Jul 15, 2013

கன்னிகாதானம்


“தாரிணீ...! பின்னேரம் வழியிலை மினைக்கெடாமல் நேரத்தோடை வீட்டுக்கு வந்திடவேணும்! தாரிணியின் அம்மா பத்மா குசினிக்குள்ளிருந்து மாடியை நோக்கிக் குரல் கொடுத்தாள்.

“ஏனம்மா, இண்டைக்கு என்ன விஷேசம்?” தாரிணி கீழே இறங்கிவரவில்லை. மாடிதான் பதில் சொல்லியது.

“அவையள் வருகினம்!”

“ஆராம்?” கேட்டுக்கொண்டே தாரிணி மாடியிலிருந்து இறங்கி வந்தாள். திரும்பிப்பார்த்த பத்மா மகளின் அழகிலும் நடையிலும் மனதைப் பறிகொடுத்தவள்போல் சிறிது நேரம் மௌனமாய் நின்றாள். கூடவே நீண்டதோர் பெருமூச்சும் அவளிடமிருந்து எழுந்தது. இந்த அற்புதமான அழகுப் பொம்மைக்கு, படித்துப் பட்டம் பெற்றுத் திறம் உத்தியோகத்திலை இருக்கிற பெண்ணுக்கு மாப்பிளையள் ஓடிவரவேண்டாமோ? தன் மனதுக்குள் இக்கேள்வியை அன்றைக்கு மட்டும் ஆயிரத்தோராம் முறையாகக் கேட்டுக்கொண்டாள்.

“போன கிழமையிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறன், மறந்துபோனியோ?”

“ஓ, ஆரோ பிரிட்டிஷ் காலம்பியா ஆட்கள் வருகினம் எண்டு சொன்னனிங்கள், அம்மா.”

“ஓமோம், அவையள்தான்.”

“விளங்குது, பாப்பம்!”

“என்ன பாப்பம்?

“பாப்பம் எண்டால் பாப்பம்தான். என்னம்மா, இது இண்டைக்கு நேற்று நடக்கிற காரியமோ? பத்து வருசமா சாதகம் கேக்கிற ஆட்களும் பெம்பிளை பாக்கவாற ஆக்களும் வாசல் கதவடியிலை லயினில் நிக்கினம். வேறையென்ன நாங்கள் கண்டனாங்கள்?” வாறவையளுக்குப் பழங்களும் பலகாரமும் வாங்க அப்பாவைக் கடையளுக்கு அனுப்பிக்கொண்டு இருப்பியள். குடுத்ததைச் சாப்பிட்டுக் கோப்பியையும் குடிச்ச கையோடை அவையள் என்னை மேலையும் கீழையும் பாப்பினம். இங்கிலீசும் தமிழும் கலந்து என்னை இண்டர்வியூ பண்ணுவினம். பிறகு. போய்க் கூப்பிடுறம் எண்டு சொல்லிப்போட்டுக் காரைக் கிளப்புவினம். ஒரு மாதத்துக்குப் பிறகு ஒரு நிமிசம் ரெலிபோன் பண்ணுவினம். பெம்பிளைக்குப் படிப்புக் கூடிப்போச்சு எண்டுவினம், பெடியனுக்கு இன்னும் நிரந்தரமான வேலை கிடைக்கயில்லை எண்டுவினம். ஓலை அவ்வளவு பொருந்தமா வரயில்லை எண்டு கதை விடுவினம். இதெல்லாம் நெடுக நடக்கிற நாடகம்தானே. நானும்தான் பார்த்துக் களைச்சுப்போனன். உங்களுக்குத்தான் இன்னும் அலுப்புத் தட்டயில்லை.”.தாரிணி அன்று அணிந்த உடுப்புக்குப் பொருத்தமான ஷூவைக் க்ளோசெட்டிலிருந்து தெரிந்தெடுத்தபடி தாய்க்கு மூச்சுவிடாமல் பதில் சொன்னாள்.

“அப்பா இவ்வளவு நேரமும் சொல்லிக்கொண்டிருந்தார். இவையள் எங்கடை ஊர் ஆக்களாம். முப்பது நாப்பது வருசத்துக்கு முந்தியே கனடாவுக்கு வந்திட்டினமாம். வந்த காலத்திலையிருந்தே வேன்கூவரில்தான் இருக்கினமாம். டொராண்டொ சனங்களைப்போலை ஒண்டுமத்ததுகள் இல்லையெண்டு அறிஞ்சவராம். அப்பா சொல்லுறதைப் பாத்தால் அவருக்கு நல்ல விருப்பம்போலை கிடக்கு”

“அப்பா விரும்பினால் போதுமோ?”

“அப்பா பிழை விடமாட்டார், தாரிணி.”

“நீங்கள் இரண்டுபேரும் விட்ட பிழையாலைதான் நான் இன்னும் களியாணம் கட்டாமல் இருக்கிறன்.”

“ஏன், நாங்கள் என்ன பிழை விட்டனாங்கள்?”

“ஆரோ ஒரு விசரன் எப்பவோ எழுதின சாதகக் குறிப்பைக் கையிலை தூக்கிக்கொண்டு ஊரெல்லாம் அலையிறியள்.”

“சாதகம் இல்லாமல் என்னெண்டு பொருத்தம் பாக்கிறது? இதென்ன இண்டைக்குப் புதுக்கதை கதைக்கிறை!”

“சரி, பாப்பமெண்டு சொல்லிப்போட்டனெல்லோ, என்னை விடம்மா. நான் போறன்.” செருப்புக் குவியலிலிருந்து தெரிந்தெடுத்த செருப்புகளைக் காலில் மாட்டுவதற்கு வசதியாக வாசலின் உட்புறமாகவிருந்த கதிரையில் உட்கார்ந்துகொண்டாள் தாரிணி.

கீழே தன் மனைவிக்கும் மகளுக்குமிடையே நடந்த உரையாடலை மாடியில் தன் அறையில் நின்றபடி கேட்டுக்கொண்டிருந்த நாதன் அவர்கள் பேசும் தொனியிலிருந்தே அவர்களின் அப்போதைய மனநிலையை அளக்க முயன்றுகொண்டிருந்தார். அவர் வேலைக்கு வெளிக்கிட்டுக்கொண்டு கிளம்ப இன்னும் அரை மணி நேரத்துக்குமேல் இருந்தது. இப்போது கீழே இறங்கிப்போனால் இந்த இருவரில் குறைந்தது ஒருவரின் வாயிலாவது அகப்பட்டு அரைபடவேண்டிவரும் என்ற அனுபவ ஞானம் அவரைப் பையப் பைய வெளிக்கிட வைத்தது.

நாதன்-பத்மாவுக்குப் பிறந்த மூன்று பிள்ளைகளில் மூத்தவன் சீலன் மேற்படிப்பு முடிந்து தன்னோடு படித்தவளைக் கண்ட கணத்திலேயே விரும்ப ஆரம்பித்து அவளையே திருமணம் செய்து வாட்டர்லூவில் சாப்வேர் கம்பெனியில் சுளையாகச் சம்பளம் வாங்கிக்கொண்டு சுகமாக இருக்கிறான். அதோடு தன் குடும்பத்திலிருந்தும் கழன்றுகொண்டான். இந்த விஷயத்திலாவது தனது மகன் வட அமெரிக்க வெள்ளைக் கலாச்சாரத்தை அனுசரித்து நடக்கிறானேயென நாதன் பெருமைப்பட்டுக்கொள்வார். அடுத்தவள்தான் தாரிணி என்னும் பவதாரிணி. அம்மா அடிக்கடி புகழ்வதுபோல் ஐந்தேமுக்கால் அடி உயரத்தில் தேவதைபோல் அலுங்காமல் நலுங்காமல் நடமாடும் அழகுப்பொம்மை. குழந்தையாயிருக்கும்போது கனடாவுக்கு வந்ததிலிருந்து ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் பள்ளிக்கூடத்திலும் வெளியிலும் எல்லாரையும் மூக்கில் விரலை வைக்கச் செய்பவள். பெரும்பாலான தமிழ்ப் பிள்ளைகளைப்போல் தமிழை மறந்தவளில்லை. பாப் இசையிலுள்ள ஈடுபாடுபோலவே தமிழிசையிலும் பற்றுக்கொண்டவள். பிஸ்னெஸ் மானேஜ்மெண்ட் படிப்பில் மாஸ்டர் செய்து இப்போது எம்.பீ.ஏ செய்ய ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறாள்.

“இதென்ன, வெள்ளைக்காரனின் வாயில் வராத பெயரை எனக்கு வைத்திருக்கிறியள்” என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தாரிணி பெற்றாரைக் குறைசொல்ல மறப்பதில்லை. அப்படியான வேளைகளில் இதற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமில்லையென்பதுபோல் நாதன் வேறு அலுவல்களில் மூழ்கியிருப்பார். “இவர் எப்பவுமே தப்பல் சாமிதான்” என்று பத்மா தன் கணவனைப் பெருமையுடன் சிறிது ஆற்றாமையையும் கோபத்தையும் கலந்து சொல்லுவாள். தாரிணிக்கு அடுத்துப் பிறந்த வால்தான் படிப்பில் அக்கறையில்லாமல் மியூசிக், ட்ரம் என்று நேரம் காலமில்லாமல் வீட்டைத் தலைகீழாய்ப் புரட்டிக்கொண்டிருக்கும் ச்சில் எனத் தன்னை அழைக்கும் செந்தில்.

இதேவேளை மாடி அதிரும்படியாக இறங்கி வந்துகொண்டிருந்த செந்தில் வந்த வேகத்தில் குசினிக்குள் நுழைந்து, “யாரோ விசிட்டர்ஸ் வர்றாங்களெண்டு சொன்னமாதிரிக்கிடந்தது, அம்மா, என்ன ஸ்பெஷல் அய்ட்டம் செய்யப்போறீங்கள்?” என்று கேட்டான்.

“உனக்கு எப்பவும் சாப்பாட்டு யோசினைதான்.” செருப்புகளைப் போட்டுக்கொண்டிருந்த தாரிணி செந்திலை வம்புக்கு இழுத்தாள். ஆனால் அவனுக்கு இப்போது தாரணிக்குப் பதில் சொல்வதிலும் பார்க்க அன்றைய ஸ்பெஷல் என்னவென்று அறிவதில்தான் கூடிய ஆர்வமிருந்தது. தாயின் முகத்தைத் தன் கையால் திருப்பி, “ஏனம்மா, இன்னும் டிசைட் பண்ணல்லையோ?” என்று கேட்டான். தாய்க்குத் தெரியும் இவன் இப்போதைக்கு இடத்தைவிட்டு அகலமாட்டான் ஏதேனும் சொல்லித் தப்பிக்கவேண்டுமென்று. “அப்பா வேலையாலை வரக்கை தமிழ்க் கடையிலை இருக்கிறதை வாங்கிக்கொண்டு வருவார். நானும் ஏதேனும் செய்யலாமெண்டிருக்கிறன்.” என்றாள்.

“ஏனம்மா, யார் வருகினமெண்டு சொல்லமாட்டியோ?”

“அது.... மாப்பிளை வீட்டுக்காரர் தாரிணியைப் பெம்பிளை பாக்க வருகினம்.”

“ஓ! அறேன்ஜ் மாரிஜ்ஜா?” கேலியும் கிண்டலும் அவன் சொற்களில் தொற்றி நின்றன.

“அறேன்ஜ் மாரிஜ் எண்டு நாங்கள் சொல்லுறதில்லை. எங்கடை யாப்பாணத்து முறைப்படி செய்யிறது இப்பிடித்தான்.”

“நீங்களும் அப்பாவும் தேர்டி இயேர்ஸுக்கு முந்தி உங்கட வில்லேஜில அறேன்ஞ் மாரிஜ் செய்தமாதிரி இப்ப கனடாவிலையும் செய்யப்பாக்கிறியள். அதுதான் சிறீ லான்கா டமில்ஸ் பத்தி வெள்ளைக்காரங்களும் கறுப்பங்களும் ஜோக் அடிக்கிறாங்கள்.”

“அவங்கள் செய்யிறது மட்டும் களியாணமோ? இண்டைக்குச் செய்துபோட்டு நாளைக்கு டிவோர்ஸ் பண்ணுறது!”

“டிவோர்ஸுக்கு அடுத்த நாள் அவங்கள் எப்படியும் இன்னொரு ஆளைக் கட்டிப்போடுவாங்கள். எங்கட டமில்ஸ் ஆக்களுக்கு இதெல்லாம் செய்யத் தெரியாது. சும்மா வயிறு முட்ட மட்டனையும் இடியப்பத்தையும் சாப்பிட்டுக்கொண்டு தமிழ் மூவி பாத்துக்கொண்டிருப்பாங்கள்.”

இவனோடு இனிக் கதைக்க முடியாது என்று விளங்கிக்கொண்ட தாய், “போடா, போ. உனக்குக் கிளாஸூக்கு நேரமாயிட்டுது.” என்று சொல்லித் தப்ப முயன்றாள்.

“நேத்து வந்த பேண்ட்ஸ் போட்டு பொட்டு வைச்ச ஆளும் நீங்களும் ஸீரியஸாக் கதைச்சது தாரிணியைப் பாக்கவாற மாப்பிளையைப் பத்தியா, அம்மா?” இதை மாடியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த நாதன் சிரிப்பை அடக்கமுடியாமல் பாத்ரூமுக்குள் ஓடி ஒழித்துக்கொண்டார்.

“ஓமோம், அவர்தான் இந்தக் களியாணத்தைப் புறப்போஸ் பண்ணுறவர்.”

“ப்றோக்கர் எண்டு சொல்றது இவரையா, அம்மா?” இவன் கடைசிப் பிள்ளையென்று செல்லம் கொடுத்து வளர்த்தது எவ்வளவு பிழையென்று இப்படியான சந்தர்ப்பங்களில்தான் பத்மா அறிந்து வருந்துவாள். என்றாலும் செந்தில் தன்மீது காட்டும் அன்புக்கும் கரிசனைக்கும் அளவில்லையென்று அவள் நன்றாய் அறிந்திருந்ததால் அவனின் மனம் நோக எதுவும் பேசுவதில்லை. இன்றைக்கும் தப்ப வழியில்லையென்று தெரிந்துகொண்டாள்.

“ஓமோம், தமிழாக்கள் புறோக்கர் எண்டுதான் சொல்லுறவையள்.”

“ப்றோக்கர் எண்டால் பீஸ் கேட்பானே!”

“பின்னை, காசு வேண்டாமலே புறோக்கர் வேலை செய்யிறாங்கள்? சும்மா எங்களைக் காலமை எழும்பிப் பிரட்டி அடியாதை, போ அங்காலை!”

அவனும் விடுகிற வழியாய்க் காணோம், “பீஸெண்டால் எவ்வளவு குடுக்கவேண்டுமம்மா?”

“ஆருக்குத் தெரியும்? களியாணத்தை ஒப்பேற்றி வைச்சால் ஆயிரமெண்டுதான் ஆக்கள் சொல்லிகினம்.”

“யூ மீன், ஒன் தௌஸண்ட் டாலர்ஸ்?” செந்தில் வாயைப் பிளந்தபடி கேட்டான். காலையில் சாப்பிடவென்று கையில் எடுத்த சாண்ட்விச்சில் பாதி இப்போதும் அவனின் வாய்க்குள் இருந்தது.

“அப்பிடித்தான் ஆக்கள் சொல்லுதுகள். ஆனால் களியாணம் நிச்சயமானால்தான் கையிலை காசைக் கொடுப்பம்.”

“தாட் இஸ் ரியலி பிக் மணி, அம்மா.” கூடவே அவன் கை தன் மடியிலிருந்த சில்லறைகளைக் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தது.

தாரிணி செருப்புகளை அணிந்துவிட்டுச் சுவரில் பொருத்தியிருந்த முழுக் கண்ணாடியில் தனது ஒப்பனையை மிகக் கவனமாகச் சரிபார்த்துக்கொண்டிருந்தாள். திடீரென்று வந்த செந்திலின் அழைப்பு அவளைத் திடுக்கிடவைத்தது.

“ஹே தாரிணி, உனக்கு லவ் பண்ணத் தெரிஞ்சிருந்தால் அப்பா அம்மாவுக்கு இவ்வளவு கரைச்சல் வந்திருக்காது தெரியுமோ? இங்கே உன்னைப் பாக்க வாற எத்தினை பேருக்கு அம்மா கேக்கையும் கோப்பியையும் கொடுத்திட்டுப் பல்லை இளிச்சுக்கொண்டு நிக்கிறவ!”

“ஷட்டப்! நீ உன்ரை வேலையை பாத்துக் கொள்ளும். நானே இவங்களைக் கேட்டனான் மாப்பிளை பாக்கச் சொல்லி?”

“அப்ப மாப்பிளையை நீ கண்டுபிடிச்சுக்கொண்டு வாறதுதானே!”

“செந்தில், உனக்குப் பள்ளிக்கூடத்துக்கு நேரம் வந்திட்டுதெல்லோ. இந்தா லஞ்ச். ஓடு நேரத்தோடை போய்ச் சேர்!” காலமையே பிள்ளைகளுக்குள் சச்சரவு வரக்கூடாதென்று பயந்த பத்மா செந்திலின் கையில் மதியச் சாப்பாட்டைக் கொடுத்துத் அவனைத் துரத்த முயன்றாள். இவன் தானாகப் போனாலேயொழியத் துரத்தி அனுப்பமுடியாதென்பதையும் அவள் அறிந்திருந்ததால் அரை மனதோடுதான் இதையும் சொன்னாள்.

“அம்மா, நான் சின்னப் பிள்ளை இல்லை. தாரிணி எம்.பீ.ஏ செய்யிறதுக்கு ஆப்ளிக்கேஷன் போடுறதிலும் பார்க்க லவ் பண்ணுறது எப்பிடியெண்டு ஒரு கிளாஸ் எடுக்கச் சொல்லு.”

“ஓமடா சொல்லுறன் நீ இப்ப இந்த இடத்தைவிட்டுப் போறியோ இல்லையோ?”

மாடியில் நின்ற நாதனுக்குச் சிரிப்புப் பிய்த்துக்கொண்டு வந்தது. பெரிதாய்ச் சிரித்துத் தொலைத்தால் தனக்கு என்ன சம்பவிக்கும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். ஆதலால் தனது சிரிப்புச் சத்தம் கீழே கேட்பதை ஓரளவுக்காவது தடுக்கலாமென எண்ணி தண்ணீர்க் குழாய்களை முழுக்கத் திறந்துவிட்டார். என்றாலும் அவரின் ராஜதந்திரம் எதிர்பார்த்த அளவுக்குப் பலிக்கவில்லை.

“என்ன கண்டறியாத சிரிப்புச் சிரிக்கிறியள் அங்கை மேலையிருந்து. பிள்ளையள் கதைக்கிறது உங்களுக்குச் சிரிப்பாக் கிடக்குதோ?” பத்மாவின் ஏவுகணை மாடியின் வளைந்து செல்லும் படிக்கட்டுகளையெல்லாம் பாய்ந்தேறி அவர்களின் படுக்கையறை பாத் ரூமுக்குள் நுழைந்து குறி தவறாமல் அச்சொட்டாக அவரின் நெற்றிப் பொட்டில் தாக்கியது. இனி மேலே நின்று தப்பிக்க வழியில்லையெனக் கண்டதும் நாதன் அலுவலக ஸூட்கேஸைக் கையில் ஏந்திக்கொண்டு கீழே இறங்கி வந்தார்.

“அப்பா எல்லாத்தையும் சிரிச்சுச் சமாளிக்கப் பார்க்கிறார்.” கண்களுக்கு இட்ட மையை இன்னொருமுறை சரிபார்த்துக்கொண்டு நின்ற தாரணி முகத்தைத் திருப்பாமலே கண்ணாடிக்குச் சொன்னாள்.

“எனக்கு நாலு நாளா இருமல். நான் இருமினால் உங்களுக்குச் சிரிக்கிறமாதிரிக் கிடக்கு.”

“ஏனப்பா, அம்மாவுக்குத் தெரியாமல் ஸ்மோக் பண்ணுறீங்களோ?” புத்தக பேக்கைத் தோளில் போட்டுகொண்டு செந்தில் கேட்டான்.

“சும்மா இரடா, அப்பா ஒரு நாளும் ஸ்மோக் பண்ணுறதில்லை.”

‘நானும்தான் ஒரு நாளும் ஸ்மோக் பண்றதில்லை. அப்பாவைப்போல் இருமிக்கொண்டா இருக்கிறன்.” என்று சொல்லிவிட்டுக் கதவுக்கு அப்பால் பாய்ந்து வெளியேறினான் செந்தில்.

“அம்மா, நான் போய்ட்டு வாறன்.” என்று சொல்லிக்கொண்டே தாரிணியும் வெளியேறினாள். “நான் சொன்னதை மறந்திடாதை, தாரிணி!” தாய் சொல்லி வாய் மூடமுன்னர் தாரிணி தெருவுக்கு வந்துவிட்டாள்.

“நீங்கள் சிரிக்கப்போய் பிள்ளையளட்டை நல்லா வாங்கிக் கட்டினீங்கள்.”

“ஒவ்வொரு நாளும் காலமை இங்கை இந்தமாதிரி முசுப்பாத்திதானே நடந்துகொண்டிருக்குது.” என்று சொன்ன நாதன், “இண்டைக்கு வாற பெடியன்ரை சாதகக் குறிப்பைத்தானே போன கிழமை பிள்ளையார் கோயிலிலை கண்ட சாத்திரியட்டைக் காட்டினனாங்கள்?” தனது டைரிக்குள்ளிருந்து எடுத்த ஒரு அரைப்பக்கக் கடதாசியை நோட்டம் விட்டபடியே கேட்டார், நாதன்.

“ஓமோம், எழுவத்தைஞ்சு வீதம் பொருத்தமெண்டு சொன்னவர்.”

எழுபத்தைஞ்சு வீதத்துக்குக் குறைவாக பாயிண்ட்ஸ் கொடுக்கச் சாத்திரியின் கம்பெனிப் பாலிஸி இடம் கொடுக்காது என்று தனக்குள் சொல்லிக்கொண்ட நாதனுக்குச் சாத்திரியை நினைத்தபோது சிரிப்பு முன்னையிலும் பார்க்கப் பன்மடங்கு கூடவந்தது. பத்மாவும் நாதனும் பிள்ளையார் கோயிலடியில் பிஸ்னஸ் கார்டுடன் வலிய வந்து அறிமுகமான சாத்திரியை ஒரு காலை நேர அப்பாயின்மெண்ட் எடுத்துக்கொண்டு காணப் போனார்கள். அந்த வேளை தன்னை மறந்து சினிமாப் புத்தகத்தில் ஆழ்ந்திருந்த சாத்திரியார் இவர்களைக் கண்டதும் பரபரவென்று ஒரு பழைய பஞ்சாங்கத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஏதோ ஒபாமாவுடைய மகளின் திருமணத்துக்கு ஓலை பார்ப்பவர்போல் ஆரவாரம் செய்யத் துவங்கிவிட்டார். அவர் தனது கந்தோர் எனக் கூறிய அறை அவரின் வீட்டுக்கு முன்னாலுள்ள கார் கராச்சுக்குள் இருந்தது. உள்ளே டொராண்டோவிலிருந்து வெளிவரும் அத்தனை தமிழ்ப் பத்திரிகைகளும் சுவர் ஓரமாகக் குவிந்திருந்தன. அவற்றில் செய்திகளை ஒரு மூலைக்கு ஒதுக்கிவிட்டு விளம்பரங்களே பல நிறங்களில் வாயைப் பிளந்தபடி தெரிந்தன. டொராண்டொ தமிழர்களுக்குப் பொழுது போகவில்லையென்றால் ஒன்றில் புதிதாக ஒரு வீடு வாங்குவார்கள் அல்லது ஏதோ ஒரு கோயிலில் ஆயிரத்தெட்டுச் சங்கு அபிஷேகம் செய்வார்கள் என்றுதான் அந்தப் பத்திரிகைகளெல்லாம் அலறிக்கொண்டிருந்தன. உலகத்திலுள்ள அத்தனை சாமிப்படங்களும் ஒருவித ஒழுங்கிலுமில்லாமல் சுவர்களில் தொங்கிக்கொண்டிருந்தன. சீனாக்காரன் மெஷினில் செய்ததுபோன்ற முருகன் சிலையொன்று எண்ணெய்க் கழிம்பு பட்டு அவர் தற்சமயம் புதிய அவதாரம் எடுத்திருப்பதுபோல் காட்சியளித்தது. வாசல் ஓரமாக இருந்ததொரு சின்னப் பக்கீசுப் பெட்டியின்மேல் சாத்திரியின் பிஸ்னஸ் கார்ட்குகள் மட்டும் அழகாக அடுக்கப்பட்டிருந்தன எவரும் வந்து எத்தனையையும் எடுத்துக்கொண்டு போகலாம் என்பதுபோல்.

பத்து நிமிஷம் பழைய பஞ்சாங்கத்தைப் புரட்டிக்கொண்டு ஒரு ஊத்தைக் கடதாசியில் பென்சிலால் குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகளும் சதுரங்களும் போட்டுவிட்டு இலக்கங்களையும் தாறுமாறாக எழுதி இல்லாத கணக்குகளுக்கு விடை கண்டுவிட்டு சாதகப் பொருத்தம் பார்க்கவந்த இவர்களை மூக்குக் கண்ணாடிக்கு மெலாகப் நோட்டம் விட்டார் சாத்திரி. அவர் பார்த்த பார்வையில் தன்னைத் தேடி வந்தவர்கள் வீட்டுப் பெண் எத்தனை ஆண்டுகளாகச் சடங்கு முடியாமல் இருக்கிறாள் என்பதைத் தான் ஓலையைப் பாராமலே அறிந்துகொண்டார் என்று சொல்ல முயல்வது தெட்டத் தெளிவாய்த் தெரிந்தது.

“கொக்குவில்லிலையும் கொழும்பிலையும் இருவது வருசமும் கனடாவிலை இருவது வருசமுமாக மொத்தம் நாப்பது வருசம் ஓலையும் களியாணப் பொருத்தமும் பாக்கிறன் நான், எந்தக் கோயிலிலையும் கற்பூரம் கொழுத்திச் சத்தியம் பண்ணுவன் இப்பிடியான சாதககாரியைக் கண்டதாக எனக்கு நினைவேயில்லை. அப்பிடியொரு உத்தமமான சிங்க ராசியோடை பிறந்திருக்கிறாள் பாருங்கோ, உங்கடை மகள். மாப்பிளைப் பெடியன் மட்டுமென்ன சில்லறையான ஆளெண்டு நினைக்கிறியளோ? எந்த வஞ்சூரனுக்குப் போனாலும் பிழைச்சுக்கொள்ளக்கூடிய வில்லாதி வில்லன், தெரியுமோ?” என்று சொல்லி வெற்றிலைக் காவியால் பட்டை அடித்த பற்களைக் காட்டி அட்டகாசமாகச் சிரித்தார் டொராண்டோவின் இணையற்ற சாத்திரி. இந்தச் சிரிப்பு மட்டுமே வந்தவர்களிடமிருந்து எந்தக் குறுக்குக் கேள்வியும் எழும்பவிடாமல் செய்யும் வல்லமையுள்ளது என்பது அவர் தனது தொழில் ரீதியாக அறிந்த உண்மை.

ஆனால் பத்மாவிடம் இந்தப் பருப்பு லேசில் அவியவில்லை, “அப்ப செய்யலாமெண்டு சொல்லுறியளோ?” என்று கேட்டாள்.

“என்ன கதை கதைக்கிறியள்? சும்மா எப்பன் சிப்பனே, எழுவத்தைஞ்சுக்கு வீதத்துக்கு மேலாலை சிவபெருமானும் பாறுவதியம்மனும் போலையெல்லோ பொருத்தம் வந்திருக்குது. தாராளமாகச் செய்யலாம், பாடிப்பாடிச் செய்யலாம்.” அவ்வளவே போதும் என்று எண்ணிய பத்மா கணவனின் முகத்தைப் பார்த்தாள். அவரும் வழக்கம்போல் தலையை மேலும் கீழும் ஆட்டி ஆமோதித்தார். “அப்ப பொருத்தம் பாத்த குறிப்பைத் தாருங்கோ, மாப்பிளை வீட்டுக்காரருக்குக் காட்டவேண்டிவரும்.” என்று சொல்லியபடி கையை நீட்டினாள் பத்மா.

“இந்தாருங்கோ, கோயிலிலை சாமிக்கு முன்னாலை பூசைக்கு வைச்சு எடுத்த பூவெண்டு நினைச்சுக்கொள்ளுங்கோ” என்று சொல்லிய சாத்திரியார் பள்ளிக்கூடப் பிள்ளையின் கொப்பியிலிருந்து கிழித்த கடதாசியில் எழுதிய துண்டை அவளிடம் நீட்டினார். பத்மாவும் ஏதோ ஸ்பெஷ்லிஸ்ட் எழுதித் தந்த பிரிஸ்கிரிப்ஷனை வாங்குவதுபோல் வலு கவனமாக வாங்கி அதனைக் கைப்பைக்குள் பத்திரப்படுத்திக்கொண்டாள்.

நாதன் தனது மனைவியின் ஆய்க்கினை தாங்காமல் அங்கே வந்தாரேயொழியத் தனக்கும் இந்தக் கைங்கரியத்துக்கும் எந்தவித சம்மதமுமில்லையென்னுமாப்போல் பிடிச்சு வைச்ச பிள்ளையார்மாதிரி கடைசிவரை ஒடிசல் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். இனிச் சாத்திரிக்குக் காசு கொடுக்கும் காரியத்தில்தான் தலையிடவேண்டிவருமெனத் தெரிந்ததால் எழுந்து நின்று மடியிலிருந்த இருபது டாலர் நோட்டைச் சாத்திரியிடம் நீட்டினார். நோட்டின் நிறத்தைக் கண்டதுமே சாத்திரி புதிய வேடத்துக்கு மாறிக்கொண்டார். “நான் நூறு றூவாவுக்கு ஒரு சதம் குறையத்தன்னும் வாங்கிறயில்லை.” என்று அடித்துக் கூறினார்.

நாதனுக்கு நன்றாகவே தெரியும். டொராண்டோவில் வாழும் யாழ்ப்பாணத்துத் தமிழர்களில் பெரும் படிப்புப் படித்தவர்கள் உட்பட வர்த்தகர்கள், சாமானியர்களில் பெரும்பாலானோர் கனேடிய டாலரை ரூபாவென்றே அழைத்து சிறீ லங்கா அரசாங்கத்திடம் தமக்குள்ள மாறாத விசுவாசத்தைக் காட்டிக்கொள்வார்கள். சாத்திரி நூறு டாலர்களைத்தான் தனது தாய் நாட்டுப்பற்றைக் காட்டிக்கொள்ளும் வகையில் நூறு றூவாவெனக் கேட்கிறார் என உணர்ந்ததும் தனது திகைப்பையும் அதிருப்தியையும் வெளியே காட்டிக்கொள்ளாமல், “இங்கையெல்லாம் இருபது டாலர்தானே எல்லாரும் எடுக்கிறார்களென்று கேள்விப்பட்டன். அதுதான் நானும் அப்படித் தந்தனான். தயவுசெய்து குறை நினையாதையுங்கோ.” என்றார்.

“மற்றவையளன்ரை கதையளை அவையளோடை வைச்சுக்கொள்ளுங்கோ. என்ரை கணக்கு இவ்வளவுதான். நாப்பது வருசம் நாய்போலை உழைக்கிறன், ஒரு நாளும் ஒருதரும் நான் கேட்டதுக்கு ஒரு அரைச் சல்லி குறையக் குடுத்தது கிடையாது.” அவர் நாய்போலை உழைத்தது எவ்வளவுக்கு உண்மை என்பதை அவர் கிட்டத்தட்ட நாய்போலவே குரைத்ததின் மூலம் நாதனால் அறியமுடிந்தது.

தனது பர்ஸுக்குள் துளாவிய நாதன், “இதுக்கு மேலாலை என்னட்டை இதுதான் கிடக்கு.” என்று சொல்லி ஒரு பத்து டாலர் நோட்டை எடுத்து நீட்டினார். அதை ஒற்றைக் கண்ணால் மட்டும் பார்த்த சாத்திரியார் தலையை மறுபக்கம் திருப்பி, “உங்கடை காசை நீங்களே வைச்சுக்கொள்ளுங்கோ. தறுமத்துக்குப் பொருத்தம் பாத்தனானெண்டு நினைச்சுக்கொள்ளுறன்.” என்று சிறிது றாங்கியாகப் பதிலிறுத்தார். “நீங்கள் கோவிக்கிறியள்போலை கிடக்கு. விசா அல்லாட்டி மாஸ்டர் கார்ட் எடுப்பியளெண்டால் நீங்கள் கேட்ட நூறு டாலர்களை எடுத்துக்கொள்ளுங்கோ.” என்று கூறி அவர் பதிலை எதிர்பார்த்தவர்போல் விரல்களை பர்ஸூக்குள் அலையவிட்டார். இனி என்னமாதிரிக் குரைத்தும் இதற்குமேல் கிடைக்காதென அறிந்துகொண்டதும், “பரவாயில்லை, காலமை வந்த சீதேவியை நான் எட்டி உதைக்கக் கூடாது எண்டபடியால் நீங்கள் தாறதை வாங்கிக்கொள்ளுறன்” என்று சொல்லிவிட்டு அரை மணித்தியால வேலைக்கு மொத்தமாய் முப்பது றூவா வந்ததேயென்ற சந்தோசத்தில் மிதந்தார் சாத்திரி.

தாரிணி வாசல் படியை விட்டிறங்கி முற்றத்தைக் கடந்து தெருவில் நடக்கத் துவங்கினாள். அவளுடைய தெருவால் காலையும் மாலையும் மட்டுமே அரை மணிக்கொருமுறை ஓடும் லோகல் பஸ்ஸூக்குத் தரிப்பிடம் வீட்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருந்தது. நடந்துசென்றபோது தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டாள் தாரிணி. “அம்மாவை எவ்வளவு ஈஸியாக ஏமாற்றி அந்த வேன்கூவர் ஆளின் விபரங்களை அவள் சந்தேகப்படுவதற்கு இடம் வைக்காமல் போன கிழமையே கேட்டறிந்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று. ஆள் என்ன ஆள்? இனி நித்தியென்று பெயரைச் சொல்லி அவனைக் கூப்பிடவேண்டியதுதான். ஆறடி உயரமாமே, இவன் கையில் அகப்பட்டால்... ஐயோ, நினைக்கவே என்னவோ செய்கிறது!”

ஐபோனை வெளியில் எடுத்து நித்தியின் போடோக்களை ஒவ்வொன்றாக விரலால் மீட்டத்துவங்கினாள். “பாவி, என்ன ஸ்மார்ட்டா இருக்கிறான். இன்றைக்கு நேரே வரட்டும். யார் கூடச் ஸ்மார்ட் என்று பார்க்கலாம். இவனைக் கண்ணால் காணாமலே லவ் பண்ணத் துவங்கிவிட்டேனோ? ஏன் ஸ்கைப்பில் இரவிரவாக இவனோடு குழைந்து குழைந்து கதைத்ததெல்லாம் என்னவாம்? இவர் மட்டும் திறமான ஆளோ ‘உன்னோடு விடியும்வரை கதைக்கலாம், ஆனால் காலமை வேலைக்குப் போகவேண்டுமேயென்று விருப்பமில்லாமல்தானே கடைசியில் இரவு இரண்டுமணிபோல் ‘குட் நைட்’ சொன்னவர்.” இதென்ன, இவன் என்றவன் இப்படித் திடீரென்று இவராக மாறினான்? இந்த நாலு நாளாய்த் தனக்கு நித்தி விசர் பிடித்ததை ஒருவருக்கும் காட்டிக்கொடுக்காமல் தப்பியாச்சு. செந்தில் சொன்னமாதிரி லவ் பண்ணுறது எப்படியெண்ட கிளாஸுக்குப் போகாமலே ஆன்லைனில் படிக்கிறேன்.” என்று தனக்குத் தானே சொன்னபோது சிரிப்பு கன்னங்களைச் சிவக்கவைத்தது. யாராவது பார்த்திருப்பார்க்ளோவென்ற ஐயத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தாள் தாரிணி. பஸ்ஸுக்குக் காத்திருக்கும் அந்த மூன்றுபேரும் தன்னையே வெறிப்பதுபோலிருந்தது. அங்கே பேண்ட்ஸும் அதற்குப் பொருத்தமில்லாத சேர்ட்டுமாக நிற்கிற ஆளைப்போல்தானே ரமேஷும் இருந்தான்.

இந்த நேரமேன் அவனின் நினைவு வந்தது? ரமேஷூம் வலு கெட்டிக்காரன்தான். ஆனால் ஸ்மார்ட் என்று சொல்ல அவனின் கசங்கிய உடையும் பாலிஷ் பண்ணாத பேச்சும் இடம்கொடுக்கவில்லை. ஆனால் ஆள் காரியத்தில் மட்டும் கண்ணாயிருந்தான். எப்போ சந்தித்தாலும் ‘இரவைக்கு அபார்ட்மெண்டுக்கு வருவாய்தானே?’ என்ற கேள்விதான் அவனின் கடைசிக் கேள்வியாக இருக்கும். அவனுடைய அபார்ட்மென்டில் கட்டில் மட்டும்தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டாள். இவன் எதிர்பார்த்ததைக் கொடுப்பதற்குத் தான் உரிய ஆளில்லையென முடிவு செய்துகொண்டதும் அவனிடமிருந்து கழன்றுகொண்டாள் தாரிணி. பிறகு பழகவந்த அந்த பஞ்சாபியும் இந்த லயினைச் சேர்ந்தவனாய்த்தான் இருந்தான். வாயைத் திறந்தால் அடல்ட்ஸ் ஆன்லி ஜோக்குகளை அவிழ்த்துவிட்டு இடுப்பில் கையை வைத்துக் கிளுகிளுப்பு மூட்டப் பார்ப்பான். இவன் விரல்கள் எப்போ இன்னும் பக்கவாட்டிலேயோ மேலேயோ படருமெனச் சொல்லமுடியாதெனத் தாரணி விரைவில் கண்டுகொண்டாள். இவனைப்போல் இன்னும் எத்தனையோ ரோமியோக்களை வீட்டுக்குத் தெரியாமல் எட்ட நின்றே கதைத்துக் கைகழுவியாயிற்று. இவர்கள் எல்லாரும் எப்போ இவளுடன் மூவிக்குப் போகலாம் அல்லது அறைக்குப் போகலாம் என்பதிலேயே ஆர்வமாயிருந்தார்கள். எப்படியோ இதுவரை ஒருவர் நகமும் தன் உடம்பில் படாமல் தப்பிக்கொண்டாயிற்று. கடைசியில் நியூ யார்க்குக்கு ஓடிப்போன அந்தக் கார்திக் மட்டும் வித்தியாசமானவனா?

கார்த்திக் ஆரம்பத்திலிருதே மிக நல்ல நண்பனாகத்தான் நடந்துகொண்டான். தாரணிமீது உத்தமமானதொரு நண்பன் பொழியும் அன்பை எல்லையற்றுப் பொழிந்தான். ஒரு நாளும் அவளின் கையைத் தொட்டுக்கூடக் கதைத்ததில்லை. இதனால் அவளும் அவன்மீது நல்ல அபிப்பிராயம் கொண்டிருந்தாள். ஆனால் அவன் லா பைனல் எக்ஸாமில் மூன்றுமுறை தொடர்ந்து குத்துக்கரணம் அடித்தபோதுதான் அவனின் திறமையில் அவளுக்கு ஏமாற்றமாய்ப் போய்விட்டது. தனக்கு ஏன் தாரணியைப்போல் படிப்பு வரவில்லையென அவளையே வஞ்சகமில்லாமல் ஒருமுறை கேட்டான் கார்த்திக். லா பாஸ் பண்ணாவிட்டால் நீ என்னை ஒரேயடியாக மறந்துபோய்விடுவாயோ என்றுகூடக் கேட்டான். பொல்லாத அப்பாவி, இவனுக்கு இரங்காவிட்டால் உலகில் எவனுக்கு இரங்கியும் என்ன பயன் என்று கடைசியில் இவனோரு தொடர்ந்து நட்பாய் இருப்பதெனத் தீர்மானித்துக்கொண்டாள் தாரணி.

ஒரு நாள் தன் தாய் தகப்பனை அவள் வீட்டுக்கு முறைப்படி அவளைப் பெண்பார்க்கக் கூட்டிவருகிறேனென்று எதிர்பாராத விதமாகக் கார்த்திக் சொன்னபோதுதான் அவன் என்ன எண்ணத்தோடு தன்னோடு அதுவரை நட்பாயிருந்தான் என எண்ணித் தாரணி திகைத்துப்போனாள். இவன் நல்ல ஆத்மார்த்தமான நண்பனென்று நினைத்துக்கொண்டிருக்க இப்படியொரு குண்டை எடுத்து வீசுவானென அவள் துப்பரவாக எதிர்பார்க்கவேயில்லை. சும்மா கதை விடுறான் போலிருக்கிறதென எண்ணிச் சில நாள் பேசாதிருந்துவிட்டாள். ஆனால் திடீரென்று ஒரு நாள் அவனின் தகப்பனிடமிருந்து நாதனுக்குப் போன் வந்தது. வெள்ளியன்று நல்ல நாளாம், ஐயரிடம் கேட்டு உறுதிசெய்தாயிற்றாம். நேரத்தோடு பெண் பார்க்க வருகிறார்களென்று அறிவித்துவிட்டார். தாரணியின் பெற்றாரும் அவருடன் நீண்ட நேரம் உள்ளதையெல்லாம் பேசித்தீர்த்தார்கள். அவளின் நண்பனாக அதுவரை இருந்தவன் எதிர்காலக் கணவனாகக்கூடாதா என எண்ணினார்கள்போலும். அவளின் விருப்பம் என்னவென்று முழுமையாக அறியாமலே மாப்பிளை வீட்டாரை வரவேற்க அன்று காலையிலிருந்தே தாரணி வீட்டில் ஏகப்பட்ட தடபுடல். வீடெல்லாம் ஒரு நாளும் இல்லாமல் பளிசென்று வந்துவிட்டது. செந்தில்கூட அன்று அழகாக உடுத்திக்கொண்டு நின்றான். ஆனால் தாரணி மட்டும் பெற்றாரின் மனதை நோகடிக்கக் கூடாதென்ற எண்ணத்துடன் எதுவும் பேசாதிருந்தாள். இவனும் நான் பழகிய எல்லாரையும்போல் என்னோடு பேசும்போதெல்லாம் மனதுக்குள் என்னைத் துயிலுரிந்து பார்த்திருக்கிறான் போலிருக்கிறது. வரட்டும் கவனித்துக்கொள்கிறேன்!

தாரணியின் வீட்டுக்கு வந்த கார்த்திக்கின் தகப்பனார் முதல் காரியமாக வீட்டை நோட்டம்விட ஆரம்பித்துவிட்டார். களியாண விஷயங்களைப் பற்றிக் கதைப்பதை விடுத்து இந்த வீடு எத்தனை அடி பரப்பளவு, வரி எவ்வளவு கட்டுகிறீர்கள், தாரணியின் பெயரில் கார் இருக்கிறதா, எத்தனையாம் ஆண்டுக் கார்.. இப்படியாக அவரின் கேள்விகள் தன் மகனைத் தாரணி திருமணம் செய்யும்போது எவ்வளவு சொத்துக் கைமாறும் என்பதைக் கணக்கிடுவதிலேயே அக்கறையாயிருந்தார் என்பதையே காட்டியது. நாதன் கதையை மாற்ற எவ்வளவோ சிரமப்பட வேண்டியதாயிற்று. இறுதியில் வந்தவர்கள் புறப்பட்டபோது கார்த்திக்கின் தகப்பனார் வெளிப்படையாகவே கேட்டுவிட்டார். இப்ப இருக்கிற வீட்டோடு காசாக நாற்பதினாயிரமும் தாலி கட்ட முந்தியே சீதனமாகக் கொடுத்தால் இருபக்கத்துக்கும் மேற்கொண்டு பிரச்சனைகள் வராதென்று தனது ஜெண்டில்மேன் அக்றீமெண்டை ஒற்றை வரியில் அவிழ்த்துவிட்டார். அதற்கென்ன விரைவில் இதைப்பற்றிப் பேசுவோமென்று உறுதியளித்து அவர்களை அனுப்பிவைத்தார் நாதன். தகப்பனாரின் பேச்சைக் கார்த்திக் பெருமையோடு கேட்டுக்கொண்டிருந்ததுதான் தாரணிக்குப் பெரும் ஆச்சரியமாக இருந்தது. அடுத்த நாள் நாதன் மேலும் அவர்களைப்பற்றி வேறொரு இடத்தில் விசாரித்தபோது இயக்க ஊர்வலங்களில் முன்வரிசையில் நின்று கொடிபிடிப்பவர்தான் இப்படிச் சீதன பாதனங்களைக்கு முன்னுரிமை கொடுத்துக் களியாணப் பேச்சுப் பேசியவரென்ற செய்தி உறுதியாயிற்று. தாரணிக்கு வந்த ஆத்திரத்தில் கார்த்திக்கை ஒரு கேள்வி மட்டுமே கேட்டாள். அந்தக் கிழமையே அவன் ஊரைவிட்டு ஓடிவிட்டான்.

‘நான் பட்ட அனுபவங்களுக்கும் செந்தில் சொன்ன லவ்வுக்கும் இடையில் எவ்வளவு இடைவெளி? தோழில் வைத்த விரல்களுக்கும் ப்ரா முடிச்சுக்கும் இடையிலுள்ள இடைவெளிதான். உடலுக்குப் பதிலாக மனதைத் தொட்டு வளர்வதுதான் உண்மையான காதல். என்னை மணப்பவன் என்மீது எவ்வளவு அன்புள்ளவனாக இருக்கவேண்டுமென்று தீர்மானிக்க என்னால் முடியாது. ஆனால் எவ்வளவுக்கு நான் அவனின் உத்தமமான மனைவியாய் இருக்கவேண்டுமென்று தீர்மானிக்க என்னால் முடியும்!”

தாரிணி அன்று காலை தாய் கேட்டுக்கொண்டதுபோல் வழியில் மினைக்கெடாமல் வேளைக்கு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தாள். அவளின் தரிப்பிடத்தில் பஸ் நின்றபோது கைப்பைக்குள் செல் ஜிலுஜிலுத்தது. அந்தக் காவாலி செந்தில்தான் டெக்ஸ்ட் அனுப்புகிறானென்று அறிந்ததும் திறந்து பார்த்தாள். “உன்னைப் பார்க்க வரும் அந்த வேன்கூவர் ஆளை நானும் உன்னைப்போல் கூகிள் செய்து பார்த்தேன். அவன் உனக்கு முன்பே எம்.பீ.ஏ செய்து முடிச்சிட்டான். இந்தப் பேர்வழி உன்னைப்போல் புத்தகங்களைத்தான் முதல் களியாணம் செய்திருக்கிறானென்று வடிவான தெளிவாய் அறிந்துகொண்டேன். அப்போ இவனும் லவ் பண்ணத்தெரியாத கேஸாகத்தான் இவ்வளவு நாளும் காலம் தள்ளியிருப்பான். ஆனபடியால் உனக்கு மிகப் பொருத்தமான ஆள்தான் இவன். இந்த ஒரு கிழமையாய் நீ இந்த வெருளியுடன் போனிலும் ஸ்கைப்பிலும் எச்சில் வழிய அலட்டிக் கொண்டிருந்தாய் என்பது எனக்கு நன்றாய்த் தெரியும். முதலில் மறக்காமல் ஆளை நன்றாய் இண்டர்வியூ பண்ணு. உனக்காக ஒருவன் எங்கேயோ பிறந்திருக்கிறான் என்று அம்மா அடிக்கடி சொல்லுவாள். இந்த நட்ஸ்தான் வேன்கூவரில் போய் அப்படிப் பிறந்திருக்கிற அந்த ஆளோவென்று முதலில் நிச்சயப்படுத்திக் கொள்ளு. அதற்குப் பிறகுதான் தனியாகக் கதைக்கவேண்டுமென்று ஆளை மேலே அறைக்குக் கூட்டிக்கொண்டு போ. உன்னுடைய முதல் கிஸ் டேஸ்டா இருந்ததா என்று எனக்குச் சொல்ல மறக்காதே. ஸாரி, நான் பின்னேரம் வீட்டில் நிற்கமாட்டேன். உங்கள் இரண்டுபேரையும் மியூசியத்தில் கொண்டுபோய் வைக்க! ஐ லவ் யூ, ஸிஸ்.”

இதை வாசித்துமுடிக்கமுன் செந்திலிடமிருந்து இரண்டாவது டெக்ஸ்ட் வந்து குதித்தது. “மாப்பிளை எனக்குத் தரப்போகும் தோழன் மோதிரம் குறைந்தது ஒரு சவரினில் இருக்கவேண்டுமென்று மறக்காமல் சொல்லிவை. அவசரத்துக்குத் தேவைப்படலாம்.”

“றாஸ்கல், இப்பவே மோதிரத்தை வாங்கிறதுக்கு மட்டுமில்லை விக்கிறதுக்கும் பிளான் பண்ணிப்போட்டான்.” என்று தனக்குள் சொல்லிக்கொண்டே தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினாள். உள்ளம் களிப்பில் ஆயிரத்தெட்டு செல் அழைப்புகளால் அதிர்ந்தது.

கூப்பிடு தூரத்திலிருந்த வீட்டிலிருந்து தாயார் சுட்ட வடையின் வாசம் காற்றில் மிதந்து வந்துகொண்டிருந்தது. நிமிர்ந்து பார்த்தபோது அண்ணாவும் மைத்துனியும் வீட்டு வாசலில் நின்று அவளை நோக்கிக் கையசைத்துக்கொண்டிருந்தார்கள். “ஓ மை காட், வாட் ஏ சர்ப்ரைஸ்!”

-----

Jul 10, 2013

தெற்காலை போற ஒழுங்கை

கிட்டத்தட்ட ஆயிரம் பேரைக்கொண்ட ஊர்வலம் பலத்த ஆரவாரத்தோடு தெருவில் சென்றதுபோன்று சூசையின் டிராக்டர் மாலிசந்திப் புளியமரத்தடி மதவின் மேலாய் எகிறிக் குதித்து தெருவோரம் படிந்திருந்த செம்மண் புழுதியையெல்லாம் கிளப்பியபடி விரைந்துகொண்டிருந்தது. சூசை டிராக்டர் ஓட்டுவதைப் பார்த்தவர்கள் அவரும் அதன் ஒரு பாகமாக மாறியிருப்பதைக் கண்டுகொள்வார்கள். அவ்வளவுக்கு அந்தக் குட்டி ராட்சத யந்திரத்தை லாவகமாகக் கையாளுவதில் பல ஆண்டுக்கால அனுபவம் பெற்றிருந்தார் சூசை.

சூசையைச் சவரம் செய்த முகத்தோடு கண்டவர்கள் ஊரில் ஒரு சிலர்தான் இருப்பார்கள். அவருக்கு அதற்கெல்லாம் நேரம் கிடைப்பதில்லை என்பது ஒரு காரணமென்றால் அவர் சவரம் செய்துகொண்டபின்தான் வேலைக்கு வெளிக்கிடவேண்டுமென்ற அவசியமும் இருப்பதில்லை. விடியப்புறம் வேளையோடு எழுந்து வெளிக்கிட்டால்தான் வாடிக்கையாளர்கள் ஓடர் பண்ணிய சாமான்களை அந்தந்த இடங்களுக்குப் போய் டிராக்டரில் ஏற்றி உரிய இடத்தில் உரியவேளையில் ஒப்படைக்கமுடியும். மணல்காட்டு வெளியில் வெள்ளை மணல் அள்ளிக்கொண்டுவருவது இப்போதெல்லாம் முன்னையைப்போல் லேசாகச் செய்யக்கூடிய காரியமல்ல. போதாததற்குப் பத்து வருடங்களுக்கு முன்பு மணல்காட்டு வெளியெல்லாம் மலைபோல் குவிந்திருந்த வெள்ளை மணலைக் களவாக அள்ளிச் சென்றவர்களால் மணல் வெளியெல்லாம் காலப்போக்கில் தரைமட்டமாய்ப் போய்விட்டது. அன்றைய நாட்களில் வல்லிபுரக் கோயில் வாசலிலிருந்து பார்த்தால் அந்தக்கோணத்திலிருந்து இந்தக் கோணம்வரை பரந்திருக்கும் இந்து சமுத்திரக்கரையை மறைக்கும் அளவுக்கு மண் மலைகள் குவிந்திருந்தன. இன்று சமுத்திரமே கோயில் வாசலை அண்மித்துவிட்டதுபோல மணல்காடு என அறியப்பட்ட மண்வெளி மழைத் தண்ணீர் தேங்கிப் பாசி படர்ந்து சொறி மணல் காடாகிவிட்டது.

சூசை அதிகாலையில் அந்தோனியாரைத் தொழுதுதான் டிராக்டரை வெளியில் எடுப்பார். ஆனால் மணல்காட்டுப்பக்கம் போய் வெட்டவெளியில் வெள்ளை மணலைத் துருவித் துருவி அள்ளவேண்டுமானால் வழியில் எதிர்ப்படும் வல்லிபுர ஆழ்வாருக்கும் ஒரு கும்பிடு போடுவார். வெள்ளை மணலுக்கு வடமராட்சி கிழக்குக் கரையென்றால் வீட்டு அத்திவாரத்துக்கும் வேறு பல கட்டு வேலைகளுக்கும் போடவேண்டிய கல்லுக்கும் சல்லிக்கும் எதிர்த்திசையில் தொண்டமானாறு தாண்டிப் போகவேண்டும். அங்கே போகும்போதும் வழியில் சந்நிதி முருகனுக்கும் ஒரு கும்பிடு போட மறப்பதில்லை. சீமெந்து, இரும்புக் கம்பிகள் தூக்க இந்த இரண்டு திக்குக்கும் நடுவில் நெல்லியடிக் கிட்டங்கிகளுக்குப் போகவேண்டும். எங்கே போனாலென்ன வாடிக்கையாளர் ஓடர் பண்ணிய சாமானை நேரத்தோடு கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவார் சூசை. போகிற இடத்தில் அன்னம் தண்ணி வாயில் வைக்கமாட்டார். விடாய் எழுந்தால் எங்கே பொதுக் கிணறு இருக்கிறதோ அங்கே தாகசாந்தி செய்வதுதான் வழக்கமாகிப்போய்விட்டது. சாப்பாடு சங்கதியெல்லாம் மாலையானதும் வீட்டுக்கு வந்தபிறகுதான்.

டிராக்டரின் அசுரக் குலுக்கல்களுக்கு இசைவாக இருக்கையில் தன்னை அட்ஜஸ்ட் செய்துகொள்வதில் எல்லா டிராக்டர் ஓட்டிகளையும் போலவே சூசையும் வலு கெட்டிக்காரர்.  என்றாலும் அன்றைய அந்தப் பயணத்தில் டிராக்டர் எழுப்பிய குலுக்கலையோ இரைச்சலையோ பொருட்படுத்தும் அளவுக்கு அவரின் மனோநிலை இருக்கவில்லை.  அவர் மனம் முழுதும் வீட்டையும் மக்களையுமே சுற்றிக்கொண்டிருந்தது.

புலோலி கிழக்கு எல்லையில் வல்லிபுரக் கோயிலுக்குப் போகும் கிராமக் கோட்டு றோட்டின் ஓரமாய் வடலிகளும் நெடிய பனை மரங்களும் சூழ்ந்த காணிகளுக்குள் ஓலைக் கொட்டில்களோடும் மண் குடிசைகளோடும் ஒருகாலத்தில் பதுங்கிக்கொண்டிருந்த சந்தாதோட்டம் இன்று விசாலமான வளவுகளுக்குள் கல் வீடுகளும் தோட்டங்களுமாய் காலத்தோடு போட்டிபோடுவதில் வெற்றியடைந்து வெளியுலகம் அறியும்படியாகத் தம்மை ஆக்கிக்கொண்டன. கல்வியும் தொழிலும் ஆமை வேகத்தில்தான் அங்கே நுழைந்ததென்றாலும் அவற்றைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொள்வதில் சந்தாதோட்டத்து மக்கள் அசுர வேகத்தைக் காட்டினர் என்பது அயல் கிராமத்து வெள்ளை வேட்டிக் காரர்களுக்கு எரிச்சலைத்தான் தந்தது. ஆனால் அதையெல்லாம் கணக்கில் எடுப்பதற்கு சூசை போன்றவர்களின் வாழ்க்கையில் நேரம் கிடைத்தால்தானே!

கிராமக் கோட்டு றோட்டில் அந்தோனியார் கோயிலிலிருந்து ஒரு அரைக்கட்டை தூரம் தள்ளி ஆலமரத்தடி ஓரமாய்த் தெற்கே போகும் ஒழுங்கையில் முதல் முடக்கைத் தாண்டினால் சூசையின் இரட்டை கேட் போட்ட வீட்டுக்கு வந்துவிடலாம். டிராக்டர் தெருமூடி மடத்தை அண்மித்ததும் வீடு இன்னும் ‘ஒண்டரைக் கட்டை தூரம்தான் எனச் சூசை அனுமானித்துக்கொண்டார். மனம் தொடர்ந்து கோடைக் காற்றில் அகப்பட்ட மணல்காட்டு சவுக்கு மரம்போல் அலைக்கழிந்துகொண்டிருந்தது.

“தம்பி இக்கணம் வீட்டுக்கு வந்திருப்பான். கனடாவிலையிருந்து வாறதெண்டால் சும்மாவே!  பிளேனிலை மட்டும் எல்லாமா இருவத்தைஞ்சு மணித்தியாலம் பயணமாம். கொழும்புக்கு வாறது ஒரு பயணமெண்டால் பிறகு அங்கையிருந்து இஞ்சை ஊருக்கு வாறது இன்னுமொரு பயணம். அந்தப் பெடிச்சியும் கூட வாறாள் எண்டெல்லோ தம்பி எழுதினவன். அங்கை கனடாவிலையே தான் விரும்பின பிள்ளையைச் சடங்கு முடிச்ச கையோடை எங்களைப் பாக்க வாறானெல்லோ!  என்ரை மகனைக் கண்டு எவ்வளவு காலமாப் போச்சு. ஒண்டுரண்டு வருசமே பதினைஞ்சு வருசம். எண்டாலும் தம்பி பயணம் போனது நேற்றுப்போலை கிடக்கு.  அந்தோனியாரே, இனி அவன்ரை கையிலை பொறுப்பையெல்லாம் குடுக்கவேண்டியதுதான்.  இருக்கிற ரண்டு குமருகளையும் கட்டிக் குடுத்திட்டால் இனி மிச்சக் காலத்துக்கு ஓய்ஞ்சுபோய் இருக்கலாம்.”

கிராமக் கோட்டு சந்தி வந்ததே தெரியவில்லை சூசைக்கு.  சந்தியில் டிராக்டரை வளைத்துத் திரும்பியபோது யாரோ கடை விறாந்தையிலிருந்து கையசைப்பதுபோல் அருட்டியது.  வீதி ஓரமாக டிராக்டரை மெல்லமாய் நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தார் சூசை. அது அவரின் மைத்துனர் அருட்பிரகாசம். வேட்டி அவிழ்ந்ததையும் பொருட்படுத்தாமல் ஓடிவந்தவர் “அத்தான், தயாளன் வந்திட்டான் தெரியுமோ?” என்று தெருவுக்கு எதிர்பக்கத்துக் கடையிலுள்ளவர்களும் கேட்கும்படியாக உரக்கச் சத்தமெழுப்பினார்.  “தம்பி வந்திருப்பான் எண்டுதான் இருந்த வேலையெல்லாத்தையும் ஆவறி போவறியெண்டு செய்து குடுத்திட்டு ஓடிவாறன்” என்று பெருமிதமாகச் சொன்னார் சூசை. “நானும் தம்பியை இன்னும் காணயில்லை அத்தான். நீங்கள் முன்னாலை போங்கோ, கையிலை இருக்கிற அலுவலை முடிச்சுக்கொண்டு பின்னாலை வாறன்.” அருட்பிரகாசம் சூசையின் மறுமொழியைக் காத்திராமல் மறுபடியும் கடைப்பக்கம் ஓட சூசை ட்ராக்டருக்கு மீண்டும் உசுப்பேத்தினார்.

அகலத் திறந்துகிடந்த வெளிவாசல் கேட்டினூடாக டிராக்டரை வாகாகத் திருப்பி முற்றத்தில் வேலிக்கரையோரமாக நின்ற தகரக் கொட்டிலுக்கும் விட்டதும் அது நிம்மதிப் பெருமூச்சை அவிழ்த்துத் தனது கடைசி உலுக்கலுடன் ஓய்ந்து நின்றது. கீழே இறங்கிய சூசை மனத்தில் பாசம் மேலிடத் தன் டிராக்டர் மீது கண்களை ஓடவிட்டார். காலப்போக்கில் நிறம் மங்கிய எஞ்சின் மூடிமேல் ‘லூர்து மாதா’ என்ற பெயர் இன்னமும் துலக்கமாய்த் தெரிந்தது. மணல் மேடுகளிலும் கல்லுக் கிடங்குகளிலும் ஒடுங்கல் ஒழுங்கைகளிலும் ஓடிக்களைத்ததினால் கொஞ்சம் ஈடாடிப்போயிருந்தாலும் உறுதி குலையாமல் நின்றது எஞ்சின். மட்கார்டுகளின்மேல் சுவர்களும் வேலிகளும் உராய்ந்ததால் சிராய்ப்புகளும் கீறல்களும் விழுந்தும் பாறாங்கற்கள் பட்டு மழுங்கியும் துருப்பிடித்துப்போயிருந்தன. மூப்பிலும் முழுவதும் உருக் குலையாமல் நிமிர்ந்து நின்ற டிராக்டரைக் கைகளால் தடவி அதன்மீது பரவியிருந்த வெப்பத்தையும் புழுதியையும் ஒருங்காக உணர்ந்தார் சூசை. “என்னட்டை நீ வந்து முப்பது வருசமாகுது.  உன்னாலைதான் என்ரை குடும்பம் இண்டைக்கு இப்பிடி இருக்குது. மாதாவே, இதை வாங்க அண்டைக்கு நான் பட்ட பாடு உனக்குத்தான் தெரியும். உவங்கடை சாதி உருப்படாது எண்டு சொன்னவங்களுக்கு முன்னாலை நான் ஓடிக்காட்டினனானெல்லோ. இப்ப அவங்கள் என்னட்டை ஓடிவாறதுக்கு, மாதாவே, நீதான் முக்கியமான காரணம்.”

ஆவணி மாதத்துப் பிற்பகல் வெயில் சூசையின் உடம்பெல்லாம் உறைத்தது. தோளில் தொங்கிய துவாயால் முகத்து வியர்வையை அழுத்தித் துடைத்த அதே கையால் ட்ராக்டர்மேலிருந்த தூசையும் தட்டிவிடார்.  “இந்தக் கிழமை உன்னைப் பாக்கிறதுக்கு ஆக்கள் வருகினம்.  தம்பியோடை ஒரு கதை கதைச்சுப்போட்டு உன்னைப் பற்றி யோசிப்பம் கண்டியோ! சொந்தப் பெண்சாதியோடு உருக்கமாய்க் கதைப்பதுபோல் கைகளை அசைத்து டிராக்டருடன் உணர்ச்சி பொங்க அளவளாவினார் சூசை.

இங்கும் அங்குமாக அழுக்குப் படர்ந்த சாரத்தை அவிழ்த்து இடுப்பில் மீண்டும் கட்டிக்கொண்டார் சூசை. நரைத்துப்பொன மயிர்க்கற்றைகள் படர்ந்த நெஞ்சைக் கையில்லாத பெனியன் மறைத்துக்கொண்டிருந்தது. துடைத்ததால் முகத்திலிருந்த எண்ணெய்ப்பசை ஓரளவுக்குப் போயிருந்த போதிலும் சூரிய ஒளியில் அவர் முகம் இப்போதும் மினுங்கியது. சூசை திறந்து கிடந்த வாசலுக்கூடாக வீட்டினுள் நுழைந்ததும் “அப்பா” என்று அழைத்தபடி ஓடிவந்து அவரைக் கட்டி அணைத்தான் மகன் தயாளன்.  சூசை இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ‘சின்ன வயதிலும் எட்ட நின்று மரியாதையோடு கதைப்பவன் இப்போது ஓடிவந்து அணைக்கிறான்; ‘அப்பு’ என அழைத்தவன் ‘அப்பா’ என அழைக்கிறான். காலமும் வாழுற நாடும்தான் இவனை எவ்வளவுக்கு மாறிவிட்டது!”

“என்ன மோனை, சுவமாய் வந்து சேந்தனியோ?”  மகன் மீதுள்ள கரிசனமும் பாசமும் கேள்வியாய் எழுந்தது.

“ஓம் அப்பா, வரக்கை ஒரு பிரச்சனையும் இல்லை.  இந்த ஊர் வெக்கைதான் எங்களுக்கு ஒத்துவரயில்லை” என்று சொன்ன தயாளன் கையோடு தங்கைமாரோடு கூட நின்ற தன் மனைவியைச் சுட்டிக் காட்டி, “இவள்தான் லாவண்யா” என்று கூறி அறிமுகப்படுத்தினான்.  “என்ன பேர் சொன்னனி, மோனை?” என்று வாயில் வராத பெயரைப் பிழையாகச் சொல்லிவிடுவோமோ என்று அச்சப்பட்டவர்போல் வினாவினார்.

அதற்குள், சின்னவள் அனிதா, “அப்பா, மச்சாளன்ரை பெயர் லாவண்யா. அப்பிடியெண்டால் வடிவான பெண் எண்டு கருத்து.”

சூசை அப்போதுதான் புது மருகளைத் திரும்பிப் பார்த்தார். அனிதாவின் விரல்களோடு தன் விரல்களையும் கொழுவிக்கொண்டு மலங்க மலங்க விழித்துக்கொண்டு நின்ற கன்னம் சிவந்த லாவண்யா அவர் மனதில் ஒரேயடியாக ஒட்டிக்கொண்டாள். ‘ஓமோம் வடிவாத்தான் இருக்கிறாள்.’ என்று தனக்குள்ளேயே சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டார். அவர் தன்னைக் கவனிக்கிறாரெனக் கண்டதும் மார்பை மறைத்த பஞ்சாபித் துணியை மேலே இழுத்துவிட்டுத் தலையைக் குனிந்துகொண்டாள் லாவண்யா.

“அப்ப பிள்ளையளெல்லாம் கொஞ்சம் பொறுங்கோ, கால் முகம் கழுவிக்கொண்டு வாறன். அங்கை அம்மா சாப்பிடாமல் என்னைக் காத்துக்கொண்டிருக்கிறா.” என்று எல்லாருக்கும் பொதுவாகச் சொல்லிக்கொண்டு வீட்டின் பின்புறம் ஊடாகக் கோடிப்புறத்தை நோக்கி நடந்தார் சூசை.

கிணற்றடியில் கால் முகம் கழுவிக்கொண்டு படுக்கை அறைக்குள் நேரேபோய் அடிச்சுத் தோய்த்த சாரமும் அரைக்கை பெனியனுமாக வெளிக்கிட்டபோது பக்கத்து அறையில் பெண் பிள்ளைகள் கதைப்பது தெளிவாகக் கேட்டது. லாவண்யா பேசுவது அவருக்கு மிகவும் வித்தியாசமாகப் பட்டது. ஆகவே ஆவலோடு கூர்ந்து கவனித்தார்.

“நீங்கள் இரண்டுபேரும் எப்படி உங்கடை தலைமயிரை இவ்வளவு பளபளப்பாக வைச்சிருக்கிறியள்? மிச்சம் நீளமாவும் அடர்த்தியாவும் இருக்கு. என்ன பூசிறனிங்கள்?”

“அது மைச்சாள், பெரிய ரகசியமில்லை. இஞ்சை எல்லாரும் கிழமைக்கொருக்கால் சியாக்காய் பூசித்தான் முழுகிறவையள். முழுகித் தலை காஞ்சாப்போலை நல்லெண்ணை பூசுவம். அது தன்ரை பாட்டிலை வளருது. பளபளப்பாவும் இருக்குது.” இது அனிதா. அவளுக்கு எப்போ வாய் திறக்க வாய்ப்பு கிடைக்கிறதோ அதை விடவே மாட்டாள். காம்பஸ்ஸில் இரண்டாம் வருடம் படிக்கிறாள். அவளுடைய வாயின் நீளம் வீட்டிலும் வெளியிலும் வலு பிரசித்தம்.

“ஏன் மைச்சாள், நீங்கள் என்ன பூசுறனிங்கள்? நல்ல வாசமாக் கிடக்கு.” லாவண்யாவின் தலைமயிரைக் கிட்டவந்து தொட்டுப்பார்த்த அனிதா மைச்சாளாருக்குத் தலைமயிர் உதிர்ந்துபோனதைக் கண்டுகொண்டதாகக் காட்டிக்கொள்ளாமல் உரிமையுடன் வினாவினாள்.

“எங்களூர்த் தண்ணிக்குத் தலை மயிர் நல்லாக் கொட்டுப்படும். அதை ஒருவழியாலும் தடுக்கேலாது. என்னைப்போலை கேர்ள்ஸ் எல்லாருக்கும் இதுதான் பெரிய கவலை.” லாவண்யாவின் ஒவ்வொரு சொல்லிலும் ஆதங்கம் தொனித்தது. “வெறுங்கழுத்தோடை நிக்கிறியள் மச்சாள், அண்ணா நகையொண்டும் உங்களுக்கு வாங்கித் தரயில்லையோ?” என்று கேட்டாள் மூத்தவள் அற்புதம். வாய்முட்டச் சிரிப்பையும் முகம் முழுவதும் வெட்கத்தையும் அடக்கமுயன்ற லாவண்யா தன் கைவிரலில் இருந்த மோதிரத்தைக் காட்டினாள். “இதைப் பாருங்கோ, உங்கள் அண்ணா போட்டவர், எப்பிடி இருக்குது?”

“ஓ, இதென்ன வெள்ளி மோதிரம். இதையே அண்ணா தந்தவர்?”

“இது வெள்ளி இல்லை, அற்புதம். இது வைட் கோல்ட் அதாவது வெள்ளைத் தங்கம். சும்மா தங்கத்திலும் பார்க்க மிச்சம் விலை கூடினது. இதுதான் அவர் தந்த எங்கேஜ்மெண்ட் மோதிரம்.” லாவண்யா கொண்ட வெட்கத்தைக் கண்டதும் சகோதரிகள் இருவரும் அவளை இருபுறமும் அணைத்துக்கொண்டார்கள்.

“இப்ப விளங்குது, மைச்சாள், இஞ்சையும் எங்கேஜ்மெண்ட் மோதிரம் எண்டு சொல்லித்தான் போடுறவையவள். ஆனால் இண்டைக்குத்தான் நான் நேரிலை கண்டனான்.” என்றாள் அற்புதம். “நானும்தான்.” என்றாள் அனிதா. அதேவேளை அற்புதம் தன்னை மறந்தவளாய் மோதிரம் எதுவும் அணியாத தன் வெறும் விரல்களை ஏக்கத்துடன் பார்த்தாள். இதை லாவண்யா கவனிக்கத் தவறவில்லை. லாவண்யாவின் மோதிரத்தைத் துருவித் துருவிப் பார்த்த அற்புதம் “நடுவிலை இருக்கிறது வைரம்போலை கிடக்கு!” இதைக் கூறியபோது அவளின் கண்கள் அகல விரிந்ததைக் கண்ட லாவண்யா, “மிச்சம் விலை கூடின வைரம். ஒரு நாள் உங்கள் அண்ணவும் நானும் தனியச் சந்திச்சபோது எனக்கு முன்னால் இந்த மோதிரத்தை நீட்டிக்கொண்டு “என்னைக் களியாணம் செய்வீங்களோ?” எண்டு என்னைக் கேட்டார். அவர் இப்படித் திடீரன்று கேட்டதும் எனக்குச் சரியான வெக்கமாய்ப் போட்டுது. ஓம் எண்டு சொல்லவும் பயம், இல்லையெண்டு சொல்லவும் பயம். பிறகு கொஞ்ச நேரத்தாலை ‘எனக்கு விருப்பம்” எண்டு சொன்னன். அவருக்கு உடனை அழுகை வந்திட்டுது. அவர் என்னிலை எவ்வளவு அன்பாய் இருக்கிறார். அதிலும் கூட நான் அவரிலை அன்பாய் இருக்கவேணும், அவருக்காக நான் எதையும் செய்யவேணுமெண்டு உடனை தீர்மானம் எடுத்திட்டன்.” இப்போது எல்லார் கண்களும் கலங்கியிருந்தன. “நீங்கள் ரண்டுபேரும் சரியான லக்கி மைச்சாள்.” என்று மனம் நிறையப் பாராட்டினாள், அற்புதம். அறைமுழுவதையும் இளம் பெண்களின் சிரிப்பு அலைகள் ஆக்கிரமித்தன. பெண்களின் கதைகளைக் கேட்டுத் தன்னை மறந்தபடி நின்ற சூசை மனைவி அங்கே காத்திருப்பாளேயென்ற நினைவு வந்தவராய் குசினியை நோக்கி நடந்தார்.

மனைவி ஆறி அலந்துபோன மதிய உணவைத் தயாராக வைத்துக்கொண்டு அவருக்காகக் காத்திருந்தாள். சாப்பாட்டு மணத்தையும் தாம்பத்யத்தையும் ஒருங்காக உணர வேண்டுமென்றால் குசினிக்குள் நிலத்தில் இருந்து மனைவி பரிமாறச் சாப்பிடுவதில்தான் அதைப் பெறமுடியும் என்று சூசை அடிக்கடி எண்ணிக்கொள்வார். மகன் வெளி நாட்டிலிருந்து வந்த பிறகும் வழக்கத்தை மாற்றாமல் பலகையை இழுத்துப் போட்டுக்கொண்டு அவள் முன்னே உட்கார்ந்துவிட்டார்.

மனைவி குனிந்த தலை நிமிராமல் பரிமாறினாளென்றால் தலையில் யோசனைப் பாரம் கூடியிருக்கும் என்பதை அவர் நன்கு அறிந்தவராதலால். என்ன விசேஷம் சொல்லும் என்பதுபோல் மனைவியை நோக்கினார் சூசை. “இவள் மருமகள் ஆர் தெரியுமோ?” என்று இதுவரை வெளிவராத இரகசியத்தைச் சொல்வதுபோல் ஓசைப்படாமல் கேட்டாள். “நான் இப்பதானே வந்திருக்கிறன், தெரிஞ்சால் சொல்லும்.” என்றார் சூசை.

“தம்பி, வெள்ளாளப் பெடிச்சியையெல்லோ சடங்கு முடிச்சுக்கொண்டு வந்திருக்கிறான்.”

திடுக்கிட்டு நிமிர்ந்த சூசை, “அப்பிடியே சங்கதி? நான் பெடிச்சியைப் பாத்தவுடனை யோசிச்சன், வித்தியாசமாக் கிடக்குதெண்டு.”

“அதுவும் கனடாவிலை நல்ல வசதியாயிருக்கிற குடும்பமாம். ஆனால்...” மனைவி கதையை இழுத்த விதத்தில் ஏதோ எங்கேயோ சறுக்கிவிட்டதென்பதைச் சூசை உடனே அனுமானித்துக் கொண்டார்.

“தம்பி இவளைக் கூட்டிக்கொண்டு போனதோடை இவவன்ரை ஆக்கள் இவளைத் தங்கடை குடும்பத்திலையிருந்து தள்ளி வைச்சிட்டுதுகளாம். தம்பி சொன்னான்.” மனைவி எந்த விநாடியும் அழுதுவிடுவாள் போலிருந்தது. சூசை கையிலிருந்த சோற்றைக் கோப்பையில் போட்டுவிட்டு மனைவியை அனுதாபத்துடன் நோக்கினார்.

“இங்கிலீஸ்காரன்ரை நாட்டிலை வாழப்போன சனங்களெல்லோ, கொஞ்சமெண்டாலும் மாற வேண்டாமே. இஞ்சை இருந்தமாதிரித்தான் அங்கையும் இருக்குதுகள்போலை கிடக்கு.”

“அப்பிடித்தான் தம்பியும் சொன்னான். அங்கை வீடுவாசலும் வசதிகளும் சேர்ந்ததிலை அவையளின் கடுமுடுக்கு இஞ்சையிலும் பாக்கக் கூடவாம். ஆனால் மருமகள் அவையளைப்போலை இல்லாதமாதிரியும் கிடக்கு.”

“அவள் இந்தக்காலத்துப் பெடிச்சியெல்லே. அதோடை நல்லாப் படிச்சிருக்கவும் வேணும். இல்லாட்டில் தம்பியை விரும்பியிருப்பாளோ?”

“நாங்கள் எந்தப் பகுதியெண்டு தம்பி சொன்னபிறகும் இவள் அவனைக் கைவிடயில்லையாம். அதுதான் தம்பி இவளை விட்டுப்பிரிய மனமில்லாமல் தாய் தேப்பன்ரை விருப்பத்துக்கு மாறா கூட்டிக்கொண்டு போனவனாம்.”

சாப்பாட்டை முடித்துக் கையைக் கழுவிக்கொண்டு ஹோலுக்குள் வந்த சூசை சுவர் ஓரமாக இருந்த தன் வழக்கமான ஈஸிசேரில் அமர்ந்துகொண்டார். அவருக்காகக் காத்திருந்ததுபோல் தயாளன் சின்னதொரு பையைக் கொண்டுவந்து நீட்டினான். “அப்பா, இந்த வாட்சை உங்களுகெண்டு கனடாவிலையிருந்து வாங்கிக்கொண்டு வந்தனான்” என்று சொல்லிப் பையிலிருந்து அதை எடுத்து சூசையின் கையில் கட்டினான். “எனக்கேன் மோனை வாட்ச்? இவ்வளவு காலமும் வாட்ச் பாத்தே நான் வேலை செய்யிறன்? அங்கை வெய்யில் எறிக்குது பார். அதை வைச்சு நாங்களெல்லாம் நேரம் சொல்லுவம், தெரியுமோ?” என்று சொல்லி அட்டகாசமாகச் சிரித்தார். கூடவே மகன் கட்டிவிட்ட வாட்சையும் மறுகையால் தடவிப்பார்த்து மனதுக்குள் பெருமையடித்துக்கொண்டார். “எனக்கெண்டு என்ரை மகன் அங்கையிருந்து வாங்கிக்கொண்டு வந்திருக்கிறான். சீமைச் சாமானெண்டால் சும்மாவே, நல்ல லட்சணமாக் கிடக்கு.”

தயாளன் அத்துடன் நிற்கவில்லை, இன்னொரு பையைத் திறந்து, “அப்பா, இது நான் கொழும்பிலை வாங்கினது. கரை போட்ட வேட்டியும் சேர்ட்டும். நீங்கள் வேட்டி கட்டிக்கொண்டு வெளியே போனால் உயர் சாதிக்காரர் உங்களை ஒருமாதிரிப் பாக்கிறவையவள் எண்டு நான் சின்ன வயசாயிருக்கிறபோது சொல்லுவியள். அப்பா, இப்ப உலகம் மாறிப்போச்சு, இனி ஒருவருக்கும் பயப்படாமல் கட்டுங்கோ. இந்தச் சேர்ட்டும் உங்களுக்குப் பொருத்தமாயிருக்கும்.” என்று தயாளன் சொன்னபோது சூசைக்குக் கண்ணில் நீர் முட்டியது. தயாளன் சின்ன வயசாயிருக்கும்போது தனக்கு நடந்ததைப் போகிறபோக்கில் சொன்னதை இப்பவும் நினைவில் வைத்துக்கொண்டு எங்களைச் சந்தோசப்படுத்தப் பார்க்கிறான். உலகம் முழுக்க என்னமாய் மாறிவிட்டது. ஆனாலும் நாங்கள் இப்பவும் எளிய சாதிதானே!” அவர் தன் மனக்குமுறலை வெளியே காட்டிக்கொள்ளாமல் சமாளித்துக்கொண்டார். ஆனாலும் அவரினுள்ளே பொருமிக்கொண்டிருந்த நீண்டகால வேதனை அவரின் கண் ஓரங்களில் நீராய்க் கசிந்தது. அதற்குள் தயாளனின் தாய் இடையில் புகுந்து “ஏன் மோனை இவ்வளவெல்லாம் சிலவு செய்தனி? இஞ்சை இந்த வீடு வாசலெல்லாம் நீ வெளி நாடு போகக்கை வெறும் கொட்டிலும் மண் சிவருமாத்தானே கிடந்தது. வீடு இஞ்சாலை தனியனெண்டால் குசினி அங்காலை ஒருபக்கமாய்க் கிடந்தது. நல்ல மழை பெஞ்சுதோ குசினிக்கை போகமுந்தி துப்பரவா நனைஞ்சுபோடுவம். இப்ப எல்லாத்தையும் கோப்பிசம் போட்ட கூரையோடை கட்டச்சொல்லி நீதானே காசு அனுபினனி!”

“ஓமம்மா, நானும் கவனிச்சனான். நான் அனுப்பினது பெரிய காசில்லை. அப்பாதான் ஓடியோடிச் சம்பாரிச்சு இந்த வீட்டைக் கட்டியிருக்கவேணும்.”

‘உண்மையும் அதுதான். தம்பி அங்கினைக்கை எப்பன் எப்பன் அனுப்பிக்கொண்டிருந்தவன். சீமெந்து விக்கிற விலையிலை, மற்றச் சாமான்களுக்கும் தட்டுப்பாடு எக்கச்சக்கமாக இருகக்கை என்ரை உழைப்பில்லாமல் இதையெல்லாம் செய்திருக்கேலாது.’ எனச் சூசை தனக்குள்ளேயே நினைத்துக்கொண்டபோதிலும் வெளியே மனைவி சொன்னதை ஆமோதிப்பதுபோல், “அம்மா சொல்லுறதும் சரிதான், மோனை” என்று மனைவியோடு ஒத்துப்பாடினார்.

தம்பி உற்சாகமாய்க் கதைத்துக்கொண்டிருந்தபோதே மனதுக்குள் பிசைந்துகொண்டிருக்கும் விஷயத்தைப் பேசிவிடவேண்டுமென்ற தீர்மானத்தோடு வந்தவர் பெம்பிளைப் பிள்ளைகள் எப்போ உள்ளே போவார்களென்று காத்திருந்தார். அவர் மேற்கொண்டு பேசத் தயங்குவதை அவதானித்த பெண்கள் மெல்லமாக உள்ளே நழுவிச் சென்றார்கள். அற்புதம் மட்டும் தன்னைப்பற்றி அண்ணாவுடன் கதைக்கப்போகிறார்கள் என்ற அருட்டுணர்வால் உள்ளே போய்விடாமல் சுவருக்கு அந்தப்பக்கமாய்ப்போய் நின்றுகொண்டு காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டாள்.

சூசை மகனின் முகத்தைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு நிதானமாகப் பேச ஆரம்பித்தார். “தம்பி, இந்தப் பதினைஞ்சு வரிசத்திலை நாங்கள் எவ்வளவு கயிறுமாலைப்பட்டு இந்தக் குமருகளைக் கண்ணுக்கை வைச்சு வளர்த்துக்கொண்டு வந்தனாங்கள் எண்டு உனக்குத் தெரியுந்தானே, மோனை! மூத்தவளுக்கு வயசாப்போட்டுது. அவளன்ரை சடங்கை கெதியா முடிக்கவேணும். இளையவள் படிப்பிலை கெட்டிக்காரி. அவள் தன்ரை பாட்டைப் பாத்துக்கொள்வாள் எண்ட நம்பிக்கை இருக்கு. நீயும் கிட்டடியிலைதான் சடங்கு முடிச்சனி. உங்கடை நாட்டு முறையள் தலையள் ஒண்டும் எங்களுக்குத் தெரியாது. எண்டாலும் உனக்கு இருக்கிற பொறுப்பு பொறுப்புத்தானே!”

“ஓமப்பா, அம்மா தங்கச்சிமாரைப் புழுகிப் புழுகி ஒவ்வொரு தபாலிலையும் எழுதிக்கொண்டிருப்பா. எனக்கெல்லாம் பாடமாப் போச்சு” என்று சொல்லிச் சிரித்தான் தயாளன்.

“மூத்தவளுக்கு ரண்டு மூண்டு இடத்திலை பாத்திருக்கிறம். அதிலை ரண்டு அசல் பொருத்தம். அங்கை மாப்பிளை வீட்டுக்காரருக்கும் வலு விருப்பம். நீ வந்த கையோடை அந்த ரண்டு இடத்திலையும் போய்க் கதைக்கலாமெண்டு நினைச்சிருந்தனாங்கள்.” என்று சூசை மகனின் மனதின் ஆழத்தை அறிய முயன்றவர்போல் பக்குவமாக ஒவ்வொரு சொல்லையும் அளந்து பேசினார். அதேவேளை அங்கே சுவருக்குப் பின்னால் தனது பின்னலை முன்னுக்கு விட்டுப் பிரிக்கிறதும் மறுபடி பின்னுவதுமாக அண்ணன் என்ன சொல்லப்போகிறானோவென்று மனம் அலைமோத நின்றாள் அற்புதம். எந்த நேரமும் அவள் கண்களிலிருந்து நீர் கொட்டலாம். அது மனம் மகிழ்ச்சியில் குளித்ததனால் முளைத்த கண்ணீராகவும் இருக்கலாம் அல்லது மன வெப்பியாரத்தால் தெறித்த கண்ணீராகவும் இருக்கலாம். எல்லாம் தயாளன் அண்ணா சொல்லப்போவதிலேயே தங்கியிருந்தது.

“அம்மா எத்தினை கடிதம் எழுதினவ. ஆனால் மூத்தவளன்ரை களியாண விசயமொண்டும் ஒருநாளும் எழுதயில்லை. நானும் முன்னமே இதை அறிஞ்சிருந்தால் லாவண்யாவோடையும் கதைச்சிருப்பன்.” என்று நயமாகச் சொல்லிவிட்டுச் சிறிது தயக்கத்துடன் தகப்பனையும் தாயையும் மாறிமாறிப் பார்த்தான் தயாளன். ஒருசில கணங்கள் பயங்கர அமைதியில் கழிந்தன. “நீ வந்தபிறகுதான் சடங்குக் காரியங்களைக் கதைக்கலாமெண்டு அப்பா சொல்லிக்கொண்டிருந்தவர். நீ உன்ரை வசதியைப் பற்றிச் சொல்லு மோனை. எங்களுக்கு எல்லாப் பிள்ளையளும் ஒண்டுதான். உனக்குக் கஷ்டத்தைத் தந்திட்டு நாங்கள் இஞ்சை நிம்மதியாய் இருக்கேலுமோ? நீ தன்னும் சகோதரங்களைக் கவனியாமல் விட்டனியெண்டு ஊரிலையும் உலகத்திலையும் கெட்டபேர் எடுக்க விரும்புவியோ?” தாய்க்காரி மகனுக்காகவும் கதைக்கவேண்டும் புருஷனுக்காகவும் கதைக்கவேண்டுமென்ற இக்கட்டான கட்டத்தில் நிலைவரத்தை ஒருவாறு சமாளிக்க முயன்றாள்.

“நான் இழுத்துப் பறிச்சுக் கதைக்க விரும்பயில்லை, அம்மா. நான் உங்களன்ரை பிள்ளை. உங்கடை மனம் நோக நடக்கமாட்டன். எண்டாலும் நீங்கள் எல்லாரும் என்ரை வசதியைப் பற்றியும் முதலே அறிஞ்சிருந்தால் நல்லது.”

“ஏன் மோனை, கடன்தனியள் குடுக்குமதியளெண்டு ஏதேனும் கரைச்சல் இருக்குதோ?” தன் மனதில் துடித்த கவலை அவளின் ஒவ்வொரு சொல்லிலும் தொற்றிக்கொண்டதென்பது எல்லாருக்கும் விளங்கியது. “எங்களன்ரை நாட்டிலை கடன் தொல்லை ஆரை விட்டது? அரசாங்கமே கடனில்தான் ஓடிக்கொண்டிருக்குது. இவள் லாவண்யாவை நாலு பேருக்குச் சொல்லிக் களியாணம் கட்டவே என்னாலை ஏலாமல் போட்டுது. சினேகித ஆக்களை மட்டும் கூப்பிட்டு றியிஸ்ரேஷன் செய்துபோட்டு ஒண்டாயிருக்கத் துவங்கியிட்டம். அதோடை சிலவுகள் கைக்கு மீறிப் போகத் துவங்கியிட்டுது. நல்லவேளை, லாவண்யா இப்பத்தான் வேலையிலை நிரந்தரமாக வந்திருக்கிறாள். எங்களுக்கு நடந்ததையெல்லாம் உங்களுக்குச் சொல்லாமல் விட்டிட்டன். அது என்ரை பிழைதான்.” என்று கூறிவிட்டுச் சிறிது நேரம் மௌனமாயிருந்த தயாளன் பின்னர் தொடர்ந்தான். “நாங்கள் சேர்ந்து வாழத் துவங்கின கையோடை ஒரு பழம் கட்டிடத்திலை ஒற்றை அறையை வாடைக்கு எடுத்து இருந்தனாங்கள். அங்கை பூச்சி புழு மெத்திப்போய் இருக்கேலாமல் போனபடியால் சொந்தமா சின்ன வீடொண்டு கிட்டடியிலை வாங்கினனாங்கள். இப்ப முந்தியுலும் பார்க்க எவ்வளவோ வசதியாயிருக்கிறம். இவள் வேலைக்குப் போறது ஒரு திக்கு நான் போறது மற்றத் திக்கு. என்னட்டையிருந்த ஒரே காரிலை ரண்டுபேரும் நேரத்துக்கு வேலைக்குப் போகேலாது. அதனாலைதான் இவளுக்குப் போகவரச் சுகமாயிருக்குமெண்டு புதுசா ஒரு கார் வாங்கிக் குடுத்தனான். வீடு எண்டாப்போலை இஞ்சை செய்யிறமாதிரி கைக்காசுக்கு அங்கை வாங்கிறயில்லை, அம்மா. எல்லாம் பாங்கிலை கடன் எடுத்துத்தான் செய்யவேணும். கார் வாங்கினதும் அதே மாதிரித்தான். வீட்டுக்கு மட்டும் மாதம் மாதம் ரண்டு முறை அடுத்த முப்பது வருசத்துக்கு விடாமல் கடன் காசை பாங்குக்குக் கட்டிக்கொண்டிருக்க வேணும். பாங்குக்கு குடுக்குமதி தப்பினாலோ அவங்கள் வீட்டைப் பறிக்க வந்திடுவாங்கள். பிறகு நாங்கள் தெருவிலைதான் நிக்கவேண்டி வரும்.” தயாளன் தான் சொல்ல விரும்பியதை அரை மனதோடு விளக்கிவிட்டுப் பெற்றாரை ஆவலோடு பார்த்தான். தாயின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தபோதிலும் மகனின் இயலைமையை நினைத்து மனம் மட்டும் உள்ளே வருந்தியது. சூசை முகட்டில் எழுதியிருக்கிற எதையோ வாசிக்க முனைபவர்போல் யோசனையில் மூழ்கியிருந்தார். சுவருக்குப் பின்னால் நின்ற அற்புதத்திடமிருந்து திடீரென எழுந்த கேவல் ஒலி வீட்டிலிருந்த எல்லாரையும் ஒருமுறை உலுக்கியெடுத்தது.

தயாளனின் தாயார் மெல்ல எழும்பிப்போய் அற்புதத்தின் பக்கத்தில் நின்று அவளின் கன்னத்தில் வழிந்த கண்ணீரை ஆதரவுடன் துடைத்தாள். அவளின் விசும்பலுக்குக் காரணம் என்னவென அறிந்தபோதும் அவளுக்கு எப்படி ஆறுதல் கூறாலாம் எனத் தெரியாமல் அந்தத் தாய் உள்ளம் தடுமாறியது. தயாளனும் எழுந்துபோய்ப் படுக்கை அறைக்குள் கடும் யோசனையில் நின்ற லாவண்யாவின் முன்னால்போய் அவளின் கைகளைப் பற்றித் தன் கன்னத்தில் வைத்துக்கொண்டான். வெளிவாசல் திண்ணையில் வந்து நின்ற சூசை தன் டிராக்டர் நிற்கும் கொட்டிலை நோக்கி மெல்ல நடக்கத் துவங்கினார்.

“இதுக்குமேல் என்ன சொல்லக்கிடக்குது, என்ன அறியக்கிடக்குது? டிராக்டருக்கு விலை பேசின ஆக்களை வரவேண்டாமெண்டு இண்டைக்கே அறிவிச்சுவிடவேணும். அவ்வளவுதானே, இது என்ன பெரிய காரியம்? நாளைக்கும் இதே தெருவிலை என்ரை டிராக்டர் அலறியடிச்சுக்கொண்டு இன்னும் ஓடத்தான்போகுது. யார் என்ன சொன்னாலென்ன இந்த டிராக்டரின் நாலு சக்கரங்களும் சுத்துறவரை என்ரை குடும்பத்தின் வாழ்க்கைச் சக்கரங்களும் சுத்திக்கொண்டு இருக்கத்தான் போகுது. தசைகள் தொய்ந்துபோனாலென்ன, மூட்டுகள் கழண்டுவிழுந்தாலென்ன இந்தக் கைகள்தான் நாளைக்கும் இந்த டிராக்டரை ஆளப்போகுது. யாரையும் நான் நம்பியிருக்கப்போறயில்லை. போங்கோடா, போங்கோ!”

எவ்வளவு இறுமாப்பாக இவ்வளவையும் தனக்குள் எண்ணிக்கொண்டார் சூசை. ஆனால் இதெல்லாம் இயலக்கூடிய காரியமா? ஏற்கனவே நடுங்க ஆரம்பித்த கைகளால் டிராக்டரின் உக்கிப்போன டிரெயிலர் சலாகையைத் தடவினார். என்றுமே அழுதறியாத அவரின் கண்கள் அன்றுதான் முதலில் கசிந்தன. மண் அள்ளச் சென்ற இடத்தில் புயல் காற்றில் அகப்பட்டு மூச்சுத் திணற நிற்பதுபோல் ஒரு பிரமை. தோளில் யாரோ கை வைப்பதுபோல் உணர்ந்ததும் திரும்பிப் பார்த்தார் சூசை. அவர் மனைவி உழைப்பால் இரும்பாகிப்போன தன் கையால் அவரை ஆசுவாசப்படுத்த முயன்றாள். இவளுடைய கைகளின் அரவணைப்புத்தான் இவ்வளவு காலமும் இந்தப் பொல்லாத உலகத்தில் அவரை நிமிர்ந்து நிற்க வைத்தன. ஆனால் இன்றோ அவளே அழுதுவிடுவாள்போல் தோன்றியது. ஒருசில விநாடிகள் ஒருவரையொருவர் தேற்றமுனைவதுபோல் அருகருகே நின்றனர்.

“மாமா!”

இருவரும் திரும்பிப் பார்த்தனர். லாவண்யா தயாளன் பின்தொடர வந்து அவர்கள் முன்னால் நின்றாள். அவளின் நடையில் தோன்றிய நிதானத்தைப் பார்த்ததும் இவள் இன்னும் பாரதூரமான செய்தியோடு வருகிறாளோவென்ற கலக்கத்துடன் இருவரும் அவளை நோக்கினர்.

“அற்புதத்தின் கலியாணத்துக்கு ஒழுங்கு செய்யுங்கோ, மாமா!” அவளின் நடையைப் போன்றே சொற்களும் நிதானமாகவும் தீர்க்கமுடனும் உதிர்ந்தன.

“என்ன பிள்ளை சொல்லுறியள்?” சூசை தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்று புலப்படாதவராய் தனது புது மருமகளிடம் முதன் முறையாகப் பேசினார்.

“உங்களுக்குப் பல விஷயங்கள் தெரியாது, மாமா. என்னுடைய அப்பாவும், அம்மாவும் தயாளனையும் என்னையும் பிரிக்க எவ்வளவோ அடாத காரியமெல்லாம் செய்தவையள். இவரைப் போய்க் பார்க்கக்கூடாதெண்டு என்னை வீட்டுக்கை மறியல் வைச்சவையள். அப்ப நான் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமில்லை. இவருடைய அன்பும் ஆதரவும் இல்லாமல் விட்டிருந்தால் நான் எப்பவோ செத்துப் போயிருப்பன். இவர் ஒருநாள் எல்லாத் தடையளையும் மீறி வீட்டுக்கு வந்து அப்பாவுடைய பயமுறுத்தலுக்கெல்லாம் பயப்படாமல் என்னைக் கூட்டிக்கொண்டு போனார். அதுக்கும் பிறகும் அவையள் எங்களை நிம்மதியா இருக்கவிடயில்லை. எத்தனையோ தொந்தரவுகள் கொடுத்தவையள். ஆனால் இவர் ஒன்றுக்கும் பயப்படாமல் எனக்குப் பாதுகாப்பாயிருந்தவர். எனக்காக இவர் அனுபவித்த கஷ்டங்களை நினைச்சுப் பாத்தால் இவருக்காக நான் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கவேணும் எண்டுதான் என் மனம் எப்போதும் சொல்லுது.” இதை லாவண்யா சொன்னபோது அவளின் முதுகில் தடவி ஆறுதல் கொடுத்துக்கொண்டிருந்தான் தயாளன். “எங்களுடைய களியாணம்தான் நடக்கமுடியாமல் போட்டுது. அதனாலை அற்புதத்தின் களியாணத்தை எங்கள் களியாணம்போல் நடத்திப்பார்க்கவேணும். இதுதான் இப்போ எங்களன்ரை விருப்பம்.”

“நீங்கள் லேசா சொல்லிப்போட்டியள். களியாணம் செய்கிறதெண்டால் எக்கச்சக்கமான சிலவு, பிள்ளை...”

“அதைப்பற்றி யோசியாதையுங்கோ. நாங்கள் செலவு எல்லாத்தையும் சமாளிப்பம்.” லாவண்யா சிரித்தபடி சொன்னாள், என்றாலும் சூசைக்கு நம்பிக்கை வரவில்லை.

“கொஞ்சம் முன்னம் தம்பி சொன்னார் உங்களுக்கு ஏற்கனவே ஏகப்பட்ட கடனெண்டு.”

“ஆருக்குத்தான் கடன் இல்லை. கடனையே நினைச்சுப் பயந்துகொண்டிருந்தால் வயது ஏறிப்போய்விடும். வாங்கின கடனைத் திருப்பிக் கொடுத்துவிடலாம் போன வயதைத் திருப்பி எடுக்கேலாது, மாமா!”

“உண்மைதான், பிள்ளை. தம்பி என்ன சொல்லுறாராம்?”

“ஓமப்பா, லாவண்யா சொல்லுறதிலை எவ்வளவோ நியாயம் இருக்குது. நாங்கள் இரண்டுபேரும் இப்ப விபரமா கதைச்சுப்போட்டுத்தான் வாறம். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ.” தன் கடமையில் தனக்குத் துணையாக நிற்கிற மனைவியின் கையை நன்றியுடன் இறுகப் பிடித்துக்கொண்டான் தயாளன்.

வாசல் கதவோடு நின்றபடி இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அற்புதம் வெட்கம் தாளாமல் உள்ளே ஓடிப்போனாள். இதென்ன, என்னவோ அதிசயமெல்லாம் இங்கே நடக்கிறது என்று எண்ணித் திகைத்தவர்போல் சூசை எல்லாரையும் வியப்புடன் நோக்கினார்.

அதேவேளை வெளிவாசல் கேட்டடியில் ஆளரவம் கேட்டது “டேய் மருமோன், நான் கேட்ட ஐப்பொட்டு வாங்கிக்கொண்டு வந்தனியோ?’ என்று அலறியபடி வேட்டி அவிழ்ந்து விழுவதையும் பொருட்படுத்தாமல் ஓடிவந்துகொண்டிருந்தார் அருள்பிரகாசம். அதுவரை இறுகிப்போய்க் கிடந்த எல்லார் முகங்களும் சிரிப்பால் மலர்ந்தன.


சூசையின் கைகள் லூர்து மாதாவை நன்றியுடன் வருடிக்கொண்டிருந்தன.