பு’ என அழைத்தவன் ‘அப்பா’ என அழைக்கிறான். காலமும்
வாழுற நாடும்தான் இவனை எவ்வளவுக்கு மாறிவிட்டது!”
“என்ன மோனை, சுவமாய் வந்து
சேந்தனியோ?” மகன் மீதுள்ள கரிசனமும் பாசமும்
கேள்வியாய் எழுந்தது.
“ஓம் அப்பா, வரக்கை ஒரு பிரச்சனையும்
இல்லை. இந்த ஊர் வெக்கைதான் எங்களுக்கு
ஒத்துவரயில்லை” என்று சொன்ன தயாளன் கையோடு தங்கைமாரோடு கூட நின்ற தன் மனைவியைச்
சுட்டிக் காட்டி, “இவள்தான் லாவண்யா” என்று கூறி அறிமுகப்படுத்தினான். “என்ன பேர் சொன்னனி, மோனை?” என்று வாயில் வராத
பெயரைப் பிழையாகச் சொல்லிவிடுவோமோ என்று அச்சப்பட்டவர்போல் வினாவினார்.
அதற்குள், சின்னவள் அனிதா, “அப்பா,
மச்சாளன்ரை பெயர் லாவண்யா. அப்பிடியெண்டால் வடிவான பெண் எண்டு கருத்து.”
சூசை அப்போதுதான் புது மருகளைத் திரும்பிப்
பார்த்தார். அனிதாவின் விரல்களோடு தன் விரல்களையும் கொழுவிக்கொண்டு மலங்க மலங்க விழித்துக்கொண்டு
நின்ற கன்னம் சிவந்த லாவண்யா அவர் மனதில் ஒரேயடியாக ஒட்டிக்கொண்டாள். ‘ஓமோம்
வடிவாத்தான் இருக்கிறாள்.’ என்று தனக்குள்ளேயே சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டார்.
அவர் தன்னைக் கவனிக்கிறாரெனக் கண்டதும் மார்பை மறைத்த பஞ்சாபித் துணியை மேலே
இழுத்துவிட்டுத் தலையைக் குனிந்துகொண்டாள் லாவண்யா.
“அப்ப பிள்ளையளெல்லாம் கொஞ்சம் பொறுங்கோ,
கால் முகம் கழுவிக்கொண்டு வாறன். அங்கை அம்மா சாப்பிடாமல் என்னைக்
காத்துக்கொண்டிருக்கிறா.” என்று எல்லாருக்கும் பொதுவாகச் சொல்லிக்கொண்டு வீட்டின்
பின்புறம் ஊடாகக் கோடிப்புறத்தை நோக்கி நடந்தார் சூசை.
கிணற்றடியில் கால் முகம் கழுவிக்கொண்டு
படுக்கை அறைக்குள் நேரேபோய் அடிச்சுத் தோய்த்த சாரமும் அரைக்கை பெனியனுமாக
வெளிக்கிட்டபோது பக்கத்து அறையில் பெண் பிள்ளைகள் கதைப்பது தெளிவாகக் கேட்டது.
லாவண்யா பேசுவது அவருக்கு மிகவும் வித்தியாசமாகப் பட்டது. ஆகவே ஆவலோடு கூர்ந்து
கவனித்தார்.
“நீங்கள் இரண்டுபேரும் எப்படி உங்கடை
தலைமயிரை இவ்வளவு பளபளப்பாக வைச்சிருக்கிறியள்? மிச்சம் நீளமாவும் அடர்த்தியாவும்
இருக்கு. என்ன பூசிறனிங்கள்?”
“அது மைச்சாள், பெரிய ரகசியமில்லை. இஞ்சை
எல்லாரும் கிழமைக்கொருக்கால் சியாக்காய் பூசித்தான் முழுகிறவையள். முழுகித் தலை
காஞ்சாப்போலை நல்லெண்ணை பூசுவம். அது தன்ரை பாட்டிலை வளருது. பளபளப்பாவும்
இருக்குது.” இது அனிதா. அவளுக்கு எப்போ வாய் திறக்க வாய்ப்பு கிடைக்கிறதோ அதை
விடவே மாட்டாள். காம்பஸ்ஸில் இரண்டாம் வருடம் படிக்கிறாள். அவளுடைய வாயின் நீளம்
வீட்டிலும் வெளியிலும் வலு பிரசித்தம்.
“ஏன் மைச்சாள்,
நீங்கள் என்ன பூசுறனிங்கள்? நல்ல வாசமாக் கிடக்கு.” லாவண்யாவின் தலைமயிரைக்
கிட்டவந்து தொட்டுப்பார்த்த அனிதா மைச்சாளாருக்குத் தலைமயிர் உதிர்ந்துபோனதைக்
கண்டுகொண்டதாகக் காட்டிக்கொள்ளாமல் உரிமையுடன் வினாவினாள்.
“எங்களூர்த்
தண்ணிக்குத் தலை மயிர் நல்லாக் கொட்டுப்படும். அதை ஒருவழியாலும் தடுக்கேலாது.
என்னைப்போலை கேர்ள்ஸ் எல்லாருக்கும் இதுதான் பெரிய கவலை.” லாவண்யாவின் ஒவ்வொரு
சொல்லிலும் ஆதங்கம் தொனித்தது. “வெறுங்கழுத்தோடை நிக்கிறியள் மச்சாள், அண்ணா
நகையொண்டும் உங்களுக்கு வாங்கித் தரயில்லையோ?” என்று கேட்டாள் மூத்தவள் அற்புதம்.
வாய்முட்டச் சிரிப்பையும் முகம் முழுவதும் வெட்கத்தையும் அடக்கமுயன்ற லாவண்யா தன்
கைவிரலில் இருந்த மோதிரத்தைக் காட்டினாள். “இதைப் பாருங்கோ, உங்கள் அண்ணா
போட்டவர், எப்பிடி இருக்குது?”
“ஓ, இதென்ன வெள்ளி
மோதிரம். இதையே அண்ணா தந்தவர்?”
“இது வெள்ளி
இல்லை, அற்புதம். இது வைட் கோல்ட் அதாவது வெள்ளைத் தங்கம். சும்மா தங்கத்திலும்
பார்க்க மிச்சம் விலை கூடினது. இதுதான் அவர் தந்த எங்கேஜ்மெண்ட் மோதிரம்.” லாவண்யா
கொண்ட வெட்கத்தைக் கண்டதும் சகோதரிகள் இருவரும் அவளை இருபுறமும்
அணைத்துக்கொண்டார்கள்.
“இப்ப விளங்குது,
மைச்சாள், இஞ்சையும் எங்கேஜ்மெண்ட் மோதிரம் எண்டு சொல்லித்தான் போடுறவையவள். ஆனால்
இண்டைக்குத்தான் நான் நேரிலை கண்டனான்.” என்றாள் அற்புதம். “நானும்தான்.” என்றாள் அனிதா. அதேவேளை அற்புதம் தன்னை மறந்தவளாய் மோதிரம்
எதுவும் அணியாத தன் வெறும் விரல்களை ஏக்கத்துடன் பார்த்தாள். இதை லாவண்யா
கவனிக்கத் தவறவில்லை. லாவண்யாவின் மோதிரத்தைத் துருவித் துருவிப் பார்த்த அற்புதம்
“நடுவிலை இருக்கிறது வைரம்போலை கிடக்கு!” இதைக் கூறியபோது அவளின் கண்கள் அகல
விரிந்ததைக் கண்ட லாவண்யா, “மிச்சம் விலை கூடின வைரம். ஒரு நாள் உங்கள் அண்ணவும்
நானும் தனியச் சந்திச்சபோது எனக்கு முன்னால் இந்த மோதிரத்தை நீட்டிக்கொண்டு “என்னைக்
களியாணம் செய்வீங்களோ?” எண்டு என்னைக் கேட்டார். அவர் இப்படித் திடீரன்று கேட்டதும்
எனக்குச் சரியான வெக்கமாய்ப் போட்டுது. ஓம் எண்டு சொல்லவும் பயம், இல்லையெண்டு
சொல்லவும் பயம். பிறகு கொஞ்ச நேரத்தாலை ‘எனக்கு விருப்பம்” எண்டு சொன்னன்.
அவருக்கு உடனை அழுகை வந்திட்டுது. அவர் என்னிலை எவ்வளவு அன்பாய் இருக்கிறார்.
அதிலும் கூட நான் அவரிலை அன்பாய் இருக்கவேணும், அவருக்காக நான் எதையும்
செய்யவேணுமெண்டு உடனை தீர்மானம் எடுத்திட்டன்.” இப்போது எல்லார் கண்களும்
கலங்கியிருந்தன. “நீங்கள் ரண்டுபேரும் சரியான லக்கி மைச்சாள்.” என்று மனம் நிறையப்
பாராட்டினாள், அற்புதம். அறைமுழுவதையும் இளம் பெண்களின் சிரிப்பு அலைகள்
ஆக்கிரமித்தன. பெண்களின் கதைகளைக் கேட்டுத் தன்னை மறந்தபடி நின்ற சூசை
மனைவி அங்கே காத்திருப்பாளேயென்ற நினைவு வந்தவராய் குசினியை நோக்கி நடந்தார்.
மனைவி ஆறி
அலந்துபோன மதிய உணவைத் தயாராக வைத்துக்கொண்டு அவருக்காகக் காத்திருந்தாள்.
சாப்பாட்டு மணத்தையும் தாம்பத்யத்தையும் ஒருங்காக உணர வேண்டுமென்றால் குசினிக்குள்
நிலத்தில் இருந்து மனைவி பரிமாறச் சாப்பிடுவதில்தான் அதைப் பெறமுடியும் என்று சூசை
அடிக்கடி எண்ணிக்கொள்வார். மகன் வெளி நாட்டிலிருந்து வந்த பிறகும் வழக்கத்தை
மாற்றாமல் பலகையை இழுத்துப் போட்டுக்கொண்டு அவள் முன்னே உட்கார்ந்துவிட்டார்.
மனைவி குனிந்த தலை
நிமிராமல் பரிமாறினாளென்றால் தலையில் யோசனைப் பாரம் கூடியிருக்கும் என்பதை அவர்
நன்கு அறிந்தவராதலால். என்ன விசேஷம் சொல்லும் என்பதுபோல் மனைவியை நோக்கினார் சூசை.
“இவள் மருமகள் ஆர் தெரியுமோ?” என்று இதுவரை வெளிவராத இரகசியத்தைச் சொல்வதுபோல்
ஓசைப்படாமல் கேட்டாள். “நான் இப்பதானே வந்திருக்கிறன், தெரிஞ்சால் சொல்லும்.”
என்றார் சூசை.
“தம்பி, வெள்ளாளப்
பெடிச்சியையெல்லோ சடங்கு முடிச்சுக்கொண்டு வந்திருக்கிறான்.”
திடுக்கிட்டு
நிமிர்ந்த சூசை, “அப்பிடியே சங்கதி? நான் பெடிச்சியைப் பாத்தவுடனை யோசிச்சன்,
வித்தியாசமாக் கிடக்குதெண்டு.”
“அதுவும் கனடாவிலை
நல்ல வசதியாயிருக்கிற குடும்பமாம். ஆனால்...” மனைவி கதையை இழுத்த விதத்தில் ஏதோ எங்கேயோ
சறுக்கிவிட்டதென்பதைச் சூசை உடனே அனுமானித்துக் கொண்டார்.
“தம்பி இவளைக்
கூட்டிக்கொண்டு போனதோடை இவவன்ரை ஆக்கள் இவளைத் தங்கடை குடும்பத்திலையிருந்து தள்ளி
வைச்சிட்டுதுகளாம். தம்பி சொன்னான்.” மனைவி எந்த விநாடியும் அழுதுவிடுவாள்
போலிருந்தது. சூசை கையிலிருந்த சோற்றைக் கோப்பையில் போட்டுவிட்டு மனைவியை
அனுதாபத்துடன் நோக்கினார்.
“இங்கிலீஸ்காரன்ரை
நாட்டிலை வாழப்போன சனங்களெல்லோ, கொஞ்சமெண்டாலும் மாற வேண்டாமே. இஞ்சை
இருந்தமாதிரித்தான் அங்கையும் இருக்குதுகள்போலை கிடக்கு.”
“அப்பிடித்தான்
தம்பியும் சொன்னான். அங்கை வீடுவாசலும் வசதிகளும் சேர்ந்ததிலை அவையளின்
கடுமுடுக்கு இஞ்சையிலும் பாக்கக் கூடவாம். ஆனால் மருமகள் அவையளைப்போலை
இல்லாதமாதிரியும் கிடக்கு.”
“அவள் இந்தக்காலத்துப்
பெடிச்சியெல்லே. அதோடை நல்லாப் படிச்சிருக்கவும் வேணும். இல்லாட்டில் தம்பியை
விரும்பியிருப்பாளோ?”
“நாங்கள் எந்தப்
பகுதியெண்டு தம்பி சொன்னபிறகும் இவள் அவனைக் கைவிடயில்லையாம். அதுதான் தம்பி இவளை
விட்டுப்பிரிய மனமில்லாமல் தாய் தேப்பன்ரை விருப்பத்துக்கு மாறா கூட்டிக்கொண்டு போனவனாம்.”
சாப்பாட்டை
முடித்துக் கையைக் கழுவிக்கொண்டு ஹோலுக்குள் வந்த சூசை சுவர் ஓரமாக இருந்த தன்
வழக்கமான ஈஸிசேரில் அமர்ந்துகொண்டார். அவருக்காகக் காத்திருந்ததுபோல் தயாளன்
சின்னதொரு பையைக் கொண்டுவந்து நீட்டினான். “அப்பா, இந்த வாட்சை உங்களுகெண்டு
கனடாவிலையிருந்து வாங்கிக்கொண்டு வந்தனான்” என்று சொல்லிப் பையிலிருந்து அதை
எடுத்து சூசையின் கையில் கட்டினான். “எனக்கேன் மோனை வாட்ச்? இவ்வளவு காலமும்
வாட்ச் பாத்தே நான் வேலை செய்யிறன்? அங்கை வெய்யில் எறிக்குது பார். அதை வைச்சு நாங்களெல்லாம்
நேரம் சொல்லுவம், தெரியுமோ?” என்று சொல்லி அட்டகாசமாகச் சிரித்தார். கூடவே மகன்
கட்டிவிட்ட வாட்சையும் மறுகையால் தடவிப்பார்த்து மனதுக்குள்
பெருமையடித்துக்கொண்டார். “எனக்கெண்டு என்ரை மகன் அங்கையிருந்து வாங்கிக்கொண்டு
வந்திருக்கிறான். சீமைச் சாமானெண்டால் சும்மாவே, நல்ல லட்சணமாக் கிடக்கு.”
தயாளன் அத்துடன்
நிற்கவில்லை, இன்னொரு பையைத் திறந்து, “அப்பா, இது நான் கொழும்பிலை வாங்கினது. கரை
போட்ட வேட்டியும் சேர்ட்டும். நீங்கள் வேட்டி கட்டிக்கொண்டு வெளியே போனால் உயர்
சாதிக்காரர் உங்களை ஒருமாதிரிப் பாக்கிறவையவள் எண்டு நான் சின்ன வயசாயிருக்கிறபோது
சொல்லுவியள். அப்பா, இப்ப உலகம் மாறிப்போச்சு, இனி ஒருவருக்கும் பயப்படாமல்
கட்டுங்கோ. இந்தச் சேர்ட்டும் உங்களுக்குப் பொருத்தமாயிருக்கும்.” என்று தயாளன்
சொன்னபோது சூசைக்குக் கண்ணில் நீர் முட்டியது. தயாளன் சின்ன வயசாயிருக்கும்போது
தனக்கு நடந்ததைப் போகிறபோக்கில் சொன்னதை இப்பவும் நினைவில் வைத்துக்கொண்டு எங்களைச்
சந்தோசப்படுத்தப் பார்க்கிறான். உலகம் முழுக்க என்னமாய் மாறிவிட்டது. ஆனாலும் நாங்கள்
இப்பவும் எளிய சாதிதானே!” அவர் தன் மனக்குமுறலை வெளியே காட்டிக்கொள்ளாமல்
சமாளித்துக்கொண்டார். ஆனாலும் அவரினுள்ளே பொருமிக்கொண்டிருந்த நீண்டகால வேதனை
அவரின் கண் ஓரங்களில் நீராய்க் கசிந்தது. அதற்குள் தயாளனின் தாய் இடையில் புகுந்து
“ஏன் மோனை இவ்வளவெல்லாம் சிலவு செய்தனி? இஞ்சை இந்த வீடு வாசலெல்லாம் நீ வெளி நாடு
போகக்கை வெறும் கொட்டிலும் மண் சிவருமாத்தானே கிடந்தது. வீடு இஞ்சாலை தனியனெண்டால்
குசினி அங்காலை ஒருபக்கமாய்க் கிடந்தது. நல்ல மழை பெஞ்சுதோ குசினிக்கை போகமுந்தி
துப்பரவா நனைஞ்சுபோடுவம். இப்ப எல்லாத்தையும் கோப்பிசம் போட்ட கூரையோடை கட்டச்சொல்லி
நீதானே காசு அனுபினனி!”
“ஓமம்மா, நானும்
கவனிச்சனான். நான் அனுப்பினது பெரிய காசில்லை. அப்பாதான் ஓடியோடிச் சம்பாரிச்சு
இந்த வீட்டைக் கட்டியிருக்கவேணும்.”
‘உண்மையும்
அதுதான். தம்பி அங்கினைக்கை எப்பன் எப்பன் அனுப்பிக்கொண்டிருந்தவன். சீமெந்து
விக்கிற விலையிலை, மற்றச் சாமான்களுக்கும் தட்டுப்பாடு எக்கச்சக்கமாக இருகக்கை என்ரை
உழைப்பில்லாமல் இதையெல்லாம் செய்திருக்கேலாது.’ எனச் சூசை தனக்குள்ளேயே
நினைத்துக்கொண்டபோதிலும் வெளியே மனைவி சொன்னதை ஆமோதிப்பதுபோல், “அம்மா சொல்லுறதும்
சரிதான், மோனை” என்று மனைவியோடு ஒத்துப்பாடினார்.
தம்பி
உற்சாகமாய்க் கதைத்துக்கொண்டிருந்தபோதே மனதுக்குள் பிசைந்துகொண்டிருக்கும் விஷயத்தைப்
பேசிவிடவேண்டுமென்ற தீர்மானத்தோடு வந்தவர் பெம்பிளைப் பிள்ளைகள் எப்போ உள்ளே
போவார்களென்று காத்திருந்தார். அவர் மேற்கொண்டு பேசத் தயங்குவதை அவதானித்த பெண்கள்
மெல்லமாக உள்ளே நழுவிச் சென்றார்கள். அற்புதம் மட்டும் தன்னைப்பற்றி அண்ணாவுடன்
கதைக்கப்போகிறார்கள் என்ற அருட்டுணர்வால் உள்ளே போய்விடாமல் சுவருக்கு
அந்தப்பக்கமாய்ப்போய் நின்றுகொண்டு காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டாள்.
சூசை மகனின்
முகத்தைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு நிதானமாகப் பேச ஆரம்பித்தார். “தம்பி,
இந்தப் பதினைஞ்சு வரிசத்திலை நாங்கள் எவ்வளவு கயிறுமாலைப்பட்டு இந்தக் குமருகளைக்
கண்ணுக்கை வைச்சு வளர்த்துக்கொண்டு வந்தனாங்கள் எண்டு உனக்குத் தெரியுந்தானே,
மோனை! மூத்தவளுக்கு வயசாப்போட்டுது. அவளன்ரை சடங்கை கெதியா முடிக்கவேணும். இளையவள்
படிப்பிலை கெட்டிக்காரி. அவள் தன்ரை பாட்டைப் பாத்துக்கொள்வாள் எண்ட நம்பிக்கை
இருக்கு. நீயும் கிட்டடியிலைதான் சடங்கு முடிச்சனி. உங்கடை நாட்டு முறையள் தலையள்
ஒண்டும் எங்களுக்குத் தெரியாது. எண்டாலும் உனக்கு இருக்கிற பொறுப்பு
பொறுப்புத்தானே!”
“ஓமப்பா, அம்மா தங்கச்சிமாரைப்
புழுகிப் புழுகி ஒவ்வொரு தபாலிலையும் எழுதிக்கொண்டிருப்பா. எனக்கெல்லாம் பாடமாப்
போச்சு” என்று சொல்லிச் சிரித்தான் தயாளன்.
“மூத்தவளுக்கு
ரண்டு மூண்டு இடத்திலை பாத்திருக்கிறம். அதிலை ரண்டு அசல் பொருத்தம். அங்கை மாப்பிளை
வீட்டுக்காரருக்கும் வலு விருப்பம். நீ வந்த கையோடை அந்த ரண்டு இடத்திலையும்
போய்க் கதைக்கலாமெண்டு நினைச்சிருந்தனாங்கள்.” என்று சூசை மகனின் மனதின் ஆழத்தை
அறிய முயன்றவர்போல் பக்குவமாக ஒவ்வொரு சொல்லையும் அளந்து பேசினார். அதேவேளை அங்கே
சுவருக்குப் பின்னால் தனது பின்னலை முன்னுக்கு விட்டுப் பிரிக்கிறதும் மறுபடி
பின்னுவதுமாக அண்ணன் என்ன சொல்லப்போகிறானோவென்று மனம் அலைமோத நின்றாள் அற்புதம்.
எந்த நேரமும் அவள் கண்களிலிருந்து நீர் கொட்டலாம். அது மனம் மகிழ்ச்சியில் குளித்ததனால்
முளைத்த கண்ணீராகவும் இருக்கலாம் அல்லது மன வெப்பியாரத்தால் தெறித்த கண்ணீராகவும்
இருக்கலாம். எல்லாம் தயாளன் அண்ணா சொல்லப்போவதிலேயே தங்கியிருந்தது.
“அம்மா எத்தினை
கடிதம் எழுதினவ. ஆனால் மூத்தவளன்ரை களியாண விசயமொண்டும் ஒருநாளும் எழுதயில்லை.
நானும் முன்னமே இதை அறிஞ்சிருந்தால் லாவண்யாவோடையும் கதைச்சிருப்பன்.” என்று
நயமாகச் சொல்லிவிட்டுச் சிறிது தயக்கத்துடன் தகப்பனையும் தாயையும் மாறிமாறிப்
பார்த்தான் தயாளன். ஒருசில கணங்கள் பயங்கர அமைதியில் கழிந்தன. “நீ வந்தபிறகுதான்
சடங்குக் காரியங்களைக் கதைக்கலாமெண்டு அப்பா சொல்லிக்கொண்டிருந்தவர். நீ உன்ரை
வசதியைப் பற்றிச் சொல்லு மோனை. எங்களுக்கு எல்லாப் பிள்ளையளும் ஒண்டுதான்.
உனக்குக் கஷ்டத்தைத் தந்திட்டு நாங்கள் இஞ்சை நிம்மதியாய் இருக்கேலுமோ? நீ தன்னும்
சகோதரங்களைக் கவனியாமல் விட்டனியெண்டு ஊரிலையும் உலகத்திலையும் கெட்டபேர் எடுக்க
விரும்புவியோ?” தாய்க்காரி மகனுக்காகவும் கதைக்கவேண்டும் புருஷனுக்காகவும்
கதைக்கவேண்டுமென்ற இக்கட்டான கட்டத்தில் நிலைவரத்தை ஒருவாறு சமாளிக்க முயன்றாள்.
“நான் இழுத்துப்
பறிச்சுக் கதைக்க விரும்பயில்லை, அம்மா. நான் உங்களன்ரை பிள்ளை. உங்கடை மனம் நோக
நடக்கமாட்டன். எண்டாலும் நீங்கள் எல்லாரும் என்ரை வசதியைப் பற்றியும் முதலே அறிஞ்சிருந்தால்
நல்லது.”
“ஏன் மோனை, கடன்தனியள்
குடுக்குமதியளெண்டு ஏதேனும் கரைச்சல் இருக்குதோ?” தன் மனதில் துடித்த கவலை அவளின்
ஒவ்வொரு சொல்லிலும் தொற்றிக்கொண்டதென்பது எல்லாருக்கும் விளங்கியது. “எங்களன்ரை
நாட்டிலை கடன் தொல்லை ஆரை விட்டது? அரசாங்கமே கடனில்தான் ஓடிக்கொண்டிருக்குது.
இவள் லாவண்யாவை நாலு பேருக்குச் சொல்லிக் களியாணம் கட்டவே என்னாலை ஏலாமல்
போட்டுது. சினேகித ஆக்களை மட்டும் கூப்பிட்டு றியிஸ்ரேஷன் செய்துபோட்டு
ஒண்டாயிருக்கத் துவங்கியிட்டம். அதோடை சிலவுகள் கைக்கு மீறிப் போகத்
துவங்கியிட்டுது. நல்லவேளை, லாவண்யா இப்பத்தான் வேலையிலை நிரந்தரமாக
வந்திருக்கிறாள். எங்களுக்கு நடந்ததையெல்லாம் உங்களுக்குச் சொல்லாமல் விட்டிட்டன்.
அது என்ரை பிழைதான்.” என்று கூறிவிட்டுச்
சிறிது நேரம் மௌனமாயிருந்த தயாளன் பின்னர் தொடர்ந்தான். “நாங்கள் சேர்ந்து வாழத்
துவங்கின கையோடை ஒரு பழம் கட்டிடத்திலை ஒற்றை அறையை வாடைக்கு எடுத்து இருந்தனாங்கள்.
அங்கை பூச்சி புழு மெத்திப்போய் இருக்கேலாமல் போனபடியால் சொந்தமா சின்ன வீடொண்டு
கிட்டடியிலை வாங்கினனாங்கள். இப்ப முந்தியுலும் பார்க்க எவ்வளவோ
வசதியாயிருக்கிறம். இவள் வேலைக்குப் போறது ஒரு திக்கு நான் போறது மற்றத் திக்கு. என்னட்டையிருந்த
ஒரே காரிலை ரண்டுபேரும் நேரத்துக்கு வேலைக்குப் போகேலாது. அதனாலைதான் இவளுக்குப்
போகவரச் சுகமாயிருக்குமெண்டு புதுசா ஒரு கார் வாங்கிக் குடுத்தனான். வீடு
எண்டாப்போலை இஞ்சை செய்யிறமாதிரி கைக்காசுக்கு அங்கை வாங்கிறயில்லை, அம்மா. எல்லாம்
பாங்கிலை கடன் எடுத்துத்தான் செய்யவேணும். கார் வாங்கினதும் அதே மாதிரித்தான்.
வீட்டுக்கு மட்டும் மாதம் மாதம் ரண்டு முறை அடுத்த முப்பது வருசத்துக்கு விடாமல் கடன்
காசை பாங்குக்குக் கட்டிக்கொண்டிருக்க வேணும். பாங்குக்கு குடுக்குமதி தப்பினாலோ அவங்கள்
வீட்டைப் பறிக்க வந்திடுவாங்கள். பிறகு நாங்கள் தெருவிலைதான் நிக்கவேண்டி வரும்.”
தயாளன் தான் சொல்ல விரும்பியதை அரை மனதோடு விளக்கிவிட்டுப் பெற்றாரை ஆவலோடு
பார்த்தான். தாயின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தபோதிலும் மகனின் இயலைமையை
நினைத்து மனம் மட்டும் உள்ளே வருந்தியது. சூசை முகட்டில் எழுதியிருக்கிற எதையோ
வாசிக்க முனைபவர்போல் யோசனையில் மூழ்கியிருந்தார். சுவருக்குப் பின்னால் நின்ற அற்புதத்திடமிருந்து
திடீரென எழுந்த கேவல் ஒலி வீட்டிலிருந்த எல்லாரையும் ஒருமுறை உலுக்கியெடுத்தது.
தயாளனின் தாயார்
மெல்ல எழும்பிப்போய் அற்புதத்தின் பக்கத்தில் நின்று அவளின் கன்னத்தில் வழிந்த
கண்ணீரை ஆதரவுடன் துடைத்தாள். அவளின் விசும்பலுக்குக் காரணம் என்னவென அறிந்தபோதும்
அவளுக்கு எப்படி ஆறுதல் கூறாலாம் எனத் தெரியாமல் அந்தத் தாய் உள்ளம் தடுமாறியது.
தயாளனும் எழுந்துபோய்ப் படுக்கை அறைக்குள் கடும் யோசனையில் நின்ற லாவண்யாவின் முன்னால்போய்
அவளின் கைகளைப் பற்றித் தன் கன்னத்தில் வைத்துக்கொண்டான். வெளிவாசல் திண்ணையில்
வந்து நின்ற சூசை தன் டிராக்டர் நிற்கும் கொட்டிலை நோக்கி மெல்ல நடக்கத்
துவங்கினார்.
“இதுக்குமேல் என்ன
சொல்லக்கிடக்குது, என்ன அறியக்கிடக்குது? டிராக்டருக்கு விலை பேசின ஆக்களை
வரவேண்டாமெண்டு இண்டைக்கே அறிவிச்சுவிடவேணும். அவ்வளவுதானே, இது என்ன பெரிய
காரியம்? நாளைக்கும் இதே தெருவிலை என்ரை டிராக்டர் அலறியடிச்சுக்கொண்டு இன்னும் ஓடத்தான்போகுது.
யார் என்ன சொன்னாலென்ன இந்த டிராக்டரின் நாலு சக்கரங்களும் சுத்துறவரை என்ரை
குடும்பத்தின் வாழ்க்கைச் சக்கரங்களும் சுத்திக்கொண்டு இருக்கத்தான் போகுது.
தசைகள் தொய்ந்துபோனாலென்ன, மூட்டுகள் கழண்டுவிழுந்தாலென்ன இந்தக் கைகள்தான் நாளைக்கும்
இந்த டிராக்டரை ஆளப்போகுது. யாரையும் நான் நம்பியிருக்கப்போறயில்லை. போங்கோடா,
போங்கோ!”
எவ்வளவு
இறுமாப்பாக இவ்வளவையும் தனக்குள் எண்ணிக்கொண்டார் சூசை. ஆனால் இதெல்லாம்
இயலக்கூடிய காரியமா? ஏற்கனவே நடுங்க ஆரம்பித்த கைகளால் டிராக்டரின் உக்கிப்போன டிரெயிலர்
சலாகையைத் தடவினார். என்றுமே அழுதறியாத அவரின் கண்கள் அன்றுதான் முதலில் கசிந்தன. மண்
அள்ளச் சென்ற இடத்தில் புயல் காற்றில் அகப்பட்டு மூச்சுத் திணற நிற்பதுபோல் ஒரு
பிரமை. தோளில் யாரோ கை வைப்பதுபோல் உணர்ந்ததும் திரும்பிப் பார்த்தார் சூசை. அவர்
மனைவி உழைப்பால் இரும்பாகிப்போன தன் கையால் அவரை ஆசுவாசப்படுத்த முயன்றாள். இவளுடைய
கைகளின் அரவணைப்புத்தான் இவ்வளவு காலமும் இந்தப் பொல்லாத உலகத்தில் அவரை நிமிர்ந்து
நிற்க வைத்தன. ஆனால் இன்றோ அவளே அழுதுவிடுவாள்போல் தோன்றியது. ஒருசில விநாடிகள்
ஒருவரையொருவர் தேற்றமுனைவதுபோல் அருகருகே நின்றனர்.
“மாமா!”
இருவரும் திரும்பிப் பார்த்தனர். லாவண்யா
தயாளன் பின்தொடர வந்து அவர்கள் முன்னால் நின்றாள். அவளின் நடையில் தோன்றிய
நிதானத்தைப் பார்த்ததும் இவள் இன்னும் பாரதூரமான செய்தியோடு வருகிறாளோவென்ற கலக்கத்துடன்
இருவரும் அவளை நோக்கினர்.
“அற்புதத்தின் கலியாணத்துக்கு ஒழுங்கு
செய்யுங்கோ, மாமா!” அவளின் நடையைப் போன்றே சொற்களும் நிதானமாகவும் தீர்க்கமுடனும் உதிர்ந்தன.
“என்ன பிள்ளை சொல்லுறியள்?” சூசை தன்னைச்
சுற்றி என்ன நடக்கிறதென்று புலப்படாதவராய் தனது புது மருமகளிடம் முதன் முறையாகப்
பேசினார்.
“உங்களுக்குப் பல விஷயங்கள் தெரியாது,
மாமா. என்னுடைய அப்பாவும், அம்மாவும் தயாளனையும் என்னையும் பிரிக்க எவ்வளவோ அடாத
காரியமெல்லாம் செய்தவையள். இவரைப் போய்க் பார்க்கக்கூடாதெண்டு என்னை வீட்டுக்கை
மறியல் வைச்சவையள். அப்ப நான் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமில்லை. இவருடைய அன்பும் ஆதரவும்
இல்லாமல் விட்டிருந்தால் நான் எப்பவோ செத்துப் போயிருப்பன். இவர் ஒருநாள் எல்லாத்
தடையளையும் மீறி வீட்டுக்கு வந்து அப்பாவுடைய பயமுறுத்தலுக்கெல்லாம் பயப்படாமல்
என்னைக் கூட்டிக்கொண்டு போனார். அதுக்கும் பிறகும் அவையள் எங்களை நிம்மதியா
இருக்கவிடயில்லை. எத்தனையோ தொந்தரவுகள் கொடுத்தவையள். ஆனால் இவர் ஒன்றுக்கும்
பயப்படாமல் எனக்குப் பாதுகாப்பாயிருந்தவர். எனக்காக இவர் அனுபவித்த கஷ்டங்களை
நினைச்சுப் பாத்தால் இவருக்காக நான் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக
இருக்கவேணும் எண்டுதான் என் மனம் எப்போதும் சொல்லுது.” இதை லாவண்யா சொன்னபோது
அவளின் முதுகில் தடவி ஆறுதல் கொடுத்துக்கொண்டிருந்தான் தயாளன். “எங்களுடைய
களியாணம்தான் நடக்கமுடியாமல் போட்டுது. அதனாலை அற்புதத்தின் களியாணத்தை எங்கள்
களியாணம்போல் நடத்திப்பார்க்கவேணும். இதுதான் இப்போ எங்களன்ரை விருப்பம்.”
“நீங்கள் லேசா சொல்லிப்போட்டியள். களியாணம்
செய்கிறதெண்டால் எக்கச்சக்கமான சிலவு, பிள்ளை...”
“அதைப்பற்றி யோசியாதையுங்கோ. நாங்கள் செலவு
எல்லாத்தையும் சமாளிப்பம்.” லாவண்யா சிரித்தபடி சொன்னாள், என்றாலும் சூசைக்கு
நம்பிக்கை வரவில்லை.
“கொஞ்சம் முன்னம் தம்பி சொன்னார்
உங்களுக்கு ஏற்கனவே ஏகப்பட்ட கடனெண்டு.”
“ஆருக்குத்தான் கடன் இல்லை. கடனையே
நினைச்சுப் பயந்துகொண்டிருந்தால் வயது ஏறிப்போய்விடும். வாங்கின கடனைத் திருப்பிக்
கொடுத்துவிடலாம் போன வயதைத் திருப்பி எடுக்கேலாது, மாமா!”
“உண்மைதான், பிள்ளை. தம்பி என்ன
சொல்லுறாராம்?”
“ஓமப்பா, லாவண்யா சொல்லுறதிலை எவ்வளவோ
நியாயம் இருக்குது. நாங்கள் இரண்டுபேரும் இப்ப விபரமா
கதைச்சுப்போட்டுத்தான் வாறம். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ.” தன்
கடமையில் தனக்குத் துணையாக நிற்கிற மனைவியின் கையை நன்றியுடன் இறுகப்
பிடித்துக்கொண்டான் தயாளன்.
வாசல் கதவோடு நின்றபடி இதையெல்லாம்
கேட்டுக்கொண்டிருந்த அற்புதம் வெட்கம் தாளாமல் உள்ளே ஓடிப்போனாள். இதென்ன, என்னவோ
அதிசயமெல்லாம் இங்கே நடக்கிறது என்று எண்ணித் திகைத்தவர்போல் சூசை எல்லாரையும்
வியப்புடன் நோக்கினார்.
அதேவேளை வெளிவாசல் கேட்டடியில் ஆளரவம்
கேட்டது “டேய் மருமோன், நான் கேட்ட ஐப்பொட்டு வாங்கிக்கொண்டு வந்தனியோ?’ என்று
அலறியபடி வேட்டி அவிழ்ந்து விழுவதையும் பொருட்படுத்தாமல் ஓடிவந்துகொண்டிருந்தார்
அருள்பிரகாசம். அதுவரை இறுகிப்போய்க் கிடந்த எல்லார் முகங்களும் சிரிப்பால்
மலர்ந்தன.
சூசையின் கைகள் லூர்து மாதாவை நன்றியுடன் வருடிக்கொண்டிருந்தன.
//சாப்பாட்டு மணத்தையும் தாம்பத்யத்தையும் ஒருங்காக உணர வேண்டுமென்றால் குசினிக்குள் நிலத்தில் இருந்து மனைவி பரிமாறச் சாப்பிடுவதில்தான் அதைப் பெறமுடியும்//
ReplyDeleteநான் மீண்டும் மீண்டும் வாசித்த வாக்கியமிது.
//ஆவறி போவறியெண்டு// மண் மணக்கும் அழகான சொல்.
நிதர்சனங்களை அப்படியப்படியே சொல்கிற அழகான கதை. பாராட்டுக்கள்.
தனக்கு வாழ்க்கைத் தந்த உயிருக்கும் அவர்தம் உறவுக்கும் உரமாக வரும் கடமை உணர்வுள்ள லாவண்யாவை வைத்து லாவகமாக கதையை முடித்துள்ள விதம் அருமை நண்பரே...
ReplyDelete