கொடியது கேட்கின் குறிஞ்சிவாழ் குமரா,
கொடிது கொடிது இடியே கொடிது!
இடியது போல்மிடி யுலகினி லுளதோ?
படுத்திடில் நின்றிடில் நினைத்திடில் நடந்திடில்
படித்திடில் பகர்ந்திடில் பார்த்திடில் முகர்ந்திடில்
எழுந்திடும் தொடர்ந்திடும் சுயம்புவாம் தலையிடி!
தலையிடி யெதனாற் றலைப்படு மென்றே
தடவினர் நூல்களைத் துளைத்தனர் தலைகளை
இடறினர் தலையிடி யிடையினில் நுழைந்ததால்.
கடலொடு கலந்திடும் கவின்நதி மூலமும்
உடலொடு யியைந்திடும் தலையிடி மூலமும்
இயற்றின ருளரோ இதுவீண் தலையிடி!
இடிகள் ஈரெண் வகைகளி லுண்டாம்
இருப்பதோ வொருதலை இடிகளோ பலவகை
எடுத்தியம் பிடிலோ யிதுவே தலையிடி!
தடிமனுக் கொருவிடி யிடிகளில் ‘தலை இடி’
நெற்றியி னிருபுறம் நிகழ்வது வொருவிடி
நேரே யுச்சியி லிடிப்பதின் னோரிடி
பக்கலில் சற்றே பதிவாய் மற்றிடி
பாவையர் பொட்டிடும் பரப்பினில் மறுயிடி
ஒக்கவே பிடரியி லுள்ளது வொருவிடி
ஒதுக்கமாய்க் கீழே யுலவிடுமோ ரிடி
கண்ணின் மேலிடி காதோர மிடி
இடந் தெரியா விடத்தினி லும்மிடி
எங்கணு மெல்லார்க்கு முடைமையாந் தலையிடி
கடிதெனவருஉம் கடைத் தேர்வினை யுன்னி
விடிவது தெரிகிலா னாகிக்கண் விழித்து
படிபடி யெனவுருப் போடலின் வினையாய்
முடிவது எதுவெனில் கொடியது தலையிடி!
1974